காலநிலை மாற்றம் மற்றும் பாப் கலாச்சாரம் (Pop Culture) தொடர்பான நிகழ்வுகளுக்குக் கொடுக்கப்படும் ஊடக மற்றும் இணையதள முக்கியத்துவம் உயிர்பன்மைய அழிவிற்கு கொடுக்கப்படவில்லை என Nature தளத்தில் வெளியான ஒரு ஆய்வறிக்கை கூறியுள்ளது. இந்த ஆய்வறிக்கை குறித்து விவரமாக இக்கட்டுரையில் பார்க்கலாம்.
உயிர்பன்மையத்திற்கான ஐக்கிய நாடுகள் கூட்டமைப்பின் உறுப்பினர்களுக்கான 15வது மாநாடு (COP15—the 15th Conference of the Parties to the United Nations Convention on Biological Diversity (CBD)) கடந்த 2022ம் ஆண்டு டிசம்பர் மாதம் கனடாவின் மாண்ட்ரியல் நகரில் நடைபெற்றது. பன்னாட்டு உயிர்பன்மைய பாதுகாப்பு குறித்த மிக முக்கியமான இம்மாநாட்டின் முடிவில், உயிர்பன்மைய அழிவை தடுப்பதற்காக உருவாக்கப்பட்ட குன்மிங் – மாண்ட்ரியல் பன்னாட்டு உயிர்பன்மைய கட்டமைப்பு ஒப்பந்தம் ஏற்கொள்ளப்பட்ட நிகழ்வு பன்னாட்டு உயிர்பன்மைய பாதுகாப்பில் மிக முக்கியமான ஒன்றாகும்.
குன்மிங் – மாண்ட்ரியல் கட்டமைப்பானது, உலகெங்கிலும் வாழும் பத்து லட்சத்திற்கும் அதிகமான உயிரினங்கள் மற்றும் கோடிக்கணக்கான மக்களின் வாழ்விற்கு பேராபத்தாக அமைந்துள்ள உயிர்பன்மைய அழிவை 2030ம் ஆண்டிற்குள் தடுப்பதுடன், பல்லுயிர் வளத்தை மீட்டெடுத்து உயிர்பன்மையப் பயன்பாட்டை பாதுகாப்புடன் செயல்படுத்துவதை இலக்காகக் கொண்டுள்ளது. பன்னாட்டு முதலீட்டாளர்கள் கூட்டமைப்பு இந்த COP15-ன் முடிவினை, காலநிலை மாற்றம் தொடர்பான நிகழ்வுகளில் மைல்கல்லாக அமைந்த, 2015ம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டில்(COP21) ஏற்றுக்கொள்ளப்பட்ட பாரிஸ் ஒப்பந்தத்துடன் ஒப்பிட்டு “இயற்கையின் பாரிஸ் நிகழ்வு” (nature’s Paris moment) எனக் கூறியது குறிப்பிடத்தக்கது.
COP15- மாநாடானது உயிர்பன்மைய அழிவைத் தடுப்பதற்காக உலகநாடுகளை ஒன்றிணைத்துச் செயல்பட வழிவகுத்து கொடுத்தாலும், இம்மாநாட்டிற்கு ஒரு மாதம் முன்னதாக நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்றம் தொடர்பான 27வது மாநாட்டிற்கு(COP27) கிடைத்த அளவிலான ஊடக வெளிச்சம் இதற்குக் கிடைக்காததன் மூலம், உயிர்பன்மைய அழிவைத் தடுப்பதற்காகத் தேவைப்படும் அவசரகால நடவடிக்கைகள் குறித்து பொதுமக்கள், சமூக அமைப்புகள், செயல்பாட்டாளர்கள் மற்றும் பிறருக்கு போதுமான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வாய்ப்பு தவற விடப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழல் பிரச்சனைகள் குறித்து ஊடகங்கள் கவனம் செலுத்துவது என்பது மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், செயல்பாட்டிற்கும் மிக அவசியமான தேவையாக உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. செய்தி, தகவலை வெளிப்படுத்தும் விதம் மற்றும் மக்களின் முன்முடிவுகள் போன்ற காரணங்களால் சில நிகழ்வுகளுக்கு அதிகளவிலான ஊடக வெளிச்சம் கிடைத்தும் நேரடியாக மக்களை ஒன்று திரட்ட முடியாவிட்டாலும், தொடர்ச்சியான பரந்தளவிலான ஊடக செயல்பாடானது சுற்றுச்சூழல் பிரச்சனைகளைக் கையாளுவதற்கு அத்தியாவசியமான ஒன்றாக உள்ளது. இந்நிலையில்தான் உயிர்பன்மைய அழிவைத் தடுப்பதற்கு பன்னாட்டு அளவிலான விழிப்புணர்வை அதிகரிப்பதற்காக COP15 மற்றும் பன்னாட்டு உயிர்பன்மைய கட்டமைப்பு வழங்கிய சிறப்பான வாய்ப்பு ஊடகங்களால் தவறவிடப்பட்டுள்ளது.
கடந்த 2022ம் ஆண்டு அக்டோபரில் வெளியான புகழ்பெற்ற பாடகி டெய்லர் ஸ்விப்ட்(Taylor Swift)-ன் “Cruel Summer” , நவம்பரில் நடைபெற்ற காலநிலை மாற்றம் குறித்த COP27 மநாடு மற்றும் டிசம்பரில் நடைபெற்ற உயிர்பன்மையம் குறித்த COP15 மாநாடு போன்ற நிகழ்வுகள் குறித்து 2022ம் ஆண்டு அக்டோபர் முதல் 2023 ஜனவரி வரை உலகெங்கிலும் சுமார் 80 மேற்பட்ட மொழிகளில், 6939 ஊடகங்களில் வெளியிடப்பட்ட 227,940 தகவல்களை ஒப்பிட்டு பார்க்கையில், கடுமையான போட்டிகளுக்கிடையிலும் பன்னாட்டு சுற்றுச்சூழல் குறித்த அவசர கால பிரச்சனைகளிலிருந்து பொதுமக்களின் கவனம் எவ்வாறு விலகிச் செல்கிறது என்பதைப் பார்க்க முடிகிறது.
இது குறித்து கூர்ந்து பார்க்கையில் COP15 மாநாடு குறித்த செய்திகளை(22,422) விட ஏழு மடங்கு அதிகமாக COP27 மாநாடு குறித்த செய்திகளும்(150,371) இரண்டு மடங்கு அதிகமாக டெய்லர் ஸ்விப்ட்டின் பாடல் குறித்த செய்திகளும்(55,147) வெளியாகியுள்ளன. COP15 தொடர்புடைய சீனா மற்றும் கனடா போன்ற ஒரு சில நாடுகளைத் தவிர பல நாடுகளில் இந்த விகிதம் இன்னும் அதிகளவு வேறுபட்டுள்ளது. கீழ்காணும் புகைப்படங்களில் உள்ள தரவுகளின் மூலம் இந்த வேறுபாட்டை எளிதில் அறிய முடிகிறது.

மேற்காணும் முதல் வரைபடத்தில் COP27 குறித்த செய்திகளின் எண்ணிக்கை நீல வண்ணத்திலும், COP15 குறித்த செய்திகளின் எண்ணிக்கை பச்சை வண்ணத்திலும், டெய்லர் ஸ்விப்ட் குறித்த செய்திகள் சிவப்பு வண்ணத்திலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. இதேபோல், இரண்டாவது வரைபடத்தில் இந்நிகழ்வுகள் குறித்த இணையத்தில் டிரெண்டான தேடுதல்கள் குறித்து மேற்சொன்ன வண்ணங்களில் விவரிக்கிறது.
மேலும், பல்லுயிர் வளத்தைக் குறிக்கும் தேசிய உயிர்பன்மை குறியீடு(National Biodiversity Index (NBI)) அதிகளவில் உள்ள நாடுகள் மற்றும் அழிந்து வரும் உயிரினங்கள் குறித்த சிவப்பு பட்டியல் குறியீடு (Red List Index (RLI) அதிகமாக உள்ள நாடுகளில், உயிர்பன்மைய பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்த மிக முக்கியமான COP15 மாநாடு குறித்த செய்திகள் மற்ற இரண்டு நிகழ்வுகளை ஒப்பிடும்போது ஒப்பிட்டளவில் மிகக்குறைவாக இருப்பது அதிர்ச்சிகரமானதாக உள்ளது. அதேசமயம், காலநிலை மாற்ற பாதிப்பு குறியீடு அதிகமாக உள்ள நாடுகள் காலநிலை மாற்றத்திற்கான COP27 குறித்த செய்திகளை ஒப்பிட்டளவில் அதிகமாகவே வெளியிட்டுள்ளனர்.

மேற்காணும் முதல் வரைபடம் COP15 மற்றும் COP27க்கும் இடையிலான ஒப்பீட்டைக் குறிக்கிறது. இரண்டாவது வரைபடம் COP15 மற்றும் டெய்லர் ஸ்விப்ட்டின் நிகழ்விற்கு இடையிலான ஒப்பீட்டைக் குறிக்கிறது. இரண்டு வரைபடங்களிலும் 1க்கும் அதிக புள்ளிகள் அல்லது மதிப்பெண்களைக் குறிப்பிடும் வண்ணங்களில் உள்ள நாடுகள் COP27 மற்றும் டெய்லர் ஸ்விப்ட்டின் நிகழ்வுகள் COP15-ஐ விட அதிகளவில் செய்தியாக்கப்பட்டுள்ளதை குறிக்கிறது.

மேற்காணும் முதல் வரைபடம் தேசிய உயிர்பன்மை குறியீடு(National Biodiversity Index (NBI)) மற்றும் COP15 குறித்த ஊடக செய்திகளுக்கிடையிலான தொடர்பையும், இரண்டாவது வரைபடம் சிவப்பு பட்டியல் குறியீடு (Red List Index (RLI) மற்றும் COP15 குறித்த ஊடக செய்திகளுக்கிடையிலான தொடர்பையும், மூன்றாவது வரைபடம் காலநிலை மாற்ற பாதிப்பு குறியீடு மற்றும் COP27 குறித்த ஊடக செய்திகளுக்கிடையிலான தொடர்பையும் விளக்குகின்றன.
மற்ற நிகழ்வுகளை ஒப்பிடுகையில் COP15 மீதான குறைந்தளவிலான ஊடக வெளிச்சம் எந்த அளவு பொதுமக்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை ஆராய, நிகழ்வுகள் நடைபெற்ற சமயத்தில், இம்மூன்று நிகழ்வுகள் குறித்து இணையத்தில் தேடப்பட்ட தரவுகளைக் கொண்டு ஆராய்கையில், COP27 மாநாடானது COP15 மாநாட்டை விட அதிகளவில் தேடப்பட்டுள்ளது, மேலும், டெய்லர் ஸ்விப்டின் பாடல் வெளியான அக்டோபர் 21 மற்றும் அவரின் கலைநிகழ்ச்சிக்கான நுழைவுச்சீட்டு விற்பனை தொடங்கிய நாட்களில் மற்ற இரண்டு நிகழ்வுகளின் தொடக்க நாட்களைக் காட்டிலும் இந்நிகழ்வு மிக அதிகளவில் இணையத்தில் தேடப்பட்டுள்ளதையும் அறிய முடிகிறது.
மேற்காணும் தகவல்களிலிருந்து, உயிர்பன்மைய அழிவை தடுக்கவல்ல லட்சியகரமான செயல்திட்டங்களை உள்ளடக்கிய வரலாற்றுs சிறப்புமிக்க COP15 மாநாடு மிக்க குறைந்த அளவே கவனம் பெற்றுள்ளதை அறிய முடிகிறது. கடந்த காலங்களில் வெளியான பல ஆய்வுகளும் ஊடகங்கள் காலநிலை மாற்றத்திற்கு கொடுக்கும் கவனத்தை உயிர்பன்மைய அழிவிற்குக் கொடுக்கவில்லை என்பதனையே காட்டியுள்ளன. பல்வேறு காரணிகள் இதற்குக் காரணமாக அமைந்துள்ளது. முதலாவதாக காலநிலை மாற்றத்தின் விளைவுகளை குறைக்கப் புவியின் சராசரி வெப்பநிலையை 1.5 டிகிரி செல்சியசிற்கும் குறைவான அளவில் வைத்திருப்பது குறித்து தெளிவான இலக்கு குறித்த பார்வை உள்ளது. இதேபோன்று உயிர்பன்மைய அழிவு குறித்த தெளிவான இலக்கு இல்லாததை உணர்ந்து COP15ல் “30×30” என்ற திட்டம் முன்மொழியப்பட்டது. அதாவது, 2030ம் ஆண்டிற்குள், புவியின் சுமார் 30 சதவீத உயிர்பன்மையப் பகுதிகளைப் பாதுகாப்பது என்பது சாத்தியமான இலக்காக பார்க்கப்பட்டது. எனினும் புவியின் நிலம் மற்றும் கடல் பரப்பில் வெறும் 30 சதவீதத்தை மட்டுமே இலக்காகக் கொண்ட இம்முடிவு சர்ச்சைக்குரியதாக பார்க்கப்பட்டதுடன், பல்வேறு இடங்களில் சமுதாயத்தில் ஏற்படும் பலவகையான தாக்கங்களினால் இது உயிர்பன்மைய அழிவைத் தடுக்கப் போதுமானதாக இருக்காது என்பதை அறிய முடியும். மேலும், இந்த 30X30 என்பது பன்னாட்டு உயிர்பன்மைய கட்டமைப்பின் பல இலக்குகளில் ஒன்று மட்டுமேயாகும்,1.5 டிகிரி செல்சியஸ் என்ற காலநிலை மாற்றம் தொடர்பான இலக்குடன் ஒப்பிடுகையில் இந்த நோக்கங்கள் உலகளாவிய தன்மையில் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
காலநிலை மாற்றத்தின் தாக்கத்தினால் ஏற்படும் வெள்ளம் மற்றும் காட்டுத்தீ போன்று உடனடியாக மக்களின் கவனத்தை ஈர்க்கும் நிகழ்வுகள் போலல்லாமல், உயிர்பன்மைய அழிவானது படிப்படியாகவும், நுட்பமான அளவிலும் நடப்பதாலும் இதற்கு ஊடக கவனம் அதிகளவில் கிடைப்பதில்லை என்பது குறிப்பிடப்பட வேண்டியது.
நிறுவன வகையிலான ஆதரவு என்பதும் காலநிலை மாற்ற நிகழ்வுகளுக்கு அதிகளவிலான கவனத்தை ஈர்ப்பதற்கு உதவுகிறது. 1988ம் ஆண்டு அமைக்கப்பட்ட காலநிலை மாற்றத்திற்கான பன்னாட்டு குழு(IPCC), அதன் தெளிவான அறிக்கைகள், 2007ம் ஆண்டு அந்த குழுவிற்கு கிடைத்த நோபல் பரிசு மற்றும் முன்னாள் அமெரிக்க துணை ஜனாதிபதி அல் கோர் போன்ற செல்வாக்கு மிக்க நபர்களின் உறுதுணை, தொடர்ச்சியான செயல்பாடுகள் போன்றவை காலநிலை மாற்றத்திற்குப் பரவலான ஊடக கவனம் கிடைக்க முக்கியக் காரணிகளாக அமைந்தன. அதேசமயம், உயிர்பன்மைய அழிவைத் தடுப்பதற்காக 2012ம் ஆண்டு உயிர்பன்மைய மற்றும் சுற்றுச்சூழல் சேவைகளுக்கான பன்னாட்டு அறிவியல்-கொள்கை தளம் (Intergovernmental Science-Policy Platform on Biodiversity and Ecosystem Services – IPBES) அமைக்கப்பட்டிருந்தாலும், இது குறித்த பிற செயல்பாடுகள் குறைந்த அளவில் இருப்பது, செல்வாக்கு மிக்க அமைப்புகள் மற்றும் மனிதர்கள் கவனம் அதிகளவில் கிடைக்கப்பெறாதது போன்ற காரணங்களால் பொதுமக்களிடையே இதற்குப் போதுமான அங்கீகாரம் கிடைக்கவில்லை.
ஐ.நா.வின் காலநிலை உச்சிமாநாடு, லியோனர்டோ டி காப்ரியோ (திரைப்பட நடிகர்) போன்ற செல்வாக்கு மிக்க பிரபலங்கள் மற்றும் உலகத் தலைவர்களின் கவனத்தை ஈர்த்தது போல் COP15 ஈர்க்கவில்லை என்பதை 2022ல் வெளியான பிபிசி செய்திதளத்தின் கட்டுரை ஒன்று அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளது. மேலும், காலநிலை உச்சிமாநாட்டில் பங்கேற்பது போல் உலகத் தலைவர்கள் COP15 மாநாட்டில் பங்கேற்காததும், இம்மாநாட்டிற்குப் பரவலான ஊடக கவனம் கிடைக்காததற்குக் காரணமாக உள்ளது. உதாரணமாக, இங்கிலாந்து மன்னர் சார்லஸ் COP27 மாநாட்டில் கலந்து கொண்டதைப் பற்றி சுமார் 300க்கும் மேற்பட்ட செய்திக் கட்டுரைகள் உலகளவில் வெளியாகின. செல்வாக்கு மிக்க நபர்கள் காலநிலை மாற்றம் தொடர்பான நிகழ்வுகளில் பங்கேற்பது எவ்வாறு அந்நிகழ்வுகளுக்கு பரவலான பொதுமக்கள் கவனத்தை பெற்றுத் தருகிறது என்பதை இந்த ஆய்வின் மூலம் அறிய முடிந்தது. எனினும், பல்வேறு மாறுபட்ட சமூக அமைப்பு முறைகளைக் கொண்ட உலக நாடுகளில் எந்த வகையிலான செய்தி வழங்கும் முறைகள், சுற்றுச்சூழல் குறித்த ஒருங்கிணைந்த செயல்பாட்டிற்கு வழிவகுக்கும் என்பதனையும், இத்தகைய செய்தி வழங்கும் முறைகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் காரணிகள் போன்றவற்றை அறியவும் இன்னும் பரந்த அளவிலான ஆய்வு தேவைப்படுகிறது.
காலநிலை மாற்றம் போன்ற தீவிரமான பிரச்சனைகளை வெளிப்படுத்த பரந்தளவிலான ஊடக வெளிச்சம் தேவைப்படும் அதேசமயம், அதேயளவு மிகக்கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் உயிர்பன்மைய அழிவு போன்ற பிற சூழலியல் பிரச்சனைகளுக்குக் குறைந்தளவே ஊடக வெளிச்சம் கிடைப்பதனால், காலநிலை மாற்றம் மட்டுமே ஒற்றைச் சுற்றுச்சூழல் பிரச்சனை அதனை சரிசெய்துவிட்டால் பிற பிரச்சனைகள் சரியாகிவிடும் என்ற கோணத்தில் மக்களையும், சூழல் நலன் விரும்பிகளையும் திசை திருப்பிவிடும் அபாயத்தையும் கொண்டுள்ளது. உண்மையில் உயிர்பன்மைய அழிவிற்குக் காரணமாக தொடர்ச்சியான பல அழித்தொழிப்புகள் காலநிலை மாற்றம் தவிர்த்த பிற காரணிகளாலேயே பரந்தளவில் மேற்கொள்ளப்படுகின்றன.
உயிர்பன்மையம் குறித்த பிரச்சனைகளைப் பொதுமக்களிடம் கொண்டு சேர்ப்பதிலும், ஆதரவைத் திரட்டுவதிலும் ஊடகத்தின் பங்கு மிக அவசியமானதாக உள்ள நிலையில், குறைந்தளவே கிடைக்கும் ஊடக முக்கியத்துவத்தின் காரணமாக, பன்னாட்டு உயிர்பன்மைய பாதுகாப்பிற்கான இலக்குகளை மைய நீரோட்டத்தில் கொண்டு சேர்த்து ஒருங்கிணைந்த மக்கள் செயல்பாடுகளை முன்னெடுப்பதற்கான வாய்ப்பு தவறவிடப்பட்டுள்ளது. காலநிலை மாற்றம் போன்று தேசிய அளவிலான கொள்கை முடிவுகளை போலல்லாமல், தொடர்ச்சியான உள்ளூர்மயமாக்கப்பட்ட செயல்பாடுகளே உயிர்பன்மையப் பாதுகாப்பிற்குத் தேவைப்படுகிறது. உள்ளூர் அதிகாரிகள், அமைப்புகள், விவசாயிகள் மற்றும் நில உரிமையாளர்கள் உயிர்பன்மைய பாதுகாப்பிலுள்ள சவால்களையும், அதற்குத் தேவையான மாற்றங்களைத் தொடர்ச்சியாக செயல்படுத்துவது குறித்தும் போதுமான அறிவைப் பெற வேண்டும். உள்ளூர் அளவிலான விழிப்புணர்வும், செயல்பாடுகளும் இல்லாமல் குன்மிங் – மாண்ட்ரியல் பன்னாட்டு உயிர்பன்மைய கட்டமைப்பு ஒப்பந்தம் போன்ற திட்டங்கள் அவற்றின் இலக்கை எட்டுவது சாத்தியமில்லை.
COP15 போன்ற உயிர்பன்மையம் சார்ந்த மிக முக்கியமான நிகழ்வுகளுக்கு பரந்தளவிலான ஊடக முக்கியத்துவம் கிடைப்பது, உயிர்பன்மைய பாதுகாப்பு குறித்த செயல்பாடுகள் எங்கெல்லாம் அதிகளவு தேவைப்படுகிறதோ அந்நாடுகளில் பிரச்சனைகள் தொடர்பான விழிப்புணர்வை அதிகரிக்கவும், அவற்றைச் சரிசெய்யத் தேவையான நடவடிக்கைகளை வலுப்படுத்தவும் அவசியமான ஒன்றாகும். காலநிலை மாற்றம் சார்ந்த ஐ.நா.வின் நிகழ்வுகளுக்கு ஆதரவளிப்பதை போல உயிர்பன்மையம் சார்ந்த நிகழ்வுகளுக்கும் உலகத் தலைவர்கள் மற்றும் செல்வாக்கு மிகுந்த நபர்கள் ஆதரவளிப்பது என்பது இதுபோன்ற நிகழ்வுகளுக்கு அதிகளவிலான ஊடக ஆதரவு கிடைக்க வழிவகுக்கும்.
சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இப்பிரச்சனைகள் மற்றும் தீர்வுகள் குறித்து உள்ளூர் மக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையிலான செய்திகளை வெளியிட பத்திரிக்கையாளர்களுடன் இணைந்து செயல்படலாம். மேலும், உயிர்பன்மையத்திற்கும், மனிதர்களின் நல்வாழ்விற்கும் இடையிலான தொடர்பினை மக்களுக்கு விளக்குவதும், உயிர்பன்மைய அழிவைத் தடுப்பதற்கான அவசரத் தேவையை மக்களிடம் கொண்டு சேர்ப்பதும் முக்கியமானதாகும். காலநிலை மாற்றத்தினைப் போல உயிர்பன்மைய அழிவிற்கும் சம அளவிலான முக்கியத்துவம் கொடுப்பது, அவற்றிற்கு இடையிலான தொடர்பினை விளக்குவது போன்ற செயல்பாடுகளை ஊடகங்கள் முன்னெடுப்பதே பன்னாட்டு சுற்றுச்சூழல் இலக்குகளை அடைய தேவையான அரசியல் மற்றும் சமூக மாற்றங்களை ஊக்குவிக்கும்.
Soure:
https://www.nature.com/articles/s44185-025-00082-w#Fig3
