வளர்ச்சி என்னும் அநீதி!

நதிநீர் இணைப்பு மீண்டும் பேசுபொருளாகியிருக்கிறது. நதிநீர் இணைப்பு பற்றிய மத்திய அரசின் அறிவிப்புகளை தொடர்ந்து ’நதிகளுக்கான பேரணியை’ நடத்தி முடித்திருக்கிறது ஈஷா யோகா மையம். இன்னொரு பக்கம், மிகப்பெரிய அணை ஒன்றை நாட்டுக்கு அர்ப்பணித்திருக்கிறார் பிரதமர். ஒரு நீண்ட போராட்டத்தின் மீதும் ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்வாதாரங்கள் மீதும் கட்டியெழுப்பப்பட்டிருக்கிறது அந்த அணை.
நதிநீர் இணைப்பு திட்டம் ஒருவேளை செயல்படுத்தப்பட்டால் கூட அதற்கு பல பெரிய அணைகளை கட்ட வேண்டியிருக்கும். இதனால் ஏற்படக் கூடிய பாதிப்புகளை விரிவாக அலசுகிறது பூவுலகின் இந்த மாத சிறப்புப் பகுதி.

செப்டம்பர் 17 அன்று நாட்டிற்கு சர்தார் சரோவர் அணையை அர்ப்பணிப்பதாக மாபெரும் நாடகத்தை இயற்றினார் இந்திய பிரதமர் மோடி. அன்று அவரது பிறந்தநாளும் கூட, பாரதிய ஜனதா கட்சியால் அன்றைய நாள் (சேவா டிவாஸ்) சேவை நாளாகக் கொண்டாடப்பட்டது. குஜராத் தேர்தலுக்கு முன்னதாகவே அரசியல் ஆதாயம் பெறவும், அழுது புலம்பி அனுதாபம் பெறவும், அணையின் மிக மோசமான சமூக மற்றும் சுற்றுச்சூழல் தரத்தை முன்னிறுத்தி பல ஆண்டுகளாக எதிர்த்து வருபவர்களைப் பெயர் குறிப்பிடாமல் மிரட்டவும் இத்தருணத்தை அவர் பயன்படுத்திக் கொண்டார். நர்மதா பச்சோ ஆந்தோலன் இந்த அர்ப் பணிப்பு விழாவை படுதோல்வி என்றும் கேலிக்கூத்து என்றும் விமர்சித்துள்ளது, அவர்களது அறிக்கையில் சர்தார் சரோவர் திட்டம் இன்றளவும் முழுமையாக நிறைவடையவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது அவர்களின் போராட்டங்களுக்கும் நாடு முழுவதிலு மிருந்து எழுந்த விமர்சனங்களுக்கும் கிடைத்த வெற்றியாக பார்க்கப்படுவதோடு இத்திட்டத்தால் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் அதிகமுள்ள மத்திய பிரதேசத்தின் 192 கிராமங் களிலும் குஜராத், மகாராஷ்டிர மாநில மீள் குடியேற்ற பகுதிகளிலும் வாழும் 40,000 குடும்பங் களுக்கு நிகழவிருக்கும் கொடுமைகளைக் கண்டிப் பதாகவும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

ஆரம்ப நாட்களில்…

நர்மதை ஆறு மற்றும் அதன் கிளையாறுகளில் 30 பெரிய அணைகள், 135 நடுத்தர அணைகள், 3000 சிறிய அணைகள் மற்றும் கால்வாய்கள் அமைக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக 1961 ம் ஆண்டில் இந்தியாவின் முதல் பிரதமரால் இவ்வணைக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. நர்மதை ஆற்றுப்படுகையில் அமைந்திருக்கும் மத்தியபிரதேசம், குஜராத் மற்றும் மகாராஷ்டிர மாநிலங்களால் எதிர்க்கப்பட்ட இவ்வணை இன்றிருக்கும் சர்தார் சரோவர் அணையை ஒப்பிடுகையில் 162 அடி உயரமுடைய மிகச் சிறிய அணை. 1960களில் மத்திய பிரதேசத்தில் ஜனசங்கம் மற்றும் காங்கிரஸ் இணைந்து நிமத் பச்சோ ஆந்தோலன் என்ற பெயரில் இவ்வணையால் மத்திய பிரதேச மாநிலம் மிகுந்த பாதிப்படையும் என்றும் குஜராத் மாநிலமட்டுமே வளம் பெறும் என்றும் இத்திட்டத்தை எதிர்த்தனர். அணையின் உயரத்தை 455 அடியாக அதாவது 138.68 மீட்டராக உயர்த்தியும், மூன்று மாநிலங்களுக்கான நீர்ப்பாசன மற்றும் மின்சார பங்கீடுகளை, பாதிக்கப்பட்ட மக்களுக்கான உரிமங்களை மற்றும் இதர பிரச்சனைகளை தீர்மானித்தும் நர்மதை நீர் வழங்கல் தீர்ப்பாயம் (NWDTA) 1979-ம் ஆண்டு மாநிலங்களுக் கிடையேயான பிரச்னைகளுக்குத் தீர்வு கண்டது. பல்வேறு ஆலோசனைகள் மற்றும் ஆய்வுகள், கணக்கெடுப்புகள் நடத்தி தீர்வு காண தீர்ப்பாயத்திற்கு 10 ஆண்டுகளானது. ஒரு ஆணையாகவே கருதப்படும் இந்தத் தீர்வு, எதிர்கால வழக்குகள் மற்றும் முடிவுகளுக்கு நீதிமன்றம் மற்றும் அரசுகளின் முக்கியக் குறிப் பாகவே ஆயிற்று.

இந்த அணை, இந்தியாவின் மிக உயரமான அணை அல்லது உலகின் இரண்டாவது பெரிய அணை என்று கூறப்படுகிறது, அதன் கான்க்ரீட் கொள்ளளவின் அடிப்படையில் குறிப்பிடப் படுகிறது. இது மிகப்பெரிய அணைகளில் ஒன்று, எந்த ஐயமும் இல்லை மேலும் இம்முடிவு டிசம்பர் 1979, நர்மதை நீர் வழங்கல் தீர்ப்பாயம் வெளியிட்டதுதானேயன்றி மோடி குறிப்பிட்டதுபோல 1961-ல் அல்ல. தீர்ப்பாயத்தின் தீர்ப்பு வந்த பிறகும், சில நாட்களிலேயே திட்டம் நிறுத்தப்பட்டு, ஆறு மற்றும் பள்ளத்தாக்கு வழிகாட்டுதல்கள், 1993 மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம்,1986 ஆகியவற்றைப் பின்பற்றி, 1987ம் ஆண்டு ஜூன் மாதம் ஒப்புதல் வழங்கப்பட்டது. இந்த ஒப்புதல் கூட திட்டத்தின் குறைந்தது 8 முக்கிய அம்சங்களை ஆய்வு செய்த பின் நிறைவேற்ற வேண்டும் என்ற நிபந்தனைக்குட்பட்டது தான், அப்படிப்பட்ட ஆய்வுகள் எதுவும் இதுவரை நடத்தப்படவுமில்லை, .முடியவுமில்லை. மறுவாழ்வு, தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள், நிலா அதிர்வு அபாயங்கள், நீர்ப்பிடிப்பு பகுதிகள், அணையைச் சுற்றியுள்ள பகுதிகளின் வளர்ச்சி, கீழ்நிலையோட்ட தாக்கங்கள் ஆகியவை ஆய்வுசெய்ய வேண்டிய 8 முக்கிய அம்சங்களாகும். சர்தார் சரோவர் அணை வளர்ச்சியில் பல அதிசயங்களை நிகழ்த்துமென்றும், நீர்ப்பாசனம், குடிநீர் வழங்கல், மின்சார உற்பத்தி மேலும் பல நன்மைகளை வழங்குமென்றும் கூறப்படுகிறது. ஆனால் இது நாணயத்தின் ஒரு பக்கம்தான். நாணயத்தின் மறுபக்கம் 244 கிராமங்கள் மற்றும் ஒரு நகரம், 57 தொல்குடி கிராமங்கள் உட்பட பஞ்சாயத்துகள் (பட்டியலிட்ட பகுதிகளின் விரிவாக்கம்) சட்டம் – 1996 பொருந்தக்கூடிய கிராமங்கள் (மத்திய பிரதேசம் – 192 கிராமங்கள் & 1 நகரம், மகாராஷ்டிரம் – 33 கிராமங்கள் & குஜராத் – 19 கிராமங்கள்) அணையின் வெள்ள அபாய பகுதிகளில் இருக்கின்றன. மேலும் நாட்டின் ‘வளர்ச்சிக்காக’ தங்களது வாழ்விடங்களை விட்டு வெளியேறும் மக்களின் மறுவாழ்வுக்கோ மீள்குடியேற்றத்திற்கோ தேவையான அடிப்படை உரிமைகள்கூட மறுக்கப்படுகின்றன.

தொல்பொருள் முக்கியத்துவம்:

நர்மதை பள்ளத்தாக்கு உலகின் மிகப் பழமை யானது, மிகப் பழமையான மனித குடியேற்றத்தைக் கொண்டது என்ற வரலாறு உடையது. நர்மதை பள்ளத்தாக்கு பகுதிகளில் வாழும் தொல்குடிகள், உழவர்கள், உழைப்பாளிகள், மீனவர்கள், வணிகர்கள், கலைஞர்கள், படகோட்டிகள் என பல்வேறு சமூகங்களைக் கொண்ட பழமையான கலாச்சாரம் நிறைந்தவர்கள். பழங்கால மனிதர்களின் உடற்பகுதிகள் தொல்லியல் ஆராய்ச்சியாளர்களால் மதிய பிரதேச மாநிலம், நவாடா டோலி என்ற கிராமத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மேலும் இப்பள்ளத்தாக்கு நெடுங்கிலும் வரலாற்றுக்கு முந்தைய கால பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. ஆசியாவின் முதல் உழவர் பிறந்த மத்திய பிரதேசம் மாநிலத்திலிருக்கும் சிகால்டா கிராமம், சர்தார் சரோவர் அணையால் பாதிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தின் தொல்லியல் துறை தனது ஆராய்ச்சியை பாதியிலேயே நிறுத்தியது, நிராகரித்தது. மேலும் அரைகுறை ஆய்வுகளைக் கொண்டு தயாரித்த அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அங்குகிடைத்த கலைப் பொருட்களை வேறு இடத்திற்கு மாற்றிவிட்டதாகவும் தெரிவித்தது. வெறும் 3 மாவட்டங்களில்: பட்வனி, தார் மற்றும் கார்கோனே; நிகழ்த்தப்பட்ட ஆய்வில் 308 மதத் தளங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன என்பதை அதிகளவிலான மதத் தளங்கள் எதுவுமில்லை என்று நர்மதை பள்ளத்தாக்கு மேம்பாட்டு ஆணையம் குறிப்பிட்ட தகவலுக்கு எதிராக வெளியிட்டது ஒரு இயக்கம். இதில் 117 தளங்கள் மிகப் பழமையானவை, 64 தளங்கள் 100 ஆண்டுகள் பழமையானவை; 22 தளங்கள் 50 ஆண்டுகள் பழமையானவை. பழமை நிறைந்த இப்பண்பாட்டுத் தளங்களை அங்கீகரிக்கவும் புனரமைக்க இயலாத அரசால் நமது பாரம்பரியத்தை நம் நாடு இழக்கிறது. இது வளர்ச்சியின் வரையறைக்குள் வரவில்லையா? நர்மதை பள்ளத்தாக்கு பகுதிகளில் வாழும் 40,000 குடும்பங்களுக்கு இன்னும் மறுவாழ்வு அளிக்கப்படவில்லை. 08.02.2017 அன்று வெளியான உச்சநீதிமன்ற தீர்ப்பானது NWDTA மற்றும் மாநில மறுவாழ்வு கொள்கையின் அடிப்படையில் மக்களுக்கு முழுமையான மறுவாழ்வு வழங்கப்பட வேண்டும் என்று தெளிவாகக் கூறுகிறது. ஆனால், அரசு உச்சநீதி மன்ற தீர்ப்பின்படியல்லாது கொள்கையில் இல்லாத வாழத்தகுதியற்ற தகரக் கொட்டகைகளை அமைத்துத் தருகிறது. ரூ. 60 லட்சம் மற்றும் ரூ. 15 லட்சம் இழப்பீட்டுத் தொகைக்குத் தகுதியுடைவர்களுக்கு இதுவரை இழப்பீடு வழங்கப்படவில்லை. வீடுகள் ஒதுக்கப்படுவதில் பெருமளவில் ஊழல் நடக்கிறது. மறுவாழ்வு பகுதிகள் இன்னும் முழுமையடைவில்லை. பெரும்பாலான மறுவாழ்வு பகுதிகள் உயரமான பகுதிகளிலும், மண்ணிட்டு நிரப்பவேண்டிய தாழ்வான பகுதிகளிலும் அமைந்திருக்கின்றன. இந்த ஊழல் மற்றும் முறைகேடுகளுக்கும் மேலாக இந்த திட்டம் நிறைவேற்றுவதில் இருக்கும் முரண் என்னவென்றால், மறுவாழ்வுக்கான பணிகள் நிறைவடைவதற்கு முன்பே சர்தார் சரோவர் அணையின் வாயில்கதவுகளை முடியாதுதான். உச்சநீதிமன்றம், ழிகீஞிஜிகி வழங்கிய தீர்ப்பின்படி, அணை பயன்பாட்டுக்கு வரும் 6 மாதத்திற்கு முன்னரே மக்களுக்கான மறுவாழ்வு பணிகள் முடிவடையவேண்டும் என்றும், அனைத்து வீடுகள் நிலங்களிலிருந்து மக்கள் வெளியேறி முன்பைவிடச் சிறந்த மாற்றிடத்தில் குடியமர்த்தப்பட்டிருக்க வேண்டும் என்றும் மாநில அரசுக்கு வலியுறுத்தியது.

எண்களின் விளையாட்டு:

பள்ளத்தாக்குகளில் வாழும் மக்களை சில எண் விளையாட்டுகளையாடி குழப்பியது மத்தியப் பிரதேச அரசு. 2008-ம் ஆண்டு மத்தியப் பிரதேச அரசு, எந்த காரணமும் இல்லாமல், மொத்தமுள்ள 53,000 அகற்றப்பட்ட குடும்பங்களிலிருந்து 4,374 குடும்பங்களைக் குறைத்தது. 2010-ம் ஆண்டு, அகற்றப்பட வேண்டிய குடும்பங்களின் எண்ணிக்கையைக் குறைக்க பேக்வாட்டர் அளவைக் குறைத்தது மத்தியப் பிரதேச அரசு. மத்திய நீர்வள ஆணையம் அளித்த அறிக்கையைப் புறக்கணித்துவிட்டு தொழில்நுட்ப உதவிக்குழு அளித்த, மத்திய அரசின் சிறப்புக்குழு இது அறிவியல்பூர்வமற்ற அறிக்கை என்று நிராகரித்த அறிக்கையைப் பயன்படுத்தியது. எனினும், இன்றளவும், அந்த அறிக்கையின் அடிப்படையிலும் மத்திய நீர்வள ஆணையத்தோடு கொண்ட உடன்படிக்கையாலும், ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு நீரில் மூழ்கும் அபாயம் இல்லை என்று சொல்லி அவர்களின் மறுவாழ்வுக்கான சலுகைகளையும் பறித்துவிட்டனர். ஏறக்குறைய 15,946 குடும்பங்களின் இருப்பிடங்கள் கையகப்படுத்தப்பட்டு, இழப்பீட்டுத் தொகையில் பாதி அளவு வழங்கி, தற்போது அவ்விடங்களுக்கு பாதிப்பு ஏற்படாது என்றும் அறிவித்தாகிவிட்டது. அவர்களின் சொத்தும் நிலங்களும் இன்னும் நர்மதை பள்ளத்தாக்கு மேம்பாட்டு ஆணையத்தின் (ழிக்ஷிஞிகி) பெயரிலேயே இருக்கின்றன. 2017-ம் ஆண்டுக்கான கெசட்டின் படி, பாதிக்கப்பட்ட குடும்பங்களின் எண்ணிக்கை 18,000. ஆனால் உண்மை என்னவென்றால், இன்றும் 40000 குடும்பங்களுக்கும் அதிகமாக ஒரு லட்சத்துக்கும் மேலான மத்தியபிரதேச மக்கள் வெள்ள அபாயமுள்ள பகுதிகளில் வாழ்கின்றனர். அவர்களுக்கு மறுவாழ்வுக்காக எந்த நடவடிக்கையும் இதுவரை இல்லை மேலும் அவர்களின் நிலை மற்றும் உரிமைகள் தொடர்பாக எந்த தெளிவும் அரசிடம் இல்லை.

மறுவாழ்வுக்கான போராட்டம்:

இன்னும் தயாராகாத புனர்வாழ்விட பகுதிகளும், நிறைவடையாத புனர் வாழ்விடங் களும் இருக்கையில் நர்மதை கட்டுப்பட்டு ஆணையம் அணையின் வாயிலை மூடிய செயல் மனிதநேயமற்றது மற்றும் அநீதியானது. மத்தியபிரதேசத்தில் 40,000 க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கும், மகாராஷ்டிரத்தில் 4,000 க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கும் இனிதான் புனர் வாழ்வளிக்கப்பட வேண்டும். நிலமற்றவர்களுக்கு மாற்று வாழ்வாதாரம் எதுவுமில்லை. உச்சநீதி மன்றத்தின் தீர்ப்புகளை 2000 மற்றும் 2005-ம் ஆண்டுகளில் மீறியது போலவே பிப்ரவரி 8, 2017 அன்று வந்த தீர்ப்பையும் மீறியுள்ளது மத்தியபிரதேச அரசு. இன்றளவும் 6,000 க்கும் மேற்பட்ட வழக்குகள் / புகார்கள் GRA-வில் நிலுவையில் உள்ளன. வெளியேற்றப்பட்டவர்களின் குறைகளைக் கேட்டறிந்து தீர்க்காதவரை, ஆணையை அமுல்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காதவரை, மீள்குடியேற்றம் மற்றும் மறுவாழ்வுப் பணிகள் நிறைவடையாது. ஜூன் 5, 2017 அன்று அறிவிக்கப்பட்ட புதிய மறுவாழ்வு சலுகைகள், மத்தியபிரதேச முதலவர் அறிவித்தது போல, பல்வேறு ஊடகங்களில் வெளிவந்த விளம்பரங்கள் போல, எதுவும் போதுமானதாக இல்லை மேலும் சில சலுகைகள் சட்டத்திற்கு புறம்பானவை. இந்த அறிவிப்புகளை நடை முறைப்படுத்த குறைந்தது ஓராண்டுக்கு மேலாகும். இத்தகைய சூழலில் ஜூலை 15க்குள் வீடுகளை/கிராமங்களை/ மேலும் அவர்களின் உடைமைகளை இடமாற்றவேண்டும் அல்லது ஜூலை 31க்கு மேல் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படுவர் என்று எப்படி அந்த அரசு அறிவிக்க முடியும்? திட்டத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் இதை முற்றிலும் நிராகரிக்க, வெறும் 2% மக்கள் மட்டுமே பத்திரத்தில் கையெழுத்திட்டு, அங்கிருந்து வெளியேற ஒப்புக்கொண்டுள்ளனர், அவர்களுக்கும் இதுவரை எந்த சலுகைகளும் கிடைக்கவில்லை. நர்மதா பச்சோ அந்தோலன் வளர்ச்சிக்கான சிந்தனையின் புதிய அர்த்தத்தைக் காட்டியது அத்துடன் வளர்ச்சியின் இருள்சூழ்ந்த கொடுரமும் அநீதியும் நிறைந்த இன்னொரு பக்கத்தையும் அடிக்கோடிட்டுக் காட்டியது. மக்களின் உரிமைகளை இழக்கச்செய்து நர்மதை பள்ளத்தாக்கின் லட்சக்கணக்கான மக்கள், மரங்கள், கால்நடைகள், விளைநிலங்கள், மதத் தளங்கள் ஆகிய அனைத்தையும் மூழ்கடித்து, மற்றவர்களின் கழுத்தில் ஏறி நிற்கும் சிலரது வளர்ச்சி! எப்படி ஒரு பிரதமர், மக்களின் உரிமைகளுக்கான பாதுகாவலர் இந்த அணையை தமது நாட்டிற்கு அர்பணிக்க முடியும்? அணையின் கட்டுமானம் முழுமையாக முடிக்கப்படவில்லை. சர்தார் சரோவர் அணை முழுமையாக கட்டிமுடிக்கப்படும் வரை, அன்று நடந்த அர்பணிப்பு விழா ஒரு தோல்வி தான், 50% மேலான கால்வாய் இணைப்புகள் இன்னும் முடிந்தபாடில்லை, எனவே அணையைச் சுற்றியுள்ள பகுதிகளின் வளர்ச்சி, நீர்பிடிப்பு பகுதிகளைக் கையாளும் முறை மற்றும் மூன்று மாநிலங்களிலும் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் மீள் குடியேற்றம் மற்றும் மறுவாழ்வுக்கான நடவடிக்கை என எல்லாம் தோல்விதான். ஏறக்குறைய இருபது ஆண்டுகளாக குஜராத் மாநிலத்தை ஆண்டுவருகிறது பாஜக, ஆகவே இத்தோல்வியை வேறு காரணங்களைச் சொல்லி மறைக்கமுடியாது. 41,000 கிமீ நீள கால்வாய் இணைப்புகளை முடித்தாகவேண்டும் அதற்கு பிரதமர் நரேந்திர மோடி எதிர்க்கட்சியினரைக் குறை கூற முடியாது. பிரதமரால் அங்கு நன்மைகள் என்று பேசப் பட்டவையெல்லாம் கற்பனைத் தனமானவை மற்றும் பொய் பரப்புரைகள். மத்திய பிரதேச மாநிலத்துக்கு 56% மின்சாரம், அம்மாநிலத்துக்கு அது கிடைத்தாலும், கேள்வி எழுகிறது, அம்மாநிலத்துக்கு அவ்வளவு மின்சாரத் தேவை இருக்கின்றதா? இருந்தாலும் 192 கிராமங்கள் மற்றும் 1 நகரத்தை விலையாகக் கொடுத்து அது தேவையில்லை. அது அவ்வளவு மதிப்புடையதா என்ன? இதுபோன்ற உண்மைக்குப் புறம்பான தகவல்கள் வெளிச்சத்திற்கு வரும்போது, அவர்கள் அறியாமையில் செய்கிறார்கள் அல்லது அறிந்தே அம்மாநில மக்களை திசைத்திருப்பி வருகின்ற சட்டமன்ற தேர்தலில் ஆதயம்தேட பார்க்கிறார்கள் என்று சொல்லலாம், இதெல்லாம் அவர்கள் இதற்குமுன்பு குஜராத்தில் செய்ததுதான். நமது போராட்டத்திற்கான விளைவாக வரலாற்றிலேயே முதன்முறையாக குறைந்தது 11000 குடும்பங்களுக்கு நிலத்துக்கு நிலம் கிடைத்திருக்கிறது, எனினும் இன்னும் 40000 குடும்பங்களுக்கு நர்மதை நீர்வழங்கல் ஆணையம் மற்றும் உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி வரவேண்டிய இழப்பீடுகள் வரவில்லை.

சர்தார் சரோவர் அணை, கடந்த முப்பது ஆண்டுகளாக நீதிக்காகவும் மக்களை மையமாகக் கொண்ட வளர்ச்சிக்காகவும் தங்களது உரிமைகளுக்காகவும் போராடிய, நர்மதை பள்ளத்தாக்கு மக்களுக்கு ஒரு சாட்சி. இன்னொருபுறம், இது ஊழலுக்கும், அரசாங்க அக்கறையின்மைக்கும் மேலும் பல ஆண்டுகளாக பல்வேறு அரசுகளாலும், தமது ஆணையையே நிறைவேற்ற முடியாமல் இருக்கும் நீதித்துறையின் இயலாமையாலும் சட்டத்தின் ஆட்சிக்கு வந்த அலட்சியத்துக்கும் ஓர் நினைவுச் சின்னம். கால்வாய்களை இணைக்கும் பணிகள் நிறைவடையாதவரை, விவசாயிகளுக்கும் கச்சி பகுதிக்கும் நீர் வராதவரை, எந்த மக்களின் மீது இத்தனை ஆண்டுகளாக அரசியல் விளையாட்டு நிகழ்த்தப்பட்டதோ அந்த கச்சி மற்றும் குஜராத் மக்களுக்கும் இது போராட்டம்தான். கோகோ கோலா தொழிற்சாலைக்கும் இதர கார் தயாரிப்பு தொழிற்சாலைகளுக்கும் டெல்லி மும்பை தொழிற்துறை இடைவழிக்கும் நீர் திருப்பி விடப்படுகிறது. 60% குஜராத் ஞிவிமிசி இன் செல்வாக்கின் கீழ் உள்ளது என்பது குறிப்பிடத் தக்கது. நர்மதா பச்சோ அந்தோலன் சர்தார் சரோவர் அணையினால் பாதிக்கப்பட்டு எதிர்த்த, போராடிய லட்சக்கணக்கான மக்களாலும், நாட்டின், உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஆதரவளித்தவர்களாலும் கட்டமைக்கப்பட்ட ஒரு இயக்கம். இந்த 32 வருட நீண்ட போராட்டமும் உரிமைக்கான குரலும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் அணையால் பாதிக்கப்பட்ட மக்களுக்காகப் போராடும் அமைப்புகளுக்கு முன்னுதாரனமாக விளங்குகிறது. நர்மதை பள்ளத்தாக்கு மாநில அரசால் அனைத்துவிதமான ஒடுக்குமுறைகளையும் கண்டிருக்கிறது. காலவரையற்ற உண்ணா விரதமாக 2007-ம் ஆண்டு துவங்கிய போராட்டம் 21 நாட்களில் முடிந்ததாக இருக்கட்டும், 2017-ல் நடைப்பெற்ற 17 நாட்கள் தொடர்ந்த உண்ணா விரதமாகட்டும், ஆயிரக்கணக்கான காவல் துறையினர் மேத்தா பட்கர் அவர்களை இந்தோரில் உள்ள பாம்பே மருத்துவமனைக்கும் இதர போராட்டக்காரர்களை தார் மாவட்ட மருத்துவமனைக்கும் வலுகட்டாயமாக அழைத்துச் சென்றனர். பின்னர் மேத்தா பட்கர் பள்ளத்தாக்கு பகுதிக்கு வரும்போது சட்டத்துக்குப் புறம்பாக கைது செய்யப்பட்டார் மேலும் அவரை பிணையில் விடுவிக்க வேண்டுமென்றால் ஓராண்டுக்கு பள்ளத்தாக்கு பகுதிக்குள் நுழையக்கூடாது என்று நிபந்தனை கையப்போமிடவேண்டும் என்றனர். சட்ட விரோதமான கைதுகளும் கொலை முயற்சி போன்ற கடுமையான குற்றச்சாட்டுகளையும் சுமத்தி போராட்டக்காரர்களை அச்சுறுத்தியது அரசு. நர்மதை பள்ளத்தாக்கு பகுதிகளைச் சேர்ந்த லட்சக்கணக்கான மக்கள் சர்தார் சரோவர் அணையின் கதவுகளை மூடியதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர் மேலும் இந்த மனிதாபி மானமற்ற சட்ட விரோதச் செயல் ஏற்படுத்தும் தாக்கங்களை அரசுக்குக் காட்ட பல்வேறு வழிகளில் போராட்டங்களைச் செய்தனர்.

பள்ளத்தாக்கு பகுதிகள் மற்றும் அதன் சுற்றுப் புறங்களில் எழும் போராட்டங்களும் விமர்சனங்களும், தேசியளவிலான ஆதரவும் மேலும் 30 அயல்நாடுகளின் ஆதரவும் இருந்தும், இந்த மோடி அரசு தனது அரசியல் அதிகார பேராசையைத் தாண்டி எதையும் சிந்திக்க முடியவில்லை மேலும் இன்றும் தங்களது சொந்த கிராமங்களிலேயே வாழும் லட்சக்கணக்கான மக்களை மூழ்கடிக்க முடிவுசெய்துவிட்டது. நீரின் அளவு 130 மீட்டராக உயர்ந்துள்ளது மேலும் சிக்கால்டா, ராஜ்காட், நிசர்பூர் போன்ற சில கிராமங்களில் இருக்கும் வீடுகளும் பயிர்களும் நீரில் மூழ்கி வருகின்றன. காலவரையற்ற உண்ணா நிலை போராட்டம் முதல், ஜல் சத்தியாக்கிரகம், கஃபான் சத்தியாகிரகம், மனித சங்கிலி முதல் நடைபயணம் வரை, பல்வேறு வகையான போராட்டங்கள் பள்ளத்தாக்கில் நிகழ்ந்திருந்தாலும், இன்னும் அம்மக்கள் அநீதிக்கு எதிராக, கிராமங்களினுள் நீர் புகும்போதும் கூட, என்ன நடந்தாலும் நாங்கள் வெளியேற மாட்டோம் என்ற உறுதியுடன் வலுவாக நிற்கின்றனர் மேலும் லட்சக்கணக்கான மக்களின் உயிரைக் கருத்தில்கொள்ளாத அரசுக்கு, மனித வரலாற்றில் இது ஒரு மிகப்பெரிய மக்கள் படுகொலையாக இருக்கும் என்று எச்சரிக்கின்றனர். சிலரின் வளர்ச்சி மற்றவர்களின் மரணத்தாலும் அழிவாலும் வருவதை ஏற்றுக்கொள்ள முடியாது! நாட்டின் இறையாண்மையைப் பற்றிய கேள்வி முக்கியமானதென்றால், இத்திட்டத்தின் சாத்தியக்கூறு மற்றும் மிகப்பெரிய சமூக மற்றும் சுற்றுச்சூழல் தாக்கங்களால், 1993-ம் ஆண்டே உலக வங்கி இதற்கு வழங்கும் நிதியுதவியை நிறுத்திவிட்ட போதும் தொடர்ந்து திட்டம் செயல்படுத்தப் படுகிறதென்றால், இந்திய அரசியல் அமைப்பும் சட்டத்தின் ஆட்சியும் ஒவ்வொரு இடத்திலும் மீறப்படும்போதும்கூட ஏன் அவர் அமைதியாக இருக்கிறார் என்ற கேள்வியைப் பிரதமிரிடம் கேட்க விரும்புகிறோம். நர்மதை நீர்வழங்கல் தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்பை செயல்படுத்தாமல் மறுக்கும் ஒவ்வொரு முறையும்; அணை பயன்பாட்டிற்கு

வரும் ஆறு மதத்திற்கு முன்னரே மீள்குடியேற்றம் மற்றும் மறுவாழ்வு பணிகள் நிறைவடைந்திருக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்ற வழிகாட்டுதலை மீறும் ஒவ்வொரு முறையும்; திட்டத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான சட்ட உரிமைகளை வழங்காமல் நாம் மறுக்கும் ஒவ்வொரு முறையும்; நமது நாட்டின் இறையாண்மை நம்மால் பாதிப்படைகிறது. லட்சக்கணக்கான ஏழை விவசாயிகளை, தொல்குடிகளை, உழைப்பாளிகளை பெருநிறுவனங்களின் நலனுக்காக வளர்ச்சி என்ற பலிபீடத்தில் வைத்து தியாகம் செய்வது தொடர்ந்தால் நாட்டின் இறையாண்மை காணாமல்போகும். எனவே, எங்களது போராட்டம் தொடரும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம். பிரதமர் இந்த அத்தியாயத்தை மூடிவைக்க விரும்புவார், ஆனால் அது இல்லை, ஏனெனில் நர்மதை பள்ளத்தாக்கின் மக்கள் தங்களது முழு உரிமங்களையும் அவர்கள் இழந்தவற்றையும் இதுவரை பெறவில்லை. எங்களுக்கான தோல்வி என்பது, வளர்ச்சி என்ற பெயரில் இடம்பெயர்த்தலை, கட்டாய வெளியேற்றத்தை நாடுமுழுவதிளிருந்தும் எதிர்த்து போராடும் மக்களின் தோல்வி. நாடுமுழுவதும் எங்களோடு இணைந்து போராட அனைவரையும் அழைக்கிறோம். என்ன விலை கொடுத்து வளர்ச்சி, யாருக்கான வளர்ச்சி எந்த விதமான வளர்ச்சி என்ற கேள்விகள் இன்னும் விடைதெரியாமல் இருக்க எங்களது போராட்டம் தொடரும்.

கட்டுரையாசிரியர், மக்கள் இயக்கங்களின் தேசிய கூட்டமைப்பில் களப்பணியாளர்.

சர்தார் சரோவர் அணையை நாட்டுக்கு அர்ப்பணித்திருக்கிறார் பிரதமர். இது யார் மீதான வன்முறை? ஹிம்ஷி சிங். தமிழில் : அகிலன் கார்த்திகேயன்

நதிநீர் இணைப்பு – பெரும் அணைகள் சிறப்பு பகுதி

 

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments