கதிர்வீச்சும், அணு உலை எதிர்ப்பும்…

சு.இராமசுப்பிரமணியன்

இயற்பியல் பேராசிரியர், தோவாளை

அணு ஆயுதங்கள் தயாரிப்பதிலும், ஆக்க சக்தி என்று சொல்லிக் கொண்டு அணு உலைகளைக் கட்டும் தொடர் ஓட்டத்திலும், அமெரிக்கா, ரஷ்யாவைத் தொடர்ந்து,  பிரிட்டன், ஃப்ரான்ஸ் ஜெர்மனி போன்ற ஐரோப்பிய நாடுகளும், இந்தியா, பாகிஸ்தான், சீனா, வட கொரியா  போன்ற தூர கிழக்கு நாடுகளும் பங்கெடுத்தன என்று சொல்லலாம். மத்திய கிழக்கு நாடுகளில் இஸ்ரேலிடம் அணு ஆற்றல் உள்ளது. அதே சமயம், அங்குள்ள இஸ்லாமிய நாடுகள் அணு ஆயுதம் தயாரித்து விடக் கூடாது என்பதில், அமெரிக்காவும் பிற ஐரோப்பிய நாடுகளும் கவனமாகவவே உள்ளன. அதனால்தான், ஈரானில் கட்டப்பட்டு வந்த அணு உலையை, நன்றாகத் திட்டமிட்டு, மூன்றே நிமிடங்களில் குண்டு வீசி அழித்தது, இஸ்ரேல். அணு உலைத் தொழில் நுட்பம் மிகவும் சிக்கலானது, பாதுகாப்பற்றது, விபத்து ஏற்படுமானால் நீண்ட காலத்திற்கு இழப்பை ஏற்படுத்தி விடுவது. பெரும் பொருட் செலவு பிடிப்பது என்று தெரிந்திருந்தும், ஆக்க சக்தி என்கிற பெயரில் அணு உலைகளைக் கட்டும் நாடுகளின் அரசுகளுக்கு, வெளியில் சொல்லாத வேறு காரணங்கள் இருக்கின்றன. கூடங்குளம் அணு உலைகளில் இருந்து, தடையில்லா மின்சாரம் கிடைக்கும் என்று மக்களின் ஒரு பகுதியினரிடம் நம்பிக்கையை ஏற்படுத்துவதில் வெற்றி கண்டிருக்கிறது, மத்திய, மாநில அரசுகள். அதற்காக, அணு உலைக்கு எதிரான போராட்டம் நடைபெற்ற காலங்களில், அணு உலையைச் சுற்றியுள்ள பகுதிகளில், செயற்கையாகத் திட்டமிட்டே பல மணி நேரம் மின்வெட்டை ஏற்படுத்தியதும் உண்டு. ஆக, தமிழகத்தைப் பொறுத்தவரையில், மக்களில் பெரும் பகுதியினர், அணு உலையை ஆதரிக்கும் நிலைப் பாட்டை எடுப்பதற்கு ஒற்றைக் காரணம்,’தடையில்லா மின்சாரம்’ கிடைக்கும் என்கிற அப்பாவித் தனமான எதிர்பார்ப்புதான். மூன்றாவதாக, அணு உலைகளைத் தங்கள் பகுதியில் கட்டுவதற்கு, அப்பகுதி மக்கள் ஏன் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் என்கிற கேள்விக்குப் பதிலாக, சில காரணங்களைச் சொன்னாலும், அவற்றில் முதன்மையான காரணம்,  ‘கதிர்வீச்சு’ (Radiations)  என்பதே ஆகும். அணு உலையோடு சம்பந்தப் பட்ட, ‘கதிர்வீச்சு’ பற்றி சுருக்கமாகவும் எளிமையாகவும் பேசுவதே இந்தக் கட்டுரையின் முதன்மையான நோக்கம். அணு உலை பற்றிப் பேசும் போது பயன்படுத்தப் படும் கதிர்வீச்சு என்பது வேறு வகையானது. உண்மையில், அவற்றை ‘அணுக்கரு கதிர் வீச்சு’ (Nuclear Radiations) என்று தான் குறிப்பிட வேண்டும். அணுக் கதிர்வீச்சு கண்டுபிடிப்பும் கூட தற்செயலானது தான். ஃப்ரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஹென்றி பெக்கரல் (Henry Becquerel) , சூரிய ஒளி பட்டால் ஒளிரும் தன்மை உள்ள தாது உப்புகளைக் கொண்டு சோதனைகள் செய்து கொண்டிருந்தார். சூரிய ஒளி கிடைக்காத காரணத்தால், கருப்புத் துணியில் மூடி வைக்கப் பட்ட ஒளிப் படத் தட்டுகளோடு (Photographic Plates)  யுரேனியம் தாதுவையும் சேர்த்து வைத்திருந்தார். சில நாட்கள் கழித்துப் பார்த்த போது, ஒளிப் படத் தட்டுகள் பாதிக்கப் பட்டிருப்பதைக் கண்டார். வெளியிலிருந்து சூரிய ஒளி வரவில்லை என்பதால், யுரேனியம் தாதுவிலிருந்து தான் அந்த கதிர்கள் வந்திருக்க வேண்டும் என்னும் முடிவுக்கு, அவர் வந்தார்.

ஏற்கனவே X-கதிர்கள் அறியப் பட்டிருந்ததால், X-கதிர்களில் இருந்து வேறுபட்ட இந்த வகைப் புதிய கதிர்களை, ‘பெக்கரல் கதிர்கள்’ (Becquerel Rays) என்றே ஆரம்பத்தில் அழைத்தனர். அதன் பிறகு, மேடம் க்யூரியும், அவரது கணவர் பியரி க்யூரியும் (Madam Curie and Pierre Curie) ரேடியம் மற்றும் பொலோனியம் போன்ற தனிமங்களும் கதிர்வீச்சை வெளிப்படுத்துகின்றன என்று கண்டுபிடித்தனர். அவர்கள் தான் இந்த நிகழ்வுக்கு, ‘கதிரியக்கம்’ (Radio-activty) என்னும் பெயரையும் வைத்தனர். க்யூரி தம்பதியர் மற்றும் பெக்கரல் ஆகியோருக்கு இயற்பியல் பிரிவில், 1903-ஆம் ஆண்டிற்கான நோபல் பரிசு கதிர்வீச்சு கண்டுபிடிப்பிற்காக வழங்கப் பட்டது. ஒரு காரீயக் கட்டையில் ஏற்படுத்தப் பட்டிருந்த குழியில் யுரேனியம் தாதுவை வைத்து, அதற்கு நேர் மேலே ஒளிப் படத் தட்டு வைக்கப் பட்டது. இந்த அமைப்பிற்கு செங்குத்தாக ஒரு காந்த புலம் ஏற்படுத்தப் பட்டது. இந்த சோதனை அமைப்பு மூலம், ஒளிப் படத் தட்டில் மூன்று புள்ளிகள் ஏற்பட்டிருந்தது, அறியப் பட்டது. ஒரு புள்ளி, காந்தப் புலத்தால் விலக்கமடையாத நேர் கதிராலும், மற்ற இரண்டும் காந்தப் புலத்தால் விலக்கப் பட்ட கதிர்களாலும் ஏற்படுத்தப் பட்டிருந்தன. விலக்கப் பட்டவை, நேர் எதிர்த் திசைகளில் விலக்கப் பட்டிருந்தன. ஆகவே அவற்றில் ஒன்று நேர் மின்சுமை கொண்டது. மற்றது எதிர் மின்சுமை கொண்டது. அதாவது, யுரேனியத்திலிருந்து மூன்று விதமான கதிர்கள் வெளிப் படுகின்றன என்பது உறுதியானது. காந்தப் புலத்தால் பாதிப்படையாத மின்காந்த கதிர், காமா கதிர் எனப் பட்டது. நேர் மின்சுமை கொண்ட கதிர் ஆல்ஃபா கதிர் என்றும், எதிர் மின்சுமை கொண்டது, பீட்டா கதிர் என்றும் அழைக்கப் பட்டன. உண்மையில் ஆல்ஃபா கதிர் நேர் மின்சுமை கொண்ட துகள்கள்(இரண்டு புரோட்டன், இரண்டு நியூட்ரான் கொண்ட ஹீலியம் அணுக் கரு) ஆகும். பீட்டா கதிர், எதிர் மின்சுமை கொண்ட எலக்ட்ரான்கள் தான். இவை தான் குறிப்பாக அணுக்கரு கதிர்வீச்சுகள் என்று அழைக்கப் படுகின்றன. (இவை தவிர, நியூட்ரான், நியூட்ரினோ போன்ற துகள்களும் வெளிப் படுவதுண்டு) ‘கதிரியக்கம்’ என்பதை, யுரேனியம் போன்ற கனமான தனிமங்கள், நிலைத் தன்மை இல்லாமல் இருப்பதன் காரணமாக, ஆற்றலைக் கதிர்களாக வெளிப் படுத்தி, தன்னிச்சையாகத் தங்களைத் தாங்களே அழித்துக் கொள்ளும் இயற்கை நிகழ்வு என்று வரையரை செய்யலாம். இந்த கதிர்வீச்சுகள் எப்படி ஆபத்தானவை என்பதைப் தெரிந்து கொள்ள வேண்டுமானால், கதிரியக்கம் பற்றிய அடிப்படைப் பண்புகளைப் புரிந்து கொள்ள வேண்டும். ஒன்று கதிர்வீச்சுகளின் ஊடுறுவும் பண்பு மற்றும் மனித உடலில் அவை ஏற்படுத்தும் உயிரியல் சிதைவு பற்றியது. ஆல்ஃபா துகள்களின் ஊடுருவும் திறன் குறைவு. தோலைக் கூட ஊடுருவ இயலாது. என்ற போதும் ஆல்ஃபா துகள் உணவு வழியே மனித உடலில் செலுத்தப் படுமானால், திசுக்களைச் சிதைத்து மரணத்தை ஏற்படுத்தக் கூடியது. பீட்டா துகள்கள் மனித உடலை ஊடுருவி, திசுக்களின் சிதைவை ஏற்படுத்தக் கூடியவை. காமாக் கதிர்கள் மிகவும் ஆபத்தானவை. 30 சென்டி மீட்டர் தடிமன் கொண்ட காரீயத்தால் (லிமீணீபீ) மட்டுமே, காமாக் கதிர்களை தடுத்து நிறுத்த முடியும். மாத்திரமல்ல, இந்தக் கதிர்கள், அவை செல்லும் வழியில் உள்ள பொருட்களையும் கதிர்வீச்சுப் பொருட்களாக மாற்றிவிடும் தன்மை கொண்டவை.

இரண்டாவதாக, இந்தக் கதிர்கள், தனிமங் களின் அணுக் கருவிலிருந்து வெளிப்படுவதால், கதிர்வீச்சு வெளியேற்றத்தை, எந்த வகையிலும் தடுத்து நிறுத்தவே முடியாது. மூன்றாவதாக, கதிர்வீச்சுத் தனிமங்களில் இருந்து எத்தனை காலம், கதிர்கள் வெளிப் பட்டுக் கொண்டிருக்கும் என்பதாகும். இதனைத் தெரிந்து கொள்வதற்கு, ‘அரை ஆயுள்’ என்பதைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும். அதாவது, எந்த ஒரு கணத்திலும் இருக்கும் கதிவீச்சுத் தனிமத்தின் அணுக்கருக்களின் எண்ணிக்கை பாதியாகக் குறைய ஆகும் காலமே அந்தத் தனிமத்தின் அரை ஆயுள் எனப் படுகிறது. எடுத்துக் காட்டாக, கதிரியக்கத் தனிமம், காரபன்-14, 5,730 ஆண்டுகள் அரை ஆயுளைக் கொண்டது. அதாவது, 100 அணுக்கருக்கள் இருப்பதாகக் கொண்டால், அது 50 ஆக மாறுவதற்கு 5730 ஆண்டுகள் ஆகும். அந்த 50 அணுக்கருக்கள் 25 ஆக மாறுவதற்கு மேலும் 5730 ஆண்டுகள் ஆகும். 25 என்பது 12  ஆகி, 6 ஆகி, 2 ஆகி 1 ஆகி ஒன்றுமில்லாமல் போவதற்கு, ஏறத்தாழ 30, 000 ஆண்டுகள் ஆகிவிடும். இதனைப் பயன்படுத்தித் தான், கீழடியில் கிடைத்திருக்கும் பொருட்களின் காலம் கணிக்கப் படுகிறது (Radio Carbon Dating) உண்மையில் ஒரு கிராம் கதிரியக்கத் தனிமத்தில், பல கோடி அணுக்கருக்கள் இருக்கும். அவை அனைத்தும் இல்லாமல் போக எத்தனை கோடி ஆண்டுகள் ஆகும் என்பதை எண்ணி(சிந்தித்து) ப் பார்க்க வேண்டும்.

அணு உலையில் எரிபொருளாகப் பயன்படுத்தப்படும் யுரேனியம் 235-இன் அரை ஆயுள் 700 மில்லியன் ஆண்டுகள்; யுரேனியம் 238-இன் அரை ஆயுள் 4.5 பில்லியன் ஆண்டுகள்! (1 மில்லியன்= 10 இலடசம்; 1 பில்லியன்= 100 கோடி) கூடங்குளம் அணு உலைகளில் விபத்து ஏற்படுமானால், வெளிப் படும் கதிர்வீச்சுகள் எத்தனை காலம் நீடிக்கும், என்னென்ன மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை இப்போதாவது புரிந்து கொள்ளுங்கள். முன்னாள் சோவியத் ஒன்றியத்தின் மாயக் அணு உலை மற்றும் அணுக்கழிவு சேமிப்பு வளாகத்தில், 1957-ஆம் ஆண்டு ஒரு விபத்து ஏற்பட்டது. ஒரு அணுக்கழிவுத் தொட்டியில் இருந்த திரவ அணுக்கழிவு, சிதைவு வெப்பம் காரணமாக, தொட்டியின் 160 டன் காங்க்ரீட் மூடியைத் தூக்கி எறிந்து, அணுக்கழிவும் மொத்தமாகக் காற்றில் தூக்கி வீசி விட்டது. அதில் ஒரு பகுதி ‘கதிர்வீச்சு மேகமாக’ மாறி, அடுத்த 10 மணி நேரத்தில் 350கி.மீ. தொலைவு நகர்ந்து விட்டது. புற்று நோய்க்குப் பலியாகி 50 பேர் மாண்டனர், 10,000 பேர் காரணம் எதுவும் சொல்லப் படாமலேயே ஆடு, மாடுகளைப் போல அப்புறப் படுத்தப் பட்டனர். 4,70,000 பேர் கதிர்வீச்சிற்கு உள்ளாயினர். 24,000 சதுர கி.மீ. பரப்பு ‘ நிரந்தர கதிர்வீச்சு மாசுப் பகுதியாக’ அறிவிக்கப்பட்டு தடைசெய்யப்பட்டது. 20 கிராமங்கள் சோவியத் வரைபடத்திலிருந்தே நீக்கப் பட்டன. கூடங்குளம் அணு உலைகளில், என்றோ ஒரு நாள் , ஏதோ ஒரு விதத்தில் விபத்து ஏற்படு மானால்,  விபத்து நடந்த 6 மணி நேரத்திற்குள், அணு உலையிலிருந்து 5 கி.மீட்டருக்குள் வசிக்கும் மக்கள் வெளியேற்றப் பட வேண்டும்,  12 மணி நேரத்திற்குள் 25 கி.மீ. வரை வசிக்கும் மக்கள் வெளியேற்றப்பட வேண்டும்.  24 மணி நேரத்திற்குள் 75 கி.மீ வரை உள்ள மக்கள் வெளியேற்றப்பட வேண்டும். வெளியேற்றம் என்று சொல்லும் போது வீடு, கால் நடை, தோப்பு, வயல், வங்கியிருப்பு ஆகிய அனைத்தையும் துறந்து உயிர்பிழைக்க ஓட வேண்டும். இந்த மக்கள் எங்கே ஓடுவார்கள்? எப்படி ஓடுவார்கள்?

