பல்லடுக்கு நெகிழி உற்பத்தியை முழுமையாகத் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நெகிழிக் குப்பைகளில் குறிப்பாகப் பல்லடுக்கு நெகிழி (Multilayered Plastic) இன்று ஒரு பெரும் சூழல் சிக்கலாக உருவெடுத்து வருகிறது. கடைகளில் விற்கப்படும் சிப்ஸ் பாக்கெட்டுகள், பிஸ்கெட் பாக்கெட்டுகள் பதப்படுத்தப்பட்டப் பழச்சாறு பாக்கெட்டுகள், சாக்லேட் பொட்டலங்கள் உட்பட எல்லா ஷாம்பு எண்ணெய் ஷேஷேக்களும் (Sachets) மறுசுழற்சி செய்யவோ அல்லது வேறு எந்த விதத்திலும் பயன்படுத்தவோ அல்லது பாதுகாப்பாக அழிக்கவோ முடியாத பல்லடுக்கு நெகிழியால் ஆனவை. உலகின் மிக அதிக அளவு பல்லடுக்கு நெகிழிப் பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனங்களில் ஒன்றான யுனிலீவர் நிறுவனம் பலகோடி செலவில் பல்லடுக்கு நெகிழிக் கழிவுகளை மறுசுழற்சி செய்வதாகச் சொல்லி நிறுவிய ஆலையை சமீபத்தில் எந்த அறிவிப்புமின்றி மூடியது இங்கு குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் பல்லடுக்கு நெகிழியை முழுமையாகத் தடைசெய்யக்கோரி பெங்களூருவைச் சேர்ந்த கிருஷ்ணா, சென்னையைச் சேர்ந்த ஆண்டனி ரூபின் கிளமெண்ட் மற்றும் சரவணன் ஆகிய மூன்று சூழலியல் ஆர்வலர்கள் இணைந்து இன்று தென்மண்டலப் பசுமைத் தீர்ப்பாயத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளனர். சூழலியல் செயல்பாட்டாளர்களான கிருஷ்ணா (குப்பை சேகரிக்கும் தொழிலாளர் பிரதிநிதி), ஆண்டனி கிளமண்ட் ரூபின் (காட்டுயிர் ஆர்வலர்) மற்றும் சரவணன் (மீனவர் பிரதிநிதி) ஆகியோர் தங்கள் மனுவில் ஏன் பல்லடுக்கு நெகிழி முழுமையாகத் தடை செய்யப்படவேண்டியதாக இருக்கிறது என்பதை பல்வேறு முக்கியத் தரவுகளோடு குறிப்பிட்டிருந்தனர்.
மறுசுழற்சி செய்யமுடியாத, மாற்றுப் பயன்பாடுகள் இல்லாத, மற்றும் எரிவுலைகளில் (Incinerators) எரித்து ஆற்றலாகத் திரும்பப் பெறமுடியாத (Energy recovery) பல்லடுக்கு நெகிழியின் உற்பத்தியையும் பயன்பாட்டையும் 2 ஆண்டிற்குள் (அதாவது 2020க்குள்) முழுதுமாகத் தடை செய்ய வேண்டுமென்று ஒன்றிய அரசின் 2018 ஆம் ஆண்டு நெகிழிக் கழிவு மேலாண்மை விதிகள் தெளிவாகச் சொன்னபிறகும் அரசு மற்றும் அதிகாரிகளின் அலட்சியத்தால் பல்லடுக்கு நெகிழியானது தொடர்ந்து உற்பத்திச் செய்யப்படுவதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
நெகிழி உட்பட காகிதம், அலுமினியம் போன்ற பல்வேறு அடுக்குகளாலான பல்லடுக்கு நெகிழியை எரிப்பதுகூட கடுமையான சுற்றுச்சூழல் மற்றும் உடல்நலப் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியது என்பதைப் பல்வேறு தரவுகள்மூலம் அவர்கள் தங்கள் மனுவில் சுட்டிக்காட்டியிருக்கின்றனர். அரசின் நெகிழித்தடைகள் பெரும்பாலும் கார்பரேட் நிறுவனங்களுக்குச் சாதகமாக இருப்பதையும் அவர்கள் கவனப்படுத்தி உள்ளனர். இந்த பல்லடுக்கு நெகிழியானது பொதுவாக பெருநிறுவனங்களால் விற்கப்படும் பொட்டலங்களில் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. டெட்ரா பேக் (Tetra Pak Pvt. Ltd) நிறுவனம் மட்டும் 2020-21 இல் 2,25,360 மெட்ரிக் டன்கள் பல்லடுக்கு நெகிழியை உற்பத்தி செய்து அதை சூழலில் கலக்கவிட்டிருக்கிறது என்று அவர்கள் தங்கள் மனுவில் குறிப்பிட்டிருக்கின்றனர்.
உற்பத்தியாகும் மொத்த பல்லடுக்கு நெகிழியின் அளவு, அவை கையாளப்பட்ட விதம் மற்றும் ‘நீட்டிக்கப்பட்ட உற்பத்தியாளர் பொறுப்பு’ (EPR) அமல்படுத்தப்பட்ட விதம், 2016 ஆம் ஆண்டின் நெகிழிக் கழிவு கையாளுதல் விதிகள் அடிப்படையில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த ஆவணங்களை வழங்க அரசுக்கு உத்தரவிடக்கோரி பசுமைத் தீர்ப்பாயத்தின் முன் மனுதாரர்கள் இடைக்கால கோரிக்கை வைத்திருக்கின்றனர். அத்தோடு பல்லடுக்கு நெகிழி குறித்தான ஒன்றிய அரசின் 2016 ஆம் சட்டங்களை முழுமையாக அமல்ப்படுத்தவும் அதை மீறும்பட்சத்தில் சட்டப்பூர்வ நடவடிக்கைகள் எடுக்கவும் அரசுக்கு உத்தரவிட தங்கள் மனுவில் கோரியுள்ளனர்.
இம்மனு மீது 18.02.2022 அன்று தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் நீதித்துறை உறுப்பினர் ராமகிருஷ்ணன் மற்றும் நிபுணத்துவ உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர் கொண்ட அமர்வு விசாரனை நடத்தியது. மனுதாரரின் கோரிக்கையை தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களின் மாசு கட்டுப்பாடு வாரியம், மத்திய மாசு கட்டுப்பாடு வாரியம் மற்றும் மனுதாரரால் குற்றம் சாட்டப்பட்ட நிறுவனம் ஆகியோர் இந்த பல்லடுக்கு நெகிழி உற்பத்தியைக் கட்டுப்படுத்த மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பதிலளிக்குமாறு உத்தரவிட்டுள்ளது.
பல்லடுக்கு நெகிழியின் உற்பத்தியையும் பயன்பாட்டையும் முழுமையாகத் தடை செய்யாமல் சூழலை அச்சுறுத்தும் நெகிழிப் பிரச்சினையை எந்தவிதத்திலும் சரி செய்ய முடியாது என்பதே யதார்த்தமான உண்மை.