காலநிலை மாற்றமும் இடப்பெயர்வும்

உலகலவில் மக்கள் பல்வேறு காரணங்களுக்காக ஓர் இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு நகர்வதை இடப்பெயர்வு என்கிறோம். மனித இடப்பெயர்வு கற்காலம் தொட்டு உணவு, நீர் மற்றும் பல்வேறு காரணங்களுக்காக கண்டம் விட்டு கண்டம் கூட மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.

பொதுவாக மக்கள் பழங்காலம் தொட்டே இயற்கைப் பேரழிவுகளால் இடப்பெயர்வு செய்துள்ளனர். பண்டைய சிறப்புமிக்க நாகரிகங்களில் ஒன்றான சிந்துசமவெளி நாகரிகம் அழிந்து மக்கள் இடப்பெயர்ந்ததற்கு கூட இயற்கைபேரிடர் காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

அவை எப்போதாவது நடப்பவையாக இருந்த இடம்பெயர்வுகள், தற்பொழுது மனிதர்களின் இயற்கை மீதான ஆதிக்கத்தின் விளைவான புவிவெப்பமயமாதலின் எதிர்வினையாக இயற்கை பேரிடர்கள் தொடர்ச்சியாக ஏற்பட்டு மக்களை நகரவைக்கின்றது. சமூகத்தில் விளிம்புநிலையில் உள்ள மக்களே இதனால் அதிகம் பாதிப்படைந்து இடம்பெயர்கின்றனர்.

இது அவர்களது பொருளாதார சமூக சூழலை மேலும் கடினமாக மாற்றுகிறது. இடம்பெயர்பவர்களை மட்டுமின்றி அவர்கள் எங்கு நகர்கின்றனரோ அங்குள்ளவர்களையும் பாதிக்கிறது. குறிப்பாக இந்தியா போன்ற அதிக மக்கள்தொகை கொண்ட வறுமைமிக்க நாடுகளில் இது மிகப்பெரிய பொருளாதார சிக்கலையும் சமூக சிக்கலையும் ஏற்படுத்துகிறது.

குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளிடம் ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் கல்விகற்கும் சூழலின்மை போன்றவை அதிகரிக்கின்றன.தெற்காசிய நாடுகள் மிகநெருக்கமான மக்கள்தொகை அடர்த்திகொண்டவையாகவும் வளர்ச்சிகுறைந்தவையாகவும் அதிக நகரமயமாதலுக்கு உட்படுபவையாகவும் உள்ளன. அதே சமயம் இந்தநாடுகள் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளை அதிக அளவு எதிர்கொள்கின்றன.

பன்னாட்டு இடப்பெயர்வு கண்காணிப்பு மையம்(IMDC) மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கி(ADB) ஆகியவை இணைந்து அண்மையில் ஒரு அறிக்கையை  வெளியிட்டுள்ளன. அந்த அறிக்கை தெற்காசியாவில் மக்கள் காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் பேரிடர்களால் இடம்பெயர்வதை பற்றிக் கூறுகிறது.

தென்மேற்கு பருவக்காற்று முன் எப்போதையும் விட அதிக காலம் நீடிக்கின்றது அதுமட்டுமின்றி அது வடகிழக்குப் பருவக்காற்றுடன் இணைந்து மிக அதிக மழைப்பொழிவு மற்றும் அதனால் ஏற்படும் வெள்ளபெருக்கிற்கு காரணமாகிறது. இதன் காரணமாக ஆண்டுதோறும் முந்தைய ஆண்டுகளை விட மக்கள் அதிகமாக இடம்பெயர்வதாக சர்வதேச இடப்பெயர்வு கண்காணிப்பு மையம் மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கி கூறியுள்ளது.

இது தெற்காசிய எல்லைக்குள் 2010 முதல் 2021 இடைப்பட்ட காலகட்டத்தில் நடந்துள்ளது. தெற்காசியாவில் இந்த காலகட்டத்தில் 61.4 மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். அதில் பெரும்பங்கு சுமார் 58.6 மில்லியன் மக்கள் காலநிலை தொடர்புடைய பேரிடர்களால் மட்டும் இடம்பெயர்ந்துள்ளனர். இதில் புயல் மற்றும் வெள்ளம் மட்டுமே 90% இடப்பெயர்வுக்கு காரணமாகிறது .இந்த மக்கள் இடப்பெயர்வில் வெள்ளம் பெரும்பங்கு அதாவது 37.4 மில்லியன் மக்களும் அதற்கு  அடுத்ததாக புயலால் 21 மில்லியன் மக்களும் இடம்பெயர்ந்துள்ளனர்.

பொதுவாக தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவக்காற்று காலங்களில் எல்நினோ என்கின்ற காலநிலை அமைப்பு இந்தப் பருவக்காற்று காலத்தை மேலும் தீவிரமாகவும் தொடர்ச்சியாகவும் ஆக்கியுள்ளது. பொதுவாக தென்மேற்கு பருவக்காற்று செப்டம்பர் மாதத்துடன் முடிவடைய வேண்டும். ஆனால், 2021 ஆம் ஆண்டு அது அக்டோபர் மாதம்வரை தொடர்ந்ததன் விளைவாக அது வடகிழக்குப் பருவக்காற்றுடன் இணையவேண்டிய சூழல் ஏற்பட்டு இணைந்துள்ளது.

இந்த நிகழ்வால் அதீத மழைப்பொழிவும் வெள்ளமும் தென்னிந்திய மாநிலங்களை தாக்கியது அதில் தமிழகத்தில் மட்டும் 3,12,000 மக்கள் 2021 நவம்பரில் இடம்பெயர்ந்துள்ளனர் என அறிக்கை கூறுகிறது. காலநிலை மாற்றத்தின் காரணமாக நீண்டகால மற்றும் கணிக்க முடியாத பருவக்காற்று காலம் ஏற்படுகிறது. இதனால் தெற்கு ஆசியாவில் வெள்ளம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். மேலும் இந்த பகுதியில் வெப்ப மண்டல புயலால் 2.1 கோடி மக்கள் உள்நாட்டுக்குள் இடம்பெயர்ந்துள்ளனர்.

2010-2021 காலகட்டத்தில் ஆசிய பசுபிக் பிராந்தியங்களில் சுமார் 22.5 கோடி மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். கிட்டத்தட்ட ஒவ்வொரு ஆண்டும் 1.9 கோடி மக்கள் பேரிடர் காரணமாக இடம்பெயர்ந்துள்ளனர். இந்த இடப்பெயர்வு உலக அளவில் 75 சதவீதத்திற்கும் அதிகம்.இந்த இடப்பெயர்வானது சத்தமில்லாமல் நடந்துவருகிறது.

காலனித்துவ போட்டியின் காரணமாக நடந்த போர்களின் விளைவாக 19ஆம் நூற்றாட்டின் முதல்பாதியில் மக்கள் இடம்பெயர்ந்தனர். அதனைத் தொடர்ந்து எண்ணெய் வளங்களை சுரண்டுவதற்கு போர்கள் இன்றுவரை நடந்துகொண்டுதா இருக்கின்றன. இதனால் மக்கள் இலட்சக்கணக்கில் இடம்பெயர்ந்தும் இடம்பெயர்ந்துகொண்டும் உள்ளனர். ஆனால், உலகில் முன்னெப்பொழுதும் இல்லாத அளவு இடப்பெயர்வு நடக்க உள்ளது.

புவி வெப்பமயமாதல் அதனைத் தொடர்ந்து பனிப்பாறைகள் உருகுதல் காரணமாக கடல்நீர்மட்டம் நாம் நினைத்துபார்க்கமுடியாத அளவு அதிகரித்துவருகிறது. இதன் விளைவாக உலகில் உள்ள அனைத்து கடற்கரைப் பகுதிகளும் உலகின் பல முக்கிய நகரங்களும்(சென்னை,மும்பை, கராச்சி, இலண்டன், டோக்கியோ, சிட்னி)கடல்நீரில் முழ்கும் சூழ்நிலையில் கோடிக்கணக்கான மக்கள் இடம்பெயரவேண்டிய சூழலுக்கு தள்ளப்படுவார்கள். இது ஒரு உலகளாவிய பிரச்சனையாக இருந்தாலும் இது தெற்காசியா போன்ற நாடுகளில் இதன் தாக்கம் மிகப்பெரியது. இந்த பிரச்சனைகளை மனதில்கொண்டு வளர்ச்சியடைந்த நாடுகள் முதல் வளர்ந்துவரும்  நாடுகள் வரை இணைந்து மக்களைக் காக்க ஆக்கப்பூர்வமாக செயல்படவேண்டும்.

  • கார்முகில்
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments