கை தவறிப் போன வண்ணத்துப் பூச்சி…!

‘வரியுடல் சூழக் குடம்பைநூறு எற்றில்

போக்குவழி அடையாதுள்ளுயிர் விடுத்தலின்

அறிவுபுறம் போய வுலண்டது போல

 • கல்லாடம் 25-28.

புழு தனது உடலை சுற்றி நூலினால் கூட்டை ஏற்படுத்திக் கொண்டு வெளிச்செல்ல வழியின்றி உயிர் விடுதலைப் பற்றி மேற்கண்ட பழம் பாடல் வரிகள் குறிப்பிடுகிறது. வண்ணத்துப் பூச்சியின் கூட்டுப்புழு பருவம் என்று இதனை, இன்றைய அறிவியல் கண்டறிந்து கூறுகிறது. முட்டையில் இருந்து புழு, கூட்டுப் புழு, வண்ணத்தி என அதன் முழுமையான வாழ்வியல் செயல்பாட்டை நேரில் பார்த்து இரசிக்கும் வாய்ப்பு கிடைத்ததை உங்களுடன் பகிர்ந்துக் கொள்கிறேன்.

2010-ம் ஆண்டு இறுதி, முன்பனி துவங்கி இருந்த நேரம். தொழிற்சாலைகள் நிறைந்த, சென்னையின் புறநகர்ப் பகுதியான திருவொற்றியூரில், சிறு தோட்டத்துடன் எங்களது சிறிய வீடு அமைந்துள்ளது. டிசம்பர் முதல் தேதியன்று தோட்டத்தின் முன்பகுதியில் உள்ள சிறிய எலுமிச்சை செடியில் வண்ணத்துப் பூச்சி ஒன்று வட்டமிட்டுக் கொண்டிருந்தது. அருகில் சென்ற எனக்கு ஆச்சர்யம் மேலிட்டது. செடியின் இளந்தளிரை இனம் கண்டு மூன்று முட்டைகளை வைத்து விட்டு, சிறிது நேரம் அங்கு சுற்றி இருந்து பின், பறந்து சென்றது. கருப்பு, சிவப்பு நிறம் கலந்த அழகிய வண்ணத்துப் பூச்சி. கடுகளவு இருந்த முட்டைகள் இளம் மஞ்சள் நிறத்தில் இருந்தது. சில ஒளிப்படங்கள் எடுத்து விட்டு அதனை கவனிக்கத் தொடங்கி இருந்தேன்.

ஒரு வார காலத்தில் முட்டையில் இருந்து புழுக்கள் (Caterpillar) வெளிவந்து இலைகளை உணவாக்கி கொண்டிருந்தன. புழுக்களின் இளம் பச்சை நிற உடலில் சிறு சிறு முட்கள் போன்ற அமைப்பு காணப்பட்டன. சிறிது வளர்ந்த நிலையில் பச்சை நிற உடலின் நடுவிலும், கடைசியிலும் வெள்ளை நிறத் திட்டுக்களும் காணப்பட்டன. முழு வளர்ச்சியடைந்த புழுக்களின் பச்சை நிற உடலில், தலைப் பகுதியில் மஞ்சளும், அடர் பழுப்பும் கலந்த நிறத்தில் கண் போன்ற அமைப்பும், உடலின் கீழ்ப்பகுதியிலும், உடலின் பின், இரண்டு இடங்களிலும் வெள்ளை நிறப் பட்டைகள் காணப்படுகின்றன. புழுக்கள் தன் வளர்ச்சியில் மூன்று முறை நிறமாற்றம் கொள்வது எதிரிகளிடம் இருந்து தங்களை தற்காத்துக் கொள்ள இயற்கையின் இயல்பூக்கத்தில் ஒரு உத்தியாக பயன்படுத்துகின்றன.

பறவைகளின் முக்கிய உணவு பட்டியலில் பூச்சிகளும், புழுக்களும் இருப்பதால், அதனிடம் இருந்து தங்களை தற்காத்துக் கொள்ள உருமறைத் தோற்றம் (Camouflege) என்பது புழுக்களுக்கு இயல்பூக்கதின் அடிப்படையிலேயே வருகிறது. புழுக்களில் தெரியும் தொடர் மாற்றங்களை ஒளிப்படக் கருவியில் பதிவு செய்து கொண்டிருந்தேன்.

டிசம்பர் 21  (2010) அன்று, புழுவாக வெளிவந்து சற்றேறக்குறைய இருவார காலத்தில், தனது அடுத்த பருவமான கூட்டுப் புழு (Pupa) நிலைக்கு தன்னை தயார்படுத்திக் கொண்டிருந்தது வண்ணத்துப் பூச்சியின் புழுப் பருவம். வலுவான கிளை, தனக்கு பாதுகாப்பான இடம், உருமறைத் தோற்றத்திற்கு ஏற்ற பகுதி என தேர்வு செய்து சூரியனின் மறைவிற்கு சற்று முன்னர் தனது உடலில் நூலிழைகளை சுற்ற ஆரம்பித்தது. இந்நிகழ்வு ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்து, வண்ணத்துப் பூச்சியின் உடலின் மேற்புறம் ஒடு போன்ற அமைப்புடன், முழுமையான கூட்டுப் புழு நிலைக்கு மாறியதை தொடர்ந்து கவனித்து பதிவு செய்திருந்தேன்.

கூட்டுப் புழு 10 லிருந்து 13 நாட்களை, தனது வாழ்நாளாக எடுத்துக் கொள்கிறது. சில வகைகள், சூழல் பொறுத்து ஒரிரு நாட்கள் மாறுபடுகிறது. தனக்கு தேவையான உணவை புழு பருவத்தில் சேர்த்து வைத்துக் கொள்வதால், கூட்டுப்புழுவில் இருக்கும் நாட்களில் உடலியல் மாற்றங்கள் மட்டுமே நடைபெறுகிறது. நான் பார்த்து கவனித்தது Common Mormon (Papilio Polytes Linnaeus) – வகையைச் சேர்ந்த வண்ணத்துப் பூச்சி. இந்த வகையுடன் சேர்த்து தமிழகத்தில் சிலநூறு வகைகளும், இந்தியாவில் சுமார் 1,501-க்கும் மேற்பட்ட வகைகளும் காணப்படுகின்றன.

   உலகம் முழுக்க சுமார் 18,000 வகைகளாக ‘பறக்கும் வண்ண பூக்கள்’ காணப்படுகின்றன. பகலில் பறந்து திரிந்து தேன் உண்ணும் பகலாடிகளான (Diurnal) வண்ணத்துப் பூச்சிகளை (Butterfly) தான் நாம் பார்த்து இரசிக்கிறோம். பல நிறங்களில் நமது மனதை மயக்கும் வண்ணத்துப் பூச்சிகள் 4000 அடி உயர மலை உச்சிகளிலும், பனி மூடிய ஆர்டிக் பிரதேசத்திலும் வாழும் திறன் பெற்றதாக உள்ளது.

Monarch Butterfly எனும் வண்ணத்தி கனடாவில் இருந்து அமெரிக்காவிற்கும், Swallow Tail என்ற வண்ணத்தி இந்தியாவிலிருந்து இலங்கைக்கும் வலசை செல்கின்றன.

வண்ணத்துப் பூச்சிகளின் வண்ணமயமான நினைவுகளோடு 2011-ஆம் ஆண்டு ஆங்கில புத்தாண்டு தொடங்கியது. புத்தாண்டின் துவக்கத்தில் இருந்து வண்ணத்துப் பூச்சியின் வருகைக்காக இரவு நேரத்தில் கண் விழிக்க ஆரம்பித்திருந்தேன. கூட்டுப் புழுவில் இருந்து வெளிவர, இந்த உலகை காண வண்ணத்துப் பூச்சிகள் சற்றேறக்குறைய இரு வார காலத்தை எடுத்துக் கொள்கின்றன.

சனவரி மூன்றாம் தேதி இரவு நான் பயன்படுத்தும் ஒளிப்படக் கருவியை (Nikon D70S), முக்காலியுடன் (Tripod) இணைத்து, ஒளிப்படக்கருவிக்கு தகுந்த இரண்டு மின்னொளியை (Flash), (ஒன்றை ஒளிப்படக் கருவிக்கு மேலாகவும், மற்றொன்றை வண்ணத்துப் பூச்சிக்கு பின்புறமாகவும்) சரியான கோணத்தில் வைத்து, சில ஒளிப்படங்கள் எடுத்துப் பார்த்து நிறைவடைந்தவனாக, காத்திருக்க தொடங்கினேன்.

தொடர்ந்து விழித்ததன் விளைவு, கடுமையான கண் எரிச்சல் உண்டானது. முகம் கழுவி, புத்தகம் புரட்டி பார்த்தும் சரிவரவில்லை. கண்கள் என்னையும் அறியாமல் தூக்கத்தை தழுவியது. மனம் முழுக்க வண்ணத்துப் பூச்சி நிரம்பி இருக்க, சிந்தனையும் அதனையொட்டியே இருக்க, திடுக்கிட்டு எழுந்து, எலுமிச்சை செடியின் அருகே சென்று பார்த்தேன்.

அதிர்ச்சி தான் காத்திருந்தது. எதற்காக ஒரு மாத காலம் காத்திருந்தேனோ, அது கை நழுவி போய் இருந்தது. கூட்டில் இருந்து எழிலான தோற்றத்துடனும், பளிச்சிடும் நிறத்துடனும் அழகு மிளிர வண்ணத்துப் பூச்சி முழுவதுமாக வெளிவந்து, இவ்வுலகை முதல் பார்வையால் இரசித்துக் கொண்டிருந்தது.

கூட்டுப்புழுவில் இருந்து வெளிவரும் ஒவ்வொரு வினாடியையும், ஒளிப்படக் கருவியில் பதிவு செய்திருந்தால் அது எனது ஒரு மாத கால முயற்சிக்கு பலனாகவும், மிகப் பெரும் புகைப்பட ஆவணமாகவும் இருந்திருக்கும். என் பதிவின முதன்மை நோக்கமும் அதுவே. என் தூக்கமே எனக்கான எதிரியாக அமைந்தது மிகவும் ஏமாற்றத்தை அளித்தது. காட்டுயிர் ஒளிப்படக் கலைஞர்களுக்கு, பொறுமையும், காத்திருத்தலும் மிகவும் அவசியம் என்பதை எனக்கு உணர்த்திய மிகச் சிறந்த அனுபவமாக அது அமைந்தது. வேதனை கலந்த இந்த அனுபவமே, அடுத்தடுத்த முயற்சிகளுக்கும், தேடுதலுக்கும் ஊந்துசக்தியாக இருந்தது.

என்னுடைய ஒரு மாத தேடலில், என் மழலைச் செல்வங்கள் இலக்கியா, தமிழ்செல்வன் கலந்துக் கொண்டு ஆர்வத்துடன் வண்ணத்துப் பூச்சியின் வாழ்வியல், நடத்தை குறித்து பல கேள்விகளை எழுப்பியது மகிழ்வை ஏற்படுத்தியது. அவர்கள் அதில் முழுமையாகவும், ஈடுபாட்டுடனும் பங்கெடுத்தனர். நான்கு சுவர்களுக்குள் கல்வி என்பதை பரந்து விரிந்த நிலையிலான ஒரு நேரடி பயிற்சி, மாணவர்களை மகிழ்ச்சியிலும், முழுமையான பங்கெடுத்தலிலும், தேடலிலும் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தும் என்பதை எனக்கு உணர்த்திய சம்பவமாகவும் இது அமைந்தது. அப்படி ஒரு கல்வி நமது சமூகத்திற்கு என்று வருமோ? மனதில் சோகம் சூழ்ந்துக் கொள்கிறது.

நான் ஒரு மாத காலம் கண்டு இரசித்த கருஞ்சிவப்பு வண்ணத்திகள் தமிழகம் முழுக்க பொதுவாக காணப்படுகின்றன. இதன் இறகுகள் சுமார் 90 முதல் 100 மி.மீட்டர் வரை இருக்கும். நான் பதிவு செய்திருந்தது Swallowtail குடும்பத்தைச் சேர்ந்த பெண் வண்ணத்தியாகும். இதன் அடர் பழுப்பு கலந்த கருப்பு நிற உடலில், மேல் இறகுகளின் நடுவில் வெள்ளை நிற பட்டைகளும், கீழ் இறகுகளில் அழகிய சிவப்பு நிற திட்டுக்களும் அதற்குள் சிறு சிறு வெள்ளை புள்ளிகளும் காணப்படுகின்றன. ஆண் வண்ணத்தி மணல் பழுப்பு கலந்த கருப்பு நிறத்தில், மேல் இறகுகளின் முடிவில் வெள்ளை பட்டைகளோடு காணப்படும். பெண்ணிற்கு இருப்பது போன்ற சிவப்பு பட்டைகளற்று இருக்கும். ஆங்கிலத்தில் Common Mormon (Papilio Polytes Linnaeus) – என்றழைக்கப்படும் வண்ணத்திகள், எலுமிச்சை தவிர, சில வகை பூச்செடிகளில் முட்டை வைத்து இனப்பெருக்கம் செய்கின்றன. Common Mormon– என்ற அழகிய வண்ணத்திக்கு சரியான கலைச்சொல் தமிழில் இல்லையென்பதால் இதன் வண்ணத்தை கருத்தில் கொண்டு கருஞ்சிவப்பு வண்ணத்துப் பூச்சி என்று அழைப்போம்.

குறிப்பு; தமிழகத்தில் காணப்படும் வண்ணத்திகளின் வாழ்வியலை, அதன் ஒவ்வொரு கட்டத்தையும் ஒளிப்பட ஆவணமாக தொகுக்கும் போது தான் வண்ணத்திகளின் முழுமையான பரிணாமம் நமக்கு கிடைக்கும். குறிப்பாக புழுக்களை அதன் நிறங்கள், வடிவங்கள், உடல் அடையாளங்களை கொண்டு எந்த வகையான வண்ணத்தி என்பதை அடையாளப்படுத்தக்கூடிய எளிமையான சூழலை உருவாக்குவது, நம்முன் உள்ள கடினமான, ஆனால் அவசியமான, அவசரமான பணி.

 

தரவு நூல்கள்

 1. ச.முகமது அலி – இயற்கை; செய்திகள் சிந்தனைகள் – இயற்கை வரலாறு அறக்கட்டளை – டிசம்பர்
 2. பி.எல்.சாமி – சங்க நூல்களில் சில உயிரினங்கள் – சேகர் பதிப்பகம் – டிசம்பர் 1993.
 3. Isaac Kehimkar – The Book of Indian Butterflies – Bombay Natural History Society-Oxford University Press – 2011.

    

 

 

 

 

ஒளிப்படங்களுக்கான குறிப்புகள்:

 1. கருஞ்சிவப்பு வண்ணத்தியின் இளமஞ்சள் முட்டை.
 2. முட்டையின் அளவை ஒத்திருக்கும் சிவப்பு சிற்றெறும்பு.
 3. கருஞ்சிவப்பு வண்ணத்தியின் இளம் புழுப் பருவம்.
 4. கருஞ்சிவப்பு வண்ணத்தியின் சற்று வளர்ந்த புழுப் பருவம்
 5. முழுமையான வளர்ந்த புழு. வண்ணத்திகளின் புழுப் பருவத்தில் நடைபெறும் ஒரே வேலை தனக்கான உணவான இளந்தளிர்களான இலைகளை சாப்பிட்டுக் கொண்டிருப்பது மட்டுமே. கூட்டுப்புழு பருவத்தில் உணவு தேட முடியாத சூழலுக்கும் சேர்த்தே அதிகமான உணவை உண்டு சேமித்துக் கொள்கின்றன.
 6. தனக்கான சரியான இடம், வலுவான கிளை, உருமறைத் தோற்றம் என அனைத்தையும் சரியாக தேர்வு செய்து, கூட்டுப்புழுவிற்கு தயாரான நிலையில், வண்ணத்தியின் முழு வளர்ச்சி பெற்ற புழு.
 7. கெட்டியான ஒடு போன்ற உடலமைப்புடன், அடர் பச்சை நிறத்தில் கருஞ்சிவப்பு வண்ணத்தியின் கூட்டுப் புழு பருவம்.
 8. கூட்டுப் புழுவில் இருந்து வெளிவந்து சூழலை காக்கும் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள முதல் பார்வையை செலுத்தும் கருஞ்சிவப்பு வண்ணத்துப் பூச்சி அழகுடன் காட்சியளிக்கிறது.
 9. புறச்சூழலுக்கும், தகவமைப்பிற்கும் ஏற்றவாறு தன்னுடல் மாற நீண்ட நேரம் காத்திருக்கிறது.
 10. பறத்தலுக்கு காத்திருக்கும் கருஞ்சிவப்பு வண்ணத்துப் பூச்சி
 11. முதல் சிறகசைப்பில் வண்ணத்துப் பூச்சி.
 12. தரைக்கு வந்த வானவில்.

கட்டுரை,  ஒளிப்படங்கள் – ஏ.சண்முகானந்தம்.

 

2014 ‘சஞ்சிகை’ சிற்றிதழில் வெளியான கட்டுரை.

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments