உரக்குண்டு முதல் குப்பைத் தொட்டிவரை

சூழலின் மீதான போரை முடுக்கிவிட்டதில் இன்றைய நவீனப் பொருளாதார உற்பத்தி முறை அதிமுக்கியப் பங்கு வகிக்கிறது என்பதை நிச்சயம் புறந்தள்ள முடியாது. நெருப்பைக் கண்டுபிடித்த காலமுதலே மனித இனம் தீ மூட்டித் தொடங்கி வைத்திருந்த இயற்கையின் மீதான இந்த வல்லாதிக்கத்தை நீராவி இயந்திரத்தின் கண்டுபிடிப்புக்குப் பின்பான தொழிற்புரட்சியும் முதலாளித்துவ உற்பத்தி முறையும் கண்மூடித்தனமான வேகத்தில் துரிதப்படுத்தின.
இந்தப் பின்னணியில் சூழலியல் பார்வையில் இப்புவியின் வரலாற்றைக் குப்பைக்குமுன் (கு.மு) மற்றும் குப்பைக்குப்பின் (கு.பி) எனப் பிரிக்க முடியும் எனத் தோன்றுகிறது. இந்தக் காலகட்டத்தைச் சரியாக வரையறுக்க இயலாவிட்டாலும் பொருட்களின் வரைமுறையற்ற உற்பத்தியினைத் தொடங்கிவைத்த தொழிற்புரட்சியின் காலத்தைக் கொண்டு இதைப் பிரிப்பது ஓரளவுக்குச் சரியாக இருக்கும். எனினும் குப்பைக்குப் பிற்பட்ட காலமானது அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளில் தொடங்கி வெகுகாலம் ஆகியிருந்தாலும் இந்தியத் தீபகற்பத்தின் தென்முனையிலிருந்த என் கிராமத்தில் அது சுமார் இருபத்தைந்து வருடங்களுக்குள்தான் தொடங்கியிருந்தது.
1990களுக்கு முன்பான அதன் இறுதி வருடங்கள் இன்னும் எனக்கு கொஞ்சம் நினைவிலிருக்கிறது. அப்போது எங்கள் ஊரின் ஒவ்வொரு வீட்டின் பின்புறத்திலும் மண்ணில் தோண்டப்பட்ட ஒரு குழி இருக்கும். அதை ‘உரக்குண்டு’ என்று சொல்வார்கள். பயன்பாட்டைப் பார்த்தால் அது இன்றைய குப்பைத் தொட்டியை நினைவுபடுத்தினாலும் அது குப்பைத்தொட்டி அல்ல. ஏனெனில் அப்போது ‘குப்பைகள்’ கண்டுபிடிக்கப்படவில்லை. ஆம்! அப்போது குப்பைகள் கண்டுபிடிக்கப்படவில்லை. மாடு வளர்ப்பவர்கள் வீட்டில் அந்தக் குழி, மாட்டின் சாணத்தால் நிறைந்தது என்றாலும் மாடுகள் இல்லாதோர் வீட்டிலும் விவசாயம் செய்யாதோர் வீட்டிலும்கூட அது இருந்தது. எச்சில் உணவு முதலாய் காய்கறிகள் மற்றும் பழங்களின் தோல், மாமிச வெட்டுத் துண்டுகள் போன்றவை தினமும் அந்தக் குழியில்தான் கொட்டப்பட்டன. வீட்டைச்சுற்றி உயர்ந்து வளர்ந்திருந்த வேம்பு மற்றும் புளியமரங்களின் இலையுதிர் காலத்துத் தழைகளும் அங்கேயே வந்தடைந்தன. சாப்பிட்ட வாழை இலைமுதல் வீட்டுவாசலில் தோரணமான தலைவாழை மரங்களும் தம் வாழ்வின் இறுதியில் இங்கேதான் அடக்கமாகின.
சிலநேரங்களில் வீட்டில் வளர்க்கப்படும் கோழிகள், பூனைகள் போன்ற சிறு விலங்குகள் இறந்து போனாலும் அந்தக் குழியிலேயேப் புதைக்கப்பட்டன. பசு, எருமை மாடுகளின் சிறுநீரும், மீன் கழுவிய தண்ணீரும் கோழிகளின் முட்டை ஓடுகளும் அங்கேயேதான் தினமும் சங்கமித்தன. வீட்டு விலங்குகளின் எச்சமும் குழந்தைகளின் கழிவுகளும் இங்கேதான் கொட்டப்பட்டன. இதைக் கேட்கும் நம் வீட்டுப்பிள்ளைகள் முகத்தைச் சுழித்தபடி அருவெறுப்பாய் “அங்கிள், அப்படிண்ணா பேட் ஸ்மெல் வருமே?” எனக் கேட்கக்கூடும்! இல்லை. “பேட் ஸ்மெல்” வருவதற்கு அது இன்றைய நவீனக் குப்பைத் தொட்டியோ அல்லது மாடித் தோட்டம் போடுவோர் வைத்திருக்கும் நெகிழி கம்போஸ்ட் கலனோ அல்ல.
