இந்திய நீதிமன்றங்களில் விலங்குகள் கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவான 338 வழக்குகள் தற்சமயம் நிலுவையில் இருப்பதாகத் தெரியவந்துள்ளது. இப்பட்டியலில் தமிழ்நாடு முதலிடம் வகிக்கிறது.
இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த கால்நடை வளர்ப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் திரு பர்ஷோத்தம் ரூபாலா இந்தியா முழுவதுமுள்ள நீதிமன்றங்களில் மொத்தமாக 338 விலங்குகள் கொடுமை தொடர்பான வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் அதில் 118 வழக்குகள் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் இருப்பதாகவும் தெரிவித்தார்.
ஒன்றிய அமைச்சர் அளித்த பதிலின்படி இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழ்நாட்டில் மட்டும் 66 வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதற்கு அடுத்த படியாக உச்சநீதிமன்றத்தில் 44, டெல்லியில் 43, மகாராஷ்டிராவில் 42, கேரளாவில் 35 வழக்குகள் நிலுவையில் இருப்பதாகத் தெரியவந்துள்ளது.
தமிழ்நாட்டைப் பொருத்த வரையில் மற்ற மாநிலங்களை விட விலங்குகள் கொடுமை தொடர்பான வழக்குகள் இங்கு அதிகமாக பதியப்படுவதும் பட்டியலில் தமிழகம் முதலிடம் வகிக்கக் காரணம் என்கின்றனர் விலங்கு நல ஆர்வலர்கள்.
cruelty