இந்தியாவில் கோடைக்கால வெப்பம் அதிகரித்து வருகிறது என்று நாம் பல ஆண்டுகளாக சொல்லிக்கொண்டிருக்கிறோம். ஆனால், இன்று நாம் பேச வேண்டியது கோடை வெப்பத்தைப் பற்றி மட்டும் அல்ல. பருவமழை காலத்திலும் மனிதர்கள் வாழ முடியாத அளவுக்கு வெப்பமும் ஈரப்பதமும் சேர்ந்து உருவாக்கும் புதிய அபாயத்தைப் பற்றித்தான்.
மழை என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது குளுமை. வெப்பத்திலிருந்து ஒரு இடைவெளி. நிலத்திற்கும் மனித உடலுக்கும் உயிர் கொடுக்கும் காலம். மழை வந்துவிட்டால் வெப்பம் குறையும், சூழல் குளிர்ச்சி பெறும், உடலுக்கும் மனதுக்கும் ஓரளவு நிம்மதி கிடைக்கும் என்ற நம்பிக்கை நமக்கு இருந்தது. ஆனால், காலநிலை மாற்றம் அந்த அடிப்படையை மாற்றத் தொடங்கியுள்ளது.
அண்மையில் ஆய்விதழ் ஒன்றில் Emergence of Uncompensable Heat Stress During Monsoon Season in India என்கிர தலைப்பில் வெளியான ஆய்வு ஒன்று மிகக் கடுமையான எச்சரிக்கையை முன்வைக்கிறது. இந்தியாவில் பருவமழை காலத்திலும் வெப்ப அழுத்தம் அதிகரிக்கும் என்கிறது. அதாவது, மழை பெய்யும் காலத்திலும் மனித உடல் தன்னைத் தானே குளிர்விக்க முடியாத சூழல் உருவாகலாம்.
இங்கு பிரச்சினை வெப்பநிலை மட்டும் அல்ல. வெப்பத்துடன் சேரும் ஈரப்பதம்தான் மிகப்பெரிய அபாயமாக மாறுகிறது. மனித உடல் அதிக வெப்பத்தை சமாளிக்க வியர்வையைப் பயன்படுத்துகிறது. வியர்வை ஆவியாகும்போது உடல் குளிர்கிறது. ஆனால், காற்றில் ஈரப்பதம் அதிகமாக இருந்தால், வியர்வை எளிதில் ஆவியாகாது. இதனால் உடல் வெப்பம் வெளியேற முடியாமல், உடலுக்குள் தேங்கி விடும்.
இதையே “Uncompensable Heat Stress” என்று குறிப்பிடுகிறார்கள். எளிமையாகச் சொன்னால், உடல் தன்னைத் தானே குளிர்விக்க முடியாத அளவுக்கு வெப்பமும் ஈரப்பதமும் சேர்ந்து அபாயகரமான சூழலை உருவாக்கும் நிலை இது.
இந்நிலை தொடர்ந்தால், வெப்பத்தால் ஏற்படும் நோய்கள் , உடல் சோர்வு, உறுப்புகள் செயலிழப்பு, சில கடுமையான சூழல்களில் உயிரிழப்பு போன்ற அபாயங்களும் ஏற்படலாம். வெப்பநிலை 35°C அல்லது 38°C என்று தெரிந்தால் பலர் அதை சாதாரணமாக எடுத்துக்கொள்ளலாம். ஆனால், அதே நேரத்தில் ஈரப்பதம் அதிகமாக இருந்தால், அந்த நாள் மனித உடலுக்கு மிகக் கடுமையான வெப்பச் சுமையாக மாறும். அதனால், வெப்பநிலையைப் பார்த்து மட்டும் இனி பாதுகாப்பை மதிப்பிட முடியாது.

இதுவரை நாம் கோடையை ஆபத்தான காலமாகக் கருதினோம். மார்ச் முதல் ஜூன் வரை வெப்ப அலைகள், தண்ணீர் பற்றாக்குறை, தொழிலாளர்களின் உடல் சோர்வு, விவசாயிகளின் சிரமம், நகரங்களில் வெப்பத் தீவுகள் போன்றவற்றைப் பற்றி பேசினோம். ஆனால், இனி பருவமழை காலமும் பாதுகாப்பான காலம் அல்ல என்று இந்த ஆய்வு எச்சரிக்கிறது.
ஆய்வின்படி, 1979 முதல் 2021 வரை இந்தியாவில் இவ்வகை வெப்ப அழுத்தம் அதிகரித்துள்ளது. இந்த வெப்பமயமாதல் 2°C அளவிற்குச் சென்றால், கோடை காலத்தில் இந்தியாவின் சுமார் 60% பகுதிகளும், பருவமழை காலத்தில் சுமார் 53% பகுதிகளும் இந்த வெப்ப அழுத்தத்தால் பாதிக்கப்படலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது வெறும் அறிவியல் தரவு மட்டுமல்ல. இது நம் இருத்தலுக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை.
இந்தோ-கங்கை சமவெளி, வடமேற்கு இந்தியா மற்றும் கிழக்கு கடலோரப் பகுதிகள் போன்ற பகுதிகள் அதிக அபாயம் கொண்ட இடங்களாக குறிப்பிடப்படுகின்றன. இந்தியாவில் வெப்பம் என்பது விளிம்பு நிலை மக்களின் பிரச்சினை. திறந்தவெளியில் வேலை செய்யும் தொழிலாளர்களின் பிரச்சினை. விவசாயிகளின் பிரச்சினை. கட்டுமானத் தொழிலாளர்கள், சாலையில் வேலை செய்பவர்கள், டெலிவரி பணியாளர்கள், பேருந்து ஓட்டுநர்கள், தெருவோர வியாபாரிகள், மீனவர்கள், நகர்ப்புற ஏழைகள் ஆகியோரின் உடல்மீது முதலில் தாக்கும் பேராபத்து இது.
கோடைகாலத்தில் அல்லது பருவமழைக் காலத்தில் ஏற்படும் UHS (அசாதாரண வெப்ப அழுத்தம்) இறப்பு வீதத்துடன் வலுவான தொடர்பைக் கொண்டுள்ளதா என்பதை அறிந்துகொள்ள ஆய்வாளர்கள் முயன்றுள்ளனர், ஆனால், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் (NDMA) மற்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) ஆகியவை இந்தியாவில் வெப்பம் தொடர்பான இறப்புகள் பற்றி வழங்கும் இறப்பு மதிப்பீடுகளில் குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் உள்ளதைக் கண்டறிந்துள்ளனர்.
உதாரணமாக, NDMA வழங்கும் மனித இறப்பு மதிப்பீடுகள், IMD தெரிவிக்கும் மதிப்பீடுகளை விட கணிசமாக அதிகமாக உள்ளன இரு தரவுத்தொகுப்புகளிலும் காணப்படும் முரண்பாடுகள், இரு நிறுவனங்களாலும் வெப்பம் தொடர்பான இறப்புகளின் நம்பகத்தன்மையற்ற கணக்கீட்டையும், சாத்தியமான குறைவான பதிவையும் சுட்டிக்காட்டுகின்றன ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
குளிரூட்டப்பட்ட அறைகளில் இருப்பவர்களுக்கு வெப்பம் ஒரு செய்தி, ஒரு டிகிரி வெப்பம் அதிகரித்தால், ஏசி ரிமோட்டில் ஒரு டிகிரி குறைக்கவேண்டும், அவ்வளவுதான். வெளியில் உழைப்பவர்களுக்கு அது வாழ்வாதார இழப்பு மட்டுமல்ல, அது உயிரைப் பறிக்கும் அபாயமும் கூட. காலநிலை மாற்றம் என்பது எதிர்கால தலைமுறையின் பிரச்சினை அல்ல. அது இன்றைய தொழிலாளியின் உடலில் நடக்கிறது. இன்றைய விவசாயியின் வயலில் நடக்கிறது. இன்றைய நகரத்தின் சாலையில் நடக்கிறது. இன்றைய பள்ளிக்குச் செல்லும் குழந்தையின் உடல்நலத்தில் நடக்கிறது.
இந்தியாவின் வளர்ச்சி முறை இயற்கையை அழித்து, நகரங்களை கான்கிரீட்டால் நிரப்பி, நீர்நிலைகளை மூடி, மரங்களை வெட்டி, காற்றோட்டமில்லாத குடியிருப்புகளை உருவாக்கி, தொழிலாளர்களை பாதுகாப்பற்ற சூழலில் வேலை செய்ய வைக்கிறது. இப்போது அதற்கான விலையை மனித உடல் செலுத்தத் தொடங்கியுள்ளது.
வெப்பத்தைத் தனிப்பட்ட சகிப்புத்தன்மை பிரச்சினையாக பார்க்க முடியாது. “கொஞ்சம் தாங்கிக்கொள்ளலாம்” என்று சொல்ல முடியாது. இது பொது சுகாதாரப் பிரச்சினை. தொழிலாளர் உரிமைப் பிரச்சினை. நகரத் திட்டமிடல் பிரச்சினை. காலநிலை நீதிக்கான பிரச்சினை.
அரசுகள் உடனடியாக வெப்பச் செயல் திட்டங்களை வலுப்படுத்த வேண்டும். வெப்பநிலை மட்டுமல்ல, ஈரப்பதம், MTR உள்ளிட்டவற்றை சேர்த்து சேர்த்து UTCI குறியீட்டில் அபாய எச்சரிக்கை அறிவிப்பு முறைகளை உருவாக்க வேண்டும். திறந்தவெளியில் வேலை செய்பவர்களுக்கு கட்டாய ஓய்வு நேரம், குடிநீர், நிழல், மருத்துவ உதவி, வாழ்வாதார இழப்பு தொடர்பான ஆகியவை சட்டரீதியான பாதுகாப்பாக அமைய வேண்டும்.
நகரங்களில் மரங்கள், திறந்த நிலங்கள், நீர்நிலைகள், காற்றோட்டம் ஆகியவை அழகுக்கான அம்சங்கள் அல்ல. அவை உயிர் காக்கும் அடிப்படை கட்டமைப்புகள். அவற்றை அழித்துவிட்டு வெப்பத்தை சமாளிக்க முடியாது. பருவமழை இனி நமக்கு வெறும் நிவாரண காலம் அல்ல. காலநிலை மாற்றம் அதை கூட ஆபத்தான காலமாக மாற்றக்கூடும். மழை வந்தால் வெப்பம் முடிந்துவிடும் என்ற பழைய நம்பிக்கையை நாம் மறுபரிசீலனை செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது.
காலநிலை மாற்றத்தின் தாக்கத்தை நாம் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டிய நேரம் இது. இனி இந்தியாவின் சவால் வெப்பத்துடன் மட்டும் அல்ல. வெப்பமும் ஈரப்பதமும் சேர்ந்து உருவாக்கும் புதிய அபாயத்துடனும் இருக்கும்.
காலநிலை மாற்றம் கதவைத் தட்டவில்லை. அது கதவைத் திறந்து உள்ளே வந்துவிட்டது. இப்போது கேள்வி ஒன்றுதான். நாம் இன்னும் காத்திருக்கப் போகிறோமா, அல்லது வளங்குன்றா வளர்ச்சிப் பாதையைத் தேர்ந்தெடுக்கப் போகிறோமா?
கோ. சுந்தர்ராஜன்
