செர்னோபிலிலிருந்து வரும் குரல்கள்

ஏப்ரல் 26, 1986 அன்று, செர்னோபில் அணுமின் நிலையத்தின் நான்காவது அணுஉலை வெடித்தது. உக்ரைன் நாட்டின் செர்னோபில் அணுமின் நிலையத்தில், வழக்கமான சோதனையில் தவறு ஏற்பட்டபோது நான்காவது அணுஉலையின் மையம் உருகி, தீப்பற்றி, அந்த வெப்பத்தினால் ஆயிரம் டன் எடையுடைய எஃகு மற்றும் பைஞ்சுதையினால் (Concrete) ஆன மூடி வெடித்துச் சிதறியது. வெடித்ததால் எரியும் கிராபைட்டும் வெப்பமிகு அணுஉலை மைய பொருளும் அருகிலிருந்த பிற அணு உலைகளின் எரியக்கூடிய தாரால்ஆன கூரைகள்மீதும் தீயைப் பரவச்செய்தது. மக்களை அங்கிருந்து வெளியேற்றும் பணி சோவியத்தின் அலட்சிய அதிகாரிகளால் தாமத மானது. இறுதியில், 1,00,000 க்கும் மேலான மக்கள் அணுஉலையைச் சுற்றியுள்ள உக்ரைன் மற்றும் பெலாரசு பகுதிகளிலிருந்து வெளியேற்றப் பட்டனர். விபத்து நடந்து ஒரு வாரத்திற்குப் பிறகு சோவியத் ஒன்றியம் ஆயிரக்கணக்கான பயிற்சிபெறாத, போதிய பாதுகாப்புக் கருவிகள் இல்லாத ஆட்களை அணுமின் நிலையத்திற்குள் அனுப்பியது. தீயையணைக்க வானூர்திகளில் இருந்து மணல் கொட்டப்பட்டது. தீ முழுவதுமாக அணைந்தபிறகு, கதிரியக்க கழிவுகளை அகற்ற அணுஉலையின் கூரையின்மீது ஆட்கள் ஏறினர். கதிர்வீச்சின் தாக்கம் அவர்கள் கொண்டுசென்ற கருவிகளை உடைத்தது. பாதிக்கப்பட்டவர்கள் அரிதாக ஒரு சில வாரங்கள் இருந்தனர், வலி மிகுந்து இறந்தனர்.

ஆனால் இந்த முயற்சி மட்டும் இல்லை என்றால் பேரழிவின் தாக்கம் இன்னும் மோசமாக இருந்திருக்கும். இப்பொழுது கவர்(Cover) என்று அழைக்கப்படும் நான்காவது அணுஉலையினுள் ஏறத்தாழ 20 டன் அணு எரிபொருட்கள் அங்கிருக்கும் ஈயம் மற்றும் உலோக மையங்களில்இருக்கின்றது. அங்கு என்ன நடக்கிறது என்பது யாருக்கும் தெரியாது. வெறும் 1 கோடி மக்கள்தொகையைக் கொண்ட அண்டைநாடான பெலாரசுவிற்கு இந்த அணு உலை விபத்து ஒரு தேசிய பேரிடர்: விபத்தால் வெளியான 70% கதிரியக்க ஓரிடத்தான்கள்(Radionuclides) பெலாரசுவிலேயே விழுந்தன. இன்று, ஐந்தில் ஒரு பெலாரசியர் கதிரியக்கத்தின் பாதிப்பில் வாழ்கிறார். அதாவது, 2.1 கோடி பேர். இதில் 7 இலட்சம்பேர் குழந்தைகள்.

ல்யூட்மில்லா இக்னடென்கோ – தீயணைப்பு வீரர் வாசிலி இக்னடென்கோவின் மனைவி

“எங்களுக்கு அப்போதுதான் திருமணமாகி யிருந்தது. அவர் பணியாற்றிய தீயணைப்பு நிலையத் தின் வளாகத்திலேயே நாங்கள் தங்கியிருந்தோம். ஒருநாள் இரவு எனக்கொரு பேரொலி கேட்டது. சாளரத்தின் வழியாக வெளியே பார்த்தேன். அவர் என்னைப் பார்த்தார். “கதவை மூடிவிட்டு தூங்கு. அணுஉலையில் தீ விபத்து. நான் இதோ வந்துவிடுகிறேன்.”

அந்த வெடிப்பை நான் பார்க்கவில்லை. தீப் பிழம்புகளைத்தான் பார்த்தேன். அவ்விடம் முழுதும் ஒளி பெருகியது. முழு வானமும். உயரமாய் எரிந்தது. புகையும் அதிகம். மிகக் கடுமையான வெப்பம். அவரும் இன்னும் திரும்பவில்லை. கொழுந்துவிட்டு எரியும் தீயை அணைக்க முயன்றனர். எரியும் கிராபைட்டை வெறும் கால்களால் மிதித்தனர். அவர்கள் காலணிகள் அணிந்திருக்கவில்லை. கருவிகளை எடுத்துச்செல்லவேண்டும் என்ற முன்னறிவிப்பு அவர்களுக்கு இல்லை. வழக்கமான உடையணிந்தே சென்றனர். மறுநாள் காலை 7 மணிக்கு எனக்கு அழைப்பு வந்தது. அவர் மருத்துவ மனையில் இருக்கிறார் என்று. அவரைப் பார்க்க ஓடினேன். காவலர்கள் என்னை அனுமதிக்கவில்லை. அவசர ஊர்திகளைத் தவிர வேறு யாரும், எதுவும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. “விலகிச் செல்லுங்கள், ஊர்திகளில் கதிரியக்கப் பாதிப்பு இருக்கும்” என்று காவலர்கள் கத்தினர். நான் அவரைப் பார்த்தேன். அவர் உடல் முழுக்க வீக்கங்கள். அவர் கண்களை உங்களால் பார்ப்பது கடினம்.

“அவருக்கு பால் தேவை, நிறைய பால் தேவை,” என் தோழி சொன்னாள். “அவர்கள் ஒவ்வொருவரும் குறைந்தது 3 லிட்டர் பால் குடிக்கவேண்டும்.”

“ஆனால் அவருக்கு பால் பிடிக்காது.”

“அவர் இப்போது குடிப்பார்.”

அங்கிருந்த பெரும்பாலான மருத்துவர்களும், செவிலியர்களும் இதனால் பாதிக்கப்பட்டு இறப்பார்கள் என்று அன்று எங்களுக்கு தெரிந்திருக்கவில்லை. அன்று மாலை அவரைப் பார்க்க என்னை மருத்துவமனை நிர்வாகிகள் அனுமதிக்கவில்லை. மருத்துவர்கள் வெளியே வந்து அவர்களை மாஸ்கோவிற்கு அழைத்து போவதாகவும், அவர்களுக்குத் தேவையான உடைகளை எடுத்து வரவும். அவர்கள் அணிந்திருந்த உடைகளை எரித்துவிட்டோம் என்றும் கூறினர். பேருந்து இயக்கம் நிறுத்தப்பட்டதால் நாங்கள் வீடுகளை நோக்கி ஓடிச்சென்று தேவையான உடைகளை எடுத்து வந்தோம், ஆனால் அதற்குள் விமானம் சென்றுவிட்டது. அவர்கள் எங்களை ஏமாற்றிவிட்டனர். அது ஒரு சிறப்பு மருத்துவமனை.

கதிரியக்கத்தால் பாதிப்புஅடைந்தவர்களுக்காக. அனுமதிச்சீட்டு இல்லாமல் நீங்கள் உள்ளே செல்ல முடியாது. நுழை வாயிலின் அருகே இருந்த பெண்ணிற்கு பணம் கொடுத்தேன். “உள்ளே போ” என்றாள். யாரிடமாவது அவர் எங்கிருக்கிறார் என்று கேட்டாக வேண்டும். கெஞ்சியாக வேண்டும். ஒருவழியாக தலைமைநிர்வாகியின் அறையில் வந்து அமர்ந்தேன். “உங்களுக்கு குழந்தைகள் இருக்கின்றனரா?” என்று கேட்டாள். அவளிடம் என்ன சொல்வது? நான் கருவுற்றிருப்பதை அவளிடம் மறைத்தாக வேண்டும். இல்லையேல் அவரைப் பார்க்க அனுமதி கிடைக்காது. நான் மெலிந்த தோற்றம் அளிப்பது நல்லதாயிற்று. அவர்களிடம் உண்மையைச் சொல்ல முடியாது அல்லவா!

“இருக்கின்றனர்” என்றேன்.

“எத்தனை?” இரண்டு என்று சொல்லவேண்டும். ஒரே ஒரு குழந்தை என்றால் அவள் என்னை உள்ளே செல்ல அனுமதிக்க மாட்டாள் என்று நினைத்தேன்.

“ஒரு மகன், ஒரு மகள்.”

“ஆக உங்களுக்கு மேலும் குழந்தைகள் வேண்டாம். சரி, கவனி: அவரது நரம்பு மண்டலம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது, அவரது தலை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.”

“சரி. அவர் என்னிடம் பேசுவார்” என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.

“கவனி: நீ அழத் தொடங்கினால், உன்னை வெளியே அனுப்பிவிடுவேன்.அவரைக் கட்டி அணைக்கவோ, முத்தமிடவோ கூடாது. அவரை நெருங்கவே கூடாது. உனக்கு அரை மணிநேரம் அனுமதி.”

அவர் அணியும் உடைகளை விட சிறிய உடை அணிந்திருந்தார். பார்க்கவே வேடிக்கை யாக இருந்தது. அவர் ஆடையின் அளவு 52, அணிந்திருந்தது 48. அவரின் முகம் அதைவிடப் பெரிதாக வீங்கியிருக்க முடியாது. ஒருவித திரவம் அவர்களுக்கு வழங்கப்பட்டது. “எங்கே ஓடினீர்கள்?” என்றேன். அவர் என்னைக் கட்டி அணைக்க முயன்றார். மருத்துவர்அனுமதிக்கவில்லை. “சிட், சிட்” என்றார். “கட்டிப் பிடிக்கக் கூடாது.” என்னை டோசிமீட்டர் கொண்டு சோதனை செய்தனர். என் உடைகள், பை, பணப்பை, காலணிகள்-அவையெல்லாம் சூடாக இருந்தன. அவை அனைத்தையும் அங்கிருந்து எடுத்துச்சென்று விட்டனர். என் உள்ளாடை முதற் கொண்டு. அவர்கள் விட்டுச் சென்றது பணம் மட்டுமே. அவரில் மாற்றம் தொடங்கியது. ஒவ்வொரு நாளும் நான் ஒரு புதுமையான மனிதரைச் சந்தித்தேன். தீக்காயங்கள் ஆறத் தொடங்கியது. அவர் வாய், நாக்கு, கன்னங்களில் -அங்கெல்லாம் முன்பு சிறு சிறு காயங்கள் இருந்தன. பின்னர் அவை வளர்ந்தன. அவை அடுக்கடுக்காக உதிர்ந்தன – வெள்ளை நிறம் அவர் முகத்தின் நிறம் அவர் உடல் நீலம், சிவப்பு, சாம்பல்-பழுப்பு. எதுவானாலும் அவர் என்னவர். அங்கு யோசிக்க நேரமில்லை, அழ நேரமில்லை. அவர் நாளன்றுக்கு 25 முதல் 30 முறை குருதியும் சளியும் நிறைந்த மலத்தை வெளியேற்றினார். அவர் கைகளிலும் கால்களிலும் தோல்களில் வெடிப்பு ஏற்பட்டது. உடல்முழுக்க கொப்பளங்கள் வரத்தொடங்கின. அவர் தலையை திருப்பும் பொழுது, கொத்தாக தலைமுடிகள் அவரது தலையணையில் உதிர்ந்து கிடந்தன. “தலை முடியை இனி வாரத்தேவையில்லை. சீப்பும் தேவைப்படாது” என்று நகையாட முயன்றேன். அவரின் தலைமுடி வெட்டப்பட்டது.

“அவர் இறந்துகொண்டிருக்கிறார்” என்று செவிலியரிடம் சொன்னேன்.

“என்னவென்று நினைத்தீர்கள்?” 400 இரோண்ட்கன் அபாயகரமானது, அவர் பாதிக்கப்பட்டிருப்பது 1600 இரோண்ட்கன் அளவு கதிர்களால். “நீங்கள் ஒரு அணு உலையின்அருகே அமர்ந்துள்ளீர்கள்.” என்றாள். அவர்கள் அனைவரும் இறந்த பின்னர், மருத்துவமனை சீரமைக்கப்பட்டது, சுவர்கள் சுரண்டப் பட்டு குப்பைகள் புதைக்கப்பட்டன. அவர் இறக்கும்போது, சாதாரண உடையும், அலுவலக தொப்பியும் அணியப்பட்டது. காலணிகளை அணிவிக்க முடியவில்லை, வீக்கத்தின் காரணமாக. அவரைப் புதைத்தனர்.

என் காதல் புதைந்தது.”

செர்கி வாசில்யெவிச் சொபோலேவ் – நிர்வாகக் குழு துணைத் தலைவர், செர்னோபில் பாதுகாப்புக் கழகம்.

“அங்கு ஒரு அணு வெடிப்பு நடக்கப்போகிறது என்று தெரிந்த பின்னர், உலைக்குக் கீழே உள்ள நீரை வெளியேற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டது. காரணம், யுரேனியம் மற்றும் கிராபைட் நீரில் கலந்துவிடக்கூடாது.

இதுதான் நாம் செய்யவேண்டியது: யார் உள்ளே குதித்து பாதுகாப்பு வால்வைத் திறக்கின்றீர்? அவர்களுக்கு ஒரு மகிழுந்து, வீடு, டாச்சா (புறநகரில் ஓய்வு நேர வீடு),இறுதிவரை குடும்பத்தினருக்கு அனைத்து உதவிகளும் அளிக்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டது. அவர்கள் தன்னார்வலர்களைத் தேடினர். இறுதியில் கிடைத்தனர் தன்னார்வலர்கள். உள்ளே குதித்தனர், பலமுறை குதித்தனர், திறந்தனர். அந்தக் குழுவிற்கு 7000 ரூபிள் வழங்கப்பட்டது. அவர்கள் தியாகிகள். உலையின் கூரைமேல் இருந்த வீரர்களுக்கு என்ன ஆனது? 210 குழுக்கள் இந்த விபத்தைக் கட்டுக்குள் கொண்டுவர அனுப்பப்பட்டன. அதாவது, ஏறத்தாழ 3,40,000 இராணுவவீரர்கள். அணுஉலையின் கூரையைத் தூய்மை செய்யும் பணியில் ஈடுபட்டவர்களுக்கு கடுமையான பாதிப்பு ஏற்பட்டது. பாதுகாப்பு மேலாடைகள் அணிந்திருந்தனர், ஆனால்கதிர்வீச்சு கீழிருந்து தாக்கியது. சாதாரண, விலைகுறைந்த காலணிகளே அவர்கள் அணிந்திருந்தனர். ஒரு நாளைக்கு ஒன்றரை முதல் இரண்டு நிமிடங்கள் வரை அவர்கள் தூய்மைப் பணியில் ஈடுபட்டனர், பிறகு நற்சான்றிதழும் 100 ரூபிள் பணமும் கொடுத்து வெளியேற்றப்பட்டனர். பின்னர் அவர்கள் எங்களது தாய்நாட்டைவிட்டு மறைந்தனர். கூரையின்மேலே உலையிலிருந்து வரும் எரிபொருளையும் கிராபைட்டையும், உலோகத் துகள்களையும் பைஞ்சுதைத் துகள்களையும் அவர்கள் சேகரித்து வைத்திருந்தனர். ஒரு சக்கரத் தள்ளு வண்டியில் குப்பைகளை ஏற்ற 20 முதல் 30 வினாடிகள் ஆகும், கூரையிலிருந்து
கீழே வீச மேலும் 30 வினாடிகள் ஆகும். தள்ளு வண்டியின் எடை 40 கிலோ.அவர்கள் இருந்த நிலையை நீங்கள் நினைத்துப் பாருங்கள்: ஈயத்தாலான உடை, முகமுடி, தள்ளுவண்டி மற்றும் கண்மூடித்தனமான வேகம். அவர்கள் பயன்படுத்திய கதிரியக்க கட்டுப்பாட்டு மின்னணு கருவிகள்கூட அதிகமான கதிர்வீச்சினால் செயலிழந்தன அல்லது அவர்களது கட்டளைக்கு எதிர் வினையாற்றின. அன்றைக்கு மிகவும் நம்பகமான “எந்திரங்கள்” அந்த படை வீரர்கள் மட்டுமே. “கிரீன் ரோபோட்ஸ்” என்று அவர்கள் அழைக்கப் பட்டனர். ஏறத்தாழ 3,600 வீரர்கள் உலையின் கூரையில் பணியாற்றினர். கூடாரங் களில் தங்கி தரையில் உறங்கினர். அவர்கள் அனைவரும் இளைஞர்கள். அருங்காட்சியகத்தில் இவர்களது ஆவணங்கள் மட்டும் இருக்கின்றன, பெயர்களுடன். இவர்கள் யாரும் இல்லை.”

நிக்கோலாய் ஃபாமிச் காலுகின் – தந்தை

“நாங்கள் நகரத்தை மட்டும் இழக்கவில்லை, எங்களது வாழ்க்கையையும் இழந்தோம். விபத்து நடந்த மூன்றாவது நாள் நாங்கள் அங்கிருந்து புறப்பட்டோம். உலையில் தீப்பிடித்தது. என் நண்பன் சொன்னது நினைவிருக்கிறது. “இது அணுஉலையின் கெட்ட மணம்.” அது ஒரு விவரிக்க முடியாத மணம். உங்களது உடமைகளை எடுத்துச்செல்லக் கூடாது என்று வானொலியில் அறிவித்தனர். சரி, எனது அனைத்து உடைமைகளை நான் எடுத்துச் செல்லவில்லை, ஒன்றேஒன்றை மட்டும் எடுத்துக் கொள்வேன். எனது வீட்டின் கதவு. கதவை விட்டுச் செல்ல முடியாது. அது எங்கள் குடும்பத்தின் பரம்பரைச் சொத்து. இந்தக் கதவில் என் அப்பா இறந்தபின் இதில் படுக்கவைக்கப்பட்டார். என் அம்மா சொல்லியிருக்கிறார், இறந்தவர்களை இதில் படுக்கவைக்க வேண்டும் என்று. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, சூறை யாடப்பட்ட, காலியான வீட்டிலிருந்து நான் எடுத்துக்கொண்டேன், அந்தக் கதவை – இரவில், இருசக்கர வண்டியில். காவலர்கள் எங்களைத் துரத்தினர். “சுட்டு விடுவேன், நில்! சுட்டு விடுவேன், நில்!” என்னை திருடன் என்று நினைத்துவிட்டனர். அப்படித்தான் என் வீட்டில் இருந்து என் கதவை நான் திருடினேன். என் மனைவியையும் மகளையும் மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்றேன். அவர்கள் உடல் முழுக்க கரும்புள்ளிகள் நிறைந்திருந்தன. அவை தோன்றும். பின்பு மறைந்துவிடும். அவை ஒரு நாணயத்தின் அளவிற்கு இருந்தன. ஆனால் வலி இல்லை. அவர்கள் சில சோதனைகளை செய்தனர். என் மகளுக்கு அப்பொழுது 6 வயது. அவளை படுக்கையில் படுக்க வைத்தேன், அவள் என் காதுகளில் மெல்ல சொன்னாள். “அப்பா, நான் வாழ விரும்புகிறேன், நான் இன்னும் சின்ன பெண்தான்.” அதுவரை, அவளுக்கு ஒன்றும் புரியாது என்றே நினைத்தேன். ஏழு சின்னஞ் சிறு சிறுமிகள், மொட்டை அடிக்கப் பட்டு ஒரே அறையில் வைத்துப் பார்த்ததுண்டா? அந்த மருத்துவமனையில் அவர்கள் இருந்தனர். என் மனைவியால் இதைத் தாங்கிக்கொள்ள முடிய வில்லை. “அவள் இப்படி இருப்பதற்கு பதில் இறந்துவிடலாம். இல்லையேல் நான் இறந்து விடுகிறேன், இதற்கு மேல் அவளை என்னால் பார்க்க முடியாது” என்றாள். இறுதியில் அவளைக் கதவின்மீது படுக்கவைத்தோம். என் அப்பா படுத்திருந்த அதே கதவு. சிறிய அளவிலான சவப் பெட்டி வரும்வரை.”

ஆர்கடி ஃபிளின் – கலைப்பலுவலர்

“நாங்கள் காட்டில், கூடாரங்களில், அணு உலையிலிருந்து 200 கிலோ மீட்டர் தொலைவில் வாழ்ந்தோம். நாங்கள் பெரும்பாலும் 25 முதல் 40 வயதுடையோர். எங்களில் சிலர்பட்டதாரிகள், சிலர் பட்டையப்படிப்பு முடித்தவர்கள். நான் ஒரு ஆசிரியர். வரலாற்று ஆசிரியர். எந்திரத் துப்பாக்கிகளுக்குப் பதிலாக மண்வாரிகளைக் கொடுத்தனர். குப்பைகுவியல்களையும் தோட்டங் களையும் மண்ணில் புதைத்தோம். வீட்டில் அடுப்பு பற்றவைக்கப்படுகிறது, பன்றி வறுக்கப்படுகிறது. டோசி மீட்டர் கொண்டு சோதனை செய்கிறோம்,
அது அடுப்பு இல்லை, அது ஒரு சிறிய அணு உலை என்று கண்டுகொள்கிறோம். அங்கு நான் ஒருவரைப் பார்த்தேன், அவருடைய வீடு புதைக்கப்படுவதைப் பார்த்துக்கொண்டிருந்தார். வீடுகளை, கிணறுகளை, மரங்களைப் புதைத்தோம். புவியைப்புதைத்தோம். மரங்கள் அனைத்தையும் வெட்டினோம், பெரிய பெரிய நெகிழிகளில் சுருட்டினோம். காடுகளைப் புதைத்தோம். ஒன்றரை மீட்டர் அளவிலான துண்டுகளாக மரங்களை வெட்டி கல்லறையில் தள்ளினோம். இரவில் என்னால் தூங்க முடியவில்லை. எனது கண்களை மூடிக்கொண்டு படுத்திருப்பேன். அப்பொழுது கருமை நிறத்தில் எதோ என் முகத்தின் மீது நகர்வது போலவும்,திரும்புவது போலவும் உணர்வேன் – அது உயிருடன் இருந்ததனால். ஒரு கவிஞர் சொல்லுவார், விலங்குகள் வேறுபட்ட மனிதர்கள் என்று. நான் .அவர்களைக் கொன்றேன், பத்து,நூறு, ஆயிரக் கணக்காக, அவை எவ்வாறு அழைக்கப்படும் என்று கூட தெரியாமல் கொன்றேன். அவர்களின் வாழ்விடங்களை, இரகசியங்களை அழித்தேன். அவர்களைப் புதைத்தேன். புதைத்தேன்.”

இவான் நிக்கோலேவிச் சயிக்கோ – வேதிப் பொறியாளர்

“நோயுற்ற மண்ணைத் தோண்டி சரக்குந்துகளில் ஏற்றி புதை நிலங்களுக்கு அனுப்பினோம். நாங்கள் புவியை வாரிச் சுருட்டினோம். பசுமை நிறைந்த நிலப்பரப்பு, புல், பூக்கள்,வேர் என்ற அனைத்தையும் சுருட்டினோம். அது மன நோயாளிகளின் வேலை. அன்றைய ஒவ்வொரு இரவும் நாங்கள் குடிக்காமல் இருந்திருந்தால், அந்த வேலையை எங்களால் செய்திருக்க முடியும் என்பது சந்தேகம்தான். நூற்றுக் கணக்கான கிலோமீட்டர் தரிசு நிலங்களை புவியைக் கிழித்து உருவாக்கினோம். வீரனாக இருப்பதில் ஒரு பெருமை இருந்தது. ஒவ்வொரு வாரமும் அதிகம் தோண்டிய வீரனுக்கு மற்ற வீரர்களின் முன்னிலையில் நற்சான்றிதழ் வழங்கப்படும். சோவியத் ஒன்றியத்தின் சிறந்த தோண்டி விருது. அதுவும் நன்றாகத்தான் இருந்தது.” இவை அனைத்தும் இடால்கே காப்பகம் வெளியிட்ட“Voices From Chernobyl” என்ற நூலிலிருந்து எடுக்கப்பட்ட சில பகுதிகள்.

இசுவெட்லானா அலெக்சிவிச் (தமிழாக்கம்: அகிலன் கார்த்திக்கேயன்)

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments