பசுமைத் தொழில்நுட்பம்

சூழ்நிலை மாசுபாட்டின் கடும் விளைவுகளைச் சந்தித்து வரும் உலகம், அதிலிருந்து விடுபட, மாசுபாட்டைக் குறைத் தாக வேண்டும். இதற்காக, பலவகை உத்திகள் அறிஞர்களால் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் ஒன்றுதான் ‘‘பசுமைத் தொழில்நுட்பம்”. ‘பசுமை’ என்ற சொல் இயற்கை வளத்தை குறிக்கிறது. இதற்கு ‘நன்மை’ என்ற பொருளும் உண்டு. ‘தொழில்நுட்பம்’ என்பது அறிவியலின் நடைமுறைப் பயன்பாடே! எனவே, பசுமைத் தொழில்நுட்பம் என்பது, சூழ்நிலைக்கும், நமக்கும் நன்மை தரும் தொழில்நுட்பத்தைக் குறிப்பதாகும். மாசுபாடுகளைக் குறைத்து சுற்றுச்சூழலின் நண்பனாக விளங்கும் இத்தொழில்நுட்பத்தினை, தூய தொழில்நுட்பம் அல்லது சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் என்றும் அழைக்கின்றனர். பசுமை தொழில்நுட்பப் பயன்பாட்டின் ஓர் உதாரணமாக மின்சார உற்பத்தியைக் கருதுவோம். மின்சாரமானது பெருமளவு நிலக்கரியிலிருந்தே உற்பத்தி செய்யப்படுகிறது. இம்முறையினால் ஏற்படும் சூழ்நிலை மாசுபாட்டை உணர்ந்ததால், மாற்று வழியாக, காற்று, நீர், சூரிய ஒளி, ஓதங்கள், உள்ளிட்ட புதுப்பிக்கக்கூடிய இயற்கை மூலப்பொருட்களிலிருந்தும் மின்சாரம் தயாரிக் கப்படுகிறது. இதன் மூலம், மாசுபாட்டைக் குறைக்கலாம். மேலும், இம்முறைகளின் மின் உற்பத்தி திறனை அதிகப்படுத்தும் முயற்ச்சிகளும் ஆராய்ச்சியாளர்களால் தொடர்ந்து மேற் கொள்ளப்பட்டு வருகிறது.

மிக வேகமாக வளர்ந்து வரும் இத்தொழிற் நுட்பமானது கீழ்காணும் குறிக்கோள்களைக் கொண்டுள்ளது.

  1. நீடித்த மற்றும் நிலையான வளர்ச்சி. அதாவது, இயற்கைவளங்களை சேதப் படுத்தாமலும், முற்றிலும் அழிக்காமலும், மனித சமூகத்தின் தேவைகளை பூர்த்தி செய்துகொள்ளும் முறையினை உரு வாக்குதல். இதன்மூலம், எதிர்கால சந்ததியினருக்கு தேவையான இயற்கை மூலப்பொருட்கள் இருப்பதோடு, மாசு பாடற்ற சுற்றுப் புறத்தையும் உருவாக்கிட முடியும்.
  2. பயன்படுத்தப்பட்ட பொருட்களை மறுபயன்பாட்டிற்கோ அல்லது மறுசுழற் சிக்கோ உட்படுத்துதல்.
  3. பொருட்களின் உற்பத்தி மற்றும் நுகர்வு நிலைகளில் மாற்றங்களைப் புகுத்துவதன் மூலம், கழிவுகளின் உற்பத்தி மற்றும் சுற்றுச் சூழல் மாசுபாட்டைக் குறைத்தல்.
  4. நமக்கும், சூழ்நிலைக்கும் பாதகத்தினை ஏற்படுத்தும் தொழில்நுட்பத்தினை மாற்றி அமைத்தல்.
  5. பொருளாதாரத்தைப் பெருக்கக்கூடிய, நடைமுறைப் பயன்பாட்டிற்கு எளிமை யான, அதேசமயத்தில் சுற்றுச்சூழலையும் பாதிக்காத, நம்பகத்தன்மை கொண்ட தொழில்நுட்பத்தினை உருவாக்குதல்.

பயனுள்ள இத்தொழில்நுட்பமானது, பின் வரும் பல்வேறு துறைகளிலும் பயன்படுகிறது.

  1. ஆற்றல் உற்பத்தித்துறை: உதாரணமாக, படிம எரிபொருளுக்கு மாற்றாக உயிரி எரிபொருளைப் பயன்படுத்துதல்.
  2. கட்டிடத் துறை : அதாவது, மனிதனுக்கும், இயற்கைக்கும் நிலையான வளர்ச்சி தரும் வகையில் கட்டிடங்களை வடி வமைத்தல்.
  3. சுற்றுச் சூழலுக்கு உகந்த நுகர்வுமுறை: சூழ்நிலையைப் பாதிக்காத உற்பத்தி முறையினைக் கொண்ட பொருட்களை வாங்குதல். உதாரணமாக, நெகிழிகளின் உபயோகத்தினைத் தவிர்த்து துணிப் பைகளை வாங்கி பயன் படுத்துதல்.
  4. பசுமை வேதியியல் : இயற்கையை பாதிக் காத வகையில் வேதிப்பொருட்களை வடிவமைத்து உபயோகித்தல்.
  5. பசுமை நானோ தொழில் நுட்பம் : எல்லாத் துறைகளிலும் முத்திரை பதித்துள்ள நானோ தொழில் நுட்பத்திலும் பசுமை தொழில்நுட்பத்தினைப் பயன்படுத்துதல். அதாவது, மாசுபாட்டை ஏற்படுத்தாத நானோ பொருட்களை பசுமை முறையில் தயாரித்தல்.

பசுமைத் தொழில்நுட்பத்தினை அனைத்துத் துறைகளிலும் பயன்படுத்தி, இயற்கையைக் காத்திட வேண்டும். ஓவ்வொருவரும், எரி பொருள், மின்சாரம், நீர் உள்ளிட்ட ஆற்றலினை சிக்கனமாகப் பயன்படுத்தி வாழ்வை சிறப்பாக்க வேண்டும்.

முனைவர் ஆர்.சுரேஷ்

ஒரு பார்வை

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments