நீரின்றி தேயும் தமிழ் நிலம் – கோ.சுந்தர்ராஜன்

நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு என்று ஐம்பூதங்களாக தன்னை வரையறுத்துக் கொள்கிறது இயற்கை. நிலம் அடிப்படை. மனித வாழ்வியலின் அதி முக்கியமான தன்மை. ஆனால் நீரின்றி காற்றின்றி ஆகாயமின்றி நிலம் மட்டும் போதுமா மனித வாழ்வியலுக்கு? ஐம்பூதங்களில் எதைச் சுரண்டினாலும் அது இன்னொரு தன்மைக்கு கேடு விளைவிக்கும். நம் கண் முன்னாலேயே பல உதாரணங்கள் இருக்கிறது. தென்னாப்பிரிக்காவின் கேப் டவுன் அப்படியொரு உதாரணம். தண்ணீர் முற்றிலுமாக தீர்ந்து விட்ட நிலையில் அங்கு ஒவ்வொருவரும் ஒரு நாளைக்கு சுமார் 80 லிட்டர் நீர்தான் பயன்படுத்த முடியும் – ஒரு நபரின் அனைத்துத் தேவைகளையும் அதற்குள் முடித்துக்கொள்ள வேண்டும். மக்கள் அங்கு எப்படி பாடுபடுகிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள கூகுளில் சின்னதாக தேடினால் போதும், தகவல்கள் கொட்டிக்கிடக்கின்றன.

நள்ளிரவுகளிலும் புலர் பொழுதுகளிலும் சென்னை கேப்டவுன் நகரமோ என்று தோன்றும் அளவுக்கு நீருக்கு அலைந்து கொண்டிருக்கிறது. ஒரு நகரமே வீதிகளில் இறங்கி வண்ண வண்ண குடங்களோடு திரிகிறது. வற்றிப் போன ஒரு நகரத்தில் குடங்களில் மட்டும்தான் வர்ணங்கள் எஞ்சியிருக்கின்றன. தங்கத்தை விட பாதுகாக்கப்பட வேண்டிய ஒரு பொருளாக தண்ணீர் மாறியிருக்கிறது. ஆயிரக்கணக்கில் செலவு செய்ய வேண்டியிருக்கிறது, நேற்று வரையில் நாம் அபரிதமாய் செலவழித்த நீரைப் பெற.

வேலை தேடியும் வாழ்வு தேடியும் சென்னைக்கு பெரும் படையெடுத்து கிளம்பி வந்த இளைஞர்களை தண்ணீர் தட்டுப்பாடு என்கிற பூதத்தை காட்டி விரட்டிக்கொண்டிருக்கிறது சென்னை. உணவகங்கள் காலியாகிக்கொண்டிருக்கின்றன.  பள்ளிகளுக்கு தண்ணீர் தட்டுப்பாட்டின் பொருட்டு விடுமுறை  விட கூடாது என்று அரசு எச்சரிக்கை விடுக்கிறது. வீட்டிலிருந்து பணி புரியலாம் என்று தாராளம் காட்டுகின்றன ஐ.டி.நிறுவனங்கள்.

என்ன நடந்தது சென்னைக்கு? ஏன் இந்த தண்ணீர் தட்டுப்பாடு?  சர்வதேச ஊடகங்கள் கவலை கொள்ளும் அளவுக்கு நிலை ஏன் மோசமாக இருக்கிறது? யாரால், எதனால் உருவானது இந்த அவல நிலை?

முதலில் ஒன்றை தெளிவாக தெரிந்து கொள்வோம்.

இயற்கை, பொறுமையின் ஆதி வடிவம். இயற்கைக்கு அள்ளித் தர தெரியும். வாரிச் சுருட்ட தெரியாது.

அந்த இயற்கை ஏன் இப்போதெல்லாம் தன் மக்கள் மீது பல வகையிலும் சீற்றம் கொள்கிறது? அடுத்தடுத்து புயலும் வெள்ளமும் வறட்சியும் ஏன் மக்களை வாட்டுகிறது?

காரணம், இயற்கையை நாம் அளவுக்கு அதிகமாக சுரண்டிக்கொண்டிருக்கிறோம் என்பதுதான். நாம் இயற்கையை முறையில்லாமல் சுரண்டியதன் விளைவு, இன்று காலநிலை மாற்றம் என்று அது நம்மை காவுக் கொள்ளத் துடிக்கிறது. நம்மை வெட்ட தேவையான ஆயுதங்களை நாமே எடுத்து இயற்கையிடம் கொடுத்திருக்கிறோம். மனித பேராசையின் விளைவு இது. அது பற்றி விரிவாக பார்ப்போம். இப்போது சென்னையின் தண்ணீர் பிரச்னை பற்றி கொஞ்சம் பேசுவோம்.

இதில் மிக முக்கியமான விஷயம் ஒன்று இருக்கிறது. இந்த தண்ணீர் தட்டுப்பாடு சென்னைக்குரியது மட்டுமல்ல. தமிழகம் முழுவதும் இன்று கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது. ராமநாதபுரம், விருதுநகர் போன்ற மாவட்டங்களில் குறைந்த பட்சம் 7 கி.மீ நடந்து மட்டுமே தண்ணீர் எடுக்க முடியும்.

ஆறு குடங்கள் வைத்திருக்க கூடிய தள்ளு வண்டிகளை பெண்கள் வெயிலில் தள்ளிச் செல்லும் காட்சி இந்த பகுதிகளில் சாதாரணம்.

ஏற்கனவே வறண்ட நிலமான இந்த பகுதிகளில் இந்த வருடம் மிக மோசமாக இருக்கிறது. ராமநாதபுரத்தில் ஊற்று தோண்டி கிடைக்கும் நீரை உறிஞ்சி எடுக்கிறார்கள் மக்கள்.

24 மாவட்டங்களை நீரியல் வறட்சியால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களாக மார்ச் மாதம் அறிவித்துவிட்டது அரசு. கடந்தாண்டை விட இந்த ஆண்டு நிலத்தடி நீரின் அளவும் கடுமையாக குறைந்திருப்பதாக தரவுகள் சொல்கின்றன.

இந்நிலையில் சென்னைக்கு மட்டும் தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் கிடைக்கும் கவனத்திற்கு காரணங்கள் இல்லாமல் இல்லை. வழக்கம் போல சென்னை தலைமையிடம், நகரம் என்பது ஒரு புறம் இருக்க, சென்னையின் அதிகரிக்கும் மக்கள் தொகையும் இதற்கு ஒரு காரணம்.

கிட்டத்தட்ட ஒரு கோடி மக்கள் சென்னையில் வாழ்கிறார்கள். அதனால் பிற மாவட்டங்களை விட சென்னையின் தண்ணீர் தேவை அதிகம், தண்ணீர் கிடைக்காமல் போகும் போது  கிடக்கும் கவனமும் அதிகம்.

பொதுவாகவே சென்னை வறட்சியால் பாதிக்கப்பட்ட ஒரு நகரம்தான். அதனால் இந்த வருட பிரச்னையை புதிய பிரச்னை என்று சொல்ல முடியாது. பல வருட பிரச்னையின் புதிய பரிமாணத்தைத் தான் நாம் இப்போது பார்த்தும் அனுபவித்தும் வருகிறோம்.

இன்று சென்னை எதிர்கொண்டிருக்கும் பிரச்னையின் தொடக்கப் புள்ளி இந்த வருடத்தில் இல்லை. இருபது வருடங்கள் பழைய பிரச்னை அது.  கொஞ்சம் யோசித்துப் பாருங்கள், வெறும் நான்காண்டுகளுக்கு முன்புதான் இப்போது வறண்டு கிடக்கும் சென்னை சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இப்போது வறட்சி மக்களை வீதிகளுக்கு கொண்டு வந்திருப்பது போலவே 2015 டிசம்பரில் பெருவெள்ளம் மக்களை வீதிகளுக்குக் கொண்டு வந்து நிறுத்தியது. இன்னும் நான்கே ஆண்டுகளில் வறட்சி காரணமாக தெருவில் நிற்போம் என்று அப்போது நாம் கனவிலும் நினைத்திருக்க மாட்டோம்.

அந்த வருடம் மட்டும் 320 டி.எம்.சி. நீர் கடலுக்குள் வடிந்தது. சென்னையின் ஒரு வருட தேவை பதினோறு டி.எம்.சி மட்டுமே.

சென்னையைப் பொறுத்தவரையில் அதன் நீர் தேவைகளுக்கு அதை சுற்றியிருக்கும் நான்கு ஏரிகளை தூர் வாரி சரியாக பராமரித்திருந்தாலே போதும்.

நீர் மேலாண்மை குறித்து போதுமான அளவுக்கு கவனம் எடுக்காதது மட்டுமே சென்னை இன்று சந்திக்கும் பிரச்னைக்கு மிகப்பெரிய காரணம்.

2020க்குள் இந்தியாவின் 20 முக்கிய நகரங்களில் நிலத்தடி நீர் வற்றி விடும் என்று சொல்லியிருக்கிறது கடந்த வருட நிதி ஆயோக் அறிக்கை ஒன்று. அதில் சென்னையும் ஒன்று. வறட்சியால் சென்னை அதிகம் பாதிக்கப்பட்டாலும் நிலத்தடி நீர் நகரை காப்பாற்றி வந்தது.

இப்போது நிலத்தடி நீரையும் நாம் முழுவதுமாக சுரண்டி அதை காணாமல் போக்கியதன் விளைவுதான் இன்றைய பிரச்னை. சென்னை இப்போது சந்தித்துக் கொண்டிருப்பது ஒரு வறட்சியின் பிரச்னை அல்ல. தொடர் வறட்சிகளின் அழுத்தம்தான் (drought accumulation stress) இந்த நிலைக்கு காரணம்.

இந்த பிரச்னை இதோடு முடியப் போவதில்லை.

காலநிலை மாற்றம் இன்று உலகையே அச்சுறுத்தி வரும் ஒரு பிரச்னை. சென்னையும் தமிழ்நாடும் அதற்கு விதிவிலக்கல்ல. கடந்த நான்கு ஆண்டுகளில் நான்கு புயல்களை தமிழகம் சந்தித்திருக்கிறது. இந்நிலையில் அதிக வெப்பம் அல்லது அதிக வெள்ளம் எல்லாம் சாதாரண நிகழ்வாகிவிடும் சூழல் தான் இனி இருக்கும். ஆக நிலத்தடி நீர் இல்லாமல் போனால் வறட்சி மட்டுமல்ல அதன் பாதிப்பும் அதிகமாகதான்  இருக்கும்.

நமது பொறுப்பற்ற செயல்பாடுகளால் இயற்கையின் அனைத்து வளங்களையும் சூறையாடியிருப்பதுதான் மனித இனத்தின் மகத்தான சாதனை. இந்த உலகில் வாழும் கடைசி இனம் நாம் மட்டுமே என்கிற முட்டாள்தனமான இறுமாப்பு தவிர இதற்கு வேறு என்ன விளக்கம் சொல்ல முடியும்? இந்த பொறுப்பற்ற செயல்பாடுகளின் விளைவுகளால் கிட்டத்தட்ட பத்து லட்சம் உயிர்கள் காணாமல் போக போகின்றன. வேறு எந்த உயிரினமும் இல்லாமல் மனிதன் மட்டுமே வாழும் நிலம் நிலமாக இருக்குமா என்ன? நாம் அந்த நிலைக்கு போனாலும் ஆச்சரியம் இல்லை. நமது பேராசைகளின் எல்லைகள் தமது இழிவான பற்களைக் காட்டிக்கொண்டு விரிந்து கொண்டிருக்கின்றன. கால நிலை மாற்றம் காரணமாக ஏற்படப் போகும் உலக அழிவு இன்னும் 12 ஆண்டுகளில் தொடங்கி விடும் என்கிற அதி முக்கியமான தரவு கூட நம்மை திருத்துவதாக இல்லை.

சூழலியல் பிரச்னைகளில் ஆர்வம் கொண்ட ஒருவனாக என்னைப் பொறுத்தவரையில் சென்னையின் தற்போதைய வறட்சி காலநிலை மாற்றத்தின் தவிர்க்க முடியாத ஒரு விளைவு. இனி இது போன்ற விளைவுகளை அதிகம் சந்திக்க வேண்டியிருக்கும். விலைகளை அதிகம் தர வேண்டியிருக்கும்.

இனி இப்போது மட்டுமல்ல எப்போதும்  தண்ணீர் பற்றாகுறை மாவட்டமாக சென்னை இருந்தாலும் வியப்பேதும் இல்லை.

இதில் இன்னொரு முக்கியமான விஷயம். நீங்கள் நடமாடும் வீதிகளை கொஞ்சம் கூர்ந்து பாருங்கள். குடங்களை ஏந்தி தெருக்களில் திரிந்து கொண்டிருப்பவர்கள் பெரும்பாலும் பெண்களாக இருப்பார்கள். அதிலும் பெரும்பாலான பெண்கள், அடித்தட்டு வர்க்கங்களைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள். அதாவது இயற்கையை சூறையாடி அதன் மூலம் தன்னை வளப்படுத்திக் கொள்ளும் ஒரு கூட்டம் அந்த வளத்தை வைத்தே இயற்கையை மீண்டும் விலை பேசி வாங்கும்.  இது போன்ற இயற்கை சீற்றங்களில் கூட இது மாதிரியான அநீதிகளும் சமமற்ற தன்மைகளும் நிலவுகிறது என்பதை நாம் எப்போது வெட்கப்பட வேண்டிய ஒரு விசயமாக பார்க்கப் போகிறோம்? இயற்கைக்கு உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்றும் தெரியாது, சாதி பார்த்து சாகவும் வாழவும் செய்யவும் தெரியாது. இதெல்லாம் நாம் செய்வது.

இதற்கெல்லாம் என்ன முடிவு என்கிற கேள்வி மிகப்பெரிய, ஆனால் மிக ஆதாரமான கேள்வி. அந்த கேள்விக்கான பதிலை ஒரு வரியிலோ அல்லது ஒரு செயல்பாட்டிலோ சொல்லி முடித்துவிட முடியாது. இயற்கையின் மீதும் மனித இனத்தின் சமத்துவம் மீதும் நம்பிக்கையும் பற்றும் கொண்டுள்ள ஒவ்வொருவரும் துரத்த வேண்டிய கேள்வி. எவ்வளவு மோசமான பிரச்னையின் போதும் இதை பேச வேண்டிய கட்டாயம் இருப்பதாகவே நான் நினைக்கிறேன்.

சரி, இப்போது தண்ணீர் பிரச்னைக்கான தீர்வுதான் என்ன?

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களின் நீர் தேவை 20 அல்லது 25 டி.எம்.சியாகத்தான் இருக்கும். இந்த மாவட்டங்ககளில் உள்ள ஏரிகளை தூர் வாரி பராமரித்தால் 270 டி.எம்.சி. நீர் கிடைக்கும்.

சென்னையைப் பொறுத்தவரை அதன் நீர் தேவையின் பெரும் பகுதியை சென்னை குடி நீர் நிறுவனம் கையாள்கிறது.  தவிர, அருகிலுள்ள குவாரிகளிலிருந்து சேகரிக்கப்படும் நீர், விவசாய நிலங்களிலிருந்து வரும் நீர், கடல் நீரை குடிநீராக்கும் இரண்டு திட்டங்களிலிருந்து கிடைக்கும் நீர் ஆகியவைதான் சென்னைக்கான நீர் ஆதாரம்.

ஏரிகளை தூர் வாரி மழை நீரை சேகரிக்க முயற்சிகள் எடுத்தாலே சென்னையின் பெரும்பாலான பிரச்னைகளுக்கு தீர்வு காணலாம். தவிர காணாமல் போய்விட்ட நமது பசுமைப் போர்வையை மீட்கவும் நடவடிக்கை எடுக்க வீண்டும்.

நிலத்தடி நீர் சேகரிக்கவும் பாதுகாக்கவும் வழிமுறைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். பெய்யும் மழையில் ஒரு குறிப்பிட்ட அளவு நிலத்தில் சேர்ந்தால் மட்டுமே நிலத்தடி நீரின் தன்மை பாதுகாக்கப்படும். அந்த அளவு கூட சேராமல் நிலை சீரழிந்திருக்கிறது என்பதுதான் வருத்தத்திற்குரிய உண்மை.

ஆனால் இந்த நிலை மாறாவிட்டால் சென்னையின் நிகழ்காலம் மட்டுமல்ல எதிர்காலமும் கேள்விக்குரியதும் பயத்திற்குரியதுமாக மாறிவிடும்.

ஆக உடனடியாகவும் நீண்டகால தீர்வாகவும் சரியான நீர் மேலாண்மையை  கைகொள்ள வேண்டிய அவசியம் இன்று உருவாகியிருக்கிறது. ஏரிகளை தூர் வாரி பராமரிப்பது, நிலத்தடி நீர் பராமரிப்பில் கவனம் செலுத்துவது இன்று காலத்தின் தேவையாக எழுந்து நிற்கிறது.

இதெல்லாம் சாத்தியமா என்கிற கேள்வி எழலாம்.

பதில் தேடி பக்கத்து நாடுகளுக்கோ மாநிலங்களுக்கோ போக வேண்டாம். தமிழ்நாட்டிலேயே கொஞ்சம் பின்னோக்கிப் போனால் போதும்.

வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான் புகழ் கொண்ட தமிழ்நாடு என்று பெருமைப்பட்டோம் . ஆனால் வள்ளுவன் தந்த சொல்லை வெறும் காகிதங்களில் மட்டும் வைத்துவிட்டு, அதன் உண்மையை காற்றில் விட்டிருக்கிறோம்.

நீரின்றி அமையாது உலகு என்றது வள்ளுவனின் வாக்கு. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்த ஞானத்தை மனித பேராசைக்கு பலிக் கொடுத்து இப்போது அதற்கு பதில் கொடுத்து நிற்கிறோம்.

நீர் மேலாண்மை குறித்து பேசாத தமிழ் இலக்கியம் கிட்டத்தட்ட இல்லை என்று சொல்லும் அளவுக்கு நீர் முக்கியமான ஒரு பொருளாக நமது இலக்கியங்களிலும் வாழ்வியலிலும் இருந்திருக்கிறது.

இடியுடை பெருமழை எய்தா ஏகப்

பிசியாவிளையுள் பெருவளம் தரப்ப

மழைபிணித்து ஆண்ட மன்னவன்

என்று எழுதுகிறார் இளங்கோவடிகள். பெய்யும் மழையை தக்க வாறு சேமித்து பயன்படுத்தி ஆட்சி செய்யும் மன்னவன் என்று வரையறுக்கிறது இந்த பாடல்.

பெருங்குள காவலன் போல்

அருங்கடி அன்னையும் துயில் மறந்தனளே

என்கிறது அகநானுற்றுப் பாடல் ஒன்று. எந்நிலையிலும் ஏரியை காக்க காவல் நிற்கும் காவலன் போல குழந்தையை காக்க தூக்கத்தை மறந்த தாய் என்கிறது.

இப்படியும் பொருள் கொள்ளலாம்: குழந்தையைப் போல ஏரியைக் காத்த காவலன் என்றும்.

 அடுபோர்ச் செழிய, இகழாது வல்லே

நிலனெளி மருங்கின் நீர்நிலை பெருக

என்று மன்னனின் மிக முக்கியமான கடமையை வரையறுக்கிறது சங்கப்பாடலொன்று. நிலம் குழிவாக இருக்கும் இடத்தில் நீர் நிலைகளை பெருகும்படி செய்வது மன்னனின் மிக முக்கியமான கடமை என்கிறது. அப்படி செய்யும் மன்னன்  காலங்களை வென்று நிற்பான்.

இலக்கியங்களில் மட்டுமல்ல, வாழ்வியலிலும் இதெல்லாம் கடைபிடிக்கப்பட்டது. இயற்கையை சீண்டாத கல்லணையை கட்டிய கரிகாலன் காட்டிய வழியைவிடவா உலகில் வேறெங்கும் ஒரு வழி இருந்துவிட போகிறது?

சில நூற்றாண்டு முன்னர் வரையில் நீர் மேலாண்மையில் கொடி கட்டி தமிழ்நிலம் ஆண்டதற்கு பல ஆதாரங்கள் இருக்கிறது.

ஏரிகளை வெட்டி, நீரை ஆற்றோடு கலக்க செய்தல், அணைகளை கட்டி மக்களுக்கு உதவுதல் என்று ஆண்ட மன்னர்களும் இருந்திருக்கிறார்கள்.

தமிழ் நிலத்தின் நீர் மேலாண்மைக்கு ஒரு வரலாற்றுப் பின்புலம் இருக்கிறது. நீர் தேக்கி வைப்பதை முக்கிய பணிகளில் ஒன்றாக கருதிய மன்னர்கள் இந்த நிலத்தை மன்னர் இந்த நிலத்தை ஆண்டிருக்கிறார்கள். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு பின்னர் கோவில்களில் யாகம் நடத்துவதன் மூலம் மழையை வரவழைக்கலாம் என்று நம்பும் ஆட்சியாளர்களை நாம் பெற்றிருக்கிறோம்.

இந்த நீர் மேலாண்மையின் இன்றைய நிலை என்ன? பழங்கதையாகப் போனது போல போய்விட்டது நமது நீர் மேலாண்மையின் சிறப்புகள்.

சென்னையில் மட்டும் சுமார் 350 ஏரிகள் காணாமல் போயிருக்கின்றன. பள்ளிக்கரணை பாதியாக சுருங்கிவிட்டது. ஏரிக்கரை சாலை என்று நாம் பேர் வைத்த எல்லா தெருக்களும் ஒரு நேரத்தில் ஏரிகளாக பாய்ந்தவை. இன்று வறண்ட பிரதேசங்களாக நிற்கின்றன.

காணுமிடமெல்லாம் கான்கிரீட் காடாகி காட்சியளிக்கிறது சென்னை. மழை நீர் போக பாதையில்லை. பின்னர் மழை வந்தாலும் தண்ணீர் வரவில்லை என்று புலம்புவதற்கு நமக்கெல்லாம் என்ன அருகதை இருக்கிறது? இதில் இன்னொரு முக்கியமான விசயம், மழை பொய்த்துவிட்டது என்று இந்த பிரச்னைக்கு அரசு மழை மீது பழியைப் போட்டிருக்கிறது. மழைப் பொய்க்க ஒரு காரணம், காலநிலை மாற்றம். அப்புறம் மழை அப்படியொன்றும் பொய்க்கவும் இல்லை. சென்னையின் சராசரியை விட குறைவாகதான் பெய்ந்திருக்கிறது. இதைவிட மோசமாக பெய்த போதெல்லாம் நாம் அதை சமாளித்திருக்கிறோம். இப்போது சமாளிக்க முடியாமல் போவதற்கு காரணம், பெய்த மழையை சேமிக்க முடியாத நமது இயலாமைதான்.

தண்ணீர் பிரச்னையில், அரசு துரித நடவடிக்கை எடுக்கவில்லை வேகமாக செயல்படவில்லை என்பதை அழுத்தமாக பதிவு செய்ய விரும்புகிறேன். ஆனால் அது மட்டுமல்லாமல் நாம் என்ன செய்திருக்கிறோம் என்பதை கொஞ்சம் யோசித்துப் பார்ப்போம்.

நான் நின்று கொண்டிருக்கும் இந்த நிலம் என்னுடையதில்லை. நான் பயன்படுத்தும் இந்த நீர் நாளை இன்னொருவரின் தாகம் தவிரவும் தேவை. நான் சுவாசிக்கும் இந்த காற்று, என் குழந்தைக்கும் கொஞ்சம் கிடைக்க வேண்டும். ஆனால் என்னோடு இந்த நிலமும் நீரும் காற்றும் அழிந்து போய்விட வேண்டும் என்பதை மட்டுமே குறிக்கோளாக கொண்டு நான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறேன்.

சென்னை இன்று வற்றிப் போவதற்கு நானும் நீங்களும்தான் பொறுப்பு.

நாளை அது காணாமல் போனால் அதற்கும் நீங்களும் நானும்தான் பொறுப்பு.

இந்த பூமி அழியும் போது, அது சிந்தும் ரத்தத்தின் கறை நம்முடைய கைகளிலும் இருக்கும். அதுவே நாம் வாழ்ந்த வாழ்வின் சாதனை என்று மீளும் வேறொரு வரலாறு பேசும். வரலாற்றின் இந்த அவச் சொல்லிலிருந்து தப்பிக்க நம்மிடம் இப்போது ஒரேயொரு வாய்ப்புதான் இருக்கிறது.

இன்றே இப்போதே நாம் நமக்கு பின் இங்கு வாழப் போகும் உயிர் மீதான கரிசனத்தை காட்டத் தொடங்க வேண்டும். அது நம் சந்ததியினரின் மீது நாம் காட்டும் அக்கறை. இதை இப்போதே இன்றே செய்யத் தவறினால் நம்மை வரலாறு மன்னிக்காது, நமது வருங்காலமும் மன்னிக்காது.

 

   – இந்த கட்டுரை உயிர்மை ஜூலை இதழில் வெளிவந்துள்ள கட்டுரை

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments