ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான கோடை காலத்தில் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வெப்ப அலையின் தாக்கம் அதிகரிக்கும் என இந்திய வானிலை ஆய்வுத் துறை கணித்துள்ளது.
டெல்லியில் நடந்த செய்தியாளர் சந்திப்பின்போது ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான கோடை கால வானிலை முன்னறிவிப்பையும் ஏப்ரல் மாதத்தின் மழைப்பொழிவு மற்றும் வெப்பநிலை குறித்த முன்னறிவிப்பையும் இந்திய வானிலை ஆய்வுத்துறை வெளியிட்டது.
”ராஜஸ்தான், மத்திய பிரதேசம், குஜராத், உத்தர பிரதேசம், சட்டீஷ்கர், ஆந்திர பிரதேசம், தெலங்கானா, ஒடிஹா ஆகிய பகுதிகளில் ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் இயல்பைவிட அதிக வெப்ப அலைகளின் தாக்கம் இருக்கும் எனவும் இயல்பாக 8 – 10 நாட்கள் நிலவும் வெப்ப அலைகள் இம்முறை 10 – 20 நாட்கள் நிலவக்கூடும்” என இந்தியவானிலை ஆய்வுத்துறைத் தலைவர் மிருத்யுஜ்செய் மொகபத்ரா தெரிவித்தார்.
ஏப்ரல் – ஜூன் வரையிலான கோடை காலத்தில் அதிகபட்ச வெப்பநிலையானது, இந்தியாவின் கிழக்கு, வடகிழக்கு மற்றும் வடமேற்குப் பகுதிகளின் சில இடங்களைத் தவிர்த்து நாடு முழுவதும் பெரும்பாலான இடங்களில் இயல்பைவிட அதிகமாகவே இருக்கும் என வானிலை ஆய்வுத்துறை கணித்துள்ளது. இதேகாலத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பு முதல் இயல்புக்கு அதிகமாக வடமேற்கு மற்றும் வடகிழக்கு இந்தியாவின் சில பகுதிகளைத் தவிர்த்து நாடு முழுமைக்கும் நிலவக்கூடும் எனவும் வானிலை ஆய்வுத்துறை தெரிவித்துள்ளது.
வெப்ப அலைகளைப் பொறுத்தவரை, ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் தென் தீபகற்ப இந்தியா, மத்திய மற்றும் கிழக்கு இந்தியா, வடமேற்கு இந்தியாவின் சமவெளிப் பகுதிகளில் வெப்ப அலைகளின் தாக்கம் இயல்பைவிட அதிகமாக இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதே காலத்தில் இந்தியாவில் மக்களவைத் தேர்தலும் நடைபெற உள்ளதால் அதை எதிர்கொள்வதற்கான வழிகாட்டுதல்களையும் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு வழங்கியிருப்பதாக வானிலை ஆய்வு மையத் தலைவர் தெரிவித்துள்ளார்.
வெப்ப அலைகளின் தாக்கம் குறித்து வானிலை ஆய்வு மையத் தலைவர் மொகபத்ரா மேலும் பேசுகையில் ”வெப்ப அலைகளின்போது உயர்ந்த வெப்பநிலை குறிப்பிடத்தக்க அபாயங்களை ஏற்படுத்துகிறது, குறிப்பாக வயதானவர்கள், குழந்தைகள் மற்றும் முன்பே உடல்நல பாதிப்பு கொண்டவர்கள் போன்ற பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு, இது வெப்ப சோர்வு மற்றும் வெப்ப வாதம் போன்ற வெப்பம் தொடர்பான நோய்களை ஏற்படுத்தும். நீண்ட காலத்திற்கு அதிக வெப்பத்தை உள்வாங்க நேரிட்டால் நீரிழப்புக்கு வழிவகுக்கும் என்றும், மின் கட்டமைப்புகள் மற்றும் போக்குவரத்து அமைப்புகள் போன்ற உள்கட்டமைப்புகளை இது பாதிக்கும்” என்றும் அவர் கூறினார். இந்த சவால்களை எதிர்கொள்ள, குளிரூட்டும் மையங்களை உருவாக்குதல், பாதிக்கப்பட்ட பகுதிகளில் நகர்ப்புற வெப்பத் தீவு விளைவுகளைத் தணிப்பதற்கான உத்திகளை செயல்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளை அரசுகள் எடுக்க வேண்டியது அவசியம் என்றும் அவர் கூறினார்.
இந்த செய்தியாளர் சந்திப்பு நடந்த அன்று நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் அதிக வெப்பம் பதிவானது. ஆந்திராவின் ராயலசீமாவில், அதிகபட்சமாக 42.2 °C வெப்பநிலை பதிவாகியது. மத்திய மகாராஷ்டிராவில் 42.0 °C, வடக்கு உள் கர்நாடகாவில் 41.6 °C வெப்பநிலையும் பதிவானது. சட்டீஸ்கரின் ராஜ்நந்தகானில் 41.5 °C வெப்பநிலை பதிவு. இது இயல்பைவிட 6.9°C அதிகமாகும்.
தமிழ்நாட்டில் ஈரோடு மாவட்டத்தில் அதிகபட்ச வெப்பநிலை 40.4° C ஆக பதிவாகியது. இது இயல்பைவிட 2.3 °C அதிகம். கரூர் பரமத்தியில் அதிகபட்ச வெப்பநிலை 40.2°C ஆக பதிவானது, இது இயல்பைவிட 3.1° C அதிகமாகும்.
தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத் தலைவர் கமல் கிஷோர் பேசுகையில், “வெப்ப அலை பாதிப்புக்குள்ளாகும் 23 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கு மார்ச் மாதத்திலேயே ஆலோசனைகள் வழங்கப்பட்டு, இந்த மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கான வெப்ப செயல் திட்டங்கள் (HAPs) தயாராக உள்ளன. வானொலி , தொலைக்காட்சி மற்றும் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி விழிப்புணர்வு உருவாக்கும் பிரச்சாரத்தையும் பேரிடர் மேலாண்மை ஆணையம் நடத்தி வருகிறது. வரவிருக்கும் 2024 பொதுத் தேர்தலைக் கருத்தில் கொண்டு, வெப்ப அலை தாக்கத்திலிருந்து பாதுகாப்பதில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு வழிகாட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது” எனக் கூறினார்.
20240401_pr_2911