ரயில் மோதி யானைகள் உயிரிழப்பதைத் தடுக்க செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது குறித்து ஆராயுமாறு தமிழ்நாடு மற்றும் கேரள வனத்துறைக்கு தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
ரயில் தண்டவாளங்களில் யானை உள்ளிட்ட பிற உயிரினங்கள் நிற்கும்போது அது குறித்த தகவல்களை ரயில் ஓட்டுனக்கு அளிக்கும் வகையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது குறித்து ஆராயுமாறு தமிழ்நாடு மற்றும் கேரள வனத்துறைக்கு தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம் குறிப்பிட்ட நேரத்தில் ரயிலின் வேகத்தை குறைத்து காட்டுயிர்கள் விபத்தில் சிக்கி உயிரிழப்பதைக் குறைக்க முடியும் என பசுமைத் தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது.
கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூலை மாதம் கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் பெண் யானை ஒன்று சுட்டுக்கொல்லப்பட்டது தொடர்பாக நாளிதழில் வெளியான செய்தியைச் சுட்டிக்காட்டி சென்னையைச் சேர்ந்த விலங்குகள் நல ஆர்வலர் அருண் பிரசன்னா என்பவர் தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அம்மனுவில் யானைகள் உயிரிழப்பைத் தடுக்க அவசரகால செயல்திட்டம் ஒன்றை வனத்துறை உருவாக்க உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.
இவ்வழக்கில் 17.5.2022 அன்று தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் நீதித்துறை உறுப்பினர் ராமகிருஷ்ணன் மற்றும் நிபுணத்துவ உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர் கொண்ட அமர்வு இறுதித் தீர்ப்பை வழங்கியது. யானை மரணங்கள் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து தமிழ்நாடு மற்றும் கேரள மாநில வனத்துறை அதிகாரிகள் அவ்வப்போது ஆலோசனை கூட்டங்கள் நடத்தி திட்டங்களை அமல்படுத்த வேண்டும். இரண்டு மாநில வனத்துறையும் காட்டுயிர் – மனிதர் எதிர்கொள்ளல் சம்பவங்கள் அதிகம் நடைபெறும் இடங்களில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு உண்டாக்க ஒரு குழுவை உருவாக்க வேண்டும் எனவும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
-செய்திப் பிரிவு
arun prasanna