காந்தியிடம் கற்க என்ன இருக்கிறது?

அப்போது ஏழாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். பக்கத்து வீட்டுக்கு டியூஷன் சென்ற  காலம் அது. அந்த வீட்டில் அண்ணனொருவர் எப்போதும் எதையாவது வாசித்துக்கொண்டே இருப்பார். அத்தனை அதிகம் வாசிப்பவரை நான் அதுவரையிலும் பார்த்ததில்லை. எப்போதும் அவர் எங்களிடம் பேசுவதுமில்லை. திடீரென்று ஒரு நாள் எங்கள் அருகில் வந்தமர்ந்து என்னிடமும் என்னோடு படித்த சக மாணவர்களிடம் “நம் நாட்டுக்கு யார் சுதந்திரம் வாங்கித் தந்தார்?” என்று கேட்டார். சற்றும் தாமதிக்காமல் அவர் எதிர்பார்த்தபடியே “காந்தியடிகள்” என்று நாங்கள் கூட்டாகப் பதிலளித்தோம். சிறியதொரு ஏளனப் புன்னகையோடு அக்காலத்தில் நிகழ்ந்த சுதந்திரப் போராட்டத்தில் பல்வேறு தியாகிகளின் பங்கு, நேத்தாஜி, பகத்சிங் தூக்கு, பூனா ஒப்பந்தம், அம்பேத்கர், பெரியார் குறித்தும் இந்த நிகழ்வுகள் அல்லது ஆளுமைகளோடு காந்தியின் முரண்பாடுகளையும் பொருத்திப் பல்வேறு விஷயங்களை அவர் எங்களுக்கு விவரித்தார்.

என்னுடைய கண்களும் காதுகளும் அத்தனை அகலமாய் விரிந்ததை உணர்ந்தேன் அப்போது. எப்போதுமே நம்முடைய பொதுப்புத்தி ஒன்று உடைபடும்போது நமக்குள் புத்தொளி பாய்ச்சப்படுவதுபோலவும் நம்மைக் கவிழ்ந்திருந்த இருள் அகல்வதுபோலவும் ஒரு அற்புத உணர்வு ஏற்படுவதுண்டு. அந்த அண்ணன் அன்று காந்தியின்மீதாக வைத்த விமர்சனமே எனது வாழ்வில் எனக்குள் நான் பெற்றுக்கொண்ட முதல் அரசியல் செய்தி என்று நினைக்கிறேன். சிறுவயதில் ஏற்பட்ட இந்த சிந்தனை உடைப்பை நான் நண்பர்கள் பலரோடும் அதே ஆச்சரியமிக்க உணர்வோடு அந்நாட்களில் பகிர்ந்துகொண்டிருக்கிறேன். நன்றாக வாசிப்புப் பழக்கம் உள்ள ஒருவர்  ஆணித்தரமாக ஒரு விஷயத்தைச் சொல்லும்போது அதில் எனக்கு எந்த கேள்விகளும் இல்லை.

பின்னாளில் அம்பேத்கர், பெரியார் போன்றோரைப்பற்றி அதிகம் வாசிக்க வாய்ப்புகள் கிடைத்தபோதும், அம்பேத்கரிய பெரியாரிய சிந்தனையாளர்களின் கருத்துகளைக் கேட்கும்போதும் எனக்கு காந்திமீது ஏற்கனவே ஏற்பட்டிருந்த முன்முடிவு இன்னும் இறுக்கமடைந்தது. ஒரு கட்டத்தில் காந்தியைப் பற்றி யார் பேசினாலும்கூட, குறிப்பாக நாம் வெறுக்கும் வலதுசாரி அறிவுஜீவுகள் அவரைக் கொண்டாடும்போது மனதுக்குள் இருக்கும் ஒவ்வாமை ஒரு கட்டத்தில் வெறுப்பாகவே பரிணமித்துவிட்டிருந்தது. நான் காந்தி குறித்து குறைந்தபட்சம் அவருடைய சுயசரிதையைக்கூட வாசித்துவிடவில்லையென்றாலும் அவர் குறித்த எதிர்மறை பிம்பம் அப்படியே நிலைத்திருந்தது. பலநேரங்களில் இந்திய சமூகத்தில் காந்தியை விமர்சிப்பது முற்போக்கின் அடையாளமாகக்கூட பார்க்கப்படுகிறது.

இது காந்திக்கு மட்டுமல்ல. வாழ்பவர், மறைந்தவர் ஒவ்வொருவருக்கும் நம் மனதுக்குள் இப்படியான ஒரு பிம்பத்தை உருவாக்கி வைத்திருக்கிறோம். புதிதாய் ஒரு நபரை அணுகும்போதோ அல்லது வாசிப்பின்மூலமோ / அவதானிப்பின்மூலமோ புரிந்துகொள்ள முயலும்போதோ நம் மனதுக்குள் திறந்துகிடக்கும் “நல்லவர் – கெட்டவர்” (கருப்பு – வெள்ளை) என்ற இரு அறைகளுள் ஒன்றில் எவரையும் விரைவாய் அடைத்துவிட முயல்கிறோம். நூறு பக்க புத்தகமொன்று ஒரு ஆளுமையைக் குறித்து விவரிக்க முயல்கிறது என்றால் அதன் ஒன்றிரெண்டு பத்திகளை வாசிக்கும்போதே நம் கருப்பு வெள்ளைச் சட்டகமானது ஏதேனும் ஒன்றுக்குள் அவரை அடைத்துவிட முன்முடிவுகளை உருவாக்கத் தொடங்கிவிடுகிறது.

இயல்பிலேயே நல்லதும் கெட்டதும், குறைகளும் நிறைகளும் கலந்திருக்கும் நாம், நமக்கு புறத்தே இருக்கும் மனிதர்களையும் கருத்துகளையும் மட்டும் ஒற்றைப் பரிணாமத்தில் புரிந்துகொள்ள முயல்கிறோம். நாம் விரைவாய் ஏற்படுத்திக்கொள்ளும் அவசரப்பட்ட இந்த முன்முடிவுகள், பிறகு அதற்கு முரணான தகவல்கள் நமக்குக் கிடைக்கப்பெறும்போது குழப்பத்தை விளைவிக்கின்றன. அல்லது, நான் பிடித்த முயலுக்கு மூன்றுகால் என்றபடி அவற்றை ஒட்டுமொத்தமாய் நிராகரிக்க நம்மைத் தூண்டுகின்றன.

உதாரணமாக, இயற்கை விவசாயப் பிதாமகனான ‘நம்மாழ்வாரை’ எடுத்துக்கொள்வோம். அடிப்படையில் நவீன விவசாயப் பட்டதாரியான அவருடைய நுண்ணறிவு, மீத்தேன் திட்டத்துக்கு எதிரான அவரது முன்னெடுப்புகள், இயற்கை விவசாயம் குறித்து அவர் ஏற்படுத்திய விழிப்புணர்வு, களப்பணி போன்றவை அளப்பரியது. இயற்கை விவசாயம், சூழல் குறித்த அவருடைய பரந்துபட்டப் பார்வை வியப்பூட்டுவது. ஆனால், ஒருபுறம் அவருடைய செயல்பாடுகளாலும் எழுத்துக்களாலும் வசீகரிக்கப்பட்டவர்கள் அவரை ‘சாமியாக’ தூக்கிவைத்து பரவசப்படுகின்றனர்; இன்னொருபுறமோ முன்முடிவோடு அவரை முழுமையாக நிராகரிக்க காத்துக்கொண்டிருப்போருக்கு அறிவியலுக்குப் புறம்பான அவருடைய ஒரு சில பேச்சுக்களே போதுமானவையாய் இருக்கின்றன.

நாம் நம்முடைய சார்புகளுக்கும் முன்முடிவுகளுக்கும் ஏற்றபடி ஒரு துரும்பு கிடைத்துவிடும்போது அதை இறுக்கமாய் பற்றிக்கொண்டு ஒருவரின் மொத்த வாழ்வையும் எளிதாய் நிராகரித்துவிடுகிறோம். ஒருவர் வடக்கில் இல்லையென்றால் அவர் தெற்கேதான் இருக்கவேண்டும் என்று முடிவு செய்துகொள்கிறோம். எவையெல்லாம் கறுப்பாக இல்லையோ அவையெல்லாம் வெள்ளையாக இருக்கிறது என்றும் ஆகவே, அது நமக்கு எதிரானது என்றும் தவறான முடிவுகளுக்கு விரைவாய் வந்துவிடுகிறோம். உண்மையில், தூய்மையான கறுப்போ அல்லது அப்பழுக்கற்ற வெண்மையோ இங்கு எதுவும் இல்லை. இருப்பவையெல்லாம் கறுப்பு வெள்ளை கலந்த அடர் அல்லது வெளிர் சாம்பல் நிறங்களே (Shades of Grey). எதையும் கறுப்பு வெள்ளைக்குள் அடைக்க முயற்சிக்கும் நம்முடைய ‘தூய்மை’ நோக்கே நட்பு சக்திகளைக்கூட பகைவர்களாக சித்தரிக்கச் செய்கிறது.

மனிதரைப் பிளவுபடுத்தும் – கலகம் விளைவிக்கும் – சக மனிதருக்கு தீங்கு விளைவிக்கும் – இழிவுபடுத்தும் – சுயநலனுக்காய் எதையும் செய்யும் மனிதரைத்தவிர அனைவரையும் இந்த சாம்பல் பெருவெளியில் வைத்து நெருங்க முடியுமென்று நான் நம்புகிறேன். இந்த நம்பிக்கையிலேயே, சனாதான இந்துவாய், பிற்போக்குவாதியாய், அறிவியலுக்கு எதிரானவராய் பெரும்பாலான முற்போக்காளர்களால் பார்க்கப்படும் காந்தியை – இந்த காரணங்களுக்காகவே முழுமையாய் நிராகரிக்கப்படும் காந்தியை அவருடைய ஒட்டுமொத்த மானிடர்மீதான அன்பைக் கருத்தில்கொண்டு நான் அணைத்துக்கொள்ள முயல்கிறேன். மேலே சொல்லப்பட்டிருக்கும் காந்திக்கு எதிரான விமர்சனங்களை நியாயப்படுத்த மட்டுமின்றி கடுமையாக மறுக்கவும்கூட அவருடைய வார்த்தைகளிலும் செயல்பாடுகளிலுமிருதே ஏராளமான ஆதாரங்களைப் பெறமுடியுமென்றாலும் அவற்றை எடைபோட்டு மீண்டும் அவரை எளிதான ஒரு கறுப்பு – வெள்ளைச் சட்டகத்துக்குள் அடைப்பது இந்த கட்டுரையின் நோக்கம் அல்ல.

சந்தைப் பொருளாதாரத்தால் நம்முடைய வாழ்வும் சூழலும் இன்று சிதைக்கப்பட்டுக்கொண்டிருக்கும் நிலையில், நம் நகரங்கள் வாழத்தகுதியற்றதாய் மாறிக்கொண்டிருக்கும் நிலையில், நம்முடைய தொழிற்சாலைகளின் உற்பத்தி முறையானது புவியைச் சூறையாடிக்கொண்டிருக்கும் நிலையில், ஏழை எளிய மக்களுக்காய், அவர்களின் பொருளாதார ஏற்றத்துக்காய் சிந்தித்த, பெருவாரியான கிராமத்தவர்களோடு தன் வாழ்நாளெல்லாம் புழங்கிய காந்தியிடம், நமக்கான தீர்வுகள் இருக்கின்றன என்ற நம்பிக்கையில் நான் அவரை நெருங்கிச் செல்கிறேன். குறிப்பாக, காந்தியப் பொருளாதாரத்தின் இன்றைய பொருத்தப்பாடுகள் குறித்து பரிசீலிக்க வேண்டியது அவசியமானது என்று எண்ணுகிறேன். இது காந்தியப் பொருளாதாரம் பற்றிய ஆய்வுக் கட்டுரை அல்ல; மாறாக, காந்தியப் பொருளாதாரத்தைப்பற்றி அறியும் எனது வாசிப்பு முயற்சியில் அதற்கு சார்பாகவும் முரணாகவும் கண்டவற்றைக் குறித்த என்னுடைய தனிப்பட்டப் பார்வையே!

முதலாவதாக, எனது தேடலில் காந்தியையும் அவரது பொருளாதாரத்தையும் கடுமையாக விமர்சித்திருக்கும் அம்பேத்கரின் கருத்துகளை “மார்க்சிய அம்பேத்கரிய பெரியாரிய சூழலியல்” என்ற பூவுலகின் நண்பர்கள் வெளியீடாக வந்திருக்கும் தோழர். மு. வெற்றிச் செல்வன் எழுதிய புத்தகத்தில் வாசித்தேன். அம்பேத்கர் எத்தகைய சூழலில் அந்த விமர்சனத்தை முன்வைத்திருப்பார் என்று புரிந்துகொள்ள முடிந்தாலும் காலஓட்டத்தில் அவரது விமர்சனம் வலுவற்றதாய் மாறியிருப்பதாய் நான் உணர்கிறேன். “தீண்டப்படாதவர்களுக்கு காங்கிரசும் காந்தியும் சாதித்தது என்ன?” எனும் புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்ட அந்த விமர்சனத்தின் சுருங்கிய சாரத்தை இங்கு தருகிறேன்.

“பொருளாதாரக் கேடுகள் பற்றிய காந்தியின் ஆய்வில் புதுமையானது ஏதேனும் உண்டா? வாழ்வில் வளமிளந்த ஒரு சாமானியனுக்கு காந்தியப் பொருளாதாரம் சுதந்திர வாழ்வை, முன்னேற்றத்தை உத்தரவாதம் செய்கிறதா? பொருளாதார சீர்கேடுகளுக்கெல்லாம் எந்திரங்களும் நவீன நாகரீகமும்தான் காரணமென்று காந்திய ஆய்வு கூறுகின்றது. மேலும், எந்திரங்களும் நவீன நாகரீகமும் செல்வம் ஓரிடத்தில் குவிய வழிவகுக்கின்றன; வங்கிகளும் அவற்றுக்குத் துணைபோகின்றன; தொழிற்சாலைகள், ஏராளமான விளிம்புநிலை மக்களை நசுக்கிப் பிழிந்து சாவுக்குக் கையளிக்கின்றன; ஏராளமானோரை முடமாக்குகின்றன; மிகமோசமான காற்றுமாசுபாடு, சூழல் மாசுபாட்டையும், ஏராளமான குப்பைகளையும் உருவாக்கி மனிதர்களின் உடல் நலத்தை சீரழிக்கின்றன; இப்படியெல்லாம் மீண்டும் மீண்டும் கேட்டுக்கேட்டு புளித்துப்போன வாதங்களைத்தான் காந்தியம் சொல்கிறது. இவற்றில் புதிதாய் எதுவுமில்லை.

காந்தியக் கருத்துகள் நம்மைப் பின்னோக்கி இழுத்துச் செல்லக்கூடியவை; அவை எளிமையாக இருப்பதால் பலராலும் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன – பிரச்சாரம் செய்யப்படுகின்றன. முன்னேற்றத்தை விரும்பும் சமூகம் இவற்றைப் புறக்கணிப்பதே சிறந்தது.

எந்திரங்களும் தொழில்நுட்பங்களும் பல தீமைகளைத் தோற்றுவித்துள்ளன என்பதை ஒத்துக்கொள்ளலாம்; ஆனால், இந்தத் தீமைகளுக்குக் காரணமாக இருந்தவை தனிச்சொத்துரிமையும் சொந்த சுயநல ஆதாயங்களில் நாட்டம் கொள்வதையும் புனிதமானவையாகவும் மீறமுடியாதவையாகவும் மாற்றியுள்ள சமூக அமைப்பே காரணமாகும்.  எந்திரங்களின் பலன் எல்லா தரப்பு மக்களையும் அடையவில்லையென்றால் அதற்கான பரிகாரம் இயந்திரங்களையும் நவீன நாகரீகத்தையும் கண்டிப்பதிலன்றி அவற்றின் பலன்களை எல்லாருக்கும் கிடைக்காததாக ஆக்கியிருக்கிற சமுதாயத்தை மாற்றியமைப்பதில்தான் அடங்கியிருக்கிறது.

காந்தியம் மனிதனை ஒரு விலங்காக பாவிக்கிறது. விலங்குகளுக்கு வாழ்வில் எந்த குறிக்கோளும் நோக்கமும் இல்லை. மனிதனின் பகுத்தறிவானது தன்னைச் சுற்றியிருக்கும் புறச்சூழலை ஆழ்ந்து உணரவும், சிந்திக்கவும், ஆராய்ச்சி செய்யவும் அனுபவங்கொள்ளவும் உதவுகிறது. அதுவே மனித வாழ்வை விலங்கு வாழ்வைவிட மேம்பட்டதாக்குகிறது. விலங்கைப்போல அன்றி மனித வாழ்வானது பசிக்கும்போது உண்பதையும் பிழைத்திருப்பதையும் தாண்டியும் அர்த்தமிக்கதாய் கலாச்சாரம் கொண்டதாய் இருக்கிறது. ஆனால், இத்தகைய சிறப்பான மேம்பட்ட வாழ்வை வாழ மனிதனுக்கு ஓய்வு தேவைப்படுகிறது. எந்திரங்களை பயன்படுத்தினாலொழிய சிறப்பான வாழ்வை வாழத் தேவையான ஓய்வைப் பெறுவது சாத்தியமில்லை. எந்திரங்களை ஒருவர் கண்டிக்கிறார் என்றால் மனிதனின் மேம்பட்ட வாழ்வையும் வாழ்வின் குறிக்கோளையும் அவர் புரிந்துகொள்ளவில்லை என்பதுதான் பொருள்.

ஜனநாயகத்தை ஏற்றுக்கொள்ளாத ஒரு சமூகத்துக்கு வேண்டுமானால் காந்தியம் உவப்பானதாக இருக்க முடியும். எந்திரங்களுக்கு முற்பட்ட காலத்தில் ஒருசாரார் ஏராளமான ஓய்வையும் பெருவாரியான மக்கள் கடினமான உடலுழைப்பு வேலைகளையும் செய்ய பணிக்கப்பட்டிருந்தனர். ஒரு ஜனநாயக சமூகத்தில் இத்தகைய ஒழுங்கின்மையை அனுமதிக்க முடியாது. ஜனநாயக சமூகத்தில் ஒவ்வொரு குடிமகனுக்கும் அதிக ஓய்வுடன்கூடிய கலாச்சாரமிக்க (உயர்ந்த நோக்கங்கள்கொண்ட மேம்பட்ட) வாழ்வு உறுதி செய்யப்பட வேண்டும். இதற்கு ஏராளாமான எந்திரங்களும் மேலுமதிக நவீன நாகரீகமும் தேவை.

ஆனால், காந்தியத்தின்கீழோ மனிதன் ஓடாகத் தேய்ந்து நாள் முழுதும் உழைக்ககூடியவனாய் இருக்கிறான். அவருடைய இயற்கைக்கு செல்லுவோம் என்ற கோஷம் பெரும்பாலான மக்களுக்கு ஆடைகள் இல்லாத பழைய நிலைக்குத் திரும்புவோம்; அழுக்கடைந்த, இல்லாமைக்கும் கல்லாமைக்கும் திரும்புவோம் என்பதையே குறிக்கும்.”

சாதீய கிராமிய அமைப்புக்குள் குடிசைத் (குலத்) தொழில்களும், விவசாயமுமே முதன்மைத் தொழில்களாக இருந்த ஒரு நாட்டில் எந்திரமயமான தொழில்மயமாக்கலானது மனிதர்களுக்கு விடுதலையையும் மாண்புமிக்க மனித வாழ்வையும் பெற்றுத்தருமென்ற அம்பேத்கரின் கனவு புரிந்துகொள்ளக்கூடியதே. அம்பேத்கரின் இந்த கடுமையான விமர்சனங்களை வாசிக்கும்போதே காந்தியப் பொருளாதாரம் குறித்த சித்திரமும் அம்பேத்கரின் மனதிலிருந்த எந்திரமயமான எதிர்காலம்மீதான நம்பிக்கையையும் நாம் புரிந்துகொள்ள முடியும். ஆனால், ஏறத்தாழ 75 ஆண்டுகளுக்குப் பின்பு, இன்று இவையெல்லாம் குறித்து நமக்கு வேறொரு சித்திரமும் இருக்கிறது. நல்வாய்ப்பாக, அம்பேத்கரின் கனவிலிருந்த எதிகாலத்தின்மீது நின்றுகொண்டு அவருடைய விமர்சனங்களை உற்றுப்பார்க்கும் வாய்ப்பு நமக்குக் கிடைத்திருக்கிறது.

இது அம்பேத்கரின் விமர்சனம்மீதான விசாரணையும் அல்ல; ஒட்டுமொத்த மானுட நலனை விரும்பிய இவ்விரு பெரும் மக்கட்தலைவர்களையும் இருதுருவங்களாக நிறுத்தி, மீண்டும் நமது கருப்பு வெள்ளை கண்ணாடியை அணிந்துகொண்டு அவர்களுக்குத் தீர்ப்பு வழங்க முயல்வது இங்கு அபத்தமானது. காந்தியப் பொருளாதாரத்தின்மீது வைக்கப்பட்ட கடுமையான விமர்சனமொன்று, இங்கு காலப்போக்கில் எப்படி தன்னளவில் வலுவிழந்துபோயிருக்கிறது என்பதைச் சுட்டவே இதை இங்கு குறிப்பிட்டிருக்கிறேன். இவ்விடத்தில் அம்பேத்கரின் விமர்சனங்களைத் தாண்டியும் காந்தியப் பொருளாதாரத்தின்மீது நாம் முரண்படும் இடங்கள் உண்டு. அதை பின்னர் பார்க்கலாம்.

பெரிய தொழிற்சாலைகளுக்கும் நவீன தொழில்நுட்பங்களுக்கும் பெருமளவிலான முதலீடு தேவைப்படுகிறது. இந்த முதலீடுக்கான சாத்தியம் எல்லோருக்குமானதாக இல்லை. இங்கு நடைமுறையில் தொழில்மயமாதலும் எந்திரமயமாதலும் சந்தைப் பொருளாதாரத்தோடு பின்னிப் பிணைந்திருப்பதை நாம் உணர்ந்திருக்கிறோம். தொழில்நுட்பங்கள் அடிப்படையில் கத்தி போன்றவை. அவை ஆக்க சக்தியாகவோ அல்லது அழிவு சக்தியாகவோ இருப்பது அந்த கத்தியானது யாரிடம் இருக்கிறதோ அவர்கள் கையிலேயே இருக்கிறது.

இந்த உற்பத்தியால் நாம் என்னென்ன அவலங்களையும் சீர்கேடுகளையும் இன்று அனுபவிக்கிறோமோ அதையெல்லாம் காந்தி அன்று கேட்டுக்கேட்டுப் புளித்துப் போகுமளவுக்கு பேசியிருக்கிறார் என்பதை அம்பேத்கரின் விமர்சனம்மூலம் நாம் புரிந்துகொள்ள முடிகிறது. இந்த நவீன தொழில்மயமான உற்பத்திமுறை உருவாக்கிய தீமைகளுக்குக் காரணம் தனிச்சொத்துரிமையும் சுயநல சக்திகள் கையில் இத்தொழில்நுட்பங்கள் இருப்பதுமே என்று அம்பேத்கர் சரியாகவே புரிந்துகொண்டிருக்கிறார்.

நடைமுறையில் நாம் இங்கு எதைப் பெற்றிருக்கிறோம்?

ஒருபுறம் வறுமையும் இன்னொருபுறம் செல்வமும் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே செல்கின்றன. என்னதான் நாம் மருத்துவத் தொழில்நுட்பத்தில் உச்சம் தொட்டாலும் எப்போதுமில்லாத அளவுக்கு நீரிழிவு, உடல் பருமன், இதயநோய்கள்போன்ற வாழ்வியல் நோய்களுக்கு ஆளாகியிருக்கிறோம். இன்னொருவிதமாய் சொல்வதானால் நன்மை செய்ய சாத்தியமுள்ள தொழில்நுட்பங்கள் இருந்தாலும்கூட இங்கு இலாபம் கொடுக்கும் தொழில்நுட்பங்களுக்கே முன்னுரிமை கொடுக்கப்படுகின்றன. உடல் உழைப்பைக் கொடுக்கும் தொழிலாளர்கள் முதலாய் தகவல்தொழில்நுட்பப் பணியாளர் வரையில் ஒவ்வொருவரும் மனிதத்தன்மையற்ற விதத்தில் எந்திரங்களோடு எந்திரங்களாய் கசக்கிப்பிழிந்து மனிதத்தன்மையற்ற வேலைவாங்கப்படுகின்றனர். இந்த எந்திரமயமான உற்பத்தியால் நாம் வாழும் சூழல் நரகமாய் மாறியிருப்பதோடு காலநிலை மாற்றத்தால் நம் எதிர்காலமுமே கேள்விக்குறியாகியிருக்கிறது.

அன்றைய பெரும்பாலான தலைவர்களைப்போலவே பொருளாதார வளர்ச்சி ஏழைகளை உய்விக்குமென்றும்; நகரமயமாக்கம் அவர்களுக்கு மாண்புமிக்க வாழ்வைப் பெற்றுத்தருமென்றும்; எந்திரங்கள் மனிதர்களுக்கு ஓய்வைக்கொடுக்குமென்றும்; அந்த ஓய்வு அவர்கள் வாழ்வை இனிமையானதாக்குமென்றும் அம்பேத்கரும் கருதியிருக்கிறார். அன்றைய சூழலிலிருந்து அவரது இந்த நம்பிக்கையை நாம் குறைத்துமதிப்பிட முடியாது. உண்மையில் எந்திரமயமாக்கலும், நாகரீக நகரமயமாக்கலும் இந்திய சாதீய சமூகத்தில் ஒரு தணிப்பை ஏற்படுத்தியிருக்கின்றன என்பதை மறுப்பதற்கில்லை. இவை நிலமற்ற பெருவாரியான ஒடுக்கப்பட்ட மக்களை சாதீயக் கோரமிக்க கிராமங்களிலிருந்து வெளியேற்றி தம்மோடு அணைத்துக்கொண்டிருக்கின்றன. எனினும், எல்லோருக்குமான மாண்புமிக்க வாழ்வை அவை உறுதிசெய்துவிடவில்லை என்பதும் – சாதிக்கு ஒதுக்கப்பட்ட வேலைகள் இன்னும் நகரங்களில் நீடித்திருப்பதும் – அவை ஒழியும் வாய்ப்புகள் எதுவும் நம் கண்முன்னே தெரியாதிருப்பதும் மீண்டும் காந்தியைத் திரும்பிப் பார்ப்பதற்கான உந்துதலைத் தருகின்றன.

தனது அந்த புளித்துப்போன குற்றச்சாட்டுகளுக்கு மாற்றாக காந்தி என்னதான் முன்வைத்தார்?

அவரிடம் நமது இன்றைய நெருக்கடிகளுக்கு ஏதேனும் தீர்வு இருக்கிறதா?

(தொடரும்)

  • ஜீயோ டாமின்
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments