தமிழ்நாடு, புதுச்சேரியை ஒட்டிய கடற்பகுதியில் 239 ஹைட்ரோகார்பன் ஆய்வுக் கிணறுகள் அமைக்க வேதாந்தா விண்ணப்பம்

offshore drilling

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் டெல்டா மாவட்டங்களை ஒட்டிய ஆழமற்ற கடற்பகுதியில் எண்னெய் மற்றும் எரிவாயு உற்பத்தி செய்யும் நோக்கில் ஹைட்ரோகார்பன் ஆய்வுக் கிணறுகள் அமைக்க வேதாந்தா நிறுவனம் (M/s Vedanta Limited(Division Cairn Oil & Gas) சுற்றுச்சூழல் அனுமதி கோரி தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திடம் விண்ணப்பித்துள்ளது.

கடந்த 2018ம் ஆண்டு Open Acreage Licensing Policy (OALP) எனும் ஒன்றிய அரசின் ஹைட்ரோகார்பன் எடுப்புக் கொள்கையின் கீழ் வேதாந்தா நிறுவனம் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியை ஒட்டிய கடற்பகுதியில் 1613.28 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட CY-OSHP-2017/1 என்கிற  பகுதியிலும், 2291.34 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட CY-OSHP-2017/2 என்கிற பகுதியிலும் எண்ணெய், எரிவாயு எடுக்கும் உரிமத்தைப் பெற்றிருந்தது. அந்த இடங்களில் தற்போது ஹைட்ரோகார்பன் ஆய்வுக் கிணறுகள் அமைப்பதற்கான சுற்றுச்சூழல் அனுமதி கோரி விண்னப்பம் செய்துள்ளது வேதாந்தா நிறுவனம்.

cover letter 1_merged

குறிப்பாக புதுச்சேரி மற்றும் விழுப்புரம் மாவட்டத்தை ஒட்டிய கடற்பகுதியில் 102 ஆய்வுக் கிணறுகளும், நாகப்பட்டினம் மற்றும் காரைக்கால் மாவட்டங்களை ஒட்டிய கடற்பகுதியில் 137 ஆய்வுக் கிணறுகளும் அமைக்க வேதாந்தா நிறுவனம் விண்ணப்பித்துள்ளது. இந்தக் கிணறுகள் அமைப்படுவதால் கடற் சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்த சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆய்வு மேற்கொள்ளாமலே இக்கிணறுகள் அமைக்கப்படவுள்ளது என்பதுதான் மிகவும் கவலையளிக்கக்கூடிய விஷயமாகும்.

கடந்த 2020ம் ஆண்டு நிலம் மற்றும் கடற்பகுதியில் உள்ள எண்ணெய் மற்றும் எரிவாயு எடுப்பதற்கான ஆய்வுக் கிணறுகள் அமைப்பதற்கு ஒன்றிய அரசின் சுற்றுச்சூழல் அனுமதி அவசியமில்லை என்றும் மாநில அரசின் அனுமதியோடு ஆய்வுக் கிணறுகளை அமைக்கலாம் என்ற வகையில் சுற்றுச்சூழல் தாக்க அறிவிக்கை 2006ல் ஒன்றிய அரசு திருத்தம் கொண்டு வந்தது. அதற்கு முன்பெல்லாம் நிலம் மற்றும் கடல் பகுதிகளில் எண்ணெய் மற்றும் எரிவாயு இருக்கிறதா என்பதை ஆய்வு செய்வதற்கும் பின்னர் உற்பத்தியை துவக்குவதற்கும் ஒன்றிய சுற்றுச்சூழல் துறையிடம் விண்ணப்பித்து சுற்றுச்சூழல் அனுமதி பெற வேண்டும். ஆனால், இனிமேல் ஆய்வுக் கிணறுகள் அமைப்பற்கு ஒன்றிய அரசின் சுற்றுச்சூழல் அனுமதி பெற வேண்டிய அவசியமில்லை என்று திருத்தம் கொண்டு வரப்பட்டதால் ஹைட்ரோகார்பன் ஆய்வுக் கிணறுகள் அமைப்பதற்காக சுற்றுச்சூழல் தாக்க அறிக்கை, பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் ஆகியவற்றை நடத்தவும் அவசியமில்லை என்றாகிவிட்டது.

கடற்பகுதிகளில் ஹைட்ரோகார்பன் ஆய்வுக் கிணறுகள் அமைப்பதால் அங்குள்ள கடல் வளம் குறிப்பாக மீன்வளம் பாதிக்கப்படுவது குறித்து பல்வேறு அறிவியல் ஆய்வுகள் வெளியாகியுள்ளன. மீன்வளம் பாதிக்கப்படும் பட்சத்தில் குறைந்தபட்சம் மீனவர்களிடமாவது கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்துவது அவசியம். பாதிப்பு குறித்த ஆய்வும், கருத்துக் கேட்பும் இல்லாமல் இத்திட்டங்களை செயல்படுத்துவது கடல் வளத்தைப் பெரிதும் பாதிக்கும். குறிப்பாக தமிழ்நாட்டை ஒட்டிய கடற்பகுதிகளில் அரியவகை பாதுகாக்கப்பட்ட கடற்பசு உள்ளிட்ட 25 பாலூட்டிகள், ஆமைகள்,  உயிர்வாழ்கின்றன. டால்பின்கள், திமிங்கலங்கள் போன்ற உயிரினங்கள் குறைந்த அதிர்வெண் கொண்ட ஒலியை எழுப்புவதன் மூலமே தங்களுக்குள் தகவல்களை பறிமாறிக் கொண்டு தங்களது பயண வழிகளையும் தீர்மானிக்கின்றன.  கடற்பகுதியில் ஹைட்ரோகார்பன் இருப்பை ஆய்வு செய்ய பயன்படுத்தப்படும் சீஸ்மிக் சோதனையின்போது எழுப்பப்படும் வெடிச்சத்தம் கடல்வாழ் உயிரினங்களை மிகவும் பாதிக்கிறது., அதுமட்டுமின்றி எண்ணெய், எரிவாயு எடுக்கும்போது வெளியிடப்படும் ரசாயனக் கழிவுகளால் மீன்வளம் பெருமளவில் குறையுமென்றும் கடற்பசு, ஆமைகள் போன்ற முக்கியமான பல கடல்வாழ் உயிரினங்கள் வேறு இடங்களுக்கு இடம்பெயரும் அல்லது இறந்துபோகும் என்கின்றனர் கடல்சார் ஆய்வாளர்கள்.

இவற்றையெல்லாம் கருத்தில்கொண்டு தமிழ்நாடு அரசு வேதாந்தா நிறுவனத்தின் இவ்விண்ண்டப்பததை நிராகரிக்க வேண்டுமென்றும் தமிழக அரசியல் கட்சிகள், அமைப்புகள் இக்கோரிக்க்கைக்கு வலு சேர்க்க வேண்டுமென்றும் பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.

nagai_villupuram_merged
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments