தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் பல்வேறு இடங்களில் பெய்த கனமழை முதல் அதிகனமழையால் பலத்த சேதங்கள் உண்டாகியது. தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தொடங்கிய அக்டோபர் 25-ஆம் தேதி முதல் நவம்பர் 7ஆம் தேதி வரையில் தமிழ்நாட்டின் இயல்பான மழைப்பொழிவான 92.3 சென்டிமீட்டருக்கு மாறாக 144.6 செண்டிமீட்டர் மழைப்பொழிவு பதிவாகியது இது இயல்பை விட 52.3 விழுக்காடு அதிகமாகும்.
இம்மழைப் பொழிவால் சென்னை காஞ்சிபுரம் செங்கல்பட்டு விழுப்புரம் கடலூர் நாகப்பட்டினம் திருவாரூர் தஞ்சாவூர் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் பலத்த சேதம் ஏற்பட்டது. குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் வேளாண் பயிர்களுக்கு அதிக பாதிப்பும், சென்னை உள்ளிட்ட நகர்ப்புறங்களில் அதிக அளவில் தண்ணீர் தேங்கி பாதிப்புகள் உண்டானது.
அதன் பின்னர் நவம்பர் மாதத்தின் இரண்டாவது வாரத்தில் வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் சென்னையை ஒட்டிக் கரையைக் கடந்தது. இதன் காரணமாக நவம்பர் 8ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரையில் தமிழ்நாட்டின் இயல்பு மழைப்பொழிவு 45.1 சென்டி மீட்டருக்கு மாறாக 94.3 சென்டி மீட்டர் அளவிற்கு மழைப்பொழிவு பதிவாகியது. இது இயல்பை விட 49.6 விழுக்காடு அதிகமாகும்.
இந்த மழைப் பொழிவால் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, வேலூர் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.
நவம்பர் 12ஆம் தேதி மற்றும் 13ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை முதல் அதிகனமழை பதிவாகியது. அம்மாவட்டத்தில் உள்ள ஏரி, குளங்கள் மற்றும் அணைகளுக்கு நீர்வரத்து அதிகமாக இருந்தது. குறிப்பாக குழித்துறை ஆற்றில் 35 ஆயிரம் கனஅடி உபரிநீர் வெளியேற்றப்பட்டதால் குழுத்துறை ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டு ஆறு தாலுகாக்களில் உள்ள கிராமங்கள் பாதிப்படைந்தன.
கனமழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள்:
உயிரிழந்தோர் – 54
காயமடைந்தோர் -52
கால்நடைகள் உயிரிழப்பு – 6871
வேளாண் பயிர் : 49,230.55 ஹெக்டேர்
தோட்டக்கலைப் பயிர்: 526.41 ஹெக்டேர்.
இந்த கனமழை பாதிப்புகள் தொடர்பாக ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை இன்று டெல்லியில் சந்தித்த திராவிட முன்னேற்றக் கழக நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு தமிழ்நாட்டில் ஏற்பட்ட கனமழை பாதிப்புகளை மறுசீரமைப்பு செய்வதற்கு இடைக்கால நிவாரணமாக 550 கோடி ரூபாயையும் முழு பாதிப்புகளையும் சரி செய்வதற்கு 2,079 கோடி ரூபாயையும் வழங்க வேண்டுமெனக் கோரி கடிதம் வழங்கினார்.
letterபின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு தமிழ்நாட்டின் வெள்ள சேதங்களை பார்வையிட 6 பேர் கொண்ட ஒன்றியக் குழு இன்று மாலை டெல்லியில் இருந்து புறப்படும் என தெரிவித்தார்.