அங்கே அந்த உரக்குண்டுக்கும் அது அமைந்திருந்த நிலத்துக்கும் ஒரு கொடுக்கல் – வாங்கல் உறவிருந்தது. உரக்குண்டின் அதிகபடியான நீரை மண் உள்வாங்கிக் கொண்டது. அதேநேரத்தில் அது வெயிலில் காய்ந்து உலர்ந்து போகாது சுற்றிலுமிருந்த மரங்கள் குடை பிடித்துக்கொண்டன. அங்கு நிலவிய மிகச்சரியான ஈரப்பதமும் வெப்பமும் அங்ககப் பொருட்களை மட்கச் செய்யும் நுண்ணுயிர்களைச் சிவப்பு, இல்லை – இல்லை பச்சைக் கம்பளம் போட்டு வரவேற்றன. பூச்சிகளும் புழுக்களும் நிறைந்திருந்த அந்தக் குழியில் ஊனுண்ணிகளான தவிட்டுக்குருவிகளும் மைனாக்களும் பசியாறின. அனைத்துண்ணியான காகங்களுக்கும் கோழிகளுக்கும்கூட அதுவே அட்சய பாத்திரம். வீட்டின் ஒவ்வொரு நபருக்கும் ஊட்டமளிக்கும் கோழிகளின் குஞ்சுகள் முட்டையிலிருந்து பொறித்தபின் முதன்முதலாய் இந்த உரக்குண்டில்தான் உணவு தேடத்தொடங்கின. அப்போது பிராய்லர் கோழிகள் கண்பிடிக்கப்படாததால் ‘வீட்டுக்கோழி’களுக்கு நாட்டுக்கோழிகள் என்ற பெயர் வைக்கப்படவில்லை. சைவப்பிரியர்களான எலிகளும்கூட அங்கு முகாம் அமைத்திருந்தன. கொட்டப்படும் அங்கக பொருட்களை உண்டு செரிப்பதில் அவற்றிற்கும் பங்கிருந்தது.
அங்கு இன்றுபோல குப்பைகள் தினமும் பக்கெட் பக்கெட்டாகக் கொட்டப்படுவதில்லை. மாறாக அங்ககப் பொருட்கள் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்வதால் அவை மட்குவதற்கான நல்ல காற்றோட்டம் பெற்றன. அந்தக் காற்றோட்டம் அதன் சிதைவில் மீத்தேன் உற்பத்தியாவதை வெகுவாகக் குறைத்தது. அதில் கொட்டப்படும் பொருட்களைப் பார்த்தால் அது அருவெறுக்கத்தக்க இடமாகத் தோன்றலாம். ஆனால் விலங்குகளுக்கு மட்டுமல்ல மனிதருக்கும்கூட அது ஒரு உணவு உற்பத்திச்சாலை. ஆம்! மனிதனுக்கான உணவை உற்பத்தி செய்யும் வயல்களுக்கான உணவு வருடம் முழுவதும் அங்கேதான் தயாராகிக்கொண்டிருந்தது. ஒவ்வொரு பருவத்திலும் வயலில் அறுவடை முடிந்ததும் அடுத்த விதைப்புக்குமுன் இந்த உரக்குண்டுகளில் அதுகாறும் மட்கிய நுண்ணூட்டச்சத்துக்கள் நிறைந்த எரு அதன் நுண்ணுயிர்கள் முதல் மண்புழுக்களுடன் முழுவதுமாகத் தோண்டி எடுக்கப்பட்டு மனிதர்களால் கடவங்களில் (பனையோலையால் செய்யப்பட்ட கூடைகள்) சுமக்கப்பட்டு விளைநிலத்தில் பரப்பப்பட்டது. இந்த எருவுக்கு ‘இயற்கை உரம்’ என்ற பெயர் அப்போது வைக்கப்படவில்லை. ஏனெனில் அப்போது ‘இயற்கை வியாபாரம்’ தொடங்கியிருக்கவில்லை.
வெகுவிரைவில் கு.மு முற்றுபெற்று கு.பி பிறந்திருந்தது.
தொழிற்புரட்சித் தொடங்கியது. நீராவி எஞ்சினின் கண்டுபிடிப்பு பெரும்பாலானத் தொழில்களை இயந்திர மயமாக்கியது. உலகம் தொழிற்சாலைகளால் ஆக்கிரமிக்கப்படத் தொடங்கியது. அதுவரையிலும் நீண்ட நாட்கள் செலவழித்து உற்பத்திச் செய்த பொருட்களை இப்போது அதைவிட மிகவேகமாக உற்பத்தி செய்ய முடிந்தது. ஆலைத் தொழிலாளர்கள் இருபதினான்கு மணி நேரமும் பொருட்களை உற்பத்தி செய்து குவித்தனர். உற்பத்தி மட்டும் செய்துவிட்டால் போதாதே? அவற்றைத் தொடர்ந்து விற்றுக்கொண்டே இருந்தால்தானே தொடர்ந்து இலாபமீட்ட முடியும்? எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்பதுபோல எதை விற்றால் இலாபம் பெருகும் என நாளும் பொழுதும் சிந்தித்தப் பெருமுதலாளிகள் மூளையைக் கசக்கி விற்பனையை அதிகரிக்க பல வியூகங்கள் வகுத்தனர். அதுவரைத் தேவைப்பட்டிருக்காத பல பொருட்கள் இப்போது அத்தியாவசியத் தேவைகள்போலக் கட்டமைக்கப்பட்டன. இதற்கு விளம்பரங்களும் அவற்றில் தோன்றிய நட்சத்திரங்களும் தூண்களாய் செயல்பட்டனர். விளம்பரங்களின் மூலம் நுகர்வோரிடம் ‘தேவைகள்’ கட்டமைக்கப்பட்டன. ஆடம்பரப் பொருட்கள் அத்தியாவசியப் பொருட்களாக்கப்பட்டன. நுகர்வோரால் வாங்கப்பட்டப் பொருட்களைத் ‘திட்டமிட்ட அழித்தொழிப்பு’ (Planned Obsolescence) செய்வதன் மூலம் விரைவில் குப்பையாகினர் உற்பத்தியாளர்கள். எவ்வளவு அதிவிரைவாக ஒரு பொருள் குப்பைக்குச் செல்கிறதோ அவ்வளவு விரைவாக புதிய பொருளை நுகர்வோர் வாங்குவார். எவ்வளவு அடிக்கடி புதிய பொருள் வாங்கப்படுகிறதோ அவ்வளவு அதிகமாய் இலாபம் பெருகும். இன்னொருபுறமோ தூக்கியெறியப்பட்டப் பொருட்கள் குப்பை மலைகளாய் வளரத்தொடங்கின. ஆம்! கட்டற்ற வளர்ச்சி எங்கும் புற்றுக்கட்டிபோல வளரத் தொடங்கிவிட்டது. உலகமுழுவதையும் நவீனப் பொருளாதார உற்பத்திமுறைத் தனது ஆக்டோபஸ் கரங்களால் உலகப் பொருளாதாரத்தைக் கட்டுப்படுத்தத் தொடங்கியது.
இதற்கு பயன்பட்ட பல உத்திகளில் சிலவற்றைப் பார்ப்போம்.
‘திட்டமிட்ட அழித்தொழித்தல்’ என்ற மிகப் பிரபலமான உத்தி 1920 வாக்கிலேயே ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் சிந்தையில் உதயமானது. தாங்கள் வாங்கும் கார்கள் நல்ல நிலையிலேயே இருந்தாலும் நுகர்வோரை அவர் பயன்படுத்தும் கார் காலாவதியானதாய் உணரச்செய்து அவரது பழைய காரைக் கொடுத்துவிட்டுப் புதிய கார் வாங்கச் செய்வது எப்படி என்ற சிந்தனையில் தொடங்கியது இந்தத் திட்டம். தொடர்ந்து விரைவிலேயே பல புதிய பரிணாமங்களை எட்டி இன்று மொத்த உற்பத்தித் துறையையும் பீடித்திருக்கும் நோயாகியிருக்கிறது.
விரைவில் ஆயுள் முடிந்துவிடுவதுபோலப் பொருட்களை உருவாக்குவது, பழுது பார்க்க முடியாதபடி பொருட்களை வடிவமைப்பது, ஏற்கனெவே புழக்கத்தில் இருக்கும் தொழில்நுட்பம் அல்லது பாணி காலாவதியானதுபோன்று நுகர்வோரை உணரச்செய்ய ‘புதிய மேம்பட்டத் தொழில்நுட்பம்’ போன்ற உருட்டுகளால் பயன்பாட்டில் இருக்கும் பொருளைத் தூக்கி எறியச் செய்வது, புதிய மென்பொருட்கள் (software), பயன்பாட்டில் இருக்கும் வன்பொருட்களால் (Hardware) ஏற்க இயலாததாக வடிவமைப்பது போன்றவை இந்த வகையைச் சார்ந்தவையே.
சில பத்தாண்டுகளுக்கு முன்பு கோல்கேட் பற்பசைத் தன் விற்பனையை அதிகரிக்க பற்பசைக் கலனின் வாயைப் பெரிதுபடுத்தியதாக ஒரு தகவலுண்டு. அதாவது அகலமான வாய் கொண்டப் பற்பசைக் கலனைப் பயன்படுத்தும்போது விரைவில் அது காலியாகிவிடும். உடனே புதிய பற்பசை வாங்குவதற்கானத் தேவை உருவாகும். அதேப் போன்று பழைய மைநிரப்பும் பேனாக்கள் ஒழிக்கப்பட்டு பயன்படுத்தித் தூக்கி எறியும் பேனாக்கள் சந்தையை ஆக்கிரமித்திருப்பதையும் மைநிரப்பும் பேனாவாகவே இருந்தாலும் கேட்ரிட்ஜ்களுக்காகத் திரும்பத் திரும்பச் சந்தையைய் சார்ந்திருக்க வேண்டிய நிலையும் உருவாக்கப்பட்டிருக்கிறது போன்றவை இந்த வலைப்பின்னலின் உதாரணங்கள்.
ஒரு விலையுயர்ந்த ‘பிராண்டட் டிராவல் பேக்’ வாங்கினாலும்கூட என்னதான் அதன் பெரும்பாலானப் பகுதிகள் உறுதியாக இருந்தாலும் அதன் ஜிப்கள் தரமற்றதாக வடிவமைக்கப்பட்டு விரைவில் பழுதாகும்படி வடிவமைக்கப்படுகின்றன. நுகர்வோரும் அதைப் பெரிதாக அலட்டிக்கொள்ளாத அளவில் பக்குவப்படுத்தப்பட்டிருக்கிறார். அதே நேரத்தில் இங்கு பழுதுபார்க்கும் கலாச்சாரம் கவுரவக் குறைவாய் கட்டமைக்கப்பட்டு அவற்றிற்கான வாய்ப்புகளும் குறைந்து போயிருப்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும். இன்னொரு புறம் நல்ல நிலையிலேயே இருந்தாலும் ஆடைகள் போன்றவை ‘பழைய பாணி’ (Old Fashion) என்று புதுவரவுகளால் இழிவுபடுத்தப்பட்டு ஒதுக்கப்படுகின்றன.
இன்னொருபுறம் கட்டற்ற உற்பத்திக்குத் தீனிபோடத் தேவைப்பட்ட பெருமளவு நிலக்கரிக்காகக் காடுகள் அகழப்பட்டு நிர்மூலமாக்கப்பட்டன. ஐரோப்பிய நாடுகளில் தொடங்கிய இந்தப் புரட்சிக்குக் காலனிய நாடுகள் கச்சாப்பொருட்களுக்காகக் கசக்கிப் பிழியப்பட்டன. ஒரு புறம் இயற்கை வளங்கள் பெரும் வேகத்தில் சூறையாடப்பட இன்னொருபுறம் தொழிற்சாலைகளின் புகைபோக்கிகள் இரவும் பகலும் வான்வீதியில் புகையை உமிழ்ந்தபடி இப்புவியில் மீண்டெழமுடியாத தாக்கத்தைக் கொடுக்கத் தயாராகிக்கொண்டிருந்தன.
இந்நேரத்தில் இருபதாம் நூற்றாண்டின் உன்னதக் கண்டுபிடிப்பான நெகிழி சோதனைச்சாலையில் பிறந்து உலகெங்கும் மக்களின் கைகளில் தவழத் தொடங்கியிருந்தது. உரக்குண்டுகளுக்கு சோதனைக்காலம் அப்போது ஆரம்பமானது. உரக்குண்டுகளில் அதுவரையிலும் மட்காதப் பொருட்கள் எதுவும் இல்லையென்பதையும் குறைந்த அளவில் பயன்பாட்டில் இருந்த கண்ணாடி, உலோகங்கள் போன்ற மட்காதப் பொருட்கள் வீடுகளிலேயே சேர்த்துவைக்கப்பட்டு பின்னர் மறுசுழற்சிக்காக முழுமையாய் கொடுக்கப்பட்டதையும் இங்குக் கவனத்தில் கொள்ளவேண்டும்.
பயன்படுத்தித் தூக்கியெறியும் பொருட்களின் புழக்கம் வீட்டில் தொடங்கியது. ஒரு சமைக்கும் பாத்திரத்தையே தலைமுறை தலைமுறையாய் பாதுகாத்து பராமரிக்கும் கிராம வாழ்வில் அது அத்தனை எளிதாய் இருக்கவில்லை. மீன் வாங்கும் பிளாஸ்டிக் கவரைகூட நீரில் கழுவி காயவைத்து சமையலறை ஜன்னலில் அடுத்த பயன்பாட்டுக்காய் அம்மா சொருகி வைத்தது இன்னும் நினைவிருக்கிறது. ஆனால், கொஞ்சம் கொஞ்சமாக பயன்படுத்தும் பொருளை பராமரித்து பாதுகாக்கும் கலாச்சாரம் அழிக்கப்பட்டது. பழைய நீடித்து உழைக்கும் பொருட்களை மாற்றீடு செய்த புதிய சந்தை வரவுகள் அதிகக் கவர்ச்சியானதாகவும் அதே நேரத்தில் விரைவில் பழுதாகவோ பயனற்றதாகவோ ஆனாலும் தூக்கியெறியுமளவுக்கு மலிவானதாகவும் இருந்தன.


உதாரணமாக நெகிழித் தட்டுகள், வாளிகள் ஆகியவை அதுவரை பயன்பாட்டிலிருந்த உலோகத்தட்டுகள் இரும்பு அலுமினிய வாளிகளைவிட தரம் குறைந்ததாகவும் உடையும் தன்மையுள்ளதாகவும் இருந்தாலும் மலிவான அவற்றை வாங்கிக் குவிக்க மக்கள் தூண்டப்பட்டார்கள். அவை தாம் முன்பு பயன்படுத்திய பொருட்களைவிட உறுதியற்றதாகவும் எளிதில் பழுதாவதாகவும் இருந்தாலும் அவற்றை வைத்திருப்பது கவுரவமானது போன்ற ஒரு மாயைக்குள் மனிதர்கள் சிக்குண்டனர். எங்கள் வீடும் அதிலிருந்து தப்பவில்லை.
பிள்ளைகளின் கைகளில் இருந்த ஒன்றிரெண்டு மரப்பாச்சி பொம்மைகளின் இடத்தை எண்ணெற்ற நெகிழிப் பொம்மைகள் பிடிக்கத் தொடங்கின. அலுமினிய வாளிகள் நெகிழி வாளிகளால் மாற்றீடு செய்யப்பட்டன. வாழையிலையின் இடத்தை நெகிழி தட்டுகள் பிடித்துக்கொண்டன. சமையலறையின் தென்னை நார் பெட்டிகள், பீங்கான் மற்றும் கண்ணாடி பாட்டில்கள் மறைந்து நெகிழி புட்டிகள் தலைதூக்கின. மளிகைக்கடையின் பார்சல்கள் காகிதத்திலிருந்து நெகிழிக்கு மாறின.
உரக்குண்டுக்கு நெருக்கடி தொடங்கியது. குப்பைகள் குவியும் வேகம் பல மடங்கு அதிகரித்தது. அங்கு வரத் தொடங்கியப் பொருட்களை உரக்குண்டால் தின்று செரிக்க முடியவில்லை. செரிக்கப்படாத பொருட்களை அடிக்கடி எரிக்க வேண்டியதாயிற்று. நவீன கட்டிடங்கள் ஏற்றம் பெற்ற காலம் அது. எங்கும் சிமெண்ட் கட்டுமானங்கள் ஆக்கிரமிக்கத் தொடங்கி அது உரக்குண்டுகளையும் விட்டுவைக்கவில்லை. அதுவரை மண்ணில் வெறும் குழிபோன்று வெட்டப்பட்டிருந்த உரக்குண்டுகள் இப்போது சிமெண்ட் தொட்டிகள் ஆகின. மண்ணுக்கும் உரக்குண்டுக்குமான தொடர்பு துண்டிக்கப்பட உரக்குண்டில் ஈரப்பதம் அதிகரித்தது. சுகாதாரக்கேடும் துர்நாற்றமும் எழுந்தது. முன்பைவிட வேகமாய் குப்பைகள் மேலும் மேலும் பெருக குப்பைக்கு மூச்சுத் திணறியது. மட்கும் வேகம் குறைந்தது. காற்றோட்டம் இல்லாமல் மட்கிய நிலையில் உரக்குண்டு விரும்பத்தகாத மீத்தேன் வாயுவை வெளியிடத் தொடங்கின.
அந்தோப் பரிதாபம்! உரக்குண்டு செத்து அழுகத் தொடங்கிவிட்டது.
தத்தமது உரிமையாளரின் நிலத்திலேயே அதுகாறும் குடிகொண்டிருந்த உரக்குண்டுகள் சுகாதாரக்கேட்டின் காரணியாய் உருமாறியது அவற்றின் உரிமையாளர்கள் அந்தப் பிணங்களை வீதிக்கு நகர்த்திக் கொண்டுவந்தனர். ஒவ்வொரு வீட்டின் உரக்குண்டும் கால்முளைத்து வெளியேறி தெருமுனைகளிலும் காலி மனைகளிலுமாய் இடம்பிடித்துக்கொண்டன. இதோ இன்று நாம் காணும் நவீனக் குப்பைத்தொட்டிகள் பிறந்திருக்கின்றன. தாயைக்கொன்ற நவீனப் பிள்ளைகள் அவை. என்னதான் நவீனமாயினும் முடைநாற்றமெடுக்கும் பிணத்திற்கருகில் யார்தான் வாழவிரும்புவார்?
பன்றிகள் மேயும் இவ்விடத்தில் இப்போது மேயும் கோழிகளுக்குச் சந்தை மதிப்பில்லை. கேரிபேக்கில் மூட்டை கட்டியத் தம் குப்பைகளை ஐம்பதடி தூரத்திலிருந்து தூக்கி வீசிவிட்டு, மூக்கைப் பொத்தியபடியும் முகத்தைச் சுழித்தபடியும் தமக்கும் அதற்கும் தொடர்பில்லாதது போன்றப் பாவனையில் மனிதர்கள் கூச்சமின்றிக் கடந்து செல்கின்றனர்.
ஆம்! இப்போது தம் எச்சிலைச் சுமக்கும் பொறுப்பை ஏற்கெனவே நிதிச் சுமையால் மூச்சுத் திணறிக் கொண்டிருக்கும் உள்ளாட்சி அமைப்புகளிடம் அவர்கள் ஒப்படைத்து விட்டார்களாம். வரி கட்டுகிறார்களாமாம்.
மனிதர்கள் விபரமானவர்கள்தான்!
இப்போது இவற்றை உரக்குண்டு என்று எவரும் சொல்வதில்லை. உரக்குண்டுகள் மட்கி மரணித்துவிட்டன. அவற்றின்மீது என்றென்றைக்கும் மட்காதக் குப்பைத் தொட்டிகள் தம் இருப்பையும் நவீன வளர்ச்சியையும் தெரு முழுதும் பறைசாற்றும்படிப் துர்நாற்றத்தையும் டையாக்சின் புகையையும் உமிழ்ந்தபடி விழித்திருக்கின்றன. அவை உறங்குவதில்லை. தன் மூஞ்சியில் கேரிபேக்கில் பொதியப்பட்டக் குப்பைகளை வீசி அவமானப்படுத்தியவர்களைப் பழிவாங்கும் பொருட்டுத் தன் நச்சுக்களை நீரிலும் நிலத்திலும் காற்றிலும் கசியவிட்டபடி அவை நரவேட்டையைத் தொடங்கியிருக்கின்றன. ஓ மானிடரே! மீண்டும் இந்தக் குப்பைத் தொட்டிகளை உங்கள் வீடுகளுக்குக் கொண்டு செல்லுங்கள். அவற்றை உரக் குண்டுகளாக்குங்கள்.
குப்பைத் தொட்டிகள் மீண்டும் உரக்குண்டுகளாகாதவரை எந்த வேதி நறுமணத்தாலுமோ இல்லை எந்த ‘ஸ்வச் பாரத்’தாலுமோ நம்மைச் சுத்தப்படுத்திக் கொள்ள முடியாது.

 

-ம. ஜீயோ டாமின்
—————————————————————————————————

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments