கொரோனாவைப் புரிந்துகொள்ளுதல் !

சரிந்துவரும் பொருளாதாரம் தொடர்பாக அண்மையில் சூழலியல் பொருளாதார வல்லுநர் பேராசிரியர் கவிக்குமாரிடம் பேட்டி எடுத்துக் கொண்டிருந்தேன். உரையாடலுக்கு இடையே அவர் சூழலியல் சீர்கேட்டில் நாம் கவனிக்கத்தவறிய மிக நுணுக்கமான ஒரு விஷயத்தைப் பற்றிக் குறிப்பிட்டார்,”எனது கல்லூரி வளாகத்தில் மிக வயதான மரங்களில்தான் பறவைகள் அதிகம் வந்து அமரும். ஒருவேளை அந்த மரங்கள் வெட்டப்பட்டால் பறவைகள் உடனே அருகில் இருக்கும் சிறிய மரங்களுக்குச் சென்று தங்கிக்கொள்ளும் என நினைத்தால் இயற்கையின் மொழியை நீங்கள் புரிந்துகொள்ளவில்லை என்பதாகும்.அந்தப் பறவைகள் வந்தமரும் மரத்தை வெட்டுவதன் வழியாக நாம் இயற்கைச் சங்கிலியைக் குலைக்கின்றோம்.நான்தான் வேறொரு மரக்கன்றை நட்டுவிட்டேனே என்கிறீர்கள். வேறொரு மரக்கன்றை நடுவது நாம் கேட்கும் பாவமன்னிப்பே ஒழிய அந்தப் பறவைகளுக்கான தீர்வல்ல” என்றார்.

எழுத்தாளர் டேவிட் குவாமென்னின் ’ஸ்பில் ஓவர்’ புத்தகம் கவிக்குமார் சொன்னதை நினைவுப்படுத்துவதாக இருந்தது. பலநூறு ஆண்டுகளுக்கு முன்பு ஐரோப்பாவிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு அழைத்துவரப்பட்ட குதிரைகள் 94ல் ஹென்ரா தொற்று உருவாகக் காரணமாக  அமைந்தது. வௌவால்களில் இருக்கும் நிபா வைரஸ் மலேசியாவில் பன்றிகள் வழியாகதான் மனிதர்களுக்குப் பரவியது.ஆப்பிரிக்காவில் எபோலா பரவியதற்குப் பின்னனியில் பிரான்ஸ் நாட்டுத் துப்பாக்கிகள் ஆப்பிரிக்க காடுகளில் சிம்பன்சிக்களை வேட்டையாடிய வரலாறு இருக்கிறது. இவை அத்தனையுமே இயற்கைச் சங்கிலியை மனிதர்கள் குலைத்ததால் மனிதர்களுக்குப் பரவிய வைரஸ்கள் என்பதுதான் இவற்றில் இருக்கும் பொதுவான அம்சம்.

1994ல் ஹென்ரா வைரஸ் ஆஸ்திரேலியாவின் குதிரைகளில் கண்டறியப்பட்டபோது, அந்த வைரஸ் எப்படிப் பரவியது எனக் கண்டறிய, வைரஸ் வேட்டையில் ஈடுபட்டிருந்த சூழலியல் ஆய்வாளர் ஃபீல்ட், ”21-ம் நூற்றாண்டில் மனிதர்கள் அதிகம் எதிர்கொள்ளும் சவாலாக ஜூனோசஸ் இருக்கும்” எனக் குறிப்பிட்டார். அவர் சொன்னதுபோலவே, இதே நூற்றாண்டில்தான் நாம் சார்ஸ், பன்றிக்காய்ச்சல், பறவைக்காய்ச்சல் முதல் தற்போதைய கொரோனா தொற்று வரை பெரும் சவால்களை எதிர்கொண்டு வருகிறோம். இயற்கையில் நாம் ஏற்படுத்திய சலனத்தால் உருவானவை என்பதுதான் இவை அத்தனையிலும் இருக்கும் பொதுவான அம்சம்.

ஆஸ்திரேலியா குதிரைப்பந்தயத்துக்குப் பெயர் போன நாடு. ஆடு, மாடுகள் வளர்ப்பு போல அங்கே ஒவ்வொரு வீட்டுக்கும் குதிரைக்கொட்டில்கள் உண்டு. ‘டிராமா சீரிஸ்’ம் அப்படியொரு கொட்டிலில் வளர்க்கப்பட்டப் பந்தயக் குதிரை. பந்தயத்திலிருந்து ஓய்வுபெற்ற டிராமா சீரிஸ் கருவுற்றிருக்கிறது. தினமும் இளைப்பாறக் குதிரைக் கொட்டிலுக்கு அருகில் இருக்கும் மரத்தடிக்குச் செல்லும். ஆனால் திடீரென ஒருநாள் டிராமா நோய்வாய்ப்படுகிறாள். கருவுற்றிருப்பதால்தான் குதிரை அசதியாக இருப்பதாக முதலில் நம்புகிறார்கள்.ஆனால் நாளடைவில் அதன் உடல்நிலை மோசமாகிறது. பாம்பு கடித்துவிட்டதாக நினைக்கிறார்கள். திடீரென ஒருநாள் கொட்டிலில் இருந்துப் பேயோட்டமாக ஓடி வெளியே வந்து ரத்தம் கக்கி இறக்கிறது அந்தக் குதிரை .டிராமாவைப் போலவே அருகில் இருந்த மற்றொரு குதிரைக்கும் அறிகுறிகள் தெரிய வந்தபிறகுதான் அது தொற்றுநோய் எனக் கண்டுபிடிக்கிறார்கள். டிராமா இளைப்பாறிய மரத்தில் இருந்த ஃபிளையிங் ஃபாக்ஸ் வௌவால்கள் வழியாகதான் அவைப் பரவியிருக்கிறது.  குதிரைகளில் இருந்து அவற்றை வளர்த்த மனிதர்களுக்கு. ஆனால் ஃபிளையிங்க் பாக்ஸ் ரக வௌவால்களை நேரடியாக வளர்க்கும் மனிதர்களுக்கு அது போன்ற தொற்று பரவவில்லை.குதிரைக்குச் சிகிச்சை அளித்த மருத்துவருக்கு நோய்த்தொற்று அறிகுறிகள் இல்லை.

ஹென்ரா வைரஸ் குதிரைக்கு ஏன் பரவவேண்டும்? கங்காருக்களுக்கு ஏன் பரவவில்லை? வௌவால்களை வளர்த்த மனிதர்களுக்கு ஏன் பரவவில்லை?
இவை அத்தனையும் தனது வைரஸ் வேட்டையின் வழியாக ஆய்வு செய்கிறார் சூழலியல் ஆய்வாளர் ஃபீல்ட்.  ஃபீல்ட்டின் ஆய்வுதான் ஜூனாட்டிக் தொற்றுகள் குறித்த முதல் விரிவான ஆவணம் எனலாம்.  ஃபீல்ட் பகிர்ந்தது குறித்துத் தனது ஸ்பில் ஓவரில் விரிவாகப் பகிர்ந்திருக்கிறார் டேவிட் குவாமென்.

ஃபிளையிங் ஃபாக்ஸ் ரக வௌவால்கள் 2.5 மில்லியன் ஆண்டுகளாக அவை ஆஸ்திரேலியாவில் வாழ்ந்து வருவதற்கான தொல்லியல் தடயங்களை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளார்கள்.கங்காருக்களும் அப்படித்தான் ஆஸ்திரேலியாவில் ஆதிக்காலத்திலிருந்து வாழ்ந்து வருபவை.  ஆனால் குதிரைகள் முதன்முதலில் ஆஸ்திரேலியாவுக்கு வந்தது 260 ஆண்டுகளுக்கு முன்புதான்.ஐரோப்பிய வணிகர்களால்தான் குதிரைகள் ஆஸ்திரேலியாவில் அறிமுகம் செய்துவைக்கப்பட்டன. ஆஸ்திரேலியத் தட்பவெப்பச் சூழலுக்குப் பொருந்திப் போகாத குதிரைகள் அந்த மண்ணுக்கு வரும் வரை இந்த ஹென்ரா ரக வைரஸ்கள் பதுங்கிக் காத்திருந்தது எனலாம். தன்னை இனப்பெருக்கம் செய்துகொள்வதற்கான பெரிய வெளி இதுபோன்ற ஜூனாடிக் வைரஸ்களுக்குத் தேவை, ஆனால் அவற்றால் நேரடியாக மனித உடல்களில் குடியேற முடியாது. மனித உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை எதிர்கொள்ளும் அளவுக்கான வீரியம் அவற்றுக்குத் தேவை.வௌவால்களில் இருந்து குதிரைக்குப் பரவும் வைரஸ் அதற்கேற்றபடி தன்னைத் தகவமைத்துக் கொள்கிறது.குதிரை, பன்றி, பறவை, எலி போன்றவை இதுபோன்ற வைரஸ்கள் மனிதர்களுக்குப் பரவுவதற்கான ஊடகம். வைரஸ்கள் தனது ஊடகத்தைத் தேர்ந்தெடுக்கின்றன. சில வைரஸ்கள் தனது ஊடகத்தை பாதிக்கலாம். சில பாதிக்காமல் போகலாம். இவை அத்தனை குறித்தும் தனது புத்தகத்தில் கதைப்போலப் பதிவு செய்திருக்கிறார் குவாமென்.

குவாமென்னின் கதைசொல்லி அவதாரம்தான் இந்தப் புத்தகத்துக்குப் பக்கபலமும் பின்னடைவும். அறிவியல் ரீதியாகக் கையாளப்பட்டிருக்க வேண்டிய புத்தகத்தை ஏன் பயணக்கட்டுரையாக்க வேண்டும் என்கிற கேள்வியைத் தவிர்க்க முடியவில்லை.

ஹென்ரா போல எபோலா, நிபா, கொரோனா என அத்தனை வைரஸ் வேட்டை குறித்தும் இந்தப் புத்தகம் பதிவு செய்கிறது.நோய்ப்பரவலுக்கு முக்கியக் காரணமாகும் விலங்குக்கறிச் (Bushmeat) சந்தைகள் குறித்துப் பேசுகிறது. சீனாவின் மிகப்பெரும் விலங்குக்கறி மற்றும் அறிய வனவிலங்குகளுக்கான (Exotic animals) சந்தைகள் எப்படி வைரஸ்களை ஏற்றுமதி செய்யும் சந்தையாகவும் இருக்கிறது என்பதைப் பேசுகிறார். ஆப்ரிக்காவின் சிம்பன்சி விற்பனைச் சந்தைகளை ஏன் கட்டுப்படுத்த முடியவில்லை என்பதற்கான பண்பாட்டு அடிப்படையிலான விளக்கங்கள் விவாதிக்கப்பட்டிருக்கின்றன. சின்னம்மை மற்றும் போலியோ வைரஸ்களை வெற்றிகரமாக மனித இனம் எதிர்கொண்டது போல இவற்றை மனிதர்களால் எதிர்கொள்ள முடியாது  ஏனென்றால் இவைச் சூழலியல் சங்கிலி அறுபடுவதால் வெடிக்கும் பேராபத்து. கொரோனாவுக்குத் தீர்வு நாம் இதைப் புரிந்துகொள்வதில்தான் இருக்கிறது.

“நோய்த்தொற்றால் ஏற்படும் மரணம் உங்களுக்கு பயங்கரமானதாகவும் அச்சமூட்டுவதாகவும் தெரியலாம். ஆனால், அது உண்மையில் ஒரு சிங்கம் காட்டு மாட்டை வேட்டையாடுவது போல, ஒரு ஆந்தை எலியை வேட்டையாடுவது போல இயற்கையானது” என்கிற ஏற்றுக்கொள்ள முடியாத உண்மையை இந்தப் புத்தகம் நமக்கு உணர்த்துகிறது.

– மதுவந்தி

 

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments