கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா முழுவதும் ரயில் மோதி 186 யானைகள் உயிரிழப்பு

10 ஆண்டுகளில்
இந்தியா முழுவதும் ரயில் மோதி 186 யானைகள் உயிரிழப்பு

கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா முழுவதும் ரயில் மோதி 186 யானைகள் உயிரிழந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. அதிகபட்சமாக அசாமில் 62 யானைகள், தமிழ்நாட்டில் 5. பாவூர்சத்திரம் பாண்டியராஜா தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேட்ட கேள்விகளுக்கு மத்திய சுற்றுச்சூழல் வனம் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சகம் தகவல்.

உருவத்தில் பெரியதாக இருந்தாலும் குணத்தில் ஒரு குழந்தையைப் போல் இருப்பதுதான் யானையின் இயல்பு. யானையைப் பிடிக்காதவர்கள் என யாருமே இருக்க மாட்டார்கள். யானைகள் காடுகளை உருவாக்குவதில் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. யானைகள் எண்ணிக்கை பெருகினால் தான் காடுகள் வளரும். காடுகள் தான் மழைக்கும் ஆக்ஸிஜனுக்கும் மிக முக்கிய ஆதாரங்கள்.

இந்தியாவில் போக்குவரத்திற்கு மிக முக்கிய உயிர்நாடியாக விளங்குவது ரயில்வே துறை ஆகும். இந்த ரயில் வழித்தடங்கள் ஒரு சில மாநிலங்களில் அடர் வனப்பகுதிகள் வழியாகவும் செல்கிறது. அசாம், மேற்கு வங்கம், ஒரிசா, உத்தரகாண்ட் மாநிலங்களில் அதிக யானைகள் ரயில் விபத்தில் சிக்குகின்றன.
தென்னக ரயில்வேயை பொருத்தவரையில் செங்கோட்டை – கொல்லம், கோவை பாலக்காடு, சேலத்தில் இருந்து ஓசூர் வழியாக பெங்களூரு செல்லும் வழித்தடம் என இந்த மூன்று ரயில் வழித்தடங்களும் அடர்ந்த வனப்பகுதிகள் வழியாக செல்கின்றன.
இதில் கோவை பாலக்காடு வழித்தடத்தில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு யானைகள் உயிரிழப்பது தொடர்ந்து நடைபெறுகிறது.

யானைக்கு படிக்க தெரிந்திருந்தால் “நில், கவனி, செல்” என்னும் போர்டு வைத்து யானைக்கு புரியும் படி செய்து ரயில் மோதி உயிரிழப்பதை தடுக்கலாம். ஆனால் அதற்கு வாய்ப்பில்லை.

பெரும்பாலான ரயில் யானை மோதல்கள் இரவில் தான் நடக்கின்றன.

*வளைவுகள்:*
ரயில் வளைவுகளில் விபத்து ஏற்படும் வாய்ப்புகள் மிக அதிகம். அடர் வனப்பகுதி என்பதால் வளைவுகளில் தூரத்தில் பார்வை தெரியாது. மேலும் இரவு நேரங்களில் ரயிலின் விளக்குகளுக்கு யானையின் கருப்பு நிறம் அருகில் வந்த பின் தான் கண்டுபிடிக்க முடிகிறது.

*உயரமான தண்டவாளம்:*
தண்டவாளங்கள் 10 முதல் 15 அடி மண் நிரப்பி உயரங்களில் அமைக்கப்படும் போது தண்டவாளத்தின் இருபுறமும் யானைகள் ஒதுங்குவதற்கும் இடம் இல்லை. மேலும் யானைகள் இறங்கி செல்லும் வகையில் சரிவுகள் இல்லாததும் முக்கிய காரணங்களாக கண்டறியப்படுகிறது.

*வேகம் மற்றும் அதிகப்படியான ரயில்கள்:*
அதிகப்படியான ரயில்கள் குறிப்பிட்ட வழிதடங்களில் இயங்குவதாலும் மேலும் அதிவேகத்துடன் இயங்குவதாலும் யானைகள் ரயில் தண்டவாளத்தில் குறுக்கிடும் போது யானைகள் மீது மோதி உயிரிழக்க நேரிடுகிறது.

*வாழிடங்கள் மாற்றம்:*
கல்குவாரிகள், சிமெண்ட் தொழிற்சாலைகள், கட்டுமானங்கள் ஆகியவை வனப்பகுதிக்குள் நடைபெறும்போது யானைகள் தங்களுடைய இருப்பிடங்களை அடிக்கடி மாற்றும் சூழல் ஏற்படுகிறது.
இதனால் ரயில் தண்டவாளங்களை யானைகள் அடிக்கடி கடக்கும் பகுதிகளும் இல்லாமல் திடீரென புதிய பகுதிகள் வழியாகவும் கடந்து செல்கின்றன. இதனாலும் ரயில் விபத்தில் யானைகள் சிக்கும் நிலை ஏற்படுகிறது.

**விபத்துகள்:*
1987 முதல் 2007 வரை 20 வருட காலகட்டத்தில் ரயில் மோதி 150 யானைகள் உயிரிழந்துள்ளதாக ஒரு அறிக்கை கூறுகிறது. இதில் 36 சதவீத விபத்துகள் அசாமிலும் 26 சதவீத விபத்துகள் மேற்கு வங்கத்திலும் 6 சதவீத விபத்துகள் தமிழ்நாட்டிலும் நடந்துள்ளதாக அந்த அறிக்கை கூறுகிறது.

இந்நிலையில் தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தை சார்ந்த சமூக ஆர்வலர் பாண்டியராஜா தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், ரயில் மோதி யானைகள் உயிரிழப்பது தொடர்பாக மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றம் துறையிடம் பல்வேறு கேள்விகள் எழுப்பி இருந்தார்.

அதற்கு யானைகள் பாதுகாப்பு திட்ட அதிகாரி டாக்டர் முத்தமிழ்செல்வன் அளித்த பதிலில்,
கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் 186 யானைகள் ரயில் மோதி உயிரிழந்து உள்ளது.

அசாம் 62,
மேற்கு வங்கம் 57,
ஒடிசா 27,
உத்தரகாண்ட் 14,
கேரளா 9,
ஜார்கண்ட் 7,
தமிழ்நாடு 5,
கர்நாடகா 3,
திரிபுரா மற்றும் உபி தலா 1
அதிகபட்சமாக 2012 – 13 ஆண்டில் 27 யானைகள் இந்தியா முழுவதும் ரயில் மோதி உயிரிழந்துள்ளது.

யானைகள் பாதுகாப்பு திட்டம் மூலம், மத்திய நிதி உதவி திட்டத்தின் கீழ் கடந்த 10 ஆண்டுகளில் 213 கோடிகள் மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

கேரளா 39.97,
கர்நாடகா 28.43,
ஒடிசா 24.4,
மேகாலயா 21.56,
தமிழ்நாடு 20.74,
உத்தரகாண்ட் 18.72,
அசாம் 15.23,
மேற்கு வங்கம் 10.61,
ஜார்க்கண்ட் 9.58,
அருணாச்சல் பிரதேஷ் 8.99,
நாகலாந்து 6.14,
சத்தீஸ்கர் 4.98,
பீகார் 4.34,
ஆந்திரா 2.88,
மகாராஷ்டிரா 2.52,
திரிபுரா 1.96,
உத்தர பிரதேஷ் 1.84,
அரியானா 0.88,
ராஜஸ்தான் 0.77,
மணிப்பூர் 0.31,
மத்திய பிரதேசம் 0.11,
பஞ்சாப் 0.02

பாதுகாப்பு நடவடிக்கைகளாக,
1. அடிக்கடி விபத்து ஏற்படும் பகுதிகளை கண்டறிதல்,
2. வனத்துறை ஊழியர்கள் தொடர் ரோந்து,
3. ரயில்வே துறை வனத்துறை இணைந்து கமிட்டி அமைத்து தொடர் சந்திப்புகள் மற்றும் கடிதம் வாயிலாக யானைகள் பாதுகாப்பை மேம்படுத்துதல்,
4. தண்டவாளத்திற்கு இருபுறமும் உள்ள செடிகொடிகளை வெட்டுதல்,
5. யானைகள் அதிகம் நடமாடும் பகுதிகளில் ரயில் ஓட்டுனர்களுக்கு எச்சரிக்கும் வகையில் எச்சரிக்கை பலகைகள் வைத்தல்,
6. தண்டவாளங்களுக்கு அருகில் உணவுப் பொருட்களை கொட்டாதவாரும், சரக்கு ரயில்களில் செல்லும் உணவுகள் தண்டவாளங்களுக்கு இருபுறமும் சிந்தாமல் செல்லும் வகையிலும் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது

7. தண்டவாளங்கள் உயரமாக அமைக்கப்பட்டுள்ள பகுதிகளில் இருபுறமும் யானைகள் இலகுவாக கடந்து செல்லும் வகையில் சாய்வு தளத்துடன் அமைக்கப்பட்டுள்ளது,
8. இரவு நேரங்களில் விபத்துக்கள் அடிக்கடி நடக்கும் பகுதிகளில் வேகக்கட்டுப்பாடு அமலில் உள்ளது,
9. மேலும் மண்டல ரயில்வே அதிகாரிகள் மாநில வனத்துறை அதிகாரிகள் மூலமாக கமிட்டி அமைக்கப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அந்த பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாண்டியராஜா கூறுகையில், அறிவியல் மற்றும் தகவல் தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி ரயில் மோதி யானைகள் உயிர் இழப்பதை தடுக்க வேண்டும். கடந்த சில தினங்களுக்கு முன் தேசிய வனவிலங்கு வாரியம், ரயில் மோதி யானைகள் உயிரிழப்பை தடுக்க, அகச்சிவப்பு கதிர் கேமரா, ஆப்டிகல் கேமரா மற்றும் ரேடார் உதவியுடன் கூடிய படங்கள் என இந்த மூன்றும், மூன்று கண்களாக செயல்படும் ரயில் ஓட்டுனர்களுக்கு உதவி செய்யும் வகையில் இருக்கும். இந்த மூன்று கண்கள் திட்டம் சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்பட உள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.

சமீபத்தில் நடைபெற்ற சந்திப்பு ஒன்றில் மத்திய வனத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் ரயில் மோதி யானைகள் உயிரிழப்பது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது என்றும், வரும் காலங்களில் ரயில் மோதி யானைகள் உயிரிழப்பை தடுக்க போதுமான ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு செயல்படுத்தப்பட வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

எனவே மத்திய மாநில வனத்துறை மற்றும் ரயில்வே துறை இணைந்து போதுமான நடவடிக்கைகள் எடுத்து ரயில் மோதி யானைகள் உயிரிழப்பது இந்தியா முழுவதும் தடுக்க வேண்டும். இவ்வாறு பாண்டியராஜா கூறினார்.

தமிழ்நாட்டு வனப் பகுதிகளான கோவை வாளையார், மற்றும் கர்நாடகா செல்லும் வழிதடமான ஓசூர் பகுதிகளில் அடிக்கடி ரயில் மோதி யானைகள் உயிரிழப்பது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் கடந்த 10 ஆண்டுகளில் ஐந்து யானைகள் மட்டும் தான் ரயில் மோதி உயிரிழந்து இருக்கிறது என்று தெரிவித்திருப்பது யானை ஆர்வலர்கள் மத்தியில் பெரும் சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் கடந்த முறை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் பதிலளிக்கையில் கடந்த ஐந்து ஆண்டுகளில் கோவை பாலக்காடு ரயில் வழித்தடத்தில் மட்டும் எட்டு யானைகள் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments