அமைதியே எங்கள் பிரார்த்தனை!

’ஹிரோஷிமா நகரை வந்தடைந்துவிட்டோம். இன்னும் சில நிமிடங்களில் விமானம் தரையிறங்கும். டோக்கியோவில் இருந்து ஹிரோஷிமா வரை எங்களோடு நீங்கள் மேற்கொண்ட இந்தப் பயணத்துக்கு நன்றி’ என்ற அறிவிப்பு என்னை விமானத்தின் ஜன்னலுக்கு வெளியே பார்க்கத் தூண்டியது. அணுகுண்டு வீச்சால் பாதிக்கப்பட்ட நகரம் எழுந்து நிற்கிறது என்று எத்தனையோ முறை படித்திருக்கிறேன்; அங்கு சென்று வந்தவர்களுடன் உரையாடி இருக்கிறேன்; அவர்கள் பேச்சைக் கேட்டிருக்கிறேன். இருந்தாலும் நேரடி அனு பவத்துக்காக என் மனம் பரபரத்தது.
ஜன்னலுக்கு வெளியே முற்றிலும் நான் எதிர்பாராத காட்சி. எங்கு திரும்பினாலும் பசுமை. மரங்கள் நிறைந்த காட்டுக்கு நடுவே ஒரு நகரம் உயிர்பெற்று எழுந்து நிற்பது போல ஓர் உணர்வு எனக்குள் எழுந்தது. புல் பூண்டுகூட முளைப்பதற்கு பல ஆண்டுகள் ஆகும் என்று அணு வீச்சு தொடர்பான கற்பனையை அந்த நகரம் முற்றிலுமாக சிதைத்தது. தரை இறங்கிய விமானத்தில் இருந்து இறங்கி விமான நிலையத்திற்கு வெளியில் வந்தோம். எனக்கும் என் மனைவிக்கும் துணையாகவும் நகரத்தைச் சுற்றிக்காட்டவும் என் தம்பியும் அவருடைய மனைவியும் எங்களோடு வந்திருந் தார்கள். அங்கிருந்து ஒரு மணி நேர பேருந்து பயணத்துக்குப் பிறகு ஹிரோஷிமா பேருந்து நிலையம் வந்து சேர்ந்தோம். அங்கிருந்து மிக அருகில் இருந்தது ஹிரோஷிமா அமைதி நினைவுப் பூங்கா. 1945 ஆகஸ்ட் 6ஆம் தேதி அமெரிக்காவால் வீசப் பட்ட அணுகுண்டு காரணமாக ஹிரோஷி மாவுக்கு ஏற்பட்ட அழிவின் சுவடுகள் எங்கேயும் தெரியவில்லை. இந்தப் பூங்காவுக்குள் ஒரே ஒரு கட்டடம் மட்டும் அணு வீச்சால் பாதிக்கப் பட்ட அதே நிலையில் வைத்து பாதுகாக்கப் படுகிறது. மற்றபடி அந்த நகரம் முற்றிலும் புதிதாக எழுந்து நிற்கிறது. அந்தக் கட்டிடத்தின் வாசலில் ஒகிஹிரொ தெரோ என்ற மனிதர், அங்கு வந்திருக்கும் பள்ளிக் குழந்தைகளிடம் அணுகுண்டு வீசப்பட்ட அன்று என்ன நடந்தது என்பதை விவரித்துக் கொண்டிருந்தார். அவருக்கு முன்னால் இரண்டு கட்டட மாதிரிகள் இருந்தன. ஒன்று, அணுகுண்டு வீச்சுக்கு முந்தைய தோற்றத்துடன் இருந்தது. மற்றொன்று பாதிப்புக்கு பின்னாலான கட்டடத்தைப் போலிருந்தது. அணுகுண்டு வீச்சில் உயிர் பிழைத்த ஒகிஹிரொ டெரோ, ஒவ்வொரு நாளும் இதே இடத்துக்கு வந்து ஹிரோஷிமா அமைதிப் பூங்காவுக்கு வருகை தரும் அனைத்து மக்களிடமும் அணுகுண்டின் அழிவுகளைப் பற்றியும் அவருடைய வாழ்க்கையில் அணுகுண்டினால் ஏற்பட்ட பாதிப்புகளைப் பற்றியும் ஜப்பானிய மொழியில் பேசிக் கொண்டே இருக்கிறார். அவருடைய வாழ்க்கை பற்றிய குறிப்புகள் அடங்கிய ஆங்கில கையேடு ஒன்று அவரருகில் நாம் பார்த்து புரிந்து கொள்வதற்கு இருக்கிறது. அவருடைய அம்மாவுக்கு கதிர்வீச்சால் புற்றுநோய் வந்திருக்கிறது. சிலகாலம் அதை வெளியில் சொல்ல முடியாத நிலையிலேயே இருந்து பிறகு அவர் இறந்து போனார்.

அணுகுண்டு வெடிப்பின் அபாயம் பற்றிய போதிய புரிதல் இல்லாத அந்தக் காலகட்டத்தில் அதனால் பாதிக்கப் பட்டவர்களின் துன்பங்களை நாம் புரிந்துக்கொள்வது கடினம். கதிர் வீச்சால் பாதிப்பட்டவர்கள் வெளியில் சொல்ல முடியாத ஒரு அவல நிலை இருந்திருக் கிறது. ஒரு குறிப்பிட்ட காலம் வரை அரசும் மக்களும் பாதிக்கப்பட்டவர்களை தீண்டாமலேயே இருந்திருக்கிறார்கள். சமூகத்தில் இருந்து ஒதுக்கிவைக்கும் மனநிலையே இருந்திருக்கிறது. அதனால் தங்களுக்கேற்பட்ட பாதிப்பு குறித்து பாதிக்கப்பட்டவர்கள் வெளியில் சொல்லு வதில்லை. பள்ளிக் குழந்தைகளிடமும் மற்றவர் களிடமும் அவர் போரின் தீமைகளையே அதிகம் பேசுகிறார். சாதாரணமாக மனித குலம் அமைதியாக வாழ விரும்பினாலும், போர் மனிதனின் தன்மையை தலைகீழாக மாற்றிவிடுகிறது. இதுவே அவர் நமக்கு சொல்லும் செய்தி. அங்கிருந்து சற்று தொலைவில் அணுகுண்டு வீச்சில் இறந்துபோன பத் தாயிரம் மாணவர்களுக்கான நினைவு ஸ்தூபி இருக்கின்றது. ஸ்தூபியைப் பார்த்துவிட்டு வெளியில்வந்தபோது ஓர் அமெரிக்கர் எங்களிடம் பேசினார். நேற்றைய தினம் அமெரிக்க அதிபர் ஒபாமா இங்கு வந்தபோது அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்க நாங்கள் இங்கு வந்தோம். அமெரிக்கா தன்னிடம் இருக்கக் கூடிய அணு ஆயுதங்களை அழிப்பதோடு மட்டுமல்லாமல் உலகில் எங்குமே அணு ஆயுதம் இல்லாத சூழலை ஏற்படுத்த வேண்டும். இதை வலியுறுத்தவே நேற்று நாங்கள் வந்தோம். இன்றும் வருபவர்களிடம் பேசிக் கொண்டிருக்கிறோம்’ என்றார்.

இதுவரை வெளி உலகுக்கு அவ்வளவாக தெரியாத அணுகுண்டு வீச்சால் பாதிக்கப் பட்ட ஒரு இடத்துக்கு அவர் அழைத்துச் சென்றார். 1945ல் அது ஒரு பெட்ரோல் நிலையமாக இருந் திருக்கிறது. அங்கு பணிபுரிந்த ஒருவரைத் தவிர மற்றவர்கள் அணுகுண்டு வீச்சில் இறந்துவிட்டதாக சொல்கிறார்கள். அந்தக் கட்டடத்தின் அடித்தளம் பாதிக்கப்பட்ட நிலையிலேயே இருக்கிறது. மேல் தளங்களில் புதிய அங்காடிகள் முளைத்திருக்கின்றன. உள்ளே சென்று பார்க்க அனுமதிக்கிறார்கள், தலையில் கவசம் அணிந்துகொள்ள வேண்டும் என்று வற்புறுத்துகிறார்கள். ஒரு குண்டு பல்பு வெளிச்சத்தில் பாதிப்புகள் தெரிகின்றன. இந்தக் கட்டடத்துக்கு அருகில் இருக்கும் ஒரு பாலத்தில் ஒருவர் ஜப்பானிய மொழியில் தொடர்ந்து அணு ஆயுதங்களுக்கு எதிரான பிரச்சாரத்தை செய்து கொண்டிருந்தார். அவருக்குப் பக்கத்தில் யாருமில்லை. ஆனால் அவர் குரலில் சோர்வில்லை. இன்று விதைத்து நாளை அறுவடை செய்யும் அவசரமில்லை. யார் நின்று கேட்கிறார்கள், யார் கேட்கவில்லை என்பதைப் பற்றிய கணக்குகளை அவர் பார்க்கவில்லை. அவர் தொடர்ந்து பேசிக் கொண்டே இருந்தார்.

நம்முடைய சிறிய முயற்சிக்கு கூட உடனடியான பலன்களை எதிர்பார்க்கும் மனநிலை நம்முடைய சூழலில் இருக்கிறது. நம்முடைய வார்த்தைகளை ஒருவர் காது கொடுத்து கேட்கவில்லையென்றால் அவரை மனிதராகக்கூட மதிக்காமல் அவதூறு செய்கிறோம். வெற்றியென்றும் தோல்வியென்றும் சாதனையென்றும் பின்னடைவு என்றும் புகழ் என்றும் அவமானம் என்றும் அற்ப விஷயங் களுக்காக கூத்தாடுகிறோம் அல்லது சோர்ந்து போகிறோம். இந்தப் பின்னணியில் அவருடைய தொடர்ச் சியான பேச்சை கேட்கும்போது ஓர் உணர்வு தோன்றியது. அவர் பேசுவது என்ன என்பதை புரிந்துகொள்ள முடியாவிட்டாலும் அவருடைய அர்ப்பணிப்பு அவர் மேல் மரியாதையை உரு வாக்கியது. போரின் அல்லது அணு குண்டின் அழிவுக்கு முன்னால் நாம் பெரிதாக கருதும் எல்லாமே ஒன்றும் இல்லை என்ற உணர்வு மேலோங்கியது. எத்தனை பேருக்கு மத்தியில் பேசுகிறோம் என்பதைவிட என்ன பேசுகிறோம் என்பது முக்கியம் என்ற புரிதல் பிறந்தது. அடுத்து நான் சென்றது ஹிரோஷிமா நினைவுச் சின்னம். இங்கு அணுகுண்டால் உயிரிழந் தவர்களுக்கு மலரஞ்சலி செலுத்து கிறார்கள். இங்கு ஜப்பானிய மொழியில் ஒரு கல்வெட்டு இருக்கிறது. ‘இங்கு இவர்கள் அமைதியாக உறங்கட்டும், இனி ஒருமுறை அந்தக் கொடுமையை நாங்கள் செய்ய மாட்டோம்’ என்று எழுதியிருக்கிறது. இங்குதான் நான் சென்றதற்கு முந்தைய நாள் அமெரிக்க அதிபர் ஒபாமா மலர் வளையம் வைத்து அஞ் சலி செலுத்தினார். அணு ஆயுதங்கள் இல்லாத உலகம் வேண்டும் என்று பேசிச் சென்றார். இனி ஒரு முறை அணுகுண்டை யார் மீதும் போட மாட்டோம் என்று அங்கு உறங்கிக் கொண் டிருக்கும் மனிதர்களுக்கு வாக்குறுதி கொடுக்கும் மனித குலம் ஏராளமான அணு குண்டுகளை தன் கையில் வைத்திருக்கிறது!

ஹிரோஷிமா தேசிய அமைதி நினைவுக் கூடம் ஒன்று இருக்கிறது. ஜப்பானிய அரசாங்கம் இதை 2002ல் திறந்து வைத்திருக்கிறது. அணுகுண்டு வீச்சில் இறந்தவர்களின் புகைப்படங்கள் இருக்கும் பகுதியும் இந்தக் கட்டிடத்தில் இருக்கிறது. அணுவின் தீமைகளை விளக்கும் திரைப்படஅரங்கம், சொந்த துயரங்களை வெளிப்படுத்தி அணு குண்டுக்கு எதிரான உணர்வுகளை உண் டாக்கும் செய்திப்படங்கள் திரையிடும் அரங்கம், அணு ஆயுதங்கள் மற்றும் அணு குண்டு வீச்சு தொடர்பான ஏராளமான நூல்கள் கொண்ட ஒரு பெரிய நூலகம் இவையெல்லாம் இந்தக் கட்டிடத்தில் இருக்கின்றன. அடுத்து ஹிரோஷிமா அமைதி நினைவு அருங்காட்சியகம். இங்கேதான் நம்மை உலுக்கும் விதமாக 1945 ஆகஸ்ட் 6ஆம் தேதி அந்த ஊரில் சிதைந்து கிடந்த சில பொருட்களை காட்சிக்கு வைத்திருக்கிறார்கள். பாதி எரிந்த செருப்புகள், பெல்ட்டுகள், பள்ளிக் குழந்தைகளின் பெயர் அட்டை, தொப்பி, பள்ளி பை, பாதி உருகியும் துருப்பிடித்தும் சிதைந்து போன சிறிய மிதிவண்டி உட்பட பல பொருட்கள் இருக்கின்றன. ஒவ்வொன்றைப் பற்றியும் அருகிலேயே சிறு குறிப்பு இருக்கிறது. அது தவிர உங்களுக்கு தேவைப்பட்டால் ஒவ்வொன்றைப் பற்றியும் விவரிக்கும் ஒலிக் கருவி ஒன்றைத் தருகிறார்கள். அதன் உதவி கொண்டு ஒவ்வொன்றைப் பற்றியும் நாம் விரிவாக அறிந்துக் கொள்ளலாம். ஹிரோஷிமா அமைதிப் பூங்காவின் எந்தப் பகுதிக்கு சென்றாலும் உலக அமைதி குறித்த உணர்வைத் தூண்டும் வகையிலேயே அனைத்தும் இருக்கின்றன. அணுக் கதிர்வீச்சின் காரணமாக உருவான புற்று நோயால் பாதிக்கப் பட்டு உயிரிழந்த சதாகோ சசாகி என்ற சிறுமியின் சிலைக்குப் பின்னால் ஒரு கதை இருக்கிறது. காகித கொக்குகள் ஆயிரம் செய்தால் புற்று நோயிலிருந்து விடுபட்டுவிடலாம் என்ற நம்பிக்கை அந்தச் சிறுமிக்கு இருந்தது. ஆனால் ஆயிரம் கொக்குகளை காகிதத்தில் செய்வதற்கு முன்பே அவள் இறந்துவிட்டாள். அதனால் அங்கு வரும் பள்ளி மாணவர்கள் காகிதத் தில் கொக்குகளை செய்து அங்கு கொண்டு வந்து சேர்க்கிறார்கள். அந்த காகித கொக்குககளை அமைதியை வலியுறுத்தும் வார்த்தைகளின் வடிவங் களிலேயே நம் பார்வைக்கு அங்கு வைத் திருக்கிறார்கள். இந்த நகரம் அமைதியை விரும்பும் நகரம். இந்த பூமியில் ஒரே ஒரு முறை வாழ்வதற்காகவே நாம் வந்திருக்கிறோம். நாடு, இனம், மதம், மொழி இவை யனைத்தையும் கடந்து நாம் சேர்ந்து வாழ வேண்டிய தேவையிருக்கிறது. அவ்வாறு நாம் இணைந்து வாழ்வதற்கு அவசியமானவற்றை மட்டுமே நாம் நம்முடன் வைத்திருக்க வேண்டும். மாறாக, நம்மை அழிக்கும் அணு ஆயுதங் களை நாம் வைத்திருக்கக் கூடாது. அணு ஆயுதங்களை நம் உலகிலேயே இல்லாமல் செய்வதற்கு நம்மால் ஆன அனைத்தையும் செய்ய வேண்டும். அது மட்டுமே உலகத்தில் அமைதியை நிரந்தரமாக நிலைபெறச் செய்யும் என்ற செய்தியை ஹிரோஷிமா நகரம் அங்கு வரும் ஒவ்வொருவரிடமும் சொல்லிக் கொண்டே இருக்கிறது. ‘‘அமைதியே எங்கள் கோரிக்கை. அமைதியே எங்கள் பிரார்த்தனை.’’இங்கு வரும் ஒவ்வொருவரும் நீங்கள் வாழும் பகுதிகளுக்குச் சென்று எங்க ளுடைய விருப்பத்தை அனைவரிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள்” என்ற அன்பான கோரிக்கையை ஹிரோஷிமா நகரம் அங்கு வரும் ஒவ்வொருவரிடமும் முன் வைக்கிறது. அழுகை இல்லை; உணர்ச்சிகள் இல்லை; கோபம் இல்லை; கொந்தளிப்பு இல்லை; வெற்று முழக்கங்கள் இல்லை; வேண்டுகோள் இருக்கிறது. அது அன் பாலும் நேசத்தாலும் நிறைந் திருக்கிறது. அந்தப் பாசம் நிறைந்த கோரிக்கை நம் மனதில் தாங்க முடியாத சுமையை ஏற்றுகிறது. டோக்கியோ திரும்புவதற்காக ஹிரோஷிமா விமான நிலையம் வந்தோம். மனம் கனத்துக் கிடந்தது.அந்த நகரத்து மக்களின் கோரிக்கை நிறைவேற நாம் என்ன செய்யப்போகிறோம் என்ற கேள்வி விஸ்வரூபம் எடுத்து நின்றது.

 

விருந்தினர் பக்கம்

ஜென்ராம்

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments