குப்பைகளை தரம் பிரித்து கொடுக்காவிட்டால் ரூ.100 அபராதம் என சென்னை மாநகராட்சி அறிவிப்பு

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் குப்பைகளை தரம் பிரித்து வழங்காத தனிநபர் வீடுகளுக்கு திடக்கழிவு மேலாண்மை துணை விதிகள் 2019 ன்படி ரூ.100 / – அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் “ பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களிலும் நாள்தோறும் சராசரியாக 5,200 மெட்ரிக் டன் திடக்கழிவுகள் சேகரிக்கப்படுகின்றன . நாள்தோறும் தூய்மைப் பணியாளர்களால் இல்லங்களில் குப்பை சேகரிக்கப்படுகிறது . ஒரு சில வீடுகளில் மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பைகள் என முறையாக தரம் பிரித்து வழங்கப்படுகின்றன . சில வீடுகளில் அவ்வாறு குப்பைகள் தரம் பிரித்து வழங்கப்படுவது இல்லை . தரம் பிரிக்கப்பட்ட குப்பைகள் பரவலாக்கப்பட்ட குப்பை பதனிடும் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன . மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பெறப்படும் தரம் பிரிக்கப்படாத குப்பைகள் மாநகராட்சியின் வள மீட்பு மையங்களில் ( RRC ) பிரித்தெடுக்கப்பட்டு மக்காத உலர்க்கழிவுகள் மறுசுழற்சியாளர்களுக்கு வழங்கப்படுகிறது . பெறப்படும் குப்பைகளில் மக்கும் ஈரக்கழிவுகள் உரம் தயாரிக்கும் மையங்களில் உரமாகவும் , எரிவாயு மையங்களில் உயிரி எரிவாயுவாகவும் ( Bio CNG ) மறுசுழற்சி செய்யப்படுகிறது . மேலும் , தென்னை மரக் கழிவுகள் போன்ற தோட்டக் கழிவுகள் நார்கள் மற்றும் பயோ உருளைகளாகவும் மறுசுழற்சி செய்யப்படுகின்றன . பிளாஸ்டிக் கழிவுகள் கட்டுகளாக கட்டப்பட்டு ( Plastic Bale ) மறுசுழற்சியாளர்களிடம் மற்றும் சிமெண்ட் ஆலைகளுக்கு எரிபொருளாக கொடுக்கப்படுகின்றன . மறுசுழற்சி செய்யப்பட்ட குப்பைகளை தவிர்த்து மீதமுள்ள குப்பைகள் கொடுங்கையூர் மற்றும் பெருங்குடி குப்பைக் கொட்டும் வளாகங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றன . குப்பைக் கொட்டும் வளாகங்களுக்கு குப்பைகளை கொண்டு செல்வதை தவிர்க்கும் வகையில் மாநகராட்சியின் சார்பில் மேற்குறிப்பிட்ட பல்வேறு வகையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன . திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2016 ன்படி குப்பைகளை பொதுமக்கள் மக்கும் , மக்காத குப்பைகளாக பிரித்து அன்றாடம் வழங்குவது மிகவும் இன்றியமையாத ஒன்று . எனவே , பெருநகர சென்னை மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மை துணை விதிகள் 2019 ன் படி , மக்கும் , மக்காத குப்பைகளாக தரம் பிரித்து வழங்காத தனி நபர் மற்றும் வீடுகளுக்கு ரூ .100 / – அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு ரூ .1000 / – , பெருமளவு திடக்கழிவு உற்பத்தியாளர்களுக்கு ( Bulk Waste Generators ) ரூ .5000 / -மும் அபராதம் விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
அதன்படி , 21.04.2022 முதல் 05.05.2022 வரை மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வில் குப்பைகளை முறையாக பிரித்து மறுசுழற்சி செய்யாத 35 பெருமளவு திடக்கழிவு உற்பத்தியாளர்களுக்கு ( Bulk Waste Generators ) ரூ .1,49,500 / – அபராதம் விதிக்கப்பட்டுள்ளது . பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் குப்பைகளில் தரம் பிரித்து வழங்காத தனிநபர் வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு 15 நாட்களுக்கு கால அவகாசம் வழங்கி நோட்டீஸ் வழங்கப்பட உள்ளது . நோட்டீஸ் வழங்கிய 15 நாட்களுக்கு பிறகும் குப்பைகளை தரம் பிரித்து வழங்காத தனிநபர் வீடுகளுக்கு ரூ .100 / – மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு ரூ .1000 / -மும் திடக்கழிவு மேலாண்மை துணை விதிகள் 2019 ன்படி அபராதமாக விதிக்கப்படும்” எனக் கூறப்பட்டுள்ளது.

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments