ரயில் மோதி யானைகள் உயிரிழப்பைத் தடுக்க தெர்மல் சென்சிங் கேமராக்கள் பொறுத்த தமிழ் நாடு வனத்துறை நடவடிக்கை.

கோவை – வாளையார் ரயில் வழித்தடத்தில் ரயில் மோதி யானைகள் உயிரிழப்பை தடுக்க நடவடிக்கை செயற்கை நுண்ணறிவு கேமராக்கள் அமைப்பதற்கு தமிழக வனத்துறை  நடவடிக்கை எடுத்துள்ளது.

தமிழக வனப்பகுதிக்குள் செல்லும் ரயில் வழித்தடத்தில் ரயில் மோதி யானைகள் உயிரிழப்பை தடுப்பதற்கு செயற்கை நுண்ணறிவு முறையை அறிமுகப்படுத்துகிறது தமிழக வனத்துறை. கோயம்புத்தூரில் இருந்து பாலக்காடு வழியாக கேரளா செல்லும் ரயில் வழித்தடம் அதிக ரயில் போக்குவரத்து நெருக்கடி கொண்டது.

இந்த ரயில் வழித்தடத்தில் தொடர்ந்து யானைகள் ரயில் மோதி உயிரிழக்கும் சம்பவங்கள் நடந்து கொண்டே இருக்கின்றன. கடந்த 20 ஆண்டுகளில் கோயம்புத்தூர் பாலக்காடு ரயில் வழித்தடத்தில் ரயில் மோதி 30 யானைகள் உயிரிழந்துள்ளன. இதில் தமிழக வனப்பகுதியில் 2008 ல் இருந்து 2021 வரை 11 யானைகள் உயிரிழந்துள்ளதாக தமிழக வனத்துறை தெரிவிக்கிறது. 694 சதுர கிமீ பரப்பளவைக் கொண்ட கோயம்புத்தூர் வனப்பகுதியில் சமீபத்திய 2020-21 ஆம் ஆண்டில் வனத்துறையால் நடத்தப்பட்ட
கணக்கீட்டின்படி 363 யானைகள் உள்ளன. அதாவது 2 ச. கி. மீ க்கு ஒரு யானை என்ற விகிதத்தில் உள்ளது. கோயம்புத்தூரில் இருந்து கேரளா செல்லும் ரயில் வழித்தடம் ஏ மற்றும் பி என இரண்டு வழித்தடம் உள்ளது. இதில் யானைகளின் வாழ்விடம் சுமார் 200 ஹெக்டேர் A & B தடங்களுக்கு இடையில் உள்ளது. எனவே, யானைகள்
A & B தடங்களை அடிக்கடி கடக்கும்போது மற்றும் ரயில்கள் மோதும் அபாயத்திற்கு உள்ளாகின்றன.

ரயில் மோதி யானைகள் உயிரிழப்பதைத் தடுக்க செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த பசுமைத் தீர்ப்பாயம் அறிவுரை

இதனைத் தடுப்பதற்காக ரயில் வழித்தடத்தில் தெர்மல் சென்சிங் கேமராக்கள் பொறுத்த தமிழ்நாடு வனத்துறை ஒப்பந்தப் புள்ளிகளை கோரியுள்ளது.

TD_dfo202797_rfp corrected 12.08.2022

தேதிகள் :
1. ரயில் வழித்தடத்தை பார்வையிட கடைசி தேதி 23.08.22
2. டெண்டருக்கு முந்தைய சந்திப்பு 26.08.22
3. டெண்டர் அனுப்ப வேண்டிய கடைசி தேதி 08.09.22
4. டெண்டர் திறக்கப்படும் தேதி 08.09.22
5. டெண்டர் வழங்கப்படும் நாளிலிருந்து 120 நாட்களில் பணியை முடிக்க வேண்டும்

என்னென்ன பணிகள்:

தெர்மல் சென்சிங் கேமராக்கள், அதிநவீன கட்டுப்பாட்டு மையம், மின்சார விநியோகம், உள்ளிட்ட அமைப்புகள் அமைய இருக்கின்றன.

தமிழக வனப்பகுதியில் 13 கிமீ விபத்து நடைபெறும் பகுதியாக கண்டறியப்பட்டு அதில் இந்த கேமராக்கள் அமைக்கப்பட இருக்கின்றன.

இந்த கேமராக்கள் 24 மணி நேரமும் இயங்கும். ரயில் தண்டவாளங்களை யானைகள் கடக்கும் போது
சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளுக்கும் எச்சரிக்கை அனுப்பும்.

அதன் பின்னர் வயர்லெஸ் மூலம் ரயில் ஓட்டுனர்களுக்கு எந்த இடத்தில் யானைகள் உள்ளது என்பது தெரிவிக்கப்படும்.

கேமராக்கள் செயல்படும் முறை:

கேமராவின் பார்வை சிவப்பு ஆரஞ்சு மஞ்சள் என மூன்று மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அதாவது, ரயில் பாதையின் மையத்திலிருந்து
இருபுறமும் சுமார் 50 மீ சிவப்பு மண்டலமாக இருக்கும், அடுத்த 50 மீ ஆரஞ்சு மண்டலம் மற்றும் மூன்றாவது 50 ஆக இருக்கும் மீட்டர் மஞ்சள் மண்டலமாக இருக்கும். யானையானது ஒவ்வொரு மண்டலத்திற்குள் நுழையும் போதும், ரயில் தண்டவாளத்தை நெருங்கும் அதன் தீவிரத்தைப் பொருத்து எச்சரிக்கை ஒளியும் விளக்கங்களும் மாறுபடும்.

யானை மஞ்சள் மண்டலத்திற்குள் வந்தவுடனேயே வனத்துறை மற்றும் ரயில்வே துறை அதிகாரிகளுக்கு எச்சரிக்கை அனுப்பப்படும். அதன்பின்னர் ஆரஞ்சு மண்டலத்துக்கு வந்தவுடன் யானையை விரட்டும் நோக்கில் வன பாதுகாவலர்கள் சம்பந்தப்பட்ட இடத்துக்கு அனுப்பப்படுவார்கள். யானை சிவப்பு மண்டலத்துக்குள் நுழைந்து விட்டால் ரயில்வே கோட்ட பொறியாளர், மாவட்ட வன அதிகாரி உள்ளிட்டோருக்கு தகவல் தெரிவிக்கும் வகையில் வடிவமைக்கப்படுகிறது. இவை கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்ந்து தகவல்களை அனுப்பிக் கொண்டே இருக்கும். கட்டுப்பாட்டு அறையில் அமைக்கப்பட்டுள்ள மாபெரும் திரையின் மூலம் யானைகளின் நகர்வுகளை தொடர்ந்து கண்காணிக்க முடியும்.

இதுகுறித்து சமூக ஆர்வலர் பாண்டியராஜா கூறுகையில், ரயில் மோதி யானைகள் உயிரிழப்பை தடுக்க ரயில்வே மற்றும் வனத்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தாலும், அந்த நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை என்று தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தது. செயற்கை நுண்ணறிவு முறையில் தெர்மல் கேமராக்கள் பயன்படுத்த வேண்டுமென்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வந்தனர். உயர்நீதிமன்ற நீதிபதிகள் யானைகள் உயிரிழந்த பகுதியை நேரில் சென்று ஆய்வு செய்தனர். யானைகள் தொடர்ந்து ரயில் மோதி உயிர் இழந்து வருவதை தடுக்கும் வகையில் தற்போது தமிழக வனத்துறை சார்பில் எடுக்கப்பட்டுள்ள முயற்சிகள் வரவேற்கத்தக்கது. இதை போல கேரள வனத்துறையும் வாளையார் முதல் கஞ்சிக்கோடு வரை உள்ள பகுதிகளில் இதே செயற்கை நுண்ணறிவு முறையை அமல்படுத்த வேண்டும். மேலும் இந்த செயற்கை நுண்ணறிவு அமைப்பை முறையாக பராமரிக்க வேண்டும். ஏற்கனவே இந்த வழித்தடத்தில் வாளையாறு மற்றும் எட்டிமடை ரயில் நிலையங்களுக்கு இடையே ரயில்வே துறை சார்பில் 7 கோடி மதிப்பீட்டில் யானைகள் கடந்து செல்லும் வகையில் சுரங்கப் பாதைகள் அமைக்கும் பணிகளுக்கான முன்னெடுப்புகள் விரைவில் நிறைவு பெறவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

-செய்திப் பிரிவு

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments