ஆவ்னியைக் கொன்றது யார்?

பிறந்து 10 மாதங்களேயான இரண்டு புலிக்குட்டிகளின் தாயான 6 வயது புலியை அஸ்கர் அலி கான் தான் சுட்டுக் கொன்றார். அஸ்கர் அலி கான் யாரென நீங்கள் கேட்கலாம். எந்தவொரு அனுமதியும், உரிமையும் இன்றி வனத்திற்குள் நுழைந்து, நம் ரத்தம் மொத்தமும் உறைவது போன்று அந்த புலியை வேட்டையாடியவர்.

டி1 என்ற இயற்பெயரைக் கொண்ட அந்த புலி, ஆவ்னி என பரவலாக அழைக்கப்பட்டது. மஹாராஷ்டிரா மாநிலத்தின் யாவாடாமல் மாவட்டத்திலுள்ள பந்தர்காவாடா காடுதான் ஆவ்னியின் வாழ்விடம். உள்ளூர் மக்களும் முதலாளிகளும் ஆக்கிரமித்துள்ள சிறிய காடு அது. சுண்ணாம்பு, நிலக்கரி, டாலமைட் உள்ளிட்ட வளங்களையுடைய அந்த வனத்தை சுற்றியுள்ள பகுதியில் அனில் அம்பானி சிமெண்ட் ஆலை அமைக்க எண்ணினார். அதற்காக அங்கு சிறிய தனியார் நிலத்தை வாங்கிவிட்டு, அப்போதைய காங்கிரஸ் அரசாங்கத்திடம் வனப்பகுதியின் நிலத்தையும் கோரினார். காங்கிரஸ் அரசாங்கமும் வனப்பகுதியை அம்பானிக்கு தருவதற்காக உற்சாகத்துடன் ஒத்துக்கொண்டது. ஆனால், அதற்குள் காங்கிரஸ் அரசாங்கம் முடிவுக்கு வரவே, பாஜக அந்த வேலையை செய்தது. அனில் அம்பானியின் ரிலையன்ஸ் சிமென்ட்ரேஷன் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு 467.5 ஹெக்டேர் வன நிலத்தை சொற்ப 40 கோடிக்கு பாஜக அரசு வழங்கியது. இதன்பின், அனில் அம்பானி தனது சிமெண்ட் சார்ந்த தொழில்கள் அனைத்தையும் ஹர்ஷ் வர்தன் லோதாவின் பிர்லா குழுமத்திற்கு 4,800 கோடிக்கு விற்றுவிட்டார்.

ஆனால், இவற்றுக்கும் ஆவ்னியின் படுகொலைக்கும் என்ன தொடர்பு இருக்கிறது? எல்லா தொடர்பும் இருக்கிறது. ஆவ்னி தனித்த ஒற்றை புலி அல்ல, அது தன்னுடைய இணையுடன் அந்த வனத்திற்கு இடம்பெயர்ந்து இனப்பெருக்கம் செய்தது. அப்படியென்றால், அடுத்து வரும் பத்தாண்டுகளில் அந்த வனத்தில் புலிகளின் எண்ணிக்கையை ஆவ்னி பெருக்கியிருக்கும். ஆனால், அது சிமெண்ட் ஆலை நிறுவனத்திற்கோ அல்லது 4,000 கோடி மதிப்பிலான ஜின்புவிஷ் அனல் மின் நிலையம், அல்லது வரவிருக்கும் ஏசிசி சிமெண்ட் ஆலை நிறுவனத்திற்கோ பலனளிப்பதாக இல்லை. இந்த தொழில் நிறுவனங்கள் அனைத்தும் அந்த வனத்தின் வளங்களை பெருமளவு சுரண்டுவதிலேயே தங்கள் எண்ணத்தைக் கொண்டிருந்தன. அரசாங்கமும் வனப்பகுதியை பெருமுதலாளிகளுக்கு கேக் துண்டுகளை போன்று வெட்டிக் கொடுத்துக் கொண்டிருக்கையில், ஆவ்னியின் இருப்பிடம் அரசுக்கு பெருத்த தொந்தரவை ஏற்படுத்தியது. அதனால் ‘பெருமுதலாளிகளின் தோழனான அமைச்சர்’, அதாவது மஹாராஷ்டிரா மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சர் திரு.சுதிர் முகந்திவார், ஆவ்னி புலியின் பெயரில் பொதுமக்களிடையே அச்சத்தை அரும்பவிட்டார். அந்த பகுதியில் நிகழும் இயற்கைக்கு மாறான அல்லது இயற்கையான மரணங்களுக்குக்கூட ஆவ்னி மீது பழிசுமத்தப்பட்டது. ஆவ்னியால் நிகழ்ந்ததாக குற்றம்சாட்டப்படும் 13 பேரின் மரணத்தில், 3 மனித உடல்கள் மீது மட்டுமே டிஎன்ஏ பரிசோதனை செய்யப்பட்டது, அதில் இரண்டு பேரிடத்தில் மட்டுமே புலியின் டிஎன்ஏ கண்டறியப்பட்டது. புலிகளின் உணவு பழக்கத்தை கண்டறிய மேற்கொள்ளப்படும் ஸ்காட் (SCAT) பரிசோதனையும் ஆவ்னி மீது நிகழ்த்தப்படவில்லை. அதனால், ஆவ்னி உணவுக்காக மனிதர்களை கொன்றதா அல்லது தன் குடும்பத்தை காப்பதற்காக கொன்றதா அல்லது உண்மையிலேயே ஆவ்னிதான் அவர்களை கொன்றதா என்பதை அறிய எந்த வழிகளும் இல்லை.

அந்த பகுதியிலுள்ள கிராம மக்கள் மற்றும் பழங்குடிகள் விவசாயிகளுக்கு எதிரான அரசின் கொள்கைகளால் பாதிக்கப்பட்டவர்கள், அரசின் நடைமுறைகளால் பாதிப்புக்கு உள்ளானவர்கள். மஹாராஷ்டிராவின் யாவடாமால் மாவட்டம் இந்தியாவில் நிகழும் விவசாயிகள் தற்கொலைகளுக்கு தலைநகர். வறட்சி, நீர்ப்பாசன குறைபாடு, லாபம் கொடுக்காத பயிர், வளர்ந்துகொண்டே செல்லும் விவசாய கடன் இவையெல்லாம் சேர்ந்து அம்மக்களை வறுமையிலும் இழப்பிலுமே ஆழ்த்தியுள்ளது. அதனால், அம்மக்கள் வாழ்வாதாரத்திற்கு வேறு வழியின்றி அடர் வனத்திற்குள் உணவுக்காகவும், மேய்ச்சலுக்காகவும் செல்வர். வனத்தில் நிகழும் அசாதாரண மரணங்களுக்கு அரசு கொடுக்கும் 10 லட்சம் நிவாரண நிதி, விவசாயி ஒருவர் தற்கொலை செய்துகொண்டால் கிடைக்கும் இழப்பீட்டை விட 3 மடங்கு அதிகம். அதிலும், தற்கொலை செய்துகொண்ட விவசாயியின் குடும்பம் இழப்பீடு பெற, அவர் தற்கொலைதான் செய்துகொண்டார் என்பதை நிருபிக்க வேண்டும். இந்த சூழ்நிலையில், மனித-விலங்கு முரண்கள் அந்த வனப்பகுதியில் அச்சம் நிறைந்ததாக்கப்பட்டது. வனத்தின் உள்ளே ஆவ்னி தன் குட்டிகளை கடுமையான சிரத்தையுடன் பாதுகாக்கும் வாழ்விடத்தில் 11 மனித மரணங்கள் நிகழ்ந்துள்ளன. இந்த துன்பகரமான சூழலை தீர்க்க ஆவ்னி மற்றும் அதன் குடும்பத்தை பாதுகாப்பாக மீட்டு புலிகளின் வாழ்விடத்திற்கு கொண்டு செல்ல முடிவெடுக்கப்பட்டது. ஆனால், அது அவ்வளவு சுலபமாக இல்லை.

கோடை காலம் புலிகளை மீட்க சிறந்த காலமாக இருந்திருக்கும். ஆனால், மழைக்காலம் வந்துவிட்டது, அதனால் மக்கள் மீண்டும் வாழ்வாதாரத்திற்காக வனத்திற்குள் செல்ல அச்சப்பட்டனர். ஆகஸ்டு 2018 இல் மூன்று மரணங்கள் வனத்திற்குள் நிகழ்ந்தன, அந்த மரணங்களுக்கான பழியும் ஆவ்னியின் காலடி மீது விழுந்தது.

அதனால், அமைச்சர் முகந்திவாரும் முதன்மை வன பாதுகாவலர் ஏ.கே.மிஸ்ராவும் பல கேள்விகளை எழுப்பும் விதத்தில், வனவிலங்குகளை வேட்டையாடும் தனியாரை சேர்ந்த நவாப் அலிகானிடம் ஆவ்னியை கொல்லும் பொறுப்பை ஒப்படைத்தனர். ஆனால், ஏன் அந்த வேட்டையாளர் நவாப் அலி கான், அரசு நிபுணர்கள், கால்நடை மருத்துவர்கள், வனத்துறை அதிகாரிகள், ஆயுத படையினர் அனைவரையும் விட சிறந்தவர் என்பதை அரசு விளக்கவில்லை. ஆனால், அரசின் வளங்களை பயன்படுத்தி ஆவ்னி மற்றும் அதன் குடும்பத்தை மீட்டு பாதுகாப்பாக வேறொரு இடத்தில் விடலாம் என்று வனவிலங்கு ஆர்வலர்களும், நிபுணர்களும் கோரிக்கை விடுத்ததை அரசு அப்படியே புறந்தள்ளியது. கிராம மக்கள் காட்டிற்கு மேய்ச்சலுக்கு செல்லாமல் தடுக்கும் வகையில் தீவனம் வழங்க விருப்பம் தெரிவித்த அரசு சாரா நிறுவனங்களின் கோரிக்கையையும் அரசு புறக்கணித்தது.
ஆவ்னியை கொல்ல அரசு முடிவெடுத்ததால் கோபமடைந்த ஆர்வலர்கள் நீதிமன்றத்தை நாடினர். நீதிமன்றம் புலிகளை பாதுகாப்பாக கைப்பற்ற வேண்டும் எனவும், கடைசி முயற்சியாகவே புலியை கொல்ல வேண்டும் எனவும் மாநில அரசுக்கு அறிவுறுத்தியது.

அக்டோபர் மாதத்தின் தொடக்கத்தில் இந்த விஷயத்தில் அமைச்சர் மேனகா காந்தியும், நாடாளுமன்ற உறுப்பினரும் தலையிட்டு, புலியை கைப்பற்ற நவாப் அலிகானை நியமிக்கும் பொறுப்பை கைவிட்டு விட்டதாகவும், அவர் துணைக்கு மட்டுமே வனத்திற்குள் அழைத்துச் செல்லப்படுவார் எனவும் எங்களுக்கு தெரிவித்தனர். கால்நடை மருத்துவர்கள் குழுவுடன் அவர் இருப்பார் என தெரிவிக்கப்பட்டது. அரசு அவ்வாறு சொன்னது உண்மையில்லை என தெரிந்தது. ஆனால், நவாப் அலி கானுக்கு அது வேட்டை திருவிழா போன்றதாகவே இருந்தது. நவாப் அலி கான் தனது நண்பர் ஜோதி ரந்தவா மற்றும் அவரது மகன் அஸ்கர் அலி கான் ஆகியோரையும் இந்த மனித தன்மையற்ற செயலை செய்வதற்காக உடன் அழைத்து வந்திருந்தார்.

அஸ்கர் அலி கான் தான் ஆவ்னியை சுட்டுக் கொன்றது. அவருக்கு அங்கு இருக்கவே உரிமை இல்லை, எந்தவொரு அதிகாரமும் இல்லை. அஸ்கர் அலிகான் வனவிலங்குகளை வேட்டையாடுபவர். வனவிலங்குகளை வேட்டையாட வகுக்கப்பட்டுள்ள விதிமுறைகளை இங்கே பொருத்திப் பார்க்க வேண்டும்.

தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் வேட்டையாடுவதற்கென சில விதிமுறைகளை வகுத்துள்ள்து. சூரியன் உதித்து அது மறைவதற்குள் வேட்டையாட வேண்டும். ஆனால், அஸ்கர் அலிகான் நள்ளிரவில் வனத்திற்குள் இருந்துள்ளார். அந்த நள்ளிரவிலும் தான் சுட்டுக்கொல்லப் போவது பெண் புலி ஆவ்னிதான் என்பது எப்படி தெரியும்? அந்த உண்மை நமக்கு தெரிய போவதில்லை. எனென்றால், நியமிக்கப்பட்ட கால்நடை மருத்துவக் குழுவும் அங்கு இல்லை.

ஆவ்னி கொல்லப்பட்டது. அதன் குட்டிகளும் துணையும் உயிருடன் உள்ளதா அல்லது அவையும் கொல்லப்பட்டதா என்பது தெரியவில்லை. இப்போது பந்தர்காவாடா வனத்தை எளிதாக சுரண்டலாம். சொல்வதற்கு ஒன்றே ஒன்றுதான் உள்ளது. ஆவ்னி, எங்களை மன்னித்து விடு, நாங்கள் உன்னைக் காப்பாற்றுவதில் இருந்து தோற்று விட்டோம்.

கொஞ்சம் பொறுங்கள், இந்த படுகொலையில் வனவிலங்கு ஆர்வலர்கள் மற்றும் அரசின் பாத்திரங்களை மீண்டும் வலியுறுத்தவில்லையென்றால் இந்த இரங்கல் முடிவு பெறாது.

யோசியுங்கள் – ஒரு விலங்கு உயிருடன் இருக்க வேண்டும் என ஒரு மனிதர் போராடினால், அவர் மற்ற சக மனிதர்களிடத்தில் எவ்வளவு அக்கறையாக இருக்கிறார் என்பது புரியும். இந்த விஷயத்தில் ஆவ்னியை பாதுகாப்பாக மீட்டு வேறொரு இடத்தில் விட வேண்டும் என வலியுறுத்தியது வனவிலங்கு ஆர்வலர்கள் மட்டுமே. ஆவ்னி அதே இடத்தில் சுதந்திரமாக சுற்றி வரட்டும் என அவர்கள் சொல்லவில்லை.

யோசியுங்கள் – தற்கொலை செய்துகொள்ளும் ஆயிரக்கணக்கான விவசாயிகள் மீது அக்கறையில்லாத அரசாங்கத்தால், எப்படி அந்த கிராம மக்களின் நலனுக்காக யோசிக்க முடியும்? அதற்காக வேட்டையாடும் நபருக்காக செலவு செய்யவும் முடிகிறது.

மக்களையும், விலங்குகளின் வாழ்விடங்களையும் பிரித்து இரண்டு தரப்பினரும் வாழ்வதற்காக வனவிலங்கு ஆர்வலர்கள் போராடினர். ஆனால் , அரசாங்கம் இரண்டு தரப்பினரின் வாழ்விடத்தையும் பெருமுதலாளிகளிடம் கொடுப்பதற்கான வேலைகளை செய்தது. அதற்காக, ஆவ்னி தன் உயிரை விலையாக கொடுத்தது.

 

-ப்ரீத்தி சர்மா மேனன்

தமிழில்: ஜீவா

 

 

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments