தமிழ்நாட்டை காலநிலை மாற்றத்தின் தாக்கத்தை எதிர்கொள்ளும் வகையில் திறன்மிகு மாநிலமாக மாற்றும் நோக்கில் தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று துவக்கி வைத்தார்.
சென்னை எம்.ஆர்.சி. நகரில் டிசம்பட் 8 மற்றும் 9 ஆகிய இரண்டு தேதிகளிலும் தமிழ்நாட்டின் முதல் காலநிலை உச்சி மாநாடு நடைபெற்றது. இதில் பல்வேறு அரசுத்துறை செயலர்களும் அறிவிலாளர்களும் உரையாற்றினர். இந்த மா நாட்டின் நிறைவு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ”இந்தியா கார்பன் சமநிலையை அடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ள 2070- ஆம் ஆண்டிற்கு முன்னராகவே தமிழ்நாடு கார்பன் சமநிலையை அடையும்” என அறிவித்தார்.
காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளை குறைக்கும் பொருட்டு பல்வேறு தொலைநோக்கு முயற்சிகளை மேற்கொள்வதில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக திகழ்கிறது. இம்முயற்சி பாதையில், தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கம், பசுமை தமிழ்நாடு இயக்கம் மற்றும் தமிழ்நாடு சதுப்புநில இயக்கம் ஆகிய மூன்று முக்கிய இயக்கங்களை தமிழ்நாடு அரசு ஏற்படுத்தியுள்ளது. காலநிலை செயல்திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்ல, தமிழ்நாடு பசுமை காலநிலை மாற்ற நிறுவனம் என்னும் சிறப்பு செயல்பாடு நிறுவனத்தை தமிழகம் அமைத்துள்ளது.
இதில், பசுமை தமிழ்நாடு இயக்கம் கடந்த செப்டம்பர் மாதமும், தமிழ்நாடு சதுப்பு நில இயக்கம் கடந்த ஆகஸ்ட் மாதமும் தொடங்கப்பட்ட நிலையில் இன்றைய தினம் தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கமும் தொடங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் வேறெந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் முதல் முறையாக தமிழ்நாட்டில் காலநிலை மாற்றத்திற்கென தொடங்கப்பட்ட இயக்கம் இது.
தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த பசுமை இல்ல வாயுக்களின் வெளியேற்றத்தைக் குறைப்பதற்கான திட்டங்களை வகுப்பது, பொதுப்போக்குவரத்து பயன்பாட்டை அதிகரித்தல், பசுமையான ஆற்றல் மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் பயன்பாட்டின் மூலம் உமிழ்வைக் குறைப்பதற்கான உத்திகளை மேம்படுத்துவது இந்த காலநிலை மாற்றத்தின் முக்கிய இலக்காகும்.
தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கத்தின் முக்கிய இலக்குகள்
- காலநிலை மாற்றத்தினால் இச்சமூகத்தின் கட்டமைப்பில் ஏற்படபோகும் பல்வேறு பாதிப்புகளை புரிந்துகொள்ளவும், கடல்மட்ட உயர்வு, விவசாய உற்பத்தி பாதிப்பு முதலிய காலநிலை பிரச்சனைகளையும், இதனால் மக்களுக்கு ஏற்படப் போகும் இழப்புகளையும் முன்கூட்டியே கண்டறிந்து அவற்றை குறைப்பதற்கான வழிகாட்டுதலையும் வழங்கும்.
- ஆராய்சிகள் & அறிவியல் சான்றுகள் துணைக்கொண்டு, காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான வலுவான உத்திகளை உருவாக்குதல். பல்வேறு துறைகளின் ஒருங்கிணைந்த திட்டமிடல் மூலம் காலநிலை செயல்பாடுகளில் அதிகபட்ச செயல்திறனை அடைதல்.
- வளங்குன்றா வளர்ச்சி, காலநிலை தணிப்பு மற்றும் தகவமைப்பு நடவடிக்கைகள் ஆகியவற்றுக்கு இடையே உள்ள இணை பலன்களை அதிகரித்தல்.
- காலநிலை மாற்ற தகவமைத்தலுக்கான தேசிய நிதி (NAFCC-National Adaptation Fund for Climate Change), காலநிலை பசுமை நிதி (GFC-Green Climate Fund) போன்ற தேசிய மற்றும் சர்வதேச காலநிலை நிதிஆதாரங்களை தமிழ்நாடு காலநிலை திட்டத்தின் முயற்சியால் பெறுதல்.
- தமிழ்நாட்டில் உள்ள கல்வி நிலையங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் ஆராய்ச்சி நிலையங்களை காலநிலை ஆராய்ச்சிகளுக்கும் கொள்கை உருவாக்கத்திற்கும் முழுமையாக பயன்படுத்துதல். மற்றும் இந்நிறுவனங்களுடன் இணைந்து புதிய தொழில்நுட்பங்களை உருவாக்குதல். கல்வி நிலையங்களில் காலநிலை கல்வியை நடைமுறைப்படுத்தல்.
- தமிழ்நாடு காலநிலை மாற்ற திட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான காலநிலை நடவடிக்கைகளில் அதிகம் முக்கியத்துவம் வழங்கப்படும்.
- தமிழ்நாட்டின் வனப்பரப்பை 23.7% இருந்து 33% ஆக உயர்த்த ஏற்கனவே தமிழ்நாடு அரசால் கொண்டுவரப்பட்டுள்ள பசுமை தமிழ்நாடு இயக்கம் (Green Tamil Nadu Mission), சதுப்பு நில பாதுகாப்பிற்காக கொண்டுவரப்பட்டுள்ள தமிழ்நாடு சதுப்பு நில இயக்கம் (Tamil Nadu Wetland Mission) ஆகிய திட்டங்களுடன் தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கம் இணைந்து செயல்படும்.
- பேரிடர்களை திறன்பட கையாளவும் அதன் பாதிப்புகளில் இருந்து எளிதில் மீண்டு வரவும் தேவையான கட்டமைப்புகளை தமிழ்நாடு காலநிலை மாற்ற திட்டம் உருவாக்கும்.
- கழிவு நீர், திடக்கழிவு, மின்சாதன கழிவு, மருத்துவக்கழிவு ஆகிய கழிவுகளை பாதுகாப்பாகவும், சூழலியல் பாதிப்புகள் இல்லாத வகையிலும் மேலாண்மை செய்யவும், பிளாஸ்டிக் கழிவு பிரச்னைக்கான தீர்வினை எட்டவும் இத்திட்டம் மூலம் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
- காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் ஆரோக்கிய சீர்குலைவுகளை புரிந்துகொள்ள, மனித ஆரோக்கியம், விலங்குகளின் ஆரோக்கியம், சூழலியல் ஆரோக்கியம் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரே ஆரோக்கியம் (One Health) எனும் அணுகுமுறையை தமிழ்நாடு காலநிலை மாற்ற திட்டம் பின்பற்றும்.
இத்திட்டத்தைத் துவக்கி வைத்துப் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் “ ஐ.நா. அமைப்பாக இருந்தாலும் – உலகின் பல நாடுகளாக இருந்தாலும் ஒரே ஒரு பிரச்சினையைப் பற்றிதான் அனைவரது கவலையும்! அதுதான் காலநிலை மாற்றம்! மானுடத்தின் மிக முக்கியப் பிரச்சினையாக காலநிலை மாற்றம் என்பது இருக்கிறது. இதனைத் தமிழ்நாடு அரசும் மிக முக்கியப் பிரச்சினையாகக் கருதுகிறது என்பதை ஆட்சிக்கு வந்தது முதல் நான் தொடர்ந்து சொல்லி வருகிறேன். அதனால்தான், இந்தியாவிலேயே மற்ற மாநில அரசுகளுக்கு முன்மாதிரியாக காலநிலை மாற்ற இயக்கத்தை துவக்கி வைப்பதில் நான் பெருமை அடைகிறேன்” எனக் கூறினார்.
மேலும் அவர் பேசுகையில் “தமிழ்நாடு இந்தியாவிற்கு சமூகநீதியில் மட்டுமல்ல, சூழலியல் நீதியிலும் வழிகாட்டும் என்று உறுதியாக தெரிவித்துக் கொள்கிறேன். வளர்ச்சி – தொழில் மேம்பாடு என்பதில் ஒரு பக்கம் அக்கறை செலுத்தினாலும் இன்னொரு பக்கம் சுற்றுச்சூழல், இயற்கை ஆகியவற்றிலும் அக்கறை செலுத்தியாக வேண்டும். இயற்கையுடன் இயைந்த வாழ்வும் வேண்டும். இயற்கையைக் கெடுக்காத வளர்ச்சியும் வேண்டும். இதுதான் எங்கள் அணுகுமுறை! இந்தியா கார்பன் சமநிலையை அடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ள 2070- ஆம் ஆண்டிற்கு முன்னராகவே தமிழ்நாடு கார்பன் சமநிலையை அடையும் என்று சொல்லிக்கொள்வதில் நான் பெருமைப்படுகிறேன். அதற்கான அனைத்து திட்டங்களையும் அரசு செயல்படுத்தும் என்று தெரிவித்துக்கொள்கிறேன்” எனக் கூறினார்
மேலும் ஆறு முக்கிய அறிவிப்புகளையும் தமிழக முதலமைச்சர் இம்மாநாட்டில் அறிவித்தார்.
- “பசுமைத் திட்டங்களுக்கான” அனுமதியை இனிமேல் ஒற்றைச் சாளர முறையில் வழங்கும் வகையில், தொழில்துறையில் உள்ள Guidance TN-ஆல் திட்டங்கள் வகுக்கப்படும். இந்த முடிவு 2030-க்குள் தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை ஒரு ட்ரில்லியன் டாலராக உயர்த்தும் முயற்சியில் பெரும் பங்கு வகிக்கும்.
- புதுப்பிக்கக்கூடிய ஆற்றலைப் பயன்படுத்தி உற்பத்தியாகும் மின்சாரத்தை அதிகரிக்கவும் அவற்றை எடுத்துச்செல்லவும் தனியான பசுமை வழித்தடம் (Green Corridor) உருவாக்கப்படும்.
- காற்றாலைகளைப் புதுப்பிப்பதற்கான புதிய கொள்கை (Re-Powering Policy) எரிசக்தித் துறையால் வெளியிடப்படும்.
- அனைத்துத் திட்டங்களையும், கொள்கைகளையும் காலநிலை மாற்றப் பார்வையில் பார்த்து, ஆய்வுசெய்து செயல்படுத்தவிருக்கிறோம்.
- தமிழ்நாடு அரசு 1,000 கோடி ரூபாயில் Green Climate Fund – பசுமை நிதியம் ஒன்றை உருவாக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். அதன் முதற்கட்டமாக, நூறு கோடி ரூபாய் தமிழ்நாடு அரசின் சார்பில் வழங்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் சூழல் சார்ந்த கட்டுமானங்களை உருவாக்குவதற்கு தேசிய அளவிலும் உலக அளவிலும் நிதி திரட்ட இந்த நிதியம் பயன்படுத்தப்படும்.
- காலநிலை மாறுபாடு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, சுழற்சிப் பொருளாதாரம், வளங்குன்றா வளர்ச்சி போன்ற துறைகளில் புதிய நிறுவனங்களைத் துவங்குவோருக்கு தமிழக அரசு சிறப்புத் திட்டங்களை அறிவிக்கும்.
முன்னதாக தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கத்தின் ஆவணத்தையும் முதல்வர் வெளியிட்டார். மாவட்ட அளவிலான காலநிலை இயக்கம், தமிழக முதல்வரின் பசுமை புத்தாய்வுத் திட்டம், பசுமை பள்ளிக்கூடங்கள் திட்டம், அடுத்த 5 ஆண்டுகளில் சர்வதேச நீலக்கொடி சான்றிதழை பெற 10 கடற்கரைகள் மேம்படுத்துவதற்கான முன்னெடுப்புகள், காலநிலை மாற்றம் குறித்த ஆய்வுகளை மேற்கொள்வதற்கான மையம், பசுமையான தீர்வுகளின் மூலம் கடற்கரை வாழிடங்களை காலநிலை மாற்றத்தின் தாக்கங்களை எதிர்கொள்ளும் வகையில் மேம்படுத்துவது, குப்பைகளை திறம்பட வகைபிரித்து அதனை மறுசுழற்சி செய்து சத்துக்கள் மிக்க மண்ணாகவும் உரமாகவும் மாற்றும் கரிம செறிவூட்டல் திட்டம், கட்டுமானங்களில் ஆற்றலை சேமிக்கும் வகையில் அமைப்பதற்கான வழிகாட்டுதல்களை உருவாக்கும் வளங்குன்றா வாழிட திட்டம், தமிழ்நாட்டில் காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான காலநிலை அறிவியக்கம் போன்ற திட்டங்களையும் இந்த காலநிலை மாற்ற இயக்கத்தின்கீழ் மேற்கொள்ள தமிழ்நாடு அரசு மேற்கொள்ளப்போவதாக அந்த ஆவணத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
- சதீஷ் லெட்சுமணன்