மூணாறு நிலச்சரிவு நமக்குச் சொல்லும் பாடம் என்ன?

 

கடந்த ஆகஸ்ட் 6ம் தேதி கேரளாவின் இடுக்கி மாவட்டம் மூணாறு பஞ்சாயத்துக்கு உட்பட்ட பெட்டிமுடிப் பகுதியில் நடந்த நிலச்சரிவில் சிக்கி இதுவரை 55 பேர் உயிர் இழந்துள்ளனர். இன்னும் பலர் நிலச்சரிவினால் ஏற்பட்ட இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளனர்.

இத்துயர நிகழ்வை இயற்கை பேரிடர் என்று இயற்கையின் மீது மட்டும் பழிபோட்டு நாம் எளிதில் கடந்துவிட முடியாது. காட்டுதீ , பெரும் புயல்கள், அதிதீவிர மழை, அதீத வெப்பம், பனிபாறை உருகுவது, கடல்மட்டம் கூடுவது, கொள்ளை நோய்கள் என இந்நூற்றாண்டில் நாம் எதிர்கொள்ளும் ஒவ்வொரு இயற்கை சீற்றத்திற்கும் மனித செயல்பாடுகளே அடிப்படை காரணமாக அமைகின்றன.
இந்த இடுக்கி நிலச்சரிவும் அப்படியான மனித நடவடிக்கைகளால் உந்தப்பட்ட ஒரு நிகழ்வு தான் என்கின்றனர் நிலச்சரிவு குறித்து ஆராயும் நிபுணர்கள்.

ஒரு நிலச்சரிவு ஏற்படுவதற்கு பல்வேறு புவியியல் காரணங்கள் (Geological Causes), உருவவியல் காரணங்கள் (Morphological Causes), தட்பவெட்பம், நீரியல் மாற்றங்கள், நிலநடுக்கம் போன்ற புறக்காரணங்களும் (Physical Causes) இதை தவிர மனித செயல்பாடுகளும் (Human Activities) காரணிகளாக அமைகின்றன. பொதுவாகப் பனிமலைகள் உருகுவது, அதீத மழைப்பொழிவு, மணல் அரிப்பு, நிலநடுக்கம், எரிமலை வெடிப்பு, நிலத்தடி நீர் மட்டத்தில் ஏற்படும் மாற்றங்கள் மேலும் இவற்றோடு மனித செயல்பாடுகளாலேயே நிலச்சரிவுகள் ஏற்படுகின்றன. பல சமயங்களில் மேற்குறிப்பிட்ட ஒன்றுக்கும் மேற்பட்ட காரணங்களின் கூட்டு விளைவுகளால் கூட நிலச்சரிவுகள் ஏற்படலாம்.

இடுக்கி மாவட்டத்தில் கடந்த 30 ஆண்டுகளாகத் தொடர்ந்து நடைபெற்ற காடழிப்பினாலும், தேயிலைத் தோட்ட உருவாக்கங்களினாலும் அந்த நிலப்பகுதி தனது இயல்பான உறுதி தன்மையை இழந்துவிட்டதாக அப்பகுதியில் நிலச்சரிவை ஆராய்ந்து வரும் நிபுணர்கள் குறிப்பிடுகிறார்கள். பெரும் அளவில் மரங்கள் வெட்டப்பட்டதன் விளைவாக மணலை இறுகப்பிடிக்கும் வேர்கள் இல்லாததன் காரணமாக, ‘நிலச்சசரிவை தாங்கும்’ (Immunity towards landslide) திறனை மண் இழந்திருக்கிறது. இந்த தன்மையை இழந்த நிலப்பரப்பில் அதிதீவிர மழைப்பொழிவு மணல் அரிப்பையும், இவ்வாறான மணல் சரிவையும் அடிக்கடி ஏற்படுத்தும் என்று எச்சரிக்கின்றனர் ஆய்வாளர்கள். நம்முடைய உடம்பைப் போலவே மண்ணும் ‘கூர் உணர்வுடையது’ (sensitive). இயற்கையாக அமைந்த மண்ணின் தன்மையில் ஏதாவது மாற்றம் நிகழுமானால் அதன் விழைவை நாம் சந்தித்தே ஆகவேண்டும்.

காடழிப்பு மட்டுமல்லாமல், ஒற்றைப் பயிர்முறை (monocropping), சுரங்கப் பணிகள், அணைக் கட்டுமானங்கள், நெடுஞ்சாலைகள் என எல்லாமும் சேர்த்து மண்ணின் தன்மையை முழுவதுமாக பலவீனமாக்கிவிட்டன. மரங்கள் வெட்டப்பட்டு, அதன் வேர்கள் அப்படியே அழுகிப் போக எடுத்துக்கொள்ளும் காலகட்டத்தில் அவை குழாய்களை போல் மாறி, அந்த குழாய்களின் வழியாக அடி மண்ணுக்கு நேரடியாக மழை நீர் செல்கிறது. அப்படிச் செல்வதால் அடிமண் கசடாக மாறி கடினப்பாறைகளுக்குள் ஊடுருவி அவற்றின் உறுதித்தன்மையை நீர்த்துப் போகச் செய்துவிடுகின்றது.

இந்த பலவீனமான நிலத்தை இன்னும் அதிக பலவீனமாக்கியது சமீபத்தில் பெய்த பெரும் மழை. அப்பகுதியில் உள்ள அரசு தானியங்கி வானிலை நிலையத்தில் (Automatic Weather Station) பதிவான அளவின் படி ஆகஸ்ட் 1 முதல் 6 வரை 995மிமீ மழை பொழிவு பதிவாகியுள்ளது. நிகழ்வு நடந்த ஆகஸ்ட் 6ம் தேதி மட்டும் 616மிமீ மழை பதிவாகியுள்ளது. சராசரியாக கேரளாவின் மழை அளவு 3,000மி.மீ, இந்த அளவு மழை இரண்டு முதல் இரண்டரை மாதங்களில் பெய்யும், ஆனால் இப்போது அதன் சரிபாதி அளவு ஒன்று அல்லது இரண்டு வாரங்களில் கொட்டி தீர்த்திருக்கிறது. இது பூமியை கோடிக்கணக்கான கற்களை கொண்டு அடிப்பதற்கு சமம், கேரளாவில் பொதுவாக அறியப்படும் ‘சரடு மழை’ (yarn rain) இனிமேல் இருக்காது என்கின்றனர் ஆய்வாளர்கள்.

கடந்த 2018ம் ஆண்டு கேரளத்தில் 300பேரை பலிகொண்டு இயல்பு வாழ்கையை புரட்டிபோட்டது மழை-வெள்ளம். 2019ம் ஆண்டும் கேரளத்திலும் அண்டை மாநிலங்களிலும் 150வீடுகளை சின்னாபின்னமாக்கி ஆயிரக்கணக்கான மக்களை காலநிலை அகதிகளாக மாற்றி முகாம்களில் தள்ளியது பெருமழை.
இதைப்போன்ற அதிதீவிர காலநிலை நிகழ்வுகள் கேரளாவில் மட்டுமல்ல தெற்காசிய பிராந்தியம் முழுவதுமே இப்படியான தொடர் கனமழை, சூறாவளிகள், பெரும் வெள்ளம் போன்ற அதிதீவிர காலநிலை நிகழ்வுகளால் பாதிப்புக்குள்ளாகி வருகிறன.

2020 மே மாதம் முதல் அசாம் போன்ற வட கிழக்கு மாநிலங்களையும் பீகார் மாநிலத்தையும் மூழ்கடித்த வெள்ளம் 24 லட்சம் மக்களின் வாழ்கையை புரட்டிபோட்டது.

தற்போது கேரளாவின் நிலையைப் போலவே சமீப காலமாக பெரும் வெள்ளத்திற்கு ஆளான நேபாள நாட்டிலும் தொடர் மழை காரணமாக கடுமையான நிலசரிவுகள் ஏற்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
பங்களாதேஷ் நாட்டின் மூன்றில் ஒரு பகுதி வெள்ளத்தால் மூழ்கியதுடன் ஐந்தில் ஒரு பங்கு மக்கள் தொகையான 16 கோடியே மக்கள் பாதிக்கப்பட்டனர்.

நிலம் வலுவிழப்பதை காடழிப்புடனும், நிலச்சரிவைப் பெரும் மழையுடனும், பெரும் மழையைக் காலநிலை மாற்றத்துடனும் தொடர்புபடுத்திப் பார்க்க நாம் தவறினால் அடிப்படைப் பிரச்சனையே நாம் புரிந்துகொள்ள முடியாமல் போகிவிடும்.

வரலாற்றுரீதியாகப் பார்த்தால், மேற்குத் தொடர்ச்சி மலை இவ்வுலகில் உயிர்கள் தோன்றுவதற்கு முன்னரே தோன்றியவை. அவைக் கடுனமான அடர்த்திமிக்க சார்னோகைட் வகைப் பாறைகளைக் கொண்டவை. தென்னிந்தியாவில் ஓடக்கூடிய அனைத்து நதிகளின் பிறப்பிடமான இந்தப் பகுதியில் உயிர் தழைத்து வாழ்வதற்கு மேற்கு மலைகளின் பங்களிப்பு பிரதானமானது.

என்ன செய்யவேண்டும்?

தேசியப் பேரிடர் மேலாண்மைச் சட்டம் 2005கீழ், நிலச்சரிவுகளுக்கான வழிகாட்டுதல்கள் 2009ஆம் ஆண்டு வெளியிடப்பட்டன. அதன் படி ஆறு துணைக்குழுக்கள் அமைக்கப்பட்டு பல்வேறு பணிகள் அறிவிக்கப்பட்டன. ஆனால் அந்த முன்னெடுப்புகளில், வழிகாட்டுதல்களை நடைமுறைப்படுத்துவதில் பல போதாமைகள் உள்ளன.

நிலச்சரிவுகளைக் கையாள பேரிடர் ஆணையம் வெளியிட்டுள்ள உத்திகள் (published strategies):

1. நிலச்சரிவு ஏற்படும் இடங்களைக் கண்டறிந்து, அவற்றின் தீவிரத்தன்மையைப் பொறுத்து மண்டலங்களாகப் பிரித்தல்
2. நிலச்சரிவுகளைக் கண்காணித்து, முன்னரே எச்சரிக்கும் கட்டமைப்புகளை உருவாக்குதல்- monitoring and early warning systems
3. நிலச்சரிவுகள் குறித்த விழிப்புணர்வுப் பிரச்சாரங்களை முன்னெடுத்தல்
4. திறன் மேம்பாட்டு பயிற்சிகளை நடத்துதல்
5. மலைகளுக்கு ஏற்ற நிலப் பயன்பாட்டு மண்டலங்களைப் பிரித்து அவற்றிற்கான ஒழுங்குமுறைகளையும், கொள்கைகளையும் வகுத்தல்.
6. நிலச்சரிவுகள் தொடர்பான விஷயங்களை ஒருங்கிணைக்க தனியான சிறப்புக் குழுக்களை அமைத்தல் (special purpose vehicle)
மேல்குறிப்பிட்ட விசயங்கள் எல்லாம் இன்னும் முழுவதுமாக நடைமுறைப்படுத்தப்படாமல் உள்ளன. அவற்றை உடனடியாக நடைமுறைப் படுத்தவேண்டும்.

மேலும் தமிழகம் செய்யவேண்டியவை:-
1. மேற்கு மலைகள் தொடர்பாக மாதவ் காட்கில் குழு கொடுத்த பரிந்துரைகளை உடனடியாக அமுல்படுத்தவேண்டும்.
2. கடந்த வருடங்களில் ஏற்பட்ட நிலநடுக்கங்களில் அதிகமானவை நீலகிரி மாவட்டத்தில் நடைபெற்றுள்ளன; நீலகிரி மாவட்டத்தில் நிலச்சரிவுகள் ஏற்படும் வாய்ப்புள்ளப் பகுதிகள் என ஏற்கனவே கண்டறியப்பட்டுள்ள 250க்கும் மேற்பட்ட பகுதிகளில் உள்ள கேளிக்கை விடுதிகள், வணிக வளாகங்கள் காலிசெய்யப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்படவேண்டும். மேலும் குறிப்பிட்ட அந்த இடங்களில் புதிதாக எந்தவிதமான கட்டுமானங்களையும் அனுமதிக்கக்கூடாது.
3. அயல் தாவரங்களை கட்டுப்படுத்தி, அந்த மலைகளுக்கு உரிய இயல் தாவரங்களை மீட்ருவாக்கம் செய்ய நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்.
4. வருடாவருடம் உதகையில் நடைபெறும் மலர் கண்காட்சியை மேட்டுப்பாளையம் அல்லது பொள்ளாச்சிக்கு மாற்றவேண்டும். சுமார் 25-30 வருடங்களுக்கு முன்னர், உதகையை சுற்றுலா தலமாக பிரபலப்படுத்த இத்தகைய விழாக்கள் தேவைப்பட்டன. ஆனால் இப்போது குறிப்பிட்ட அந்த ஒரு வார காலத்திற்கு மட்டும் பல லட்சக்கணக்கான மக்கள் உதகையில் கூடுகிறார்கள், அம்மலைகளுக்கு அது மிகப்பெரிய அழுத்தமாக அமைகிறது.
5. தமிழகப் பகுதியில், மேற்கு மலைகளில் உத்தேசிக்கப்பட்ட நியூட்ரினோ ஆய்வகம் உள்ளீட்ட அனைத்து திட்டங்களையும் கைவிடவேண்டும். மற்ற பல திட்டங்களை மறு ஆய்வுக்கு உட்படுத்தவேண்டும். செயல்பட்டு கொண்டிருக்கும் நீர்மின் திட்டங்களை மேலும் விரிவாக்கம் செய்யும் திட்டங்களையும் கைவிடவேண்டும்.
6. நீலகிரியில் நிலச்சசரிவு குறித்த ஆய்வுகளை மேற்கொள்ளவும், அவற்றை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், திறன் மேம்பாட்டு பயிற்சிகளை அளிக்கக்கூடிய வகையிலும் ‘மாநில நிலச்சரிவு மேலாண்மை மையம்’ மேட்டுப்பாளையத்தில் அமைக்கப்படவேண்டும். (Landslide Management Centre), அதன் மற்றொரு மையம் வத்தலகுண்டுவில் அமைக்கப்படவேண்டும். இந்த மையத்தில் விஞ்ஞானிகள் மட்டுமில்லாமல் அந்த மலையின் ‘பூர்வகுடிகளை’ உள்ளடக்கிய நிபுணர்கள் குழு அமைக்கப்படவேண்டும்.
7. காலநிலை மாற்றத்தால் தமிழகம் சந்திக்கும் பிரச்சனைகளைக் கையாள மாநில அளவிலான “தமிழகக் காலநிலை மையம்” அமைக்கப்படவேண்டும்.
8. மேற்கு மலைகள் முழுவதும் இயற்கை வழியிலான விவசாய முறைகளைக் கட்டாயமாக்க வேண்டும்.

நமக்கு எல்லா வளங்களையும் அளித்து நம்மைப் பாதுகாத்த மண் இப்போது நம்மை காவுவாங்க ஆரம்பித்திருக்கிறது. இதற்கு இயற்கை காரணமல்ல, நாம் மட்டுமே காரணம். இம்மண்ணின் மீது நாம் நிகழ்த்திய வன்முறைக்கான எதிர்வினையை இப்போது நாம் அனுபவிக்கிறோம். இதன் தாக்கத்தை மட்டுப்படுத்தி, நாம் செய்த தவறுகளை சரிசெய்வதே இப்போது நம்முன் உள்ள முக்கியமான பணி.
– பூவுலகின் நண்பர்கள்

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments