வெட்டப்படுவது மரங்களல்ல இப்பூவுலகின் எதிர்காலம்!

நம்முடைய நலனுக்காக என்றைக்கு சமரசம் ஆகிறோமோ, அப்போதுதான் தீமையின் திசையில் நாம் கால் வைக்கத் தொடங்குகிறோம் என்று கூறினார் இயற்கை வேளாண் அறிஞர் கோ நம்மாழ்வார். வளர்ச்சித் திட்டங்கள் என்ற பெயரில் நடைபெறும் சாலை விரிவாக்கம், மேம்பாலம், ரயில்வே பாலம் என்பது போன்ற பல கட்டுமான நடவடிக்கைகளுக்காக நாம் பல நூறு ஆண்டுகளாக இப்பூவுலகில் வாழும் பறப்பனவற்றிற்கு கூட்டையும், நடப்பனவற்றிற்கு நிழலையும், சுவாசிக்க மூச்சுக்காற்றையும் தந்துதவி வரும் மரங்களை தொடர்ச்சியாக வெட்டி வரும் சம்பவங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அப்படி ஒரு பேரழிவுத் திட்டத்தைத்தான் தமிழக அரசின் நெடுஞ் சாலைத்துறையானது திருவண்ணா மலையில் அவசரகால பாதைத் திட்டம் என்ற பெயரில் செயல்படுத்தத் தொடங்கியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அண்ணாமலையின் அடிவாரத்தில் அமைந் துள்ளது அருணாச்சலேஸ்வரர் கோவில். இது
மிகவும் பழமை வாய்ந்த சிவ வழிபாட்டுத்தலம் ஆகும். ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் பல லட்சம் சிவ வழிபாட்டாளர்கள் இந்தக் கோவிலின் கிரிவலப்பாதை என்றழைக்கப் படுகிற மலைவலப் பாதையை நடந்தே சுற்றி வருகின்றனர். இந்தப் பாதையின் தூரம் 14 கி.மீ ஆகும். பாதை நெடுகிலும் இருபுறமும் மூலிகை தவரங்களாலும், பல அரிய வகை மரங்களாலும் சூழப்பட்டு இயற்கை எழில் சூழ்ந்து காணப்படுகிறது. இந்தப் பாதையானது பாண்டிய மன்னன் மாறவர்மன் விக்கிரம பாண்டியனால் 13ஆம் நூற்றாண்டில் உருவாக்கப் பட்டது. இந்தப் பாதையானது பல்லுயிர்ப் பெருக்கம் நடைபெறுகிற உயிர்ச் சூழல் மிகுந்த சோனகிரி வனம், அண்ணாமலை காப்புக்காடு, சாலையோர மரங்கள் மற்றும் புதர்க்காடுகள் என மூன்று நிலைகளை உள்ளடக்கியது. இந்த கிரிவலப்பாதையில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்காக தமிழக அரசு ரூ. 65 கோடி ஒதுக்கியிருந்தது. அந்தப் பணிகளை செயல்படுத்தத் தொடங்கியபோதுதான் அங்கு முதலில் பிரச்சினை வெடித்தது, பல ஆண்டுகளாக கிரிவலப்பாதையில் நின்று கொண்டிருந்த 20க்கும் மேற்பட்ட மரங்களை நெடுஞ்சாலைத் துறையினர் வெட்டினர், இதைக் கண்டவுடன் அப்பகுதி மக்களும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் சாலை மறியல், மனிதச் சங்கிலி போன்ற போராட்டங்களை ஜூலை மாதம் நடத்தினர். இதுகுறித்து பத்திரிகைகளில் வெளியான செய்தியை வைத்து தாமாகவே முன்வந்து இதை ஒரு வழக்காக ஏற்று தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் மரங்களை வெட்டுவதற்கு தடைவிதித்தது. நெடுஞ் சாலைத்துறையினரோ கிரிவலம் செல்லும் நாட்களில் அதிகப்படியான கூட்டம் வருவதால் நெரிசலைக் குறைப்பதற்காகத்தான் சாலையை விரிவாக்கம் செய்யப்போகிறோம் எனவும் முதலில் 365 மரங்களை வெட்டப்போகிறோம் எனக் கூறிவிட்டு பொதுமக்களின் எதிர்ப்புக்குப் பின்னர் 100 மரங்கள் வெட்டப்போகிறோம் எனவும் கூறி வருகின்றனர், உண்மையாகவே மரங்களை வெட்டி சாலையை விரிவாக்கம் செய்யும் அளவிற்கு கிரிவல நாட்களில் அங்கு நெரிசல் ஏற்படுகிறதா என எக்ஸ்னோரா அமைப்பின் தலைவரும் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த வருமான கிருஷ்ணகுமாரிடம் கேட்டதற்கு “பல வருடங்களாக நான் கிரிவலம் சென்று வருகிறேன் ஒரு முறை கூட நெரிசலால் பிரச்சினை ஏற்பட்டதே இல்லை. ஒப்பந்ததாரர்களும், அரசு அதிகாரிகளும் பணம் சம்பாதிக்க மட்டுமே இந்த சாலை விரிவாக்கத் திட்டத்தை செயல்படுத்தி வருகின்றனர்.

கிரிவலப்பாதையை வலம் வருபவர்கள் அனைவரும் அங்குள்ள தாவரங்களையும், மரங்களையும் சிவனின் ஓர் அங்கமாகவே வழிபடுகின்றனர். கிரிவலப்பாதையில் உள்ள மரங்களை வெட்டினால் மழை பெய்யும் நாட்களில் மண் அரிப்பு ஏற்பட்டு நீரானது மலையில் சேகரமாகாத நிலை ஏற்படும். இதனால் அந்தப் பகுதியின் பசுமைப் போர்வையானது முற்றிலுமாக அழியும் அபாயம் உள்ளது. இதுபற்றிய எந்தவொரு சுற்றுச்சூழல் தாக்க ஆய்வும் மேற்கொள்ளாமல் அரசாங்கம் இத்திட்டத்தை தொடங்கியிருப்பது மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. மேலும் சில மரங்களை வெட்டாமல் அதைக் சுற்றி சிமெண்டையும், தாரையும் கொட்டி நிரப்பும் திட்டமும் உள்ளது. இதுவும் மரத்தை வெட்டுவதற்கு சமமான செயல்தான். அப்படி மரத்தின் அடிப்பாகத்தை மூடினால் கொஞ்சம் கொஞ்சமாக மரம் உயிரிழந்து விடும். இந்த மரங்களின் ஒரு கிளையை வெட்டினால்கூட அதை நம்பி வாழும் குரங்குகள் பறவைகள் போன்ற எண்ணற்ற உயிரினங்களின் இருப்பு கேள்விக்குறியாகிவிடும். திருவண்ணாமலை மக்களுக்கு இயற்கைச் சூழலை அனுபவித்து உணர்வதற்கு இந்த அண்ணாமலையின் கிரிவலப்பாதைதான் ஒரே வாய்