தமிழ்நாடு எதிர்கொண்டுள்ள பல்வேறு சூழல் அழிவுத் திட்டங்களை எதிர்த்து தொடர்ச்சியாக பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் சட்டப் போராட்டத்தையும் சேர்ந்தே நடத்துவதற்கான தேவையும் அதிகமாக உள்ளது. அப்படி சட்டப்போராட்டம் நடத்துவதால் ஒரு சில பிரச்னைகளில் தீர்வுகளையும் அடைய முடிகிறது. அதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக தேனியில் அமையவிருக்கிற நியுட்ரினோ திட்டத்திற்கான சுற்றுச்சூழல் அனுமதியை பூவுலகின் நன்பர்கள் அமைப்பு தொடர்ந்த வழக்கில் தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயம் ரத்து செய்திருப்பதைக் கூறலாம். இதேபோல் ஒரு நம்பிக்கையாக திருவண்ணா மலை கிரிவலப்பாதை விரிவாக்கப்பணிகளுக்காக மரங்கள் வெட்டப்படுவது தொடர்பான வழக்கிலும் சூழல் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தீர்ப்பை தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயம் சமீபத்தில் வழங்கியுள்ளது. 14கிமீ நீளமுள்ள கிரிவலப்பாதையின் விரிவாக்கப்பணிகளை சூழல் பாதிப்பு நேராதபடி குறிப்பாக ஒரு மரத்தைக் கூட வெட்டாமல் மேற்கொள்ள வேண்டும் என் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அண்ணாமலையின் அடிவாரத்தில் அமைந் துள்ளது அருணாச்சலேஸ்வரர் கோவில். இது மிகவும் பழமை வாய்ந்த சிவ வழிபாட்டுத்தலம் ஆகும். ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் பல லட்சம் சிவ வழிபாட்டாளர்கள் இந்தக் கோவிலின் கிரிவலப்பாதை என்றழைக்கப்படுகிற மலைவலப்பாதையை நடந்தே சுற்றி வருகின்றனர். இந்தப்பாதையின் தூரம் 14 கி.மீ ஆகும். பாதை நெடுகிலும் இருபுறமும் மூலிகை தாவரங்களாலும், பல அரிய வகை மரங்களாலும் சூழப்பட்டு இயற்கை எழில் சூழ்ந்து காணப்படுகிறது. இந்தப் பாதையானது பாண்டிய மன்னன் மாறவர்மன் விக்கிரம பாண்டியனால் 13ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டது. இந்தப் பாதையானது பல்லுயிர்ப் பெருக்கம் நடைபெறுகிற உயிர்ச்சூழல் மிகுந்த சோனகிரி வனம், அண்ணாமலை காப்புக்காடு, சாலையோர மரங்கள் மற்றும் புதர்க்காடுகள் என மூன்று நிலைகளை உள்ளடக்கியது கடந்த 2015ஆம் ஆண்டு அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா திருவண்ணாமலை கிரிவலப்பாதையை பௌர்ணமி நாளில் சுற்றிவரும் பக்தர்களின் நலனுக்காகவும் அங்கு நெருக்கடியைத் தவிர்ப்பதற்காகவும் 14 கிமீ நீளமுள்ள கிரிவலப்பாதையை 7 முதல் 10மீ வரை அகலப்படுத்தும் திட்டத்தை 110விதியின் கீழ் 65கொடி செலவில் அறிவித்தார். அந்தப் பணிகளை நெடுஞ்சாலை தொடங்கியபோதுதான் பல மரங்களை வெட்டத்தொடங்கியது. இதைக் கண்டவுடன் அப்பகுதி மக்களும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் சாலை மறியல், மனிதச் சங்கிலி போன்ற போராட்டங்களை 2016ஆம் ஆண்டு ஜூலை மாதம் நடத்தினர். இதுகுறித்து பத்திரிகைகளில் வெளியான செய்தியை ஆதரமாகக் கொண்டு தாமாகவே முன்வந்து இதை ஒரு வழக்காக ஏற்று தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் மரங்களை வெட்டு வதற்குத் தடைவிதித்தது. நெடுஞ் சாலைத் துறையினரோ கிரிவலம் செல்லும் நாட்களில் அதிகப்படியான கூட்டம் வருவதால் நெரிசலைக் குறைப்பதற்காகத்தான் சாலையை விரிவாக்கம் செய்யப்போகிறோம் எனக்கூறியது. முதலில் 345 மரங்களை வெட்டப்போகிறோம் எனக் கூறிவிட்டு பொதுமக்களின் எதிர்ப்புக்குப் பின்னர் 217ஆகவும் பின்னர் 125 மரங்களை வெட்டப்போகிறோம் எனவும் கூறியது. பசுமைத் தீர்ப்பாயத்தின் தடையால் இந்த மரங்கள் அப்போது தற்காலிகமாக காக்கப்பட்டன.
அதன் பின்னர் இந்த விரிவாக்கப் பணிகள் நடத்த ஒருபோதும் அனுமதிக்கக் கூடாதென 4 பேர் பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடுத் திருந்தனர், நான்கு பேரின் மனுக்களையும் ஏற்றுக்கொண்ட நீதிபதி ஜோதிமணி மற்றும் தொழில்நுட்ப உறுப்பினர் பி.எஸ்.ராவ் அடங்கிய அமர்வு இந்த விரிவாக்கப் பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஓய்வு பெற்ற நீதிபதி யி.கி.ரி.சம்பத்குமார் மற்றும் ஓய்வு பெற்ற வனத்துறை அதிகாரி சேகர் ஆகியோர் கொண்ட குழுவை அமைத்து உத்தரவிட்டது. இந்தக் குழுவானது மொத்தம் மூன்று முறை கிரிவலப்பாதையை நேரில் சென்று ஆய்வு செய்து 2017 ஜனவரியில் ஒரு விரிவான அறிக்கையை சமர்ப்பித்தனர். ஒட்டுமொத்தமாக கிரிவலப்பாதையில் இடதுபுறம் 629 மரங்களும் வலதுபுறம் 592 மரங்களும் இருப்பதாக கணக்கிடப்பட்டிருந்தது. மேலும் ஒரே ஒரு மரத்தை மட்டும் வெட்டிக் கொள்ளலாம் எனவும் 6மீ வரை சாலையை விரிவாக்கம் செய்துகொள்ளலாம் எனவும் பரிந்துரைத்தது. நிபுணர் குழுவின் அறிக்கை, மனுதாரர் தரப்பு மற்றும் அரசு தரப்பின் வாதம் ஆகியவற்றை முழுவதுமாக கேட்டறிந்த நீதிபதி கடந்த மே 30ஆம் தேதி இறுதித் தீர்ப்பை வழங்கியது. இந்தத் தீர்ப்பில்” கிரிவலப்பாதையில் விரிவாக்கப் பணிகள் அவசியம் என்பதால் இப்பணிகளுக்கு தீர்ப்பாயம் நிரந்தரத் தடை விதிக்காது. எனினும், சூழல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக கிரிவலப்பாதையின் சுற்றுப்பாதை இருப்பதால் அவற்றிற்கு பாதிப்பு ஏற்படுத்தாத வண்ணம் குறிப்பாக ஒரு மரத்தைக் கூட வெட்டாமல் நெடுஞ்சாலைத்துறை விரிவாக்கப்பணிகளைத் தொடரலாம் எனவும் மரங்கள் இருக்கும் இடங்களில் மரங்களுக்கு நீர் செல்வதற்காக 1மீ இடைவெளி விட்டே புதிய நடைபாதையை அமைக்க வேண்டும் எனவும், அந்த நடைபாதையும் 2.5மீட்டரைத் தாண்டக்கூடாது எனவும் தீர்ப்பு வழங்கியது. இந்த முக்கியமான தீர்ப்பினால் 347 மரங்கள் பாதுகாக்கப்பட்டுள்ளன. சூழலியல் சிக்கல்களுக்காக சட்டப் போராட்டம் நடத்தி வரும் பல்வேறு நபர்களுக்கு இது ஒரு நம்பிக்கை தரும் தீர்ப்பாக அமைந்துள்ளது.
நிலன்