காலநிலை மாற்றம் தொடர்பாக கிளாஸ்கோ நகரில் நடந்த மாநாட்டில் காடழிப்பை தடுத்து நிறுத்துவதற்காக உலக நாடுகள் மேற்கொண்ட உடன்பாட்டை இந்தியா ஏற்க மறுத்தது ஏன் என மக்களவையில் திமுக உறுப்பினர் டி.ஆர்.பாலு கேள்வி எழுப்பினார்.
கிளாஸ்கோ மாநாட்டில் உலகின் சராசரி வெப்பநிலையை 1.5 டிகிரி செல்சியஸ் அளவிற்கு உயராமல் தடுப்பதற்காக காடுகள் அழிப்பை 2030ஆம் ஆண்டிற்குள் நிறுத்துவதற்கான உடன்பாடு ஒன்றில் 141 நாடுகள் இணைந்து கையெழுத்திட்டன. இந்த உடன்பாட்டை இந்திய அரசு ஏற்றுக்கொள்ள மறுத்திருந்தது.
மக்களவையில் இதுகுறித்து திராவிட முன்னேற்றக் கழக நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு எழுப்பிய கேள்விக்கு ஒன்றிய அரசின் இணையமைச்சர் அஸ்வினிகுமார் சோபே பதிலளித்திருந்தார்.
அதில் “ கிளாஸ்கோ மாநாட்டில் காடழிப்பு தொடர்பான உடன்பாட்டில் காடுகள் மற்றும் நிலத்தின் பயன்பாடுகளை வர்த்தகத்துடன் இணைத்து உடன்பாடு இறுதி செய்யப்பட்டதால் இந்திய அரசு உடன்பாட்டிற்கு ஒப்புக் கொள்ளவில்லை என்றும் தேசிய காடுகள் கொள்கை 1988 இன் படி 33 விழுக்காடு பரப்பளவிற்கு வனநிலப் பரப்பளவை பெருக்கிட வேண்டும் என்றும் இந்திய வனவள நிலை அளவை அறிக்கையின் படி 24.56 விழுக்காடு அளவிற்கு தற்போது வன நிலங்களின் பரப்பளவு இருக்கிறது என்றும் காலநிலை மாற்றம் தொடர்பான பாரிஸ் ஒப்பந்தத்தின்படி 300 கோடி டன்கள் கரியமில வாயுவை உறிஞ்சுவதற்குத் தேவையான காடுகளின் பரப்பளவை 2030ஆம் ஆண்டிற்குள் விரிவாக்கிட இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டு பல்வேறு திட்டங்களின் கீழ் ஒன்றிய சுற்றுச்சூழல், காடுகள் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம், மாநிலங்களுக்கு நிதி உதவி அளித்து வருகிறது” எனக் கூறினார்.
COP26 (1)