கொசுவினும் கொடியது!

ஜீயோ டாமின்

இப்புவியின் சூழல் மண்டலத்தில் பயனற்ற உயிரினங்கள் என்றோ அல்லது முக்கியத்துவம் குறைந்தவை என்றோ எந்த உயிரினமும் இல்லை. ஒரு பரந்துவிரிந்த நீர்நிலையை எடுத்துக்கொண்டால் அந்த நீர்நிலையின் உயிரோட்டம் காக்கப்பட அதன் அனைத்து நீர்வாழ் உயிரினங்களும் உயிர்ப்போடு இருக்கவேண்டியது அவசியம். அதே நேரத்தில் அவை அளவுக்கு அதிகமாக பெருகிவிட்டால் உணவுத்தட்டுப்பாடு ஏற்பட்டு பல உயிரினங்கள் மடிந்து, அதுவே அந்த நீர்நிலையில் சூழல் சீர்கேட்டுக்கு காரணமாகிவிடும். ஆனால் ஒவ்வொரு ஏரிகளிலும் குளங்களிலும் நிலவும் ஒரு சமநிலை அவற்றை சாக்கடை ஆகிவிடாது காக்கிறது. உதாரணமாக ஒரு பெரிய ஏரியை எடுத்துக்கொண்டால் அதில் பலவகையான நீர்ப்பறவைகளைக் காணமுடியும். அங்கே மடைவாய் கொக்கு போன்ற குட்டையான கால்கள் கொண்ட பறவைகள் நீர் நிலைகளின் கரைகளில் அமர்ந்து நீர்வாழ் உயிரினங்களை உணவாக்க செங்கால் நாரை, பூநாரை போன்ற கால்கள் நீளமான பறவைகள் கொஞ்சம் ஆளமான நீரில் உள்ள மீன்களை உண்கின்றன. அதேநேரத்தில் இன்னும் ஆழம் அதிகமான நீர்ப்பரப்பில் கூழக்கடா மற்றும் முத்துக் குளிப்பான் போன்ற பறவைகள் நீரில் நீந்தியபடி மேலோட்டமாக மீன்பிடிக்க நீர்க்காகம் போன்ற பறவைகள் ஆழமாக மூழ்கி மீன்பிடிக்கின்றன. செம்மார்பு மீன்கொத்தி கரையிலிருக்கும் புதர்களின்மீதிருந்து மீன்களைக் கண்காணிக்க கருப்புவெள்ளை மீன்கொத்தியோ உயரே பறந்தபடி உணவை நோட்டமிடுகின்றது. ஒரு நீர்நிலை ஆரோக்கியமாக இருக்கவேண்டுமானால் அந்த நீர்நிலையில் நீர்வாழ்விலங்குகள் எண்ணிக்கையில் கட்டுப்பாடு மிக அவசியம். அரசால் குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டங்கள் எதுவும் நடைமுறைப்படுத்தமுடியாத இப் பகுதிகளில் இந்த நீர்ப்பறவைகளே அப்பணியைச் செய்கின்றன. தண்ணீரில் கரைமுதல் அடி அடியாழம்வரை இப்படி ஒரு உயிர்ச்சமநிலையைப் பேணுவதில் அந்நீர்நிலையைச் சார்ந்த ஒவ்வொரு உயிரினத்துக்கும் ஒரு குறிப்பிட்ட பங்கிருக்கிறது. நீர்க்காகம் செய்யும் வேலையை மீன்கொத்தியால் செய்யமுடியாது, மீன்கொத்தி செய்வதை பாம்புத்தாராவால் செய்யமுடியாது. அதேபோன்று சூழலில் உணவுச்சங்கிலியில் பிரிக்கமுடியாத அங்கமாக இருப்பவை கொசுக்கள். தவளைகள், மீன்கள், பறவைகள், சிலந்திகள், பூச்சிகள் மற்றும் பல்லிகள் போன்ற  பலவகையான ஊர்வனவற்றின் முதன்மை உணவாதாரமாக இவைத் திகழ்கின்றன. கொசுக்களின் லார்வாக்கள் நீர்நிலைகளில் உள்ள பலவகையான கரிமப்பொருட்களை உண்டு மறு சுழற்சி செய்கின்றன. கொசுக்கள் தம் முட்டைகளை உற்பத்திசெய்ய புரதம் தேவைப் படுகிறது. அதற்காகவே பெண் கொசுக்கள் (மட்டும்) மனிதர்களையும் விலங்குகளையும் கடிக்கின்றன. ஆண் கொசுக்கள் தாவர உணவுகளையே சார்ந்திருப்பதோடு பல தாவரங்களின் மகரந்தச் சேர்க்கையிலும் பங்குவகிக்கின்றன. அதேநேரத்தில் கொசுக்கள் மனிதருக்கும் விலங்குகளுக்கும் கொடிய உயிர்க்கொல்லி நோய்களைப் பரப்பும் கடத்திகளாகவும் செயல்படுகின்றன. சமீபகாலங்களில் கொசுக்கள் அபரிமிதமாக பெருகியிருப்பதற்கு சூழலியலாளர்கள் பல காரணங்களை முன்வைக்கின்றனர். நீர்நிலைகளில் கலக்கும் பூச்சிக்கொல்லிகள் மற்றும் தொழிற்சாலைக் கழிவுகள் கொசுக்களையும் அவற்றின் லார்வாக்களையும் உண்டுவாழும் நீர்நிலவாழ் உயிரினங்களை அழித்தது கொசுக்களின் பெருக்கத்துக்கு ஒரு காரணமாக சொல்லப்படுகிறது. அதுமட்டுமன்று புவி வெப்பமாதலும் கொசுக்களின் பெருக்கத்துக்கு சாதகமானதாக ஆய்வாளர்களால் முன்வைக்கப் படுகிறது. கொசுக்களை கட்டுப்படுத்தவோ அல்லது முழுவதுமாக ஒழிக்கவோ உலகெங்கும் பலவிதமான ஆய்வுகள் நடைபெற்றுவருகின்றன. ஆனால் இதுவரை எங்கும் முழுமையான சூழலுக்கும் மனிதர்களுக்கும் பாதுகாப்பான வெற்றிகரமான முறைகள் என எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. அதே நேரத்தில் கொசுக்களையோ அல்லது பூச்சிகளையோ ஒழிப்பது என்பது சாத்தியமற்றது என்று சூழலியலாளர்கள் கருதுகின்றனர். உதாரணமாக என்னதான் வயலில் பூச்சிகளை ஒழிக்க தினமும் புதுப்புதுவிதமான பூச்சிக் கொல்லிகளை உருவாக்கினாலும் நம்மால் இதுவரை எந்தப் பூச்சியினங்களையும் முழுமையாக ஒழிக்க முடியவில்லை என்பதோடு அவை நாளுக்குநாள் வீரியமடைந்து வருகின்றன. அதுமட்டுமின்றி அந்த பூச்சிக்கொல்லிகள் பூச்சிகளைவிட பெரிய அபாயமாக மாறியிருக்கின்றன. கொசுக்களை கட்டுப்படுத்துவது அவசியமே எனினும் அவற்றை அழிப்பதுபோன்ற முயற்சிகள் பல்லுயிரின சமநிலையை வெகுவாக பாதிக்கும். கொசுக்களை முக்கிய உணவாகக் கொள்ளும் பூச்சிகள் அவற்றை உண்ணும் பறவைகள் விலங்குகள் ஆகியவற்றின் நலம் நமது சூழலைக்காக்க மிகவும் அவசியம். அதேநேரத்தில் கொசுக்களால் பரவும் டெங்குக் காய்ச்சல் போன்றவை சமீபகாலங்களில் அச்சுறுத்தும் ஒரு நோயாக பரிணமித்துள்ளன. இந்நோய்களால் பாதிக்கப்பட்ட ஒரு மனிதனை கொசு கடிக்கும்போது பாதிக்கப்பட்ட மனிதனின் இரத்தத்தில் இருக்கும் நோயுண்டாக்கும் வைரஸ்கள் கொசுவை அடைகின்றன. பின்னர் அதே கொசு இன்னொரு நோய்தாக்குதலற்ற மனிதரை கடிக்கும்போது அந்த வைரஸ் கொசுவின் உடலிலிருந்து நலமுடனிருக்கும் மனிதருக்கு கடத்தப்பட்டு அவரை நோய்த்தாக்குதலுக்கு உட்படுத்துகிறது. டெங்குக் காய்ச்சலை உருவாக்கும் வைரஸ் கொசுக்கள் மூலமாக மட்டுமே மனிதருக்கு பரவுகின்றது. டெங்குக் காய்ச்சல் ஏடியெஸ் (Aedes aegypti) என்னும் கொசு மூலமாக அதிகமாகப் பரவுகிறது. டெங்குக் காய்ச்சலுக்கு தடுப்பூசிகள் எதுவும் இல்லாத நிலையில் கொசுக்களை கட்டுப்படுத்துவதே சிறந்த வழிமுறையாக கையாளப்படுகிறது. கொசுக்களின் இனப்பெருக்கத்தைத் தடுக்க நீர்தேங்கும் இடங்களை சுகாதாரமாக கையாள்வது முதன்மையான நடவடிக்கையாக கருதப்படுகிறது. ஏனெனில் கொசுக்கள் தேங்கிய நீரிலேயே முட்டையிடுகின்றன. நீர் தேங்கும் வாய்ப்புள்ள இடங்களில் அவற்றைத் தவிர்ப்பதன் மூலம் கொசுக்களின் பெருக்கம் கட்டுப்படுத்தப்படுகிறது. ஒரு திரைப்படத்தில் நகைச்சுவை நடிகர் ஒருவர் மூட்டைப்பூச்சி ஒழிக்கும் இயந்திரம் என்று கைக்கு அடக்கமான உரலைக்கொடுத்து ஊரை ஏமாற்றுவார். மூட்டைப்பூச்சியைப்  பிடித்து இந்த உரலில் வைத்து நசுக்கினால் அது இறந்துவிடும் என்று கூறுவார். அப்போது அது நமக்கு நகைச்சுவையாகத் தோன்றினாலும் அதற்கு எவ்விதத்திலும் சளைக்காத ஒரு திட்டத்துடன் கொசு ஒழிக்க இறங்கியிருக்கிறது இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின்  (Indian Council for Medical Research) கீழ்வரும் பாண்டிச்சேரி நோய்க்கடத்திகள் தடுப்பு ஆய்வு மையம் (Vector Control Research Center). டெங்குவை பரப்பும் கொசுக்களை கட்டுப்படுத்த ஒரு புதிய உபாயத்தைக் கண்டுபிடித்திருப்பதாக WORLD MOSQUITO PROGRAM (WMP) என்ற திட்டத்தின்மூலம் களமிறங்கியிருக்கிறது மோனாஷ் பல்கலைக் கழகத்தின்  Institute of vector Borne Disese என்ற ஆஸ்திரேலிய நிறுவனம். 2011 ஆம் ஆண்டிலிருந்து களப்பரிசோதனைகளில் ஈடுபட்டு வருவதாகச் சொல்லும் இந்நிறுவனம் இதுவரை ஆஸ்திரேலியா, பிரேசில், கொலம்பியா மற்றும் வியட்நாம் நாடுகளில் தனது திட்டத்தின்மூலம் கொசுக்களால் பரவும் நோய்களை கட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாகச் சொல்கிறது. அதன் அடுத்த இலக்காகியிருக்கும் இந்தியாவில் முதல் சோதனைக்களமாக தமிழகத்தின் கோவை மாவட்டம் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாக நமக்கு தெரியவருகிறது. WMP தனது கொசுக்களைக் கட்டுப்படுத்தும் முறையை பின்வருமாறு விளக்குகிறது. பொதுவாக நமது உடலில் தோலிலோ அல்லது உடலின் உள்உறுப்புகளான உணவு மண்டலம் ஜீரணமண்டலம் முதலான பகுதிகளில் பலவிதமான நுண்ணுயிரிகள் காணப்படுகின்றன. ஆனால் நம் உடலில் செல்களுக்குள் எந்த நுண்ணுயிரிகளும் இருப்பதில்லை. சிலவகைக் கொசுக்கள் உட்பட பலவகையான பூச்சிகளின் திசுக்களில் இயற்கையிலேயே “உல்பேக்கியா” என்ற பாக்டீரியா காணப்படுகிறது. கொசுக்களின் செல்களுக்குள்ளேயே வாழும் இவை பொதுவாக டெங்குவைப் பரப்பும் ஏடியெஸ் கொசுக்களில் காணப்படுவதில்லை. இந்த உல்பேக்கியா கொண்ட ஏடியெஸ் கொசுக்கள் டெங்கு தாக்கிய நபரை கடித்தபின் நலமான மனிதரை கடிக்கும்போது டெங்கு பாதிப்பு ஏற்படுவதில்லை என கண்டறியப்பட்டுள்ளது. உல்பேக்கியா பாக்டீரியாவைக் கொண்ட ஆண் கொசு பாக்டீரியா அற்ற பெண்கொசுவோடு இணையும்போது உருவாகும் முட்டைகள் பொறிப்பதில்லை. அதேநேரத்தில் பெண் மட்டுமோ அல்லது ஆண் பெண் இரண்டுமோ உல்பேக்கியா பாக்டீரியாவைக் கொண்டிருந்தால் அவற்றின் அடுத்தடுத்த தலைமுறைகள் அனைத்தும் உல்பேக்கியா பாக்டீரியாவைக் கொண்டதாக உருவாகின்றன. ஒரு குறிப்பிட்ட பகுதியில் உல்பேக்கியா பாக்டீரியாவைக் கொண்ட ஆண் மற்றும் பெண் கொசுக்களை உற்பத்தி செய்து குறிப்பிட்ட இடைவெளியில் அதிக அளவில் சூழலில் அறிமுகப்படுத்துவதன் மூலம் காலப்போக்கில் உல்பேக்கியா அற்ற கொசுக்கள் எண்ணிக்கை உல்பேக்கியாவுடைய கொசுக்களால் பதிலீடு செய்யப்படுகிறது. பெரும்பான்மையான கொசுக்கள் உல்பேக்கியா பாக்டீரியாவுடன் உற்பத்தியாக இதனால் டெங்கு போன்ற தொற்று நோய்கள் பரவுவது கட்டுப்படுத்தப்படுகிறது. மேற்கண்ட முறைமூலம் கொசுக்களால் பரவும் நோய்களை கட்டுப்படுத்துவதாக (ஒழிப்பதாக அல்ல) WMP தங்களது திட்டத்தை அடுத்த கட்டமாக இந்தியாவில் செயல் படுத்த அரசுடன் ஒப்பந்தமிட்டிருப்பதாக தெரிவிக்கின்றது. இலாபநோக்கற்ற நிறுவனமாக தன்னை அறிமுகப்படுத்தியிருக்கும் நிறுவனம் இத்திட்டத்திற்காக பயனடையும் ஒரு நபருக்கு ஒரு அமெரிக்க டாலர் பெறுவதாகவும் அந்த பணம் இத்திட்டம் தொடர்பான ஆய்வுகளுக்கு பயன்படுத்தப்படுவதாகவும் தெரிவிக்கின்றது. கேட்பதற்கு ஏதோ பிரம்மாதமான அற்புதமான திட்டம் போன்று தோன்றினாலும் இது குறித்து ஏராளமான கேள்விகளை எழுப்புகிறார்கள் ஆய்வாளர்கள். எவ்வளவு கொசுக்கள் இத்திட்டத்தின் மூலம் சூழலில் அறிமுகப்படுத்தப்பட்டன. அவை எவ்வளவுதூரம் நாம் எதிர்பார்த்த மாற்றத்தை ஏற்படுத்தின என்பதை யாரும் அறுதியிட்டுகூற முடியாது. ஏராளமான முறைகேடுகளும் ஊழலும் நிறைந்த இவ்வமைப்பில் நாம் ஏமாற்றப்பட அதிகவாய்ப்புகள் உள்ளது. மேலும் இத்திட்டத்தின் சூழல் தாக்கம் குறித்தோ அவை உணவுச்சங்கிலியிலோ அல்லது பல்லியிரின பாதுகாப்பிலோ ஏற்படுத்தும் தாக்கம் குறித்து எந்த முழுமையான நீண்டகால ஆய்வுகளும் நடந்ததாகத் தெரியவில்லை. WMP யின் அறிக்கைப்படி அவர்கள் இத்திட்டத்தை செயல்படுத்தத் தொடங்கி ஆறு ஆண்டுகளே ஆகின்றன. நாம் முழுமையாக புரிந்து கொள்ளாத சூழல் மண்டலத்தில் ஒரு புதிய உயிரினத்தை அறிமுகப்படுத்துவதன் சாதகபாதகங்களை தெரிந்துகொள்ள வெறும் ஆறு ஆண்டுகள் போதுமானதா? ஒருவேளை கொசுக்கள் சூழல் சமநிலையைக் காக்கத் தேவைப்படும் அளவினும் குறைந்துபோனால் அதன் பாதிப்புகள் என்னவாக இருக்கும்? எந்த கேள்விகளுக்கும் முழுமையான பதிலில்லை. “மூட்டைப்பூச்சிக்கு பயந்து வீட்டைக் கொழுத்தினான் ஒருவன்” என்று சொல்வார்களே இங்கே கொசுவுக்குப் பயந்து கொசுவினும் கொடியது எதையோ விலைகொடுத்து வாங்கப் போகிறோமோ என்று தோன்றுகிறது.

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments