ஆரோவில் பன்னாட்டு நகரத்தில் கட்டப்படும் அனைத்து கட்டுமான நடவடிக்கைகளுக்கும் சுற்றுச்சூழல் தாக்க அறிவிக்கை 2006ன் கீழ் அனுமதி பெறுவது அவசியம் என தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயம் தீர்ப்பு.
சுற்றுச்சூழல் விதிகள் ஆரோவில்லைக் கட்டுப்படுத்தாது என்கிற ஆரோவில் நிர்வாகம் மற்றும் ஒன்றிய சுற்றுச்சூழல் துறையின் வாதத்தைத் நிராகரித்தது பசுமைத் தீர்ப்பாயம்.
க்ரவுண் சாலை அமைக்கும் பணிகளைக் கண்காணிக்க குழு அமைப்பு. மாவட்ட ஆட்சியர், வனத்துறை அதிகாரி ஒருவர் கொண்ட குழு அளிக்கும் வழிகாட்டுதலின் அடிப்படையில் மட்டுமே சாலையை அமைக்க வேண்டும் எனவும் தீர்ப்பு.
ஆரோவில் என்பது ஒரு பன்னாட்டு நகரமாகும். உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 50 ஆயிரம் பேர் வசிக்கக் கூடிய நகரமாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த பன்னாட்டு நகரத்தின் பெரும்பாலான பகுதிகள் விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகாவிலும் புதுச்சேரியின் எல்லைக்குள் சில பகுதிகளும் அமைந்துள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் ஆரோவில் பன்னாட்டு நகர வளர்ச்சிக் குழுவானது “க்ரவுன் சாலை” எனும் திட்டத்திற்காக 500க்கு மேற்பட்ட மரங்களை வெட்ட திட்டமிருந்தது. டிசம்பர் 5ஆம் தேதி நள்ளிரவில் சில மரங்கள் வெட்டப்பட்டன. இதனைக் கடுமையாக எதிர்த்த ஆரோவில் வாசிகளை விழுப்புரம் காவல்துறை கைது செய்தது. மரங்களை வெட்டும் பணிக்காக வந்த ஜே.சி.பி. வாகனத்தை ஆரோவில் குடியிருப்பு வாசிகள் தடுத்தபோது ஆரோவில் நிர்வாகத்தால் ஏவப்பட்ட குண்டர்களால் அவர்கள் தாக்கப்பட்டனர்.
இத்திட்டத்தை சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அனுமதி இல்லாமல் செயல்படுத்துவதால் தடைகோரி தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் நவ்ரோஸ் மோடி என்பவர் தாக்கல் செய்த மனுவில் 28.04.2022 அன்று நீதித்துறை உறுப்பின கே.ராமகிருஷ்ணன் மற்றும் நிபுணத்துவ உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர் கொண்ட அமர்வு தீர்ப்பு வழங்கியது.
ஆரோவில் பன்னாட்டு நகரத்தில் நடைபெறும் கட்டுமானப் பணிகளுக்கு சுற்றுச்சூழல் தாக்க அறிவிக்கையின் கீழ் அனுமதி அவசியமில்லை என்கிற ஆரோவில் நிர்வாகம் மற்றும் ஒன்றிய சுற்றுச்சூழல் துறையின் வாதத்தை பசுமைத் தீர்ப்பாயம் நிராகரித்துவிட்டது. ஆரொவில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 778 ஹெக்டேர் பரப்பளவிலான இடத்திலும் மேற்கொள்ளப்படவுள்ள நகரமைப்புத் திட்டத்தின் தளவமைப்பு, சாலைகள் அமையவுள்ள இடம், தொழிற்சாலைகள் அமைவிடம், பிற செயல்பாடுகளின் அமைவிடத்துடன் தயாரித்து சுற்றுச்சூழல் தாக்க அறிவிக்கை 2006ன் பிரிவு 8 (b)ன் கீழ் சுற்றுச்சூழல் அனுமதி பெற்றுதான் இனிமேல் திட்டங்களை மேற்கொள்ள வேண்டும் எனவும் அதுவரை ஆரொவில்லில் புதிதாக எந்தப் பணிகளையும் மேற்கொள்ளக் கூடாது எனவும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
மேலும் தற்போது கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் க்ரவுண் சாலையின் பணிகள் பெருமளவில் முடிவடைந்து விட்டதால் அத்திட்டத்தை மற்றும் நிபந்தனைகளுடன் தொடரலாம் என தீர்ப்பாயம் கூறியுள்ளது.
இப்பணிகளை மேற்கொள்வதற்கான வழிகாட்டுதல்களை வழங்க மாவட்ட ஆட்சியர், வனத்துறை உயரதிகாரி கொண்ட குழு ஒன்றை அமைத்துள்ள தீர்ப்பாயம், மரங்களை வெட்டாமல், நீரோடைகளைத் தடுக்காமல் சாலைப் பணிகளைத் தொடர்வதற்கான வழிகாட்டுதல்களை ஆராய்ந்து 2 மாதத்திற்குள் ஆரொவில் நிர்வாகத்திடம் வழங்கவும் உத்தரவிட்டுள்ளது. இக்குழு வழங்கும் வழிகாட்டுதல்களின் அடிப்படையிலேயே சாலை அமைக்கும் பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
– சதீஷ் லெட்சுமணன்
Auroville judgment