அப்படியே தப்பித்து ஓடினாலும் கூட, அவர்கள் மற்றவர்களோடு சேர்ந்து வாழ அனுமதிக்கப் பட மாட்டார்கள். அதாவது உள்நாட்டு அகதிகளாகி விடுவர். காரணம், அவர்கள்மீது படிந்திருக்கும் கதிர்வீச்சு. இப்படி வெளியேறும் மக்கள், மீண்டும் அவரவர் ஊருக்கு எப்போது திரும்ப முடியும்? செர்னோபில் விபத்து நடந்து 60 ஆண்டுகளுக்குப் பிறகும் மக்கள் வசிக்கும் இடமாக மாறவில்லை என்பது கசப்பான உண்மை. காரணம், அந்தப் பகுதியில் பரவியிருக்கும், பேரழிவிற்குக் காரணமான ‘அணுக் கதிர் வீச்சுகள்’ என்பது தான். ஆகவே, அணு உலைகளில் இருந்து வெளிப் படும் அணுக்கரு கதிர்வீச்சுகளும் (Nuclear Radiations) மின் காந்தக் கதிர்வீச்சுகளும்  (Electro Magnetic Radiations)  வேறுவேறு என்பதை நன்றாக மனதில் நிறுத்தவேண்டும். சுனாமி காரணமான, ஜப்பானின் ஃபுகுஷிமா அணு உலை விபத்து காரணமாக பெருங்கடல் நீர் கதிர்வீச்சால், நஞ் சாகி வருகிறது என்பதை நாளிதழ்கள் வாயிலாக அறிகிறோம். அமெரிக்காவில் ஏற்பட்ட மூன்று மைல் தீவு அணு உலை விபத்து சாதாரணமானது தான். ஆனாலும், அதற்கே, அணு உலையிலிருந்து வெளியேறிய கதிர்வீச்சிலிருந்து காப்பதற்காக, 1,40,000 கர்ப்பிணிப் பெண்களும், பிஞ்சுக் குழந்தைகளும் அணு உலை அமைந்திருந்த பென்சில்வேனியாவை விட்டு வெளியேற்றப் பட்டனர். அணு உலைகளில் விபத்து ஏற்பட்டு, அங்கிருந்து வெளியேற்றப்படும் மக்கள், கதிர்வீச்சு காரணமாக மீண்டும் அவரவர் ஊர்களுக்குத் திரும்ப முடியாது என்பது, மாயக், செர்னோபில், ஃபுகுஷிமா, ஆகிய அணு உலை விபத்துகளில் இருந்து நாம் கற்றுக்கொண்ட பாடம். நில நடுக்கம், எரிமலை, சுனாமி, வெள்ளம் போன்ற இயற்கைப் பேரிடர்களில் அழிவு இல்லையா என்று கேட்டு, அணு உலைகளை ஆதரிக்கும் ‘புத்தி ஜீவிகளுக்கு’ இந்த வேறுபாடு தெரிந்திருக்காது. தெரிந்து கொள்ளவும் மாட்டார்கள். அணு உலைகளை வேண்டாம் என்று ஏன் கேரளம், கர்னாடகம், ஆந்திரம் ஆகிய மாநிலங்கள் மறுத்தன என்பதும், இடிந்தகரை மக்கள் இயக்கம் ஏன் கூடங்குளம் அணு உலைகளுக்கு எதிராகப் போராடுகின்றன என்பதும், இப்போதாவது புரிகிறதா? இப்போதும் புரியவில்லையென்றால், மரபணுக் கோளாறு என்றுதான் சொல்ல வேண்டும்.

 

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments