நிலக்கரி உற்பத்தியை அதிகரிப்பது பேரிடர்களுக்கு அழைப்பு விடுக்கும் முடிவாகும் : பூவுலகின் நண்பர்கள் அறிக்கை

coal mining

இந்தியாவில் தற்காலிகமாக நிலவி வரும் நிலக்கரி தட்டுப்பாட்டைக் காரணம் காட்டி புதிய நிலக்கரிச் சுரங்கங்களைத் தொடங்க ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது கண்டிக்கத்தக்கது.

மத்திய மின்சார வாரியத் தரவுகளின்படி இந்தியாவிலுள்ள 135 அனல் மின் நிலையங்களில் 115 அனல் மின் நிலையங்களுக்கு ஒரு வாரத்திற்கும் குறைவான நாட்கள் மட்டுமே நிலக்கரி கையிருப்பு உள்ளது. இதில் 17 அனல் மின் நிலையங்களுக்கு ஒரு நாள் மட்டுமே நிலக்கரி கையிருப்பு உள்ளது. 22 அனல் மின் நிலையங்களுக்கு 2 நாட்கள் மட்டுமே கையிருப்பு உள்ளது.

இதன் காரணமாக மஹாராஷ்டிரா, பஞ்சாப், ராஜஸ்தான், கேரளா, டெல்லி, ஆந்திர பிரதேசம் மற்றும் தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக மின்பற்றாக்குறை நிலவி வருகிறது. சில மாநிலங்களில் மின் வெட்டு இருக்கும் எனவும் மாநில அரசுகள் அறிவித்துள்ளன. தங்கள் மாநிலங்களில் உள்ள அனல் மின் நிலையங்களுக்கு நிலக்கரி அனுப்புவதை வேகப்படுத்துமாறு ஒன்றிய அரசுக்கு சில மாநில முதல்வர்கள் கடிதம் எழுதியுள்ளனர்.

தமிழ்நாட்டில் வடசென்னை அனல் மின் நிலையத்திற்கு மட்டும் அதிகபட்சமாக 5 நாட்கள் நிலக்கரி கையிருப்பு உள்ளது. மற்ற அனல் மின் நிலையங்களுக்கு ஐந்திற்கும் குறைவான நாட்கள் மட்டுமே நிலக்கரி கையிருப்பு உள்ளது. ஒன்றிய அரசின் மின்சாரத்துறையானது மின்சாரத்திற்கான தேவை திடீரென அதிகரித்ததும், இந்தியாவிலுள்ள நிலக்கரி சுரங்கங்களில் கடந்த செப்டம்பரில் பெய்த மழையும்தான் இந்த தட்டுப்பாடு ஏற்படக் காரணம் எனத் தெரிவித்துள்ளது.

ஒன்றிய அரசின் மின்சாரத்துறை செயலர் அலோக்  குமார் “ ராஜஸ்தான், உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள் நிலக்கரி நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய தொகையை இன்னும் செலுத்தவில்லை என்பதால்தான் அங்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் நிலைமை இன்னும் கட்டுப்பாட்டில் தான் உள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

நிலக்கரித் துறை அமைச்சர் பிரகலாஷ் ஜோஷி “ நிலக்கரி விநியோகத்தை வேகப்படுத்தி வருவதாகவும் பருவமழை முடிந்த பின்னர் நிலக்கரி விநியோகம் அதிகரிக்கும்” எனவும் தெரிவித்துள்ளார்.

ஒன்றிய அரசின் சார்பில் மழை, நிலுவைத் தொகை பாக்கி என பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகிறது.  அண்மைக் காலமாக பல நிலக்கரி சுரங்கங்களை தனியாருக்கு ஏல அடிப்படையில் ஒன்றிய அரசு வழங்கி வருகிறது. அப்படி தனியாரால் வாங்கப்பட்ட நிலக்கரி சுரங்கங்களில் உற்பத்தியை வேகமாக்கவும் இன்னும் கூடுதல் சுரங்கங்களை தனியாருக்கு வழங்கவும் திட்டமிட்டே நிலக்கரி தட்டுப்பாடு நிலையை ஒன்றிய அரசு உருவாக்கியுள்ளதாகவும் சிலர் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில் ” அடுத்த ஆண்டிலிருந்து நிலக்கரி உற்பத்தியை நான்கு மில்லியன் டன்னிலிருந்து இருபது மில்லியன் டன்களாக உயர்த்த என்எல்சி இந்தியா நிறுவனம் முயற்சி செய்யும்” என நிலக்கரி அமைச்சகம் கடந்த 13ஆம் தேதி அறிவித்துள்ளது. இப்படியாக தனியாரும் அரசு பொதுத்துறை நிறுவனங்களும் நிலக்கரி உற்பத்தியை அதிகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றன.
நிலக்கரி உற்பத்தியை அதிகரிப்பது இந்திய அரசு ஏற்றுக்கொண்ட பாரிஸ் ஒப்பந்ததிற்கு எதிரானதாகும். 2030ஆம் ஆண்டிற்குள் 2010ல் இருந்த கார்பன் உமிழ்வின் அளவில் 45% குறைக்க வேண்டிய நிலையில் இவ்வாறு நிலக்கரி பயன்பாடு மற்றும் உற்பத்தியை அதிகரிப்பது காலநிலை மாற்றத்தின் தீவிரத்தை அதிகரிக்கும். சட்டீஸ்கர், மஹாராஷ்டிரா, குஜராஜ் போன்ற மாநிலங்கள் புதிய அனல் மின் நிலையங்களை திறக்க மாட்டோம் என ஏற்கனவே அறிவித்துள்ள நிலையில் என்.எல்.சி. நிர்வாகத்தின் உற்பத்தி பெருக்க  நடவடிக்கையானது தமிழ் நாட்டில் நடைபெறுமோ என்கிற அச்சம் எழுகிறது.
நிலக்கரி உற்பத்தியில் ஏற்பட்டிருக்கும்  செயற்கையான அல்லது நிர்வாக குறைபாட்டால் ஏற்பட்டுள்ள இத்தற்காலிக சூழ்நிலையை பயன்படுத்திக் கொண்டு புதிய சுரங்கங்களையோ அனல் மின் நிலையங்களையோ திறக்க முயல்வது தவறான முடிவாகும். மிகத் தீவிரமாக புதுப்பிக்கத்தக்க ஆற்றலைப் பயன்படுத்தி பரந்துபட்ட மின் உற்பத்தியை அதிகரிப்பதே மின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கும் கால நிலை மாற்றத்தின் தாக்கத்தை மட்டுப்படுத்துவதற்கும் உதவும் நடவடிக்கையாகும்.

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments