மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்தில் உள்ள அரிட்டாபட்டி, மீனாட்சிபுரம், கூலானிப்பட்டி, செட்டியார்பட்டி, அ. வல்லாளப்பட்டி, சண்முகநாதபுரம், நடுவளவு, தெற்கு வளவு, எட்டிமங்கலம், உள்ளிட்ட ஊர்களை உள்ளடக்கிய 2015 ஹெக்டேர் அதாவது சுமார் 5000 ஏக்கர் நிலப்பரப்பை ஸ்டெர்லைட் புகழ் வேதாந்தா குழுமத்தின் ஹிந்துஸ்தான் ஸிங் நிறுவனம் (Hindustan Zinc) டங்ஸ்டன் (Tungsten) கனிமம் சுரங்கம் அமைப்பதற்கான ஏலத்தை எடுத்து இருக்கிறது.
கடந்த 07.11.2024 அன்று சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் மேம்பாடு & ஒழுங்குமுறை சட்டத்தின் (Mines and Minerals Development and Regulation Act 1957) கீழ் நடத்தப்பட்ட நான்காவது ஏலத்தில் மதுரை மேலூர் நாயக்கர்பட்டி பகுதி டங்ஸ்டன் சுரங்கம் ஏலத்தை ஹிந்துஸ்தான் நிறுவனம் எடுத்துள்ளது. ஒன்றிய அரசின் அதிகாரத்தை பயன்படுத்தி இந்த ஏலம் நடைபெற்றுள்ளது. தமிழ்நாட்டு அரசுக்கு இதில் நேரடியாக எந்த பங்கும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஏலம் அறிவிப்பு வெளியான அறிக்கையில் உள்ள அட்ச ரேகை, தீர்க்க ரேகையை எல்லைகள் குறிப்பிட்டுள்ளன. கூகுள் வரைப்பட உதவியுடன் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க ஏலம் விடப்பட்டுள்ள 5000 ஏக்கர் பரப்பில் உள்ள பகுதிகள் கீழே பட்டியலிட்டுள்ளேன்.
குடியிருப்பு வீடுகள் கொண்ட பகுதி மற்றும் ஊர்கள்:
——————-
1. செட்டியார்பட்டி
2. அ. வல்லாளப்பட்டி
3. நடுவளவு
4. தெற்கு வளவு
5. செட்டியாபட்டி
6. சண்முகநாதபுரம்
7. அரிட்டாபட்டி
8. கூலானிப்பட்டி
9. எட்டிமங்கலம் மேற்கு
10. நாயக்கர்பட்டி
11. மாங்குளம் கிழக்கு
தொல்லியல் மற்றும் வரலாற்று சின்னங்கள்:
தமிழிக் கல்வெட்டு:
– 2300 ஆண்டுகள் தொன்மையான மாங்குளம் தமிழிக் கல்வெட்டு மீனாட்சிபுரம் ஒவா மலையில் அமைந்துள்ளது. இங்கே நான்கு குகைத்தளத்தில் மொத்தம் ஆறு தமிழிக் கல்வெட்டுகள் காணப்படுகின்றன.
– மாங்குளம் தமிழிக் கல்வெட்டில் சங்க கால பாண்டிய மன்னன் நெடுஞ்செழியன் பெயர் பொறித்த இரண்டு கல்வெட்டுகளும், அதில் செழியன், வழுதி போன்ற பாண்டியர் குடிப் பெயர்களும், பட்டப் பெயர்களும் குறிப்பிடப்பட்டுள்ளது.
– தமிழ் மொழிக்கு செம்மொழி அங்கீகாரத்தை பெற்று தந்தது இந்த கல்வெட்டுகள் தாம். மாங்குளம் கல்வெட்டுதான் இதுவரை கிடைக்கப்பெற்ற கல்வெட்டுகளில் காலத்தால் பழமையானதாகும்.
– இதே போல அரிட்டாபட்டி கழிஞ்சமலையில் உள்ள குகைத்தளத்தில் ஈரமாயிரமாண்டுகள் தொன்மையான இரண்டு தமிழிக் கல்வெட்டு காணப்படுகிறது.
சமணர் படுக்கை:
மீனாட்சிபுரம் ஓவா மலையில் உள்ள நான்கு குகை தளத்தில் 50க்கும் மேற்பட்ட கற்படுக்கைகளும், அரிட்டாபட்டி கழிஞ்சமலையில் 10க்கும் மேற்பட்ட கற்படுக்கைகளும் காணப்படுகின்றன.
மகாவீரர் சிற்பம் & வட்டெழுத்து கல்வெட்டு:
அரிட்டாபட்டி கழிஞ்சமலையில் கிபி பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த மகாவீரர் சிற்பமும், அதன் கீழே தமிழ் வட்டெழுத்து கல்வெட்டும் காணப்படுகிறது.
குடைவரைக் கோயில்:
அரிட்டாபட்டி கழிஞ்ச மலையில் சுமார் 1200 ஆண்டுகள் பழமையான குடைவரை கோயில் அமைந்துள்ளது. கிபி. எட்டாம் நூற்றாண்டில் முற்கால பாண்டியர்களால் மலைகளை குடைந்து உருவாக்கப்பட்ட கோயில் இதுவாகும். பாசுபத சமயத்தை சேர்ந்த இலகுலீசரரின் சிற்பம் இங்கே செதுக்கப்பட்டுள்ளது.
மேலே குறிப்பிடபட்டுள்ள மீனாட்சிபுரம் ஓவா மலை தமிழிக் கல்வெட்டு சமணர் கற்படுக்கைகள் கொண்ட குகைத் தளமும், அரிட்டாபட்டி கழிஞ்சமலை தமிழிக் கல்வெட்டு சமணர் கற்படுக்கைகள் கொண்ட குகைத் தளமும் மகாவீரர் சிற்பமும், முற்கால பாண்டியர் குடைவரை சிவன் கோயிலும் Ancient and Historical Monuments and Archaeological Sites and Remains Act, 1966 சட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்ட தொல்லியல் சின்னமாக அறிவிக்கப்பட்டு, பராமரிக்கபட்டு வருகிறது என்பது குறிப்பிடதக்கது.
பிற்கால பாண்டியர் சிவன் கோயில்:
கி.பி 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த விக்கிரம பாண்டிய மன்னர் காலத்து சிவன் கோயில் அரிட்டாப்பட்டியில் உள்ளது. அதில் கல்வெட்டுகளும் காணப்படுகின்றன. சிதைந்த நிலையில் இருந்த கோயில் அண்மையில் புதிதாக கட்டப்பட்டுள்ளது.
பெருங்கற்கால சின்னங்கள்:
அரிட்டாபட்டி காமன்குளம் கண்மாயில் 3500 ஆண்டுகளுக்கு முந்தைய கற்திட்டைகள் உள்ளிட்ட பெருங்கற்கால சின்னங்கள் காணப்படுகிறது.
தொன்மையான கண்மாய்:
அரிட்டாபட்டி கழிஞ்சமலை அடிவாரத்தில் ஆனைகொண்டான் கண்மாய் அமைந்துள்ளது. இக்கண்மாயில் 700 ஆண்டுகள் பழமையான இரு மடைதூண்கள் உள்ளன.
பழமையான தர்கா:
கழிஞ்சமலையின் வடக்கு முனையில் 200 ஆண்டுகள் பழமையான ரெட்டைக்கல் அவுலியா தர்கா அமைந்துள்ளது. வல்லாளப்பட்டி பள்ளிவாசலும் சுரங்கம் அமைக்க ஏலம் விடப்பட்ட பகுதியில் அமைந்துள்ளன.
கோயில்கள்:
மீனாட்சிபுரம் புளியடி அய்யனார் கோயில், சன்னாசி அய்யனார் கோயில், கூலானிப்பட்டி கட்டகுடுமி அய்யனார் கோயில், செட்டியார்பட்டி வளநாட்டு கருப்பு கோயில், வல்லாளபட்டி கந்தனழகி அம்மன் கோயில், ஹயக்ரீவர் கோயில், சண்டிவீரன் கோயில், பூலாமலை கருப்பு, சின்னையன் கோயில், சண்முகநாதபுரம் வேலாயுதம் கோயில், செல்லியம்மன் கோயில், கரும்பால் அம்மன், எட்டிமங்கலம் செந்தலை அய்யனர் கோயில், அரிட்டாபட்டி இளம்நாயகி அம்மன் கோயில், சின்னடைக்கி அம்மன் கோயில், பத்திரகாளியம்மன் கோயில், வளநாடு கருப்பசாமி கோயில், கழிஞ்சமலைச்சாமி, மலட்டு அழகி அம்மன், சின்னையன், குடுமிக்கரை அய்யனார், காமிக்கரை அய்யனார், பாண்டிச்சாமி, மந்தத்து அய்யனார், கருத்தங்கரை அய்யனார் கோயில் உள்ளிட்ட கோயில்கள் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க ஏலம் விடப்பட்ட 5000 ஏக்கர் எல்லைக்குள் அமைந்து இருக்கிறது.
பெருமாள் மலை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி:
வெள்ளரிபட்டி – நரசிங்கம்பட்டி – பெருமாள்பட்டி – அரிட்டாபட்டி – மீனாட்சிபுரம் ஆகிய ஊர்களுக்கு இடையில் பெருமாள்மலை வனப்பகுதி அமைந்துள்ளது. சுமார் 5.5 கி.மீ நீளமும் ஆயிரம் ஏக்கர் பரப்பளவும் கொண்ட பெருமாள்மலை – புள்ளிமான், மிளா மான், தேவாங்கு, காட்டு பூனை, மரநாய் உள்ளிட்ட பல்வேறு காட்டு விலங்குகளின் வாழிடமாக பெருமாள்மலை விளங்குகிறது. பெருமாள்மலை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியின் மேற்குச் சரிவும் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் பகுதிக்குள் வருகிறது.
அரிட்டாபட்டி – மீனாட்சிபுரம் பல்லுயிரிய மரபு தளம்:
சூழலியல் மற்றும் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த மீனாட்சிபுரம் வருவாய் கிராமத்திற்கு உட்பட்ட 53.580 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட மலைக்குன்றுகளையும், அரிட்டாபட்டி வருவாய் கிராமத்திற்கு உட்பட்ட 139.635 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட மலைக்குன்றுகளையும் உள்ளடக்கிய மொத்தம் 193.215 ஹெக்டேர் (477.4 ஏக்கர்) பரப்பை கடந்த 22.11.2022 அன்று தமிழ்நாட்டின் முதல் பல்லுயிரிய மரபு தளமாக (Biodiversity Heritage Site) அறிவித்தது தமிழ்நாடு அரசு. பல்லுயிரிய மரபு தலமாக அறிவிக்கப்பட்ட கழிஞ்ச மலை, நாட்டார் மலை, ராமாயி மலை, அகப்பட்டான் மலை, கழுகு மலை / ஓவா மலை, தேன்கூடு மலை, கூகைக்கத்தி மலை உள்ளிட்ட மலைகளும் இந்த 5000 ஏக்கர் சுரங்கம் ஏலம் விடப்பட்ட பகுதியில் வருகிறது. நூறுக்கும் மேற்பட்ட பறவைகள், இருபதுக்கும் மேற்பட்ட பாலூட்டி வகை காட்டு விலங்குகள், இருபதுக்கும் மேற்பட்ட ஊர்வன வகை என பல்வேறு காட்டு விலங்குகளின் புகழிடமாக உள்ள மலைக்குன்றுகள் இவை என்பது குறிப்பிடத்தக்கது.
சுரங்கம் அமைக்க ஏலம் விடப்பட்ட 5000 ஏக்கர் எல்லைக்குள் வருகிற நிலப்பரப்புக்குள் வாழுகிற மக்கள், அவர்களின் வீடுகள், பள்ளிக்கூடங்கள் உள்ளிட்டவற்றின் நிலை என்ன என்பதையும்; ஈரமாயிரமாண்டு தொன்மையான தமிழிக் கல்வெட்டுகள், சமணர் படுக்கைகள், மகாவீரர் சிற்பம், குடைவரை கோயில், பிற்கால பாண்டியர் கோயில், தொன்மையான ஆனைகொண்டான் கண்மாய் உள்ளிட்ட ஒட்டு மொத்த தமிழ் மக்களின் வரலாற்று சின்னமாக இருக்கிற தொல்லியல் சின்னங்களின் நிலை என்ன என்பதையும்; பல்லுயிர்களின் வாழிடமாக உள்ள பெருமாள்மலை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி, அரிட்டபட்டி – மீனாட்சிபுரம் பல்லுயிரிய மரபு தளம் ஆகியவற்றின் நிலை என்ன என்பதையும் தமிழ்நாடு அரசும், ஒன்றிய அரசும் விளக்க வேண்டும்.
மதுரை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளாகவே டங்ஸ்டன் கனிமத்தை கண்டறியும் சோதனை ஆய்வுகள் மறைமுகமாக நடைபெற்று வருகிறது. ஒன்றிய அரசின் சுரங்க அமைச்சகம் 2021 மார்ச் மாதம் வெளியிட்ட தமிழ்நாடு மறுபார்வை (Tamil Nadu Reviews) 2019 அறிக்கையில் தான் டங்ஸ்டன் ஆய்வு செய்யப்பட்ட பகுதிகள் குறித்து வெளிப்படையாக குறிப்பிடப்படுகிறது. அந்த அறிக்கை குறித்தும் மதுரை மக்களுக்கு இதுவரை தெரியாது. அந்த அறிக்கையில் மேலூர் தாலுக்காவில் உள்ள மேலூர், தெற்குத்தெரு, முத்துவேல்பட்டி, கூலானிபட்டி, கிடாரிப்பட்டி, எட்டிமங்கலம், அரிட்டாபட்டி, வள்ளலாப்பட்டி, சில்லிப்பியபட்டி, நாயக்கர்பட்டி உள்ளிட்ட ஊர்களில் டங்ஸ்டன் ஆய்வு செய்யப்பட்டதாக குறிப்பிடப்படுகிறது. இப்போது ஏலம் எடுக்கப்பட்ட 5000 ஏக்கரில் தெற்குத்தெரு, முத்துவேல்பட்டி ஆகிய ஊர்கள் அடங்கவில்லை. எனவே அடுத்து தெற்குத்தெரு, முத்துவேல்பட்டி உள்ளிட்ட ஊர்களை உள்ளடக்கிய இன்னும் ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பு ஹிந்துஸ்தான் ஸிங் நிறுவனத்திற்கு தாரை வர்க்கப்படலாம். ஒன்று மட்டும் தெளிவாக புலப்படுகிறது. டங்ஸ்டன் சுரங்கம் 5000 ஏக்கர் பரப்போடு நிற்கப் போவதில்லை. டங்ஸ்டன் சுரங்கம் ஏலம் உடனடியாக ரத்து செய்யப்பட வேண்டும். மதுரை மாவட்ட மக்களின் வாழ்வாதாரம் மற்றும் வாழும் சூழல் பாதுகாக்கபட வேண்டும்.
பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியான அழகர்மலைக்கும் பெருமாள்மலைக்கும் இடைப்பட்ட நிலப்பரப்பில்தான் இந்த டங்ஸ்டன் சுரங்கத்திற்க்கான 5000 ஏக்கர் ஏலம் நடந்து இருக்கிறது. தமிழர்களின் பண்பாட்டு அடிப்படையிலும் பல்லுயிரிய சூழல் அடிப்படையிலும் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக இந்த நிலப்பரப்பு விளங்குகிறது. தமிழ் மக்களின் தொன்மை, வரலாறு மற்றும் பல்லுயிரிய வளத்தைs சீரழிக்கும் டங்ஸ்டன் கனிம சுரங்க திட்டத்திற்கான அனுமதியை வழங்கக் கூடாது என தமிழ்நாடு அரசிடம் மதுரை மக்கள் சார்பாக கோருகிறேன். அதுவே ஸ்ட்ரெலைட் போராட்டத்தில் படுகொலை செய்யப்பட்ட ஈகியர்களுக்கு நாம் செய்யும் அஞ்சலியாக இருக்கும்.
தகவல் உதவி:
– அரிட்டாபட்டி பல்லுயிரிய மரபு தளம் – உயிர் பதிப்பகம் & மதுரை இயற்கை பண்பாட்டு அறக்கட்டளை வெளியீடு
– State Review Indian Minerals 58th Edition – Ministry of Mines, March 2021
– New Indian Express 8th Nov 2024