ஆஸ்திரேலியாவின் தென்கிழக்கு கடற்கரையிலிருந்து 10 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள 46 ஏக்கர் பரப்பளவுள்ள சுண்ணாம்புத் தன்மை கொண்ட கார்னாக் (Carnac) தீவு, உவர்நீர்த் தாவரங்கள், கடல் சிங்கங்கள், நீர்க்காகம், சிறு பென்குயின், சாம்பல் கடற்புறா (Silver Gul) போன்ற சில கடல் பறவைகள், கிங் அரணை (King Skinks) மற்றும் புலி பாம்புகளுக்கு (Tiger Snakes – Notechis scutatus) வாழ்விடமாக உள்ளது. கடல் சிங்கங்களும், கடல் பறவைகளும் கடலைச் சார்ந்திருக்க, அரணைகள் மற்றும் புலிப் பாம்புகள் கார்னாக் தீவின் நிலப்பரப்பையே சார்ந்திருக்கின்றன. இவ்விரண்டில் கிங் அரணையானது ஒரு அனைத்துண்ணியாகும். தாவரங்கள், பூச்சிகள், பறவைகளின் முட்டைகள் போன்றவற்றை உண்டு தமக்குத் தேவையான நீரையும் இவ்வுணவுகளிலிருந்து பெறுகின்றன. ஆனால், புலிப் பாம்புகளின் தேவை கார்னாக் தீவின் சூழலுக்கு முரண்பட்டது. இருப்பினும் மிக அதிகமான எண்ணிக்கையில் அதாவது, இருபத்தைந்து சதுர மீட்டருக்குள் மூன்று பாம்புகள் என்ற வீதத்தில் இவை பரவிக் காணப்படுகின்றன.
புலிப் பாம்புகள் :
கொடிய நஞ்சு கொண்ட இப்பாம்புகள் ஆஸ்திரேலியாவின் உள்நாட்டில் ஈரநிலங்களில் வசிக்கக்கூடியவை. நன்கு நீந்தக்கூடிய இவற்றுக்கு அச்சுழலில் வாழக்கூடிய மீன்கள், தவளைகள், பல்லிகள், இறந்த விலங்குகள் போன்றவை உணவாக இருக்கின்றன. ஆனால், கார்னாக் தீவின் சூழல் உவர்நீர், கடற்கரை மணல், சுண்ணாம்புத்தன்மை கொண்டதோடு இதற்கு முரண்பட்டதாக இருக்கிறது. இந்த முரண்பட்ட சூழல் இப்பாம்பின் தோற்றம் குறித்த ஆய்வுக்கு இட்டுச்சென்றது. ஆய்வின் முடிவாக, முற்காலத்தில் இப்பாம்புகள் இத்தீவில் இருந்ததற்கான தடயங்கள் இல்லை என்றும், சில காலங்களுக்கு முன்பிருந்துதான் தென்படுகின்றன என்றும் தெரியவந்தது. இந்த ஆய்வானது கார்னாக் தீவில் புலிப்பாம்பின் இருப்பு குறித்த மூன்று கருதுகோள்களுக்கு வழிவகுத்தது.
- புலி பாம்புகள் தம் நீந்தும் திறனால் அருகிலுள்ள கார்டன் தீவிலிருந்து (Garden Island) கார்னாக் தீவுக்கு இடம்பெயர்ந்திருக்கலாம்.
- கார்னாக் தீவு கடல்மட்ட உயர்வால் அருகிலுள்ள கார்டன் தீவிலிருந்து பிரிந்திருக்கலாம், அதனுடன் சில புலிப் பாம்புகள் கூட்டமும் இருந்திருக்கலாம்.
- 1930 ல் ராக்கி வேய்ன் (Rocky Wayne) என்ற பாம்பு காட்சிகள் நடத்தும் ஒருவர், தன்னிடம் உள்ள பாம்புகளால் தவறுதலாக தன் மனைவி மற்றும் உதவியாளர் கடிபட்டு உயிர் இழக்க, அரசாங்கம் பாம்புக்காட்சிக்கு தடைவிதித்து பாம்புகளை விடுவிக்க கூறியமையால் ராக்கி அவற்றை கார்னாக் தீவில் விடுவித்திருக்கலாம்.
இம்மூன்றில் ராக்கி வேய்ன் கருதுகோளே சில குறிப்பிடத்தக்க ஆதாரங்களுடன் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.
புலிப் பாம்பின் சூழல் தகவமைவு :
பாம்புகளுக்கு பொதுவாகவே நன்னீர் அவசியம், அது கடல் பாம்பாகவே இருந்தாலும் அவசியம். நன்னீர் கிடைக்காத கார்னாக் தீவின் சூழலில், புலிப் பாம்புகள் தன் இரையில் கிடைக்கும் சிறிது ஈரப்பதத்தை எடுத்துக்கொண்டு மழை வரும் வரை பொந்துகளிலோ, பாறை ஈடுக்குகளிலோ தன் உடல் வெப்பத்தையும், உடல் இயக்கத்தையும் குறைத்துக்கொண்டு உயிர் பிழைத்திருகின்றன. மழை வந்தவுடன் நீர்த்துளிகள் நிலத்தில்விழும்போது தம் உடலை நனையவிட்டு நீர்த்துளிகளை அருந்தி தம் நீர்த் தேவையை நிறைவு செய்துகொள்கின்றன.
இத்தீவில் பிழைத்து இனப்பெருக்கம் செய்ய இங்கு கிடைக்கும் கடல் பறவைகளின் குஞ்சுகள் (பெரும்பாலும் சாம்பல் கடற்புறாக்களின் குஞ்சுகள்) மற்றும் முட்டைகளை உண்ணும்வகையில் நூற்றாண்டுக்கும் குறைவான மிக குறுகிய காலத்தில் தனக்கு பழக்கம் இல்லாத ஒன்றிற்கு ஏற்றவாறு தம் தாடைகளை தகவமைத்துக்கொண்டிருக்கின்றன. இது உண்மையில் பரிணாமம் அல்ல; மாறாக உடற்பயிற்சிக் கூடத்தில் தேவைப்படும் உடற்தசைகளை ஒருவர் மீண்டும் மீண்டும் பயன்படுத்தும்போது அவை வலுப்பெறுவது போன்றதே.
உள்நாட்டுப் பகுதிகளிலும் கார்னாக் தீவிலும் வாழும் புலிப் பாம்புகளை ஒப்பிட்ட சமீபத்திய ஆய்வின் முடிவுகள், கார்னாகின் புலிப் பாம்பு குட்டிகளுக்கு பெரிய இரை அளித்து வளர்த்தபோது அவற்றின் தாடைகளும் பெரிய இரைக்கேற்ற வடிவம் பெற்றது கண்டறியப்பட்டது. ஆனால், இந்த மாற்றம் மையநிலத்தில் வாழும் புலிப் பாம்புகளின் குட்டிகளில் காணப்படவில்லை.
புலிப் பாம்புகள் உணவுக்காக முட்டைகளை நோக்கி நகரும்போது அரணைகள் போட்டியாக நிற்கும்; குஞ்சுகளை நோக்கி நகரும்போது சாம்பல் கடற்புறாக்கள் தம் குஞ்சுகளைப் பாதுகாக்க சீறியபடிவந்து பாம்பின் தலையை குறிப்பாக அதன் கண்களைத் தாக்கும். இச்செயலால் கார்னாக் தீவிலுள்ள பெரும்பாலான முதிர்ந்த புலிப் பாம்புகள் கண்கள் சிதைந்த நிலையில்தான் வாழ்கின்றன. பார்வையை இழந்தாலும் புலனுணர்வுக்கான வெப்ப உணர்குழிகளற்ற இவை தம் பிளவுபட்ட நாக்கை மட்டும் கொண்டு மிக நுட்பமாக சூழலை உணர்ந்து ஒத்திசைந்து வாழ்கின்றன.
கார்னாக் தீவின் கடினமான சூழலுக்கு தனக்கே உரிய ஒரு வாழ்க்கை முறையை அமைத்துக்கொண்ட இப்பாம்புகள், ஒரு உயிர் தன் பிழைத்தலுக்கான இயல்பூக்கத்தின் மூலம் தன் எல்லைகளைத்தொட்டு வரையறையற்ற முறையில் தகவமைக்கும் என்பதை உணர்த்தும் மிகச்சிறந்த எடுத்துக்காட்டு. எனினும், இத்தகைய புதிய உயிரினம் ஒன்று அதற்கு முன்பு தான் வாழாத சூழலில் அறிமுகமாகும்போது அதுவும் அடர்ந்த எண்ணிக்கையில் அங்கிருக்கும் இயல் சூழலையும் அதன் இயல் விலங்குகளையும் பாதிக்கும் வாய்ப்பு அதிகம். புலிப் பாம்பு ஏற்படுத்திய சேதங்கள் குறித்து புதிய ஆய்வுகள் மேலும் வெளிச்சம் பாய்ச்சலாம்.
- ராகுல்