கோவிட்-19 பொதுமுடக்க காலத்தில் இடி மின்னல் எண்ணிக்கை குறைவு

Image: Sciencealert

உலகம் முழுவதும் பெருந்தொற்றால் அவதியுற்று வரும் நிலையில் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர்.  இவ்வளவு துயரத்திலும், பொதுமுடக்கத்தால் எந்த நன்மையுமே இல்லையா? என்கிற கேள்விக்கு,  சிறிய அளவில் நன்மை ஏற்பட்டுள்ளது என்கின்றனர் அமெரிக்காவையும் இந்தியாவையும் சேர்ந்த விஞ்ஞானிகள்.

கொரோனா பெருந்தொற்றால் மின்னல்களின் எண்ணிக்கை 10%-20% குறைந்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தொற்றைக் கட்டுப்படுத்த நடைமுறைப்படுத்தப்பட்ட பொதுமுடக்கத்தால், மக்கள் வெளியே செல்வது குறைந்தது. விமான பயணங்கள் நிறுத்தப்பட்டன அல்லது குறைவாக செயல்பட்டன. இதனால் புதைபடிம எரிபொருள் பயன்பாடு குறைந்தது என்கிறார் மாசசூசெட்ஸ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த இயற்பியல் வானிலை (Physical meterologist) நிபுணர் வில்லியம். இவர் தன்னுடைய ஆய்வை சமீபத்தில்  நடைபெற்ற அமெரிக்க புவி இயற்பியல் மாநாட்டில் சமர்பித்துள்ளார்.

புதைபடிம எரிபொருளை எரிப்பதால் வெளியேறும் தூசித்துகள்கள் (aerosol), வளிமண்டலத்தில் சிறு துகளாக மிதக்கும்போது அதைசுற்றி ஈரப்பதம் உறைவதே (condensation) இடி-மின்னல் அதிகம் ஏற்படுவதற்கு காரணமாகிவிடுகிறது.

பொதுமுடக்க காலகட்டத்தில் துகள்கள் குறைவானதால், ஈரப்பதம் பெரிய நீர்த்திவலையாக (droplets) மாறி உடனடியாக மழையாக பொழிகிறது. தூசித்துகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்போது, நீர்த்துளிகள் அதிகமாக இருக்கும். ஆனால், சிறியதாக இருக்கும். இவை பனிப்படிகங்களாக (Ice-crystals) உறைவதற்கு போதுமான உயரத்திற்கு சென்றுவிடுகிறது. இந்த பனிப்படிகங்கள் மற்றும் சிறிய ஆலங்கட்டி (Graupels) போன்ற துகள்கள் இடையே உள்ள கொந்தளிப்பு (Turbulence), இடி – மின்னல் ஏற்படுவதற்கு தேவையான நிலை மின்சாரத்தை (static electricity) உருவாக்குகிறது.

பொதுமுடக்க காலங்களில், சீனா, தென்கிழக்கு ஆசியா, ஐரோப்பா, துணை சஹாரா ஆப்பிரிக்கா மற்றும் இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் மற்றும் அண்டை தீவு நாடுகளில் தூசுபடலம் (ஏரோசல்) மாசுபாட்டின் அளவு கணிசமாகக் குறைந்திருந்ததை செயற்கைகோள் படங்களின் வாயிலாக அறியமுடிகிறது.

அதேநேரத்தில், உலகளாவிய இடி – மின்னல்களை கண்காணிப்பதற்கான இரண்டு வெவ்வேறு அமைப்புகள் இடி – மின்னல் ஏற்படுவது 10-20% குறைந்துள்ளதை சுட்டிக்காட்டின. அவை, மேகம் முதல் தரைவரையான மின்னல் தாக்குதல் (Cloud to ground) அல்லது மேகம் முதல் மற்றொரு மேகம் (Cloud to Cloud) என எல்லாவற்றையும் கணக்கிலிட்டு தரவுகளை வெளியிட்டன.

மிகச்சரியாக இந்த இரண்டு இடங்களும், அதாவது தூசிப்படல மாசு குறைந்திருந்த பகுதிகளும், இடி – மின்னல் குறைந்திருந்த பகுதிகளும் ஒரே பகுதிகளாக இருந்தன. இதே போல் அமெரிக்காவிலும் காணமுடிந்தது. மாசு குறைவான பகுதிகளில் இடி – மின்னல் குறைவதும், மாசு குறையாத பகுதிகளில் அதே அளவிலான இடி – மின்னல்களையும் கணக்கிட முடிந்ததன் மூலம் இந்த கோட்பாடு நிரூபணமாகிறது.

இந்த அவதானிப்பு, வானிலை நிபுணர்களுக்கு மட்டும் முக்கியமானது அல்ல, காலநிலை மாற்றத்திற்கும் இடி – மின்னல் ஏற்படுவதற்கும் உள்ள தொடர்பு குறித்த ஆய்விற்கும் முக்கியமானது. ஒருபக்கம், புவியின் வெப்பம் அதிகரிக்க அதிகரிக்க இடி – மின்னலும் அதிகரிக்கும். ஆனால், வெப்பம் அதிகரிப்பது மட்டுமே காரணியல்ல. காலநிலை மாற்றத்தை மட்டுப்படுத்த எடுக்கப்படும் நடவடிக்கைகள் தூசு மாசுபாட்டை குறைப்பதாகவும் இருக்க வேண்டும். அதுதான் இடி – மின்னல்களின் தீவிரத்தைக் குறைக்கும்.

இந்த ஆய்வறிக்கை இந்தியாவின் பார்வையில் மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது. கடந்த மூன்றாண்டுகளில் இந்தியாவில் 8,000க்கும் மேற்பட்டோர் இடி – மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளனர் என்பதிலிருந்து இது எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.

  • செய்டிப் பிரிவு
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments