சூழலியல் அரசியல் பேசும் உலக சினிமா

காலாவதியான மருந்துகளும் போலி மருந்துகளும் மூன்றாம் உலகநாடுகளின் முக்கிய நகரங்களின் வீதிகளில் குவியல்களாக கொட்டப்பட்டிருக்கும் இன்றைய சூழலில் இந்தப் படத்தின் விமர்சனத்தை முன்வைப்பது பொருத்தமானது என்றே நினைக்கிறேன்.

பெரும்பாலும் இவை போன்ற நிகழ்வுகள் அதிகாரவர்க்கத்திற்கும் மூலதனத்திரட்டலை மட்டுமே நோக்கமாகக்கொண்ட முதலாளி வர்க்கத்திற்கும் இடையிலான கூட்டு ஒப்பந்தத்தின் (கொள்ளை) முறிவில்தான் வெளிச்சத்திற்கு வருகிறதேயன்றி அதிகாரவர்க்கத்தின் கடமையினாலல்ல. இன்று, பன்னாட்டு பகாசுர மருந்து நிறுவனங்களின் மருந்துகள் திறனறி ஆய்விற்கு அந்நாட்டு அரசுகளின் துணையோடு மூன்றாம் உலகநாடுகளின் மனித உடல்கள் உட்படுத்தப்படுவதை முன்வைக்கிற படம்தான் ‘கான்ஸ்டன்ட் கார்ட்னர்’ (The Constant Gardner 2005). இந்தப் படம் பிரித்தானிய நாவலாசிரியர் ஜான் லீ கெரேயின் இதே பெயரிலான நாவலைத் தழுவி எடுக்கப்பட்டது. ‘சிட்டி ஆஃப் காட்’ படத்தை இயக்கிய பிரேசிலிய இயக்குநர் ஃபெர்னாண்டோ மெய்ரேல்லஸ் இயக்கத்தில் வெளியானது.

கென்யாவிற்கான பிரித்தானிய தூதரக அதிகாரி ஜஸ்டின் குவாயில், தோட்டக்கலையில் அதீத ஆர்வம் கொண்டவன். நாயகி தெஸா சமூக ஆர்வலர். ஈராக் ஆக்கிரமிப்பில் அமெரிக்காவோடு இணைந்து இங்கிலாந்து செயல்பட்டதை எதிர்த்து மிகவும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் ஓர் ஆய்வரங்கில் நாயகனிடம் கேள்வி எழுப்புகிறார். பிறகு தொடர்ச்சியாக வரும் உரையாடல்களுக்குப் பின் அவனோடு காதல் கொண்டு அவனது மனைவியாக கென்யா வருகிறாள். கென்ய மருத்துவரான அர்னால்ட்ப்ளும் உடன் நட்புகொள்கிறாள். பிறகு இருவரும் சேர்ந்து, எய்ட்ஸ்க்கான சிகிச்சையின் ஊடே அந்நாட்டு நோயாளிகள் காசநோய்க்கான மருந்துகளின் சோதனைக்கும் உட்படுத்தப்படு வதையும் அதன் பின்னணியிலிருக்கும் பன்னாட்டு நிறுவனங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் அதிகாரிகளின் கூட்டு சதியையும் கண்டுபிடிக்கின்றனர்.

பின்னொரு நாள் நாயகி திடீரென கொல்லப்படுகிறாள், படம் இதிலிருந்துதான் தொடங்குகிறது தனது மனைவியின் கடிதம் மற்றும் சில ஆவணங்களிலிருந்து அவளது நடவடிக்கைகளையும் அவளது மரணத்தின் பின்னாலிருக்கும் தன் சக அதிகாரிகளின் சதியையும் நாயகன் கண்டுபிடிக்கிறான். ஆதாரங் களை தனது மனைவியின் ஒன்றுவிட்ட சகோதரனுக்கு அனுப்பிவைத்து விட்டு, இறுதியில் தன் மனைவி கொல்லப்பட்ட கென்யாவிலுள்ள துர்க்கானா ஏரி எனும் இடத்திற்கு வந்து சேர்கிறான்.

மனைவியின் மரணத்திற்குப் பின் அவள் மீதான ஆழமான புரிதலுடன் அவளின் நினைவு களில் மூழ்கிய நிலையில் அந்த ஏரிக்கரையில் அமர்ந்திருக்கும்போது, மருந்து நிறுவனங்களின் கூலிப்படையினரால் கொல்லப்படுகிறான்.

ஏரிக்கரையிconstant gardner movie 600ல் இந்த இறுதிக்காட்சி மிக அற்புத மாகப் படமாக்கப்பட்டுள்ளது. முதல் பாதி படத்தில் நைரோபியின் இரண்டரை சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 6 லட்சம் மக்கள் வாழும் குடிசைப் பகுதியில் கேமரா நடந்து திரிகிறது. இது விவரணப் படங்களின் சாயலில் படமாக்கப்பட்டுள்ளது.

இன்று அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஜப்பான் இந்த மூன்று நாடுகள்தான் உலகின் மொத்த மருந்து உற்பத்தியின் 80 சதவீத மருந்துகளை சந்தைக்குக் கொண்டுவருகின்றன. மருந்துகள் உற்பத்தியின்போதே ஆய்வகங்களில் அவற்றுக்கான திறனறி சோதனைகள் நடத்தப்படுகின்றன. இதில் பெருமளவு விலங்குகள் ஈடுபடுத்தப்படுகின்றன. சில வரையறைகளுக்கு உட்பட்டு மனிதர்களும் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.

மேற்குலக வளர்ந்த நாடுகளில் இந்த நிறுவனங்கள் இதைப்போன்ற சோதனைகளில் நிறைய சட்டரீதியான சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருப்பதால் மூன்றாம் உலகநாடுகள் மற்றும் வளரும் நாடுகளை நோக்கி வருகின்றன. அமெரிக்காவில் இதுபோன்ற சோதனைகளுக்கு 350 பேரில் ஒருவர்தான் முன்வருகிறார் என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

மூன்றாம் உலகநாடுகளின் எண்ணற்ற நோய்களும் நோயாளிகளும் எதற்கும் வளைந்து கொடுக்கும் அரசாங்கமும் இந்த நிறுவனங்களுக்கு சாதகமாக இருக்கின்றன. 1975ஆம் ஆண்டு ‘உணவு மற்றும் மருந்து வளர்ச்சிக்கான நிறுவனம்’ என்கிற அமெரிக்க நிறுவனம், ‘உலக சுகாதார அமைப்பினால்’ உருவாக்கப்பட்டு வெளியிடப்பட்ட ‘ஹெல்சிங்கி அறிக்கை’யின்படி 35 நாடுகளுடனான ஒப்பந்தத்தை ஏற்படுத்திக்கொண்டது. ஆனால் அந்த அறிக்கையின் படியிலான வரையரைகளையும் அதைச் செயல்படுத்தும் மேற்பார்வை குழுவினரையும் புறக்கணித்தே வந்திருக்கிறது.

பன்னாட்டு மருந்து நிறுவனங்கள் தங்களின் வரிச்சலுகைகளுக்காக காலாவதியான மருந்துகளை தொண்டுநிறுவனங்கள் மூலமாக வளரும் நாடுகளில் இறக்குகின்றன. இந்தியாவில் ஆயுர்வேத மருந்து நிறுவனங்களும், குறிப்பாக தமிழ்நாட்டில் சித்த மருத்துவ நிறுவனங்களும் பன்னாட்டு மருந்து நிறுவனங்களுக்கு எந்த விதத்திலும் குறைந்தனவல்ல. மக்கட்தொகைப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறிக்கொண்டிருக்கும் நாட்டில் இவர்கள் ஆண்மைக் குறைபாடு என்ற கூப்பாடை முன்வைத்து வியாபாரம் செய்துகொண்டிருக்கின்றனர்.

படத்தின் டிரைலர் இங்கே:

  • வெங்கடேஷ் லிங்கராஜாசெப் 2014 பூவுலகு இதழில் வெளியான கட்டுரை
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments