வெள்ளத்தில் மிதந்த பரந்தூர் விமான நிலைய அமைவிடம்

Map courtesy: Sivaranjan.P

 காஞ்சிபுரம் மாவட்டம் ஏகனாபுரத்தைச் சேர்ந்த 67 வயதான விவசாயி கே.மனோகர். டிசம்பர் 10ம் தேதி காலை விழித்தவுடனே அவருக்குப் பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. ஏகனாபுரம் கிராமத்திலுள்ள அவரின் வயலுக்கு நடந்து செல்ல முடியாத அளவிற்கு வழியிலுள்ள வயல்களில் பெருவெள்ளம் ஓடிக்கொண்டிருந்தது. பரந்தூர், ஏகனாபுரம் மற்றும் சில ஏரிகளின் உபரிநீரைக் கொண்டுசெல்லும் மடுவு என்றழைக்கப்படும் ஓடை நிரம்பி வெள்ளநீர் ஏகனாபுரம் கிராமத்தில் உள்ள 800 ஏக்கர் பரப்பளவிலான விவசாய நிலங்களை மூழ்கடித்திருந்தது.

 

05.12.2022 அன்று காலை தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது அடுத்தடுத்த நாட்களில் வலுவடைந்து 7ம் தேதி புயலாகவும், 8ம் தேதி தீவிர புயலாகவும் வலுப்பெற்று 9ம் தேதி நள்ளிரவில் புயலாக மாமல்லபுரத்திற்கு அருகே கரையைக் கடந்தது. இப்புயலால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, இராணிப்பேட்டை மற்றும் புதுச்சேரியில் அதிகனமழை பெய்தது. குறிப்பாக 9 மற்றும் 10 தேதிகளில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் கனமழை பெய்தது. 10ம் தேதி காஞ்சிபுரம் தாலுகாவில் 18.4 செண்டிமீட்டரும், ஸ்ரீபெரும்புதூரில் 13.3 செண்டிமீட்டரும் மழைப்பொழிவு பதிவாகியது.

டிசம்பர் 13ம் தேதி நான் ஏகனாபுரம் சென்றிருந்தேன். விவசாயி மனோகர் 4 ஏக்கர் பரப்பளவில் நெற்பயிர் விதைத்திருந்தார். அவரின் வயல் முழுவதும் வெள்ளநீர் நிரம்பியிருந்தது. இன்னும் நான்கு நாட்களில் வெள்ளநீர் வடியவில்லை என்றால் அனைத்துப் பயிர்களும் அழுகிவிடும் என்றார். “ இந்த மழையையும் வெள்ளத்தையும் ஒவ்வொரு வருசமும் பார்க்கிறேன். நான்கு நாட்களில் வெள்ள வடியவில்லை என்றால் பயிர் அழுகிடும். தண்ணீர் வற்றியதும் அப்படியே உழுவிட்டு அடுத்த பயிர் விதைச்சிடுவேன். ஏக்கருக்கு 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை எனக்கு நட்டம் வரும். எப்படியாவது இதிலிருந்து நான் மீண்டுருவேன். ஆனால், இந்த விமான நிலையம்  வந்துட்டா என் வாழ்க்கை என்ன ஆகும்னே தெரியல” எனக் கண்ணீர் சிந்தினார்.

 

தமிழ்நாடு அரசு சென்னைக்கு இரண்டாவது விமான நிலையமொன்றை அமைக்கத் திட்டமிட்டு வருகிறது. இதற்காக ஒன்றிய அரசின் விமான மோக்குவரத்து அமைச்சகம் திருவள்ளூர் மாவட்டத்தின் பன்னூர், காஞ்சிபுரம் மாவட்டத்தின் பரந்தூர் ஆகிய இரண்டு இடங்களில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கான சாத்தியக்கூறு அறிக்கைகளைத் தயாரித்து தமிழ்நாடு அரசிடம் வழங்கியிருந்தது. அவற்றைப் பரிசீலித்த தமிழக அரசு பரந்தூரில் விமான நிலையம் அமைக்கப் போவதாக அறிவித்திருந்தது.

காஞ்சிபுரம் மாவட்டத்தின் திருப்பெரும்புதூர் வட்டத்தில் எடையார்பாக்கம், குணகரம்பாக்கம், மகாதேவி மங்கலம், ஏகனாபுரம், அக்கமாபுரம், சிங்கிலிபாடி ஆகிய கிராமங்களிலும், காஞ்சிபுரம் வட்டத்தில் வளத்தூர், பரந்தூர், நெல்வாய், தண்டலம், பொடவூர், மடப்புரம் ஆகிய கிராமங்களில் புதிய விமான நிலையத்திற்கான 4563 ஏக்கர் நிலம் எடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசு திட்டமிட்டுள்ளது.

இத்திட்டத்திற்கு தொடக்கம் முதலாகவே அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக ஏகனாபுரம் கிராமத்தில் இத்திட்டத்திற்கு எதிராக தினமும் மாலை நேரத்தில் ஊர்மக்கள்  ஒன்றுகூடி போராட்டம் செய்து வருகின்றனர். இதற்கு முக்கியக் காரணம் இத்திட்டத்திற்காக நிலம் எடுக்க உத்தேசிக்கப்பட்டுள்ள கிராமங்களில் ஏகனாபுரம் கிராமம் மட்டுமே ஒட்டுமொத்தமாக விமான நிலையம் அமையவுள்ள பகுதிக்குள் வருகிறது. மற்ற கிராமங்களில் பகுதி அளவில் வீடுகளும், விளைநிலங்களும் மட்டுமே பாதிக்கப்படும்.

இந்த ஏகனாபுரம் கிராமமானது திருப்பெரும்புதூரிலிருந்து வடமேற்கில் 26.0 கி.மீ தூரத்தில் சென்னையிலிருந்து மதுரமங்கலம் வழியாக கணபதிபுரம் செல்லும் சாலையில் அமைந்துள்ளது. 908 ஏக்கர் பரப்பளவுடைய இக்கிராமத்தில் தற்போது 2400 பேர் வசிக்கின்றனர். 1700 பேர் வாக்களிக்கத் தகுதியானவர்கள். 600 வீடுகள் உள்ளன. அதில், 550 பேருக்கு பொது விநியோக அட்டை உள்ளது. 800 ஏக்கர் நன்செய், புன்செய் நிலமாகவுள்ளது.

நான் ஏகனாபுரம் சென்றிருந்த போது இன்னும் 10 நாட்களில் அறுவடை செய்யவேண்டிய நிலையில் அனைத்து வயல்களும் இருந்தன. வழக்கமாக இப்படி மழை பெய்தால் உடனடியாக தண்ணீர் வற்றிவிடும். ஆனால், அப்போது பெய்தது மாண்டஸ் புயலால் ஏற்பட்ட கனமழை என்பதால் ஓடையில் அதிகளவு தண்ணீர் வந்து வயல்வெளிகள் அனைத்தும் நீரில் மூழ்கியதாக கிராமத்தினர் தெரிவித்தனர்.

அக்கிராமத்தைச் சேர்ந்த 47 வயதான விவசாயி ராஜேஷ்வரி பேசுகையில் “ ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் காலம் அறுவடை இருக்கும். அந்த நேரம் ரொம்ப சந்தோஷமா இருப்போம். ஆனால், இந்த ஆண்டு நிம்மதியில்லாம இருக்கோம். பரம்பரை பரம்பரையா வாழ்ந்த ஊரும் நிலமும் பறிபோய்டுமோ என்கிற பயம் எங்க நிம்மதியைக் கெடுத்துட்டு” என்றார்.

ஊரிலிருந்து ராஜேஷ்வரியின் வயலுக்குச் செல்லும் மண் சாலையில் வெள்ளநீர் மடை திறந்த வெள்ளம்போல பாய்ந்து கொண்டிருந்தது. அந்த வெள்ளத்தைக் காட்டி “ இவ்வளவு வேகமாக தண்ணி போற இடத்துல பசுமை விமான நிலையம் கட்ட முடியாது, தண்ணீர் விமான நிலையம்தான் கட்ட முடியும். இவ்வளவு தண்ணியை சுவர் போட்டு மறிச்சுட்டா மத்த ஊருல வெள்ளம் போகும், கீழ இருக்கிற குளங்களுக்கும் தண்ணி போகாது” என்றார் ராஜேஷ்வரி.

ஏகனாபுரம் கிராமத்தில் நான் பேசிய எல்லா மக்களிடமும் தங்கள் நிலமும் வீடும் பறிபோகப்போகிறது என்கிற கவலை வெளிப்பட்டாலும் பல ஊர்களில் உள்ள விளைநிலங்களுக்கு நீர் ஆதாரமாக உள்ள நூற்றுக்கணக்கான குளங்களுக்கு தண்ணீர் எடுத்துச் செல்லும் பம்பகால்வாய் என்றழைக்கப்படும் கம்பன் கால்வாயானது விமான நிலைய திட்டத்தால் பாதிப்படையப் போகும் கவலையும் ஓங்கியே இருந்தது.

கம்பன் கால்வாய். தற்போதைய இராணிப்பேட்டை மாவட்டம், அணைக்கட்டு கிராமத்திலிருந்து தைப்பாக்கம், கூரம், பெரிய கரும்பூர் வழியாக திருப்பெரும்புதூர் ஏரியை அடையும் இக்கால்வாய் 44 கி.மீ. தூரத்தில் காஞ்சிபுரம், திருப்பெரும்புதூர் வட்டங்களில் உள்ள 85 ஏரிகளை நிரப்புகிறது. இதன் முக்கியத்துவம் குறித்துப் பேசிய கதிரேசன் “அணைக்கட்டுல தொடங்கி 44 கி.மீ. பயணிக்கிற இந்த கால்வாய்ல 7 கி.மீ தூரத்திற்கு விமான நிலையத்துக்குள்ள போகப் போகுது. மழைக்காலம் முழுக்க இந்த கால்வாய்ல தண்ணீர் போகும். இந்த நீரோட்டம் தடைபட்டா கடைமடைல உள்ள குளங்கள் நிரம்பாது, நிலத்தடி நீர்மட்டம் உயராது. இதுக்கு எந்த மாற்றுவழியும் அரசாங்கம் சொல்லல. வேறோரு கால்வாய் போட்டு தண்ணிய அடுத்த குளங்களுக்கு கொண்டு போய்ருவோம்னு சொல்றாங்க. ஆனால், அப்படி வெட்டி ஒட்ட இது PVC குழாய் இல்ல. பல நூறாண்டுகளுக்கு முன்னாடி கம்பவர்மன்னு ஒரு பல்லவ மன்னன் கட்டிய கால்வாய்” என்றார்.

தமிழ்நாடு அரசின் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு 20.08.2022 அன்று ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தார். அதில் “பரந்தூரில் உள்ள நீர் வழித்தடங்களில் நீரோட்டம் எந்தவித தடையுமின்றி தமிழ்நாடு அரசால் தொடர்ந்து பராமரிக்கப்படும். பெரிய நெல்வாய் ஏரி(360 ஏக்கர்) விமான நிலைய திட்ட செயல்பாட்டு பகுதிக்கு உள்ளேயிருந்தாலும், அதனை, ஆழப்படுத்தி தொடர்ந்து ஏரியாக பராமரிக்கப்படும். திட்டப்பகுதி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதியின் நீர்நிலைகள், விவசாய நிலங்களின் நீர்ப்பாசன தேவையை பூர்த்தி செய்யும் வகையில் இணைக்கப்படும்” என்று தெரிவித்தார்.

இதுகுறித்து கதிரேசனிடம் கேட்டபோது “ நீர்நிலை விஷயத்தில் அரசு எவ்வித புரிதலும் இல்லாமல் பேசுகிறது என்பதற்கு அமைச்சரின் அறிக்கையே சிறந்த எடுத்துக்காட்டு. நெல்வாய் ஏரியைச் சுற்றியுள்ள விளைநிலங்களையும் அதற்கு தண்ணீர் கொண்டு வரும் கம்பன் கால்வாயையும், நீர்ப்பிடிப்புப் பகுதிகளையும் அழித்துவிட்டு நெல்வாய் ஏரியைப் பாதுகாத்து என்ன பயன்? அந்த ஏரிக்கு எங்கிருந்து தண்ணீர் வரும்? கம்பன் கால்வாய் என்பது மிகவும் சிக்கலான ஒரு நீர்ப்பாசன அமைப்பு. இதுகுறித்து தனியாக ஒரு ஆய்வையே செய்ய  வேண்டும். அதன் முக்கியத்துவத்தை களநிலவரத்துடன் சேர்த்து அறிந்துகொள்ளாமல் வெறும்செயற்கைகோள் வரைபடங்களைப் பார்த்து மட்டுமே அரசு திட்டங்களைத் தீட்டக்கூடாது” என்றார்.

ஏகனாபுரத்தில் உள்ள ஏரியைப் பார்வையிட்டுக் கொண்டிருந்தோம். அந்த ஏரியின் குறுக்காக ஒரு ஓடுதளம் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளதை கதிரேசன் வரைபடங்கள் மூலம் நமக்கு விளக்கிக் கொண்டிருந்தார். அப்போது வயல் வேலை செய்துகொண்டிருக்கும் சில பெண்கள் எங்களைக் கடந்து சென்றனர். அவர்களை நிறுத்தி அரசு இத்திட்டத்திற்காக கையப்படுத்தப்போகும் நிலங்களுக்கு இழப்பீடாக 3.5 மடங்கு பணம் தருவதாகக் கூறியது குறித்து கருத்து கேட்டேன். 40 வயதான் சுமதி விரக்தி மற்றும் கோபத்தின் உச்சியில் பேசத் தொடங்கினார் “ கிராமத்துப் பெண்கள் எல்லாம் விவசாயக் கூலி வேலைக்குதான் போறோம். முதல்ல எவ்வளவு பணம் கொடுத்தாலும் இந்த திட்டம் எங்களுக்கு  வேண்டாம். அப்படியே கொடுத்தாலும் அந்தப் பணம் எங்க கைக்கு வராது. எங்க வீட்டாளுங்க(கணவர்) கொண்டுபோய் டாஸ்மாக்ல கொடுத்துடுவாங்க. இன்னொரு ஊருக்குப் பொயி புதுசா எங்க வாழ்க்கைய ஆரம்பிக்க எங்களுக்கு விருப்பமில்ல” என்றார்

பரந்தூர் விமான நிலையம் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ள எல்லா கிராமங்களின் நுழைவிலும் காவல்துறைத் தடுப்புகளைப் பார்க்க முடிந்தது. கலவரமோ, துப்பாக்கிச் சூடோ நடந்த ஊரில் போடப்பட்டிருக்கும் தடுப்புகள் போல அவை காட்சியளித்தன. இதுகுறித்தும் சுமதி தன் கவலையைப் பதிவு செய்தார் “ என்ன பிரச்சினை வந்தாலும் எங்களுக்குள்ளாகவே சுமூகமா தீர்த்துப்போம்.போலீசிடம் போனதே இல்ல. ஆனால், ஆறு மாசமா தினமும் போலீசைப் பார்க்கிறோம். இது எங்களுக்கு மொதல்ல அச்சத்தையும், மன உளைச்சலையும் கொடுத்துச்சு. ஆனால், இப்போ போலீஸ் மேல உள்ள பயமே போய்ட்டு. காலேஜுக்குப் போற பசங்களைக் கூட விடாம தடுத்து நிறுத்தி விசாரிச்சு அனுப்புறாங்க. இத்திட்டத்தால எங்க சொந்த கிராமத்துக்குள்ளாகவே அகதி மாதிரி வாழ்றோம்” என்றார்.

ஏகனாபுரத்தைப் பார்த்துவிட்டு பரந்தூர் நொக்கி சென்றோம். போகும் வழியில் நாங்கள் பயணித்த நாகப்பட்டு சாலையிலிருந்து நெல்வாய் போவதற்கான கம்பன் கால்வாயின் குறுக்கேயுள்ள தரைப்பாலம் வெள்ள நீரில் மூழியிருந்தது. குழந்தைகளைத் தோலில் வைத்துக்கொண்டு முட்டியளவு வெள்ளநீரில் ஆபத்தான முறையில் அக்கிராமத்தவர் ஒருவர் சாலையைக் கடந்துகொண்டிருந்தார். அங்கு 62 வயதான ஓய்வுபெற்ற தமிழக போக்குவரத்துத்துறை ஊழியர் கமலக் கண்ணனை சந்தித்தோம். கமலக்கண்ணன் கால் ஏக்கர், அரை ஏக்கர் என சிறுகசிறுக தான் சேர்த்த பணத்தில் மொத்தமாக 20 ஏக்கரில் தோட்டம் அமைத்துள்ளார். “ மாமரம், தென்னை, கொய்யா, நெல் என பல பயிர்கள் போட்டுருக்கேன். விளைச்சலில் என் குடும்பத் தேவைக்குப் போக மீதியை சந்தையில் வித்துடுவே. ரொம்ப நிம்மதியா என் தோட்டத்தை வைத்து என் வாழ்க்கை போய்ட்டிருக்கு. ஆனால், இந்த விமான நிலையம் வரப்போர செய்தி கேட்டதிலிருந்து என் நிம்மதியே போச்சு” என வருந்தினார்.

நெல்வாயைக் கடந்து பரந்தூர் சென்றோம். பரந்தூர் ஏரி நிரம்பி கம்பன் கால்வாயில் வெள்ளம் பாய்ந்து கொண்டிருந்தது. சிறுவர்கள் மகிழ்ச்சியாக மதகிலிருந்து கால்வாயில் குதித்து விளையாடிக் கொண்டிருந்தனர். இளைஞர்களும் பெரியவர்களும் பல்வேறு வகையிலான தூண்டில்களிலும் வலைகளிலும் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். சாலையின் ஓரம் மீன் விற்பனை நடந்துகொண்டிருந்தது. பார்க்கவே அவ்வளவு ரம்மியமான காட்சியாக இருந்தது.

”இப்படிப்பட்ட நிம்மதியான வாழ்க்கையை இன்னும் சில நாட்களில் நாங்க இழந்துடுவோம் என்கிற அச்சம் என்களை வதைக்குது. இந்த நிலமும் வீடும் போய்ட்டா நாங்க 100 ஆண்டு பின்னாடி போய்டுவோம். எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை. ஆனால், எங்க ஏகனாபுரம் கிராமத்துல எல்லா அறுவடை விளைச்சலையும் ஊர்தெய்வமான எல்லையம்மனுக்கு வச்சு கிராமத்தினர் வழிபடுவாங்க. ஒவ்வொரு விளைச்சலுக்கும் நன்றி சொல்வாங்க. ஆனால், இந்த பொங்கலுக்கு இந்த விமான நிலையம் எங்களுக்கு  வேண்டாம் என்பதுதான் கிராமத்தினரோட வேண்டுதலாக இருக்கும் என்றார்”.

இப்படி வேதனையும் வேண்டுதலுமாக ஏகனாபுரம் மக்கள் நாட்களைக் கடத்திவர, பரந்தூர் விமான நிலையத்திற்கான பொருளாதார, தொழில்நுட்ப ஆய்வுகளை மேற்கொள்ள ஒரு நிறுவனத்தைத் தேர்வு செய்ய ஒப்பந்தப்புள்ளிகளைக் கோரியுள்ளது தமிழக அரசு.

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments