2024 மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக தமிழ்நாட்டில் முதல் முறை வாக்காளர்கள், காலநிலை மாற்ற பிரச்சினைகளுக்கு வலுவான அர்ப்பணிப்புடன் தீர்வுகாண முனைபவர்களையே தேர்ந்தெடுக்க விரும்புவது கணக்கெடுப்பு ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது. காலநிலை நெருக்கடியைச் சமாளிக்க அரசாங்கத்திற்கு மிகவும் பயனுள்ள வழி காலநிலை கல்வி மற்றும் விழிப்புணர்வு என்று கணக்கெடுப்பில் பங்கெடுத்து பதிலளித்தவர்களில் பெரும்பாலோர் கூறியுள்ளனர்.
அசார் (Asar Social Impact Advisors), காலநிலை கல்வியாளர்கள் நெட்வொர்க் (Climate Educators Network) மற்றும் சி.எம்.எஸ்.ஆர் (CMSR Consultants ) ஆகியோர் இணைந்து நடத்திய ‘இந்தியாவில் காலநிலை கல்வி குறித்த முதல் முறை வாக்காளர்களின் கருத்து’ என்ற ஆய்வில் முக்கியமான முடிவுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மகாராஷ்டிரா, டெல்லி, தமிழ்நாடு, மேற்கு வங்கம் ஆகிய ஏழு மாநிலங்களில் மொத்தம் 1600 முதல் முறை வாக்காளர்கள் இந்த கணக்கெடுப்பில் பங்கேற்றனர். இக்கணக்கெடுப்பானது கேள்வி – பதில் மற்றும் குழு விவாதங்கள் அடிப்படையில் நட த்தப்பட்டது. தமிழ்நாட்டில், இந்த கணக்கெடுப்பு சென்னை மற்றும் கோயம்புத்தூரில் நடத்தப்பட்டது. 18-22 வயதுக்குட்பட்ட தனிநபர்கள் இக்கணக்கெடுப்பில் கலந்து கொண்டனர்.
கணக்கெடுப்பில் கலந்து கொண்ட முதல் முறை வாக்காளர்களில் 52.2% பேர், ஒரு கட்சி அல்லது அரசியல்வாதி காலநிலை மாற்றத்திற்கு எவ்வளவு முக்கியத்துவம் அளிக்கிறார் என்பதை வைத்தே அவர்களைத் தேர்ந்தெடுப்போம் எனக் கூறியுள்ளனர். 55% பேர் காலநிலை நெருக்கடியைச் சமாளிப்பதற்கான மிகச் சிறந்த வழி காலநிலை கல்வி மற்றும் விழிப்புணர்வு எனத் தெரிவித்துள்ளனர்.
“இக்கணக்கெடுப்பின் முடிவுகள், இளைஞர்கள் காலநிலை மாற்றம் குறித்து அதிக விழிப்புணர்வு பெற்று வருவதையும், அக்கறை கொண்டிருப்பதை அரசியல் கட்சிகளுக்கு காட்டுவதையும் வெளிக்காட்டுகிறது. தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகள் இந்த அழைப்புக்குச் செவி சாய்க்க வேண்டும்” என்கிறார் பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த கோ. சுந்தர்ராஜன்.
முதல் முறை வாக்காளர்கள் சுற்றுச்சூழல் படிப்புக்கும் காலநிலை கல்விக்கும் இடையிலான வேறுபாட்டை அறிந்திருக்கவில்லை என்பதையும் இக்கணக்கெடுப்பு வெளிக்காட்டியது. சுற்றுச்சூழல் படிப்பானது சூழல் அமைவுகள், வளங்குன்றா வளர்ச்சிக்கான நடவடிக்கைகள் உள்ளிட்டவற்றில் கவனம் செலுத்துகையில், காலநிலை கல்வியானது மனித நடவடிக்கைகள் சுற்றுச்சூழலில் ஏற்படுத்திய தாக்கம் மற்றும் அதற்கான தீர்வுகளில் கவனம் செலுத்துகிறது,
84% பேர் காலநிலை மாற்றம் குறித்த அறிவை தங்கள் அன்றாட நடவடிக்கைகளில் பிணைத்துப் பார்ப்பதாகத் தெரிவித்தாலும் குழு விவாதங்களில் சுற்றுச்ச்சூழல் மற்றும் காலநிலை ஆகிய வார்த்தைகளை ஒன்றுக்கொன்று மாற்றாகப் பயன்படுத்தியதும் மரம் நடுதல், நெகிழியைத் தவிர்த்தல் போன்ற நடவடிக்கைகளை காலநிலை மாற்றத்துக்கு எதிரான நடவடிக்கைகளாக அவர்கள் கூறுவதைக் காண முடிந்தது.
காலநிலை கல்வியின் தரம் குறித்தும் இக்கணக்கெடுப்பில் ஆராயப்பட்டது. பதிலளித்தவர்களில் 73% பேர் தங்கள் கல்வியின் மூலம் காலநிலை மாற்றம் குறித்து போதுமான அளவு அறிந்துள்ளதாகத் தெரிவித்தனர். ஆனால், குழு விவாதங்களில் பங்கேற்பாளர்கள் தங்கள் வகுப்பறைகளில் காலநிலை கல்வியின் நிலை மற்றும் அது எவ்வாறு போதுமானதாக இல்லை என்பதைப் பற்றிப் பேசியபோது முற்றிலும் முரணாக இருந்தது. பதிலளித்தவர்களில் 82% பேர் தங்கள் பள்ளியில் காலநிலை மாற்றம் குறித்து புதிய மற்றும் குறிப்பிடத்தக்க ஒன்றைக் கற்றுக்கொண்டதாகக் கூறினர், ஆனால், இதில் பெரும்பான்மையானவர்கள் (46%) புவி வெப்பமடைதல் பற்றி மட்டுமே கற்றுக்கொண்டதாகத் தெரிவித்தனர். 61% பேர் காலநிலை குறித்த அறிவு தங்களுக்கு இருப்பதாக ஓரளவு நம்பிக்கையுடன் கூறினர். ஆனால், குழு விவாதத்தின்போது தங்களுக்கு காலநிலை குறித்து இன்னும் அறிந்துகொள்ள வேண்டியிருப்பதாகத் தெரிவித்தனர்.
இதுகுறித்துப் பேசிய அசார் அமைப்பின் காலநிலை கல்வி பிரிவின் தலைவர் பல்லவி படாக் “காலநிலை மாற்ற பாடத்திட்டம் மற்றும் கற்பித்தல் குறித்து ஒத்த சிந்தனை இல்லை என்பதை இது குறிக்கிறது.
இளைஞர்கள் காலநிலை நடவடிக்கைக்காக என்ன அறிவு மற்றும் திறன்களை வைத்திருக்க வேண்டும் மற்றும் பெற வேண்டும் என்பதிலும், காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படும் தங்கள் எதிர்காலத்தைச் சமாளிக்க எதைக் கொண்டிருக்க வேண்டும் என்பதிலும் இளைஞர்கள் தெளிவில்லாமல் இருக்கின்றனர்” எனக் குறிப்பிட்டார்.
கணக்கெடுப்பின் முக்கிய முடிவுகள்
- பதிலளித்தவர்களில் பெரும்பான்மையானவர்கள் (39%) அவர்கள் பெற்ற சுற்றுச்சூழல் கல்வி சிறந்தது என்றும், 25% பேர் சராசரி தான் என்றும் மதிப்பிட்டனர்.
- 73% பேர் தங்கள் கல்வியின் மூலம் காலநிலை மாற்றம் குறித்து போதுமான அளவு அறிந்துள்ளதாகத் தெரிவித்தனர். ஆனால், குழு விவாதங்களில் பங்கேற்பாளர்கள் தங்கள் வகுப்பறைகளில் காலநிலை கல்வியின் நிலை மற்றும் அது எவ்வாறு போதுமானதாக இல்லை என்பதைப் பற்றிப் பேசியபோது முற்றிலும் முரணாக இருந்தது.
- 82% பேர் தங்கள் பள்ளியில் காலநிலை மாற்றம் குறித்து புதிய மற்றும் குறிப்பிடத்தக்க ஒன்றைக் கற்றுக்கொண்டதாகக் கூறினர், ஆனால், இதில் பெரும்பான்மையானவர்கள் (46%) புவி வெப்பமடைதல் பற்றி மட்டுமே கற்றுக்கொண்டதாகத் தெரிவித்தனர்
- 61% பேர் காலநிலை குறித்த அறிவு தங்களுக்கு இருப்பதாக ஓரளவு நம்பிக்கையுடன் கூறினர். ஆனால், குழு விவாதத்தின்போது தங்களுக்கு காலநிலை குறித்து இன்னும் அறிந்துகொள்ள வேண்டியிருப்பதாகத் தெரிவித்தனர்.
- 84% பேர் காலநிலை மாற்றம் குறித்த அறிவை தங்கள் அன்றாட நடவடிக்கைகளில் பிணைத்துப் பார்ப்பதாகத் தெரிவித்தாலும் குழு விவாதங்களில் சுற்றுச்ச்சூழல் மற்றும் காலநிலை ஆகிய வார்த்தைகளை ஒன்றுக்கொன்று மாற்றாகப் பயன்படுத்தியதும் மரம் நடுதல், நெகிழியைத் தவிர்த்தல் போன்ற நடவடிக்கைகளை காலநிலை மாற்றத்துக்கு எதிரான நடவடிக்கைகளாக அவர்கள் கூறியதைக் காண முடிந்தது.
- பதிலளித்தவர்களில் பெரும்பாலோர் காலநிலை மாற்றம் குறித்த எதிர்மறையான உணர்வுகள் தஙகளுக்கு இருப்பதாக, அதாவது பயம் (23%) முதல் பதட்டம் (12%) வரை உள்ளதாகத் தெரிவித்தனர், 20% பேர் மட்டுமே எதிர்காலத்திற்கான நம்பிக்கை இருப்பதாகத் தெரிவித்தனர்.
- 71% பேர் காலநிலை விழிப்புணர்வு என்பது காலநிலை கல்வி உரையாற்ற வேண்டிய மிக முக்கியமான தலைப்பு என்று நம்பினர், அதைத் தொடர்ந்து தழுவல் (40%) மற்றும் காலநிலை நடவடிக்கை (39%)
- 50% க்கும் அதிகமானோர் காலநிலை கல்வியை கற்றல் முறைகளில் இணைப்பது மிகவும் முக்கியம் என்று கருதுகின்றனர், அதே நேரத்தில் கிட்டத்தட்ட 90% பேர் இது ஓரளவு முக்கியமானது என்றும் நம்புகிறார்கள். 9% பேர் மட்டுமே இது முக்கியமல்ல என்று கருத்து தெரிவித்துள்ளனர்
- 56% காலநிலை கல்வியானது, காலநிலை சவால்களைப் புரிந்துகொள்வதற்கும் எதிர்கொள்வதற்கும் மாணவர்களுக்கு அதிகாரம் அளிக்கிறது என்று நம்புகிறார்கள்.
- பங்கேற்பாளர்கள் பொருளாதார நெருக்கடி மற்றும் சுகாதார நெருக்கடிக்கு அடுத்தபடியாக அவர்கள் கவலைப்படும் மிக முக்கியமான நெருக்கடியாக காலநிலை நெருக்கடியை மதிப்பிட்டனர். இது காலநிலை இளைஞர்களின் பார்வையில் முக்கியத்துவம் பெறுவதைக் காட்டுகிறது.
- 52% பேர் காலநிலை நெருக்கடிக்கு அரசாங்கமே காரணம் என்றும் 25% பேர் தனிநபர்கள் காரணம் என்றும், 15% பேர் தொழிற்சாலைகள் காரணம் என்றும் கூறியுள்ளனர்
- காலநிலை நெருக்கடியைச் சமாளிப்பதற்கான பயனுள்ள வழிகளாக காலநிலை கல்வி மற்றும் விழிப்புணர்வை 55% பேரும், 52 % பேர் நிலையான போக்குவரத்து என்றும் 50% புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வளர்ச்சி என்றும் கூறியுள்ளனர்
- 72% பேர் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள பன்னாட்டு ஒத்துழைப்பு அவசியம் எனக் கூறினர்.
- 62% பேர் காலநிலை நெருக்கடி தொடர்பாக அரசாங்கம் போதுமான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக பதிலளித்தனர்.
பரிந்துரைகள்
- பாடத்திட்டங்களை மேம்படுத்துதல், காலநிலை மாற்ற அம்சங்களை உள்ளடக்கிய மற்றும் தகவமைப்பு உத்திகள் மற்றும் பன்னாட்டு அளவிலான மதிப்பாய்வுகளைக் கொண்டு பாடத்திட்டங்களை உருவாக்க வேண்டும்.
- பலதுறை அணுகுமுறை: சமூக சவால்களுடன் அதன் ஒன்றோடு ஒன்றுடனான தொடர்பை முன்னிலைப்படுத்தவும், ஒரு முழுமையான புரிதலை வளர்க்கவும் பாடங்களில் காலநிலை கல்வியை ஒருங்கிணைத்தல் வேண்டும்.
- ஆரம்பகால அறிமுகம்: குழந்தைப் பருவத்திலிருந்தே சுற்றுச்சூழல் கல்வியறிவை வளர்ப்பதற்காக ஆரம்ப மற்றும் இடைநிலைப் பள்ளிகளில் வயதுக்கு ஏற்ற காலநிலை கல்வி பாடங்களை அறிமுகப்படுத்துதல்.
- படிப்படியான கற்றல்: வயதுக்கு ஏற்ற காலநிலை கற்றலை உறுதி செய்ய வேண்டும்.
- நேரடி ஈடுபாடு: புரிதல் மற்றும் அர்ப்பணிப்பை ஆழப்படுத்த காலநிலை மாற்றம் தொடர்பான நடைமுறை நடவடிக்கைகள், களப்பணி மற்றும் சமூக திட்டங்களை எளிதாக்குதல்.
- அனுபவம் வழியான கற்றல்: சுற்றுச்சூழல் சவால்களுடன் அவர்களை இணைக்க சோதனைகள், களப் பயணங்கள் மற்றும் வழக்கு ஆய்வுகள் போன்றவற்றில் மாணவர்களை ஈடுபடுத்த வேண்டும்.
- மாணவர் முன்னெடுப்புகள்: வளங்குன்றா வளர்ச்சிக்கான மாணவர் மன்றங்களை நிறுவி நிகழ்ச்சிகள், போட்டிகள் நடத்த ஊக்குவிக்க வேண்டும்.
- தகவல் பரிமாற்றம்: பல்வேறு தளங்களில் காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
- கொள்கை: பள்ளிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிலையங்களிலும் காலநிலை கல்வியை உருவாக்க வேண்டும்.
- அரசியல் உறுதிப்பாடு: அரசியல் கொள்கை மற்றும் வேலைத் திட்டங்களில் காலநிலை மாற்றத்திற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.
- இளைஞர் பங்கேற்பு. பல்வேறு தளங்களிலும் காலநிலை மாற்ற நடவடிக்கைகளில் இளைஞர்கள் பங்கேற்பை உறுதி செய்ய வேண்டும்.
- தொடர்ச்சியான முன்னேற்றம்: காலநிலை கல்வித் திட்டங்களின் செயல்திறனைக் கண்காணிக்கவும் மேம்படுத்தவும் வழக்கமான மதிப்பீடு மற்றும் விமர்சனங்களைப் பெற வழிமுறைகளை நிறுவ வேண்டும்.
முழு அறிக்கைக்கு: https://thecen.in/cdn/uploads/Final-Report-Perception-Survey-on-First-Time-Voters.pdf