சூழல் போராட்டங்களும் தேசிய முரண்களும்!

மானுட வரலாற்றில் சூழல் சார்ந்த போராட்டங்கள் புதிது அல்ல. ஆனால், 1960களுக்குப் பிந்தைய உலகின் முக்கியமான சமூக போராட்டங்களாகச் சூழல் போராட்டங்கள் உருவெடுத்துள்ளன. இதற்குப் பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. அதில் ஒன்று, 1950களின் பின்பு ஐரோப்பியக் காலனிய ஆதிக்கத்தில் இருந்து அரசியல் விடுதலை பெற்ற மூன்றாம் உலக நாடுகள் ஐரோப்பிய நாடுகளைப் போன்று வளர்வதற்கான ‘வளர்ச்சித் திட்டங்களைத்’ தமக்கென வகுக்கத் துவங்கியது. இந்த வளர்ச்சித் திட்டங்களால் கண்மூடித் தனமாக இயற்கை வளங்கள் உபயோகப் படுத்தப்பட்டது, மேலும் பல்வேறு விதமான மாசினை மக்கள் சந்திக்க நேரிட்டது.. 1947ல் விடுதலை அடைந்த இந்திய அரசும் ஐரோப்பிய நாடுகளைப் போன்ற வளர்ச்சியைக் குறிவைத்து மிகவும் வேகமாகத் தமது வளங்களை, வகுக்கப்பட்டத் திட்டங்களுக்கு உபயோகிக்கத் துவங்கியது. இது பல்வேறு சூழல் சார்ந்த போராட்டங்களை இந்தியாவில் உருவாக்கியது. 1990களுக்குப் பிந்தைய ‘உலகமயப் பொருளாதாரக்’ கொள்கைகள், சூழல் போராட்டங்களின் எண்ணிக்கையை மேலும் பல மடங்கு அதிகரித்துள்ளது.

படம்: இந்தியாவில் நடைபெறும் சூழல் போராட்டங்கள் (ஒவ்வொரு புள்ளியும் ஒரு போராட்டம்) | Source: EJ ATLAS Website

உலக அளவில் சூழல் போராட்டங்கள் அதிகமான எண்ணிகையில் நடைபெறும் இடங்களுள் ஒன்று தமிழ்நாடு! கூடங்குளம் அணுமின்நிலைய எதிர்ப்புப் போராட்டம், நியூட்ரினோ திட்ட எதிர்ப்புப் போராட்டம், கதிராமங்கலம் மீத்தேன் திட்ட எதிர்ப்புப் போராட்டம் எனத் தொடங்கி காட்டுப்பள்ளித் துறைமுக விரிவாக்க எதிர்ப்பு வரை தற்சமயம் கூட சுமார் முப்பதுக்கும் அதிகமான சூழல் போராட்டங்கள் தமிழ்நாட்டில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.  இத்தகைய போராட்டங்களுக்கான காரணங்கள், அதன் சுரண்டல் தன்மை, ஒடுக்கப்பட்டோருக்கு நடைபெறும் அநீதி போன்றவை பற்றியெல்லாம் நிறையப் படித்திருக்கிறோம். ஒவ்வொரு போராட்டம் குறித்தும் மிகவும் தீவிரமாக ஆராய்ந்து எழுதப்பட்ட ஆய்வுகள் கிடைக்கின்றன.

ஆனால் இந்தப் போராட்டங்களில் நாம் கவனிக்க வேண்டியது, சில போராட்டங்கள், வைத்த இலக்கினைச் சென்றடைகின்றன. சில போராட்டங்கள் அரசினால் மூர்க்கமாக ஒடுக்கப்படுகின்றன. சில போராட்டங்கள் வெற்றி பெறுகின்றன. சில போராட்டங்கள் கவனம் கூடப் பெறுவதில்லை. சில போராட்டங்களை அது நடைபெறும் இடத்தைத் தாண்டி பிற மக்களும் ஆதரிக்கின்றனர். சில போராட்டங்களுக்கு எதிர்ப்புத் தான் தெரிவிக்கப்படுகின்றது. இதன் காரணங்கள் என்ன? இந்த வேறுபாடுகளைப் புரிந்து கொள்ள முயல்வது மிகவும் முக்கியமான ஒன்றாகும்.

RMT மற்றும் POS கோட்பாடுகள்:

மேற்சொன்ன கேள்விகளுக்கு இரண்டு கோட்பாடுகள் (Theory) விடை காண முயல்கின்றன.

  • Resource Mobilization Theory (RMT)
  • Political Opportunity Structure Theory (POS)

முதலாம் கோட்பாடான ‘RMT’, ஒரு போராட்டத்தில் அந்தப் போராட்டக் குழுவிற்குக் கிடைக்கும் வளங்களை (Resources) முன்னிலைப் படுத்துகிறது. அவர்களுக்கு இருக்கும் மனித வளம், பொருளாதார வளம், சமூக மூலதனம் (Social Capital), தகவல் வளம் (Data), அமைப்பு ரீதியிலான பலம், ஆளுமையான தலைவர்கள் முதலியனவற்றை வைத்து ஒரு போராட்டத்தின் வீச்சையும், அதன் வெற்றியையும் ஆராய்கிறது. இது போன்ற வளங்கள் அதிகம் கிடைக்கையில் அந்தப் போராட்டக் குழுவினால் அதனை போராட்டத்திற்குத் தகுந்தது போலப் பயன்படுத்தவும் முடிகிறதென்றால் அந்தப் போராட்டம் மிகப்பெரிய வெற்றி பெரும் என்கிறது RMT கோட்பாடு.

உதாரணமாக 50களில் நடைபெற்ற தமிழகத்தின் ‘இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம்’ பெரிய அளவில் வெற்றி பெற்றது. இதற்குக் காரணங்களாக RMT கோட்பாடு கூறுவது அந்தப் போராட்டத்திற்குத் திரண்ட மக்கள் கூட்டம், மக்களை அணிதிரள வைத்தக் கலாச்சார மூலதனம் (Cultural Capital), தீர்க்கமான தலைவர்கள் முதலிய காரணங்கள் கூறப்படுகிறது. இவை இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை மிகத் தீவிரமாக நடைபெறச் செய்து இந்திய ஒன்றிய அரசிற்கு மிகப்பெரிய அழுத்தத்தைக் கொடுத்து ‘கட்டாய இந்தி’ என்பதிலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு பெற்றுக் கொடுத்தது. ஆக ஒரு போராட்டம் எத்தனைத் தீவிரமாக மாறும் என்பது அந்தப் போராட்டக்குழுவிற்குக் கிடைக்கும் வளங்களைப் பொருத்தது. அதன் தீவிரம் தான் அப்போராட்டத்தின் வெற்றியைத் தீர்மானிக்கிறது.

இந்த RMT கோட்பாடு மிகப் பெரிய அளவில் ஒரு போராட்டத்தினைப் புரிந்து கொள்ள உதவினாலும், அதில் வரம்பெல்லைகள் (Limitations) இல்லாமல் இல்லை. இந்தக் கோட்பாட்டினால் பல போராட்டங்களை விளக்க முடிவதில்லை. உதாரணமாக உலக அளவில் பிரசித்தி பெற்ற, அத்தனை ஆயிரம் மக்கள் பங்குபெற்ற, நர்மதை நதியின் மீது பல்வேறு பெரும் அணைகள் கட்டும் திட்டத்தை எதிர்த்த ‘Narmada Bachao Andolan’ எனப்படும் போராட்டம் வெல்லவில்லை. உலகின் மிகப் பெரிய அணைகளில் ஒன்றான ‘சர்தார் சரோவர் அணை’யிணை கட்டி அதற்கு அருகிலேயே மூவாயிரம் கோடியில் சர்தார் வல்லபாய் படேலின் சிலையையும் கட்டி முடித்தது இந்திய ஒன்றிய அரசு.

தமிழகத்தில் நடைபெற்றக் ‘கூடங்குளம் அணுவுலை எதிர்ப்புப்’ போராட்டமும் அத்தனை மக்கள் பங்கு பெற்றும், மிகத் தீவிரமான எதிர்ப்பாக அது மாறியும், உலக அளவில் பரவலாகப் பேசப்பட்ட போராட்டமாக இருந்தும் அவை அனைத்தும் அரசின் பலத்தினால் ஒடுக்கப்பட்டு, இன்று அனுவுலையில் மின்சாரம் தயாரிப்பு நடைபெற்று வருகிறது. அத்தனை எதிர்ப்பை மீறி புதிதாக இன்னும் ஆபத்தான ‘அணுக்கழிவு மையம்’ கட்ட ஆலோசனை நடத்தப்படுகிறது. இது போன்ற போராட்டங்களை முழுவதும் புரிந்து கொள்ள RMT கோட்பாட்டில் ஒரு வெற்றிடம் உள்ளது தெளிவாகிறது. அந்த வெற்றிடத்தைத் தான் Political Opportunity Structure (POS) கோட்பாடு நிறைவு செய்கிறது.

Political Opportunity Structure கோட்பாடு:

இந்தக் கோட்பாடு ஒரு போராட்டத்தின் அகக்காரணிகளுடன் (Internal Factors) சேர்த்து புறக்காரணிகளையும் அதன் தாக்கத்தையும் ஆராய்கிறது. அரசியல் (Political) மற்றும் அமைப்பியல் (Structural) சூழ்நிலைகளைப் பொறுத்து ஒரு போராட்டத்திற்கான சாத்தியக்கூறுகளை (Opportunities) இந்தக் கோட்பாடு ஆராய்கிறது. இது தவிர, ஒரு போராட்டம் எவ்வாறு மக்களுக்குக் காட்டப்படுகிறது, எத்தகைய கதையாடல்களை அரசும் பிற அமைப்புகளும் ஏற்படுத்துகின்றன, உலகளாவிய அமைப்புகளின் உள்ளீடு எந்த அளவு போன்றவற்றை வைத்து ஒரு போராட்டத்தின் போக்கை POS கோட்பாடு புரிந்து கொள்ள முனைகிறது.

உதாரணமாக, 1970களின் துவக்கத்தில் உலக அளவில் சூழல் சார்ந்த அமைப்புகள், ஒப்பந்தங்கள் உருவாகிக்கொண்டு இருந்தன. அதே நேரத்தில் இந்தியாவில் நடைபெற்றுக் கொண்டிருந்த சிப்கோ போராட்டத்திற்கு அது மறைமுகமாக ஆதரவும், இந்திய அரசிற்கு அழுத்தமும் கொடுத்தது. இதனால் சிப்கோ போராட்டம் வெற்றியும் பெற்றது. சிப்கோ போராட்டத்தின் வெற்றி அதைப் போன்றப் பல சூழல் போராட்டங்களை இந்தியா முழுவதும் எழச் செய்தது.

1992இல் சர்தார் சரோவர் அணைத்திட்டதிற்கான நிதியுதவியை உலக வங்கி திரும்பப் பெற்ற நிகழ்வு, அதனைப் போன்ற பெரும் அணைகளுக்கு எதிரான பல போராட்டங்களை இந்தியா முழுவதும் பரவச் செய்தது. 2011இல் புகுஷிமா அணுமின் நிலைய வெடிப்பு, உலக அளவில் அணுமின் நிலைய எதிர்ப்புப் போராட்டங்கள் மீண்டெழுவதற்கான சாத்தியங்களையும், ஆதரவையும் ஏற்படுத்தியது. தமிழ்நாட்டில் கூடங்குளம் போராட்டம் இந்த நிகழ்வுக்குப் பின் மீண்டும் தீர்க்கமாக அணுமின் நிலைய எதிர்ப்பை முன் வைத்தது.

இது போன்ற உலக நிகழ்வுகள் மட்டுமின்றி, ஒரு அரசின் கீழ் நடைபெறும் போராட்டம்  அந்த அரசின் அமைப்பியல் தன்மைகளைப் (Structural Factors) பொருத்தும் வேறுபடும் என்கிறது POS கோட்பாடு. 1986இல் ஹெர்பர்ட் என்பவரால் ஒரு ஆய்வு மேற்கொள்ளப் படுகிறது[1]. (இது போலப் பல ஆய்வுகள் இருப்பினும் இந்த ஆய்வு இக்கட்டுரையில் ஒரு உதாரணமாக எடுத்தாளப் படுகிறது.) இந்த ஆய்வு ஸ்வீடன், பிரான்ஸ், மேற்கு ஜெர்மனி மற்றும் அமெரிக்கா முதலிய நான்கு நாடுகளில் நடைபெற்ற ‘அணுமின் நிலைய எதிர்ப்பு’ போராட்டங்களை POS கோட்பாட்டினை வைத்து ஆராய்கிறது. ஆய்வின் முடிவாக இரண்டு விதமாக POS காரணிகளால் இந்தப் போராட்டங்களின் தன்மை வேறுபடுவதாகக் கூறியது.

  1. அரசியல் நிறுவனங்களின் ஜனநாயகத்தன்மை
  2. அரசியல் நிறுவனங்களின் பலம்

இதில் முதலாவது காரணி, அரசின் கொள்கைகளில் இருந்து வேறுபட்டக் கருத்து உள்ளோருக்கு அதைத் தெரிவிக்க எந்த அளவு ஒரு ஜனநாயக வெளி வழங்கப்படுகிறது என்பதைக் குறிக்கிறது. இந்தக் காரணியில் ஸ்வீடன் மற்றும் அமெரிக்கா ஜனநாயக வெளியை உடையதாகவும்; பிரான்ஸ் மற்றும் மேற்கு ஜெர்மனி போன்ற நாடுகளில் இந்த வெளி அரசியல் தளங்களில் கிடைப்பதில்லை என்றும் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கிறது.

இரண்டாவது காரணியைப் பொறுத்த வரை, ஒரு அரசினால் எந்த அளவிற்கு அந்தக் குறிப்பிட்டக் கொள்கையினை மாற்றியமைக்க முடியும் என்பதன் அளவீடு. அமெரிக்காவில் அணுமின் தயாரிப்பில் தனியார் நிறுவனங்களும் ஈடுபடுகிறது. தனியார் நிறுவனங்களின் மீதான தலையீடற்ற அமெரிக்க அரசியல் அமைப்பினால் மிக அழுத்தமான ஒரு முடிவை ‘அணுமின் எதிர்ப்பில்’ எடுக்க முடிவதில்லை. ஆனால் ஸ்வீடன், பிரான்ஸ் போன்ற நாடுகளில் ஒரு அரசினால் மிகத் தீவிரமான அரசியல் கொள்கை முடிவுகளை எடுக்க முடிகிறது. இந்தக் காரணியைப் பொறுத்த வரை ஸ்வீடன் மற்றும் பிரான்ஸ் தீர்க்கமான கொள்கை முடிவுகள் எடுக்கப் பலம் கொண்ட அரசியல் அமைப்பு கொண்ட நாடுகளாகவும்; மேற்கு ஜெர்மனி மற்றும் அமெரிக்கா பலவீனமான அரசு அமைப்புக் கொண்ட நாடுகளாகவும் பிரிக்கப்படுகிறது.

Source: ஹெர்பர்ட் P. கிட்செல்ட்டின் ஆய்வு

பின்னர் எந்த தேசத்தில் அணுமின் நிலையங்கள் மூடப்படும் போக்கும், அணுமின் உற்பத்தி கொள்கைகளில் தீவிரமான ‘அணுமின் அற்ற மின்னுற்பத்தி’ போன்ற முடிவுகளும் எடுக்கப்படுகிறது என்பதை ஆராய்கையில் அது ஸ்வீடனில் தான் நடைபெறுகிறது என்பதை ஆய்வு கண்டறிகிறது. அமெரிக்காவில் பெரிய அளவில் கொள்கை மாற்றங்கள் இல்லை எனினும் சுலபமாக ‘எதிர் கருத்துகள்’ மைய நீரோட்ட அரசியலுக்குள் போக முடியும் என்பதால் வன்முறையான போராட்டங்களை அது தவிர்த்து இருக்கிறது. பிரான்சில் அரசியல் அமைப்பு முறை மிகுந்த பலம் கொண்டதாகவும், எளிதில் எந்தக் கருத்தோட்டமும் மைய நீரோட்டத்திற்கு வரும் வெளி இல்லாததாலும் மிகவும் வன்முறையான போராட்டங்களை எதிர்கொண்டுள்ளது. இதனைப் போல அரசியல் அமைப்பு முறைகளின் அடிப்படையில் சூழல் போராட்டங்களும், அதன் முடிவுகளும் வேறுபடுவதாக இந்த ஆய்வு குறிப்பிடுகிறது.

தமிழக போராட்டங்களின் POS:    

இதே கோட்பாட்டினை வைத்து தமிழ் நாட்டின் சூழல் போராட்டங்களை முக்கியமாக அணுமின் நிலையப் போராட்டங்களை ஆராயலாம். அவ்வாறு ஆராய்ந்தால் அதே இரண்டு காரணிகளான ‘அரசியல் ஜனநாயக வெளி’ மற்றும் ‘அரசியல் நிறுவனங்களின் பலம்’ இரண்டும் தமிழ் நாட்டின் போராட்டங்களிலும் தாக்கம் செலுத்துகிறது.

இந்திய அரசியல் அமைப்பு பலகட்சி முறைகளையும், சட்டசபையில் பெரும்பான்மை பெற்று ஆட்சி அதிகாரத்திற்குச் செல்ல வேண்டிய முறைகளையும் பரிந்துரைப்பதால்; மக்களின் விருப்பு வெறுப்புகளை நிறைவேற்ற வேண்டிய தேர்தல் அமைப்புகளின் மூலம் ‘அரசியல் ஜனநாயக வெளி’ என்பது இங்குள்ள மக்களுக்குக் கிடைக்கிறது. ஆனால் அதிலும் சாதியத் தாக்கம் இருக்கிறது. எந்தப் போராட்டம் பெரிதாய்ப் பேசப்பட வேண்டும், எது மைய நீரோட்ட அரசியல் நிலைப்பாடுகளாக மாற வேண்டும் என்பதை இந்த சாதிய-வர்க்கச் சமூக அமைப்புகள் முடிவு செய்கின்றன. இதனால் ஒடுக்கப்பட்ட மக்கள், மீனவர்கள், பழங்குடிகள் போன்றோரின் சூழல் போராட்டங்கள் ஜனநாயக வெளி கிடைக்காமல் சில நேரங்களில் அதிதீவிர போராட்டங்களாக உருவெடுக்கின்றன. உதாரணமாகக் கூடங்குளம் அணுமின் எதிர்ப்புப் போராட்டம், ஸ்டெர்லைட் போராட்டம் போன்றவற்றைக் கூறலாம்.

Image: Amirtharaj Stephen

படம்: கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்புப் போராட்டம்

தமிழ்நாட்டின் சூழல் போராட்டங்களைப் புரிந்து கொள்ள இரண்டாவது காரணியான ‘அரசு நிறுவன பலம்’ மிக முக்கியமானது. தமிழ் நாட்டில் ஒரு சூழல் சார்ந்து போராட்டம் நடைபெறுகிறது என்றால் எல்லா போராட்டத்திலும் அதற்கான கொள்கை முடிவுகளை எடுக்கும் அதிகாரமும் பலமும் ஒரே அரசியல் நிறுவனத்தைச் சார்ந்தது இல்லை. சில நேரங்களில் அது மாநில அரசாகவும், சில நேரங்களில் அது ஒன்றிய அரசாகவும் இருக்கிறது.

இந்திய ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ‘அணுமின் கொள்கைகளில்’ மாற்றம் வேண்டி கூடங்குளத்தில் போராட்டம் நடத்துகையில் அந்த போராட்டத்தினால் இந்திய ஒன்றிய அரசிற்கு எந்த பெரிய பாதிப்பும் இல்லை. மக்களவையில் வெறும் 39 இருக்கைகள் கொண்ட ஒரு மாநிலமான தமிழ் நாட்டின் போராட்டமோ, மக்களின் கோபமோ எந்த விதத்திலும் டெல்லியை பாதிக்கப் போவதில்லை. இந்த போராட்டத்தினை ஒடுக்க வேண்டிய பொறுப்பு மாநில அரசின் கீழ் உள்ளது. அது போராட்டத்தினை ‘விவாத தளத்திற்குக்’ கூட கொண்டு செல்ல இயலாமல் மூர்க்கமாக ஒடுக்குகிறது. சில நேரங்களில் மாநில அரசே நினைத்தாலும் போராட்டங்களுக்குச் சாதகமான கொள்கை முடிவுகளை ஒன்றிய அரசினை எடுக்க வைக்க முடிவதில்லை. சமீபத்தில் பெரும் தீவிரமான அணுமின் எதிர்ப்புப் போராட்டம் நடைபெற்ற கூடங்குளத்திலேயே ‘அணுக் கழிவு மையம்’ அமைக்கத் திட்டமிட்ட ஒன்றிய அரசையும், அது வேண்டாம் எனக் கண்டனம் மட்டுமே தெரிவிக்க முடிந்த மாநில அரசையும் நாம் கண்டோம். ஆக தமிழ் நாட்டின் ‘POS’இல் மிக முக்கியமான ஒரு காரணியாக நிற்பது ‘இந்தியதமிழக தேசிய முரண்’! இதைப்பற்றிப் பேசுவதற்கு முன் முரண்கள் பற்றிய ஒரு சிறிய அறிமுகத்தைப் பார்த்துவிடலாம்.

தமிழ்நாட்டின் போராட்டங்களும் முரண்களும்:

ஒரு சமூகம் எவ்வாறு உருப்பெறுகிறது, ஒரு நிலையில் இருந்து இன்னொரு நிலைக்கு எவ்வாறு நகர்கிறது என்பதைப் பல்வேறு சமூக அறிஞர்கள் ஆராய்ந்துள்ளனர். மார்க்சியம் சமூகத்தை ‘முரண்களாக’ புரிந்து கொள்ளச் சொல்கிறது. சமூகத்தில் எந்த அமைப்பும் அமைதியான நிலையான அமைப்பாக இல்லை. இரு வேறு தேவைகள் கொண்ட, இரு வேறு பார்வைகள் கொண்ட இரண்டு தரப்புக்கு இடையில் முரண் இருந்து கொண்டே தான் இருக்கிறது. பொருளாதார அளவில் பார்த்தோமானால் தற்போதைய முதலாளித்துவ சமூக அமைப்பில், உற்பத்தி நடைபெறுகிறது. அதில் முதலாளிகள் முதலீடு செய்கின்றனர். உழைப்பாளிகள் தமது உழைப்பைப் போடுகின்றனர். உற்பத்தியின் இறுதியில் கிடைக்கும் லாபம்/உபரி யாருக்கானது என்பதில் இரண்டு தரப்பிற்கும் மாற்றுக் கருத்துகள் இருப்பதால், தொழிலாளிகளின் உழைப்பினால் உருவானதாக இருப்பினும் உபரியை முதலாளிகள் இலாபமாக சுரண்டிக்கொள்வதால், முதலாளிகள்-தொழிலாளிகள் என்னும் இரண்டு வர்க்கங்களுக்கு இடையில் முரண் உள்ளது.

காலனிய இந்தியாவில் ஐரோப்பியச் சுரண்டல் அமைப்பினால், இந்தியத் துணைக் கண்டத்தின் மக்களுக்கும் ஆங்கிலேய அரசுக்கும் ஒரு பெரும் முரண் இருந்தது. பண்டைய இந்தியாவில் கலாச்சார ரீதியில் ஆதிக்கம் செலுத்தும் பிராமண வர்ணத்திற்கும் அரசியல் அதிகாரம் செலுத்தும் சத்ரிய வர்ணத்திற்கும் அல்லது அரசர்களுக்கும் ஒரு முரண் இருந்தது. இந்த முரணில் இருந்து தான் பௌத்தம் எழுந்ததாக அம்பேத்கர் கூறுகிறார்.

இவற்றைப் போலவே சுதந்திர இந்தியாவில், இந்திய ஒன்றிய அரசிற்கும் பிராந்திய தேசங்களுக்கும் இடையில் பெரும் முரண் உள்ளது. இந்திய ஒன்றியம் இந்தியத் துணைக்கண்டத்தை ஒரே தேசமாக, ஒரு கலாச்சாரமாக, ஒரே மொழியாகச் சுருக்க முயல்கையில்; பிராந்தியங்கள் தமது தனித்த கலாச்சாரம் மற்றும் மொழியினைக் காத்து தேசமாக உருவெடுக்க முனைகின்றன. இந்த முரண் தான் ‘இந்திய அரசின் தேசிய முரண்’. டெல்லியில் தலைநகரை அமைத்திருக்கும் இந்திய ஒன்றிய அரசினால் தென்கோடியில் இருக்கும் தமிழ் மக்களின் தேவைகளைப் புரிந்து கொள்ளவோ, அம்மக்களின் வளர்ச்சிப் போக்கினை பின்தொடரவோ முடியவில்லை. வட மற்றும் மத்திய இந்தியாவின் அரசியல் சூழலில் இருந்து தமிழ் நாடு மிகவும் வேறுபட்டு இருந்தது. அங்கு இந்திய தேசிய அரசியல் நிலைபெற்று இருக்கையில், இங்கு சாதி எதிர்ப்பு அரசியல் புயலென வீசிக்கொண்டு இருந்தது. இந்திய ஒன்றியத்தின் செயல்பாடுகள் தமிழ் நாட்டின் சாதி ஒழிப்பை மட்டுப்படுத்துகிறது என்பதற்காகத் தான் தந்தை பெரியார் இந்தியாவில் இருந்து வெளியேறாமல் தமிழ் நாட்டில் சாதியை ஒழிக்க முடியாது என்றார். பெரியாரினுடைய தமிழ் தேசியச் சாரம் இது தான்.

அவர் குறிப்பிட்ட அதே ‘இந்திய-தமிழ் தேசிய முரணின்’ இன்னொரு விளைவு தான் தமிழ் நாட்டின் முடிவில்லாத சூழல் போராட்டங்கள். இன்றைய தேதிக்கு ஏற்ப மாற்றினால் இந்தியாவில் இருந்து வெளியேறாமல் தமிழ்நாட்டின் சூழல் சீர்கேடுகளைத் தடுக்க முடியாது, கால நிலை மாற்றத்தில் இருந்தும் தப்பிக்க இயலாது.’  சரி இந்திய அரசே இந்தப் போராட்டங்களுக்கான தீர்வுகளைச் செய்து விட்டால் என்ன செய்வது? அப்போது தமிழ் தேசியம் என்பது தேவை இல்லாத சாகசப் போக்கு தானே என்று கேட்டால், அப்போது தான் இந்திய தேசியத்தை விட பெரிய முரணான ‘உலகமயமூன்றாம் உலக நாடுகள்’ என்னும் முரண் வந்து நிற்கிறது. உலகமய சுழலில் சிக்கி உள்ள இந்தியாவால் அது நினைத்தாலும் சிலவற்றைத் தடுக்க இயலாது. இந்த முரணின் இரண்டாம் படிநிலையில் சிக்கிக் கொண்டிருக்கும் தமிழ்நாடு, அதிகமான வேளைகளில் இந்திய அரசின் நலனிற்குத் தாரை வார்க்கப்படுகிறது. இன்னும் வட-கிழக்கு மாநிலங்களின் நிலையெல்லாம் சொல்ல முடியாத அளவு வேதனை. அவர்களுக்கு எல்லாம் இந்தியப் பாராளுமன்றத்தில் அதிக பட்சம் 5 இடங்கள் தான். இதனால் தான் பெரியார் இந்திய அரசினை ‘டெல்லியின் காலனியம்’ என்றார்.

ஆக தமிழ்நாடு ‘உலகமய-மூன்றாம் உலக நாடுகள்’ என்னும் முரணில் தன்னதிகாரத்தோடு (Self-authority) நுழையவே கூட தற்போது சிக்கி இருக்கும் ‘இந்திய-தமிழ் தேசிய முரணினைத்’ தீர்க்க வேண்டும். இதில் எது நடைமுறையில் சாத்தியம், எது மாறாது என்கிற கேள்விகளுக்கெல்லாம் முன்னால் இந்த முரண் இருப்பதை நாம் ஒப்புக்கொண்டு அங்கீகரிக்க வேண்டும். கண்களை மூடிக்கொண்டு உலகம் இருண்டதாகக் கூறுவதைப் போல இந்த முரணைக் கண்டும் காணாமலும் மற்ற தளங்களிலேயே சுற்றுவது முழு தீர்வைத் தராது.

இந்த முரணைப் பற்றி வாயே திறக்காமல் செய்யப்படும் ‘தமிழ் தேசிய அரசியல்’ எந்த முடிவுக்கும் கூட்டிச் செல்லாது. அது தமிழ் தேசிய அரசியலும் அல்ல, வெறும் முன்னோர் பெருமை பேசிக் கொண்டிருக்க மட்டுமே அது உபயோகப்படும். அதே போல் தமிழ் தேசிய அரசியல் என்பது அறிவியலையும், தொழில்நுட்பங்களையும் ஒதுக்கித் தள்ளிவிட்டு பழங்கால தமிழக வாழ்வியலை மீட்பதல்ல. உலகம் அந்த கட்டங்களைத் தாண்டி வந்து விட்டது. இந்திய-தமிழ் தேசிய முரணைப் பேசுவதே தமிழ் தேசிய அரசியல்! தமிழகத்தைச் பழங்காலத்திற்கு கூட்டிச் செல்வதல்ல.

இந்த தேசிய முரணைப் புரிந்து கொண்டு, அதை அங்கீகரித்து, நமது செயல்திட்டங்களில் ஒன்றாக அல்லது முதன்மையானதாகக் கொண்டு வருவது தான் தமிழ் நாட்டில் ஒவ்வொரு நாளும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் சூழல் போராட்டங்களுக்கான ஒரு படித் தீர்வு. இந்த முரணைத் தீர்த்து விட்டால் சூழலை முழுவதும் காப்பாற்றி விடலாமா என்றால், ‘இல்லை!’. ஆனால் போராட்டங்கள் வெல்வதற்கான சாத்தியங்கள் அதிகரிக்கும். இதைத் தான் அரசியல் சாத்தியக்கூறுகளை ஆராயும் ‘POS’ கோட்பாடும் கூறுகிறது.

சூழல் போராட்ட அரசியலில் தமிழ் தேசிய அரசியலின் தேவை தவிர்க்க முடியாதது!

 

  • த. ஹரி பாரதி,

ஆய்வு மாணவர், ஹைதராபாத் பல்கலைக் கழகம்.

 

 

 

 

[1] Kitschelt, H.P. (1986). Political Opportunity Structures and Political Protest: Anti-Nuclear Movements in Four Democracies. British Journal of Political Science, 16(1), 57-85.

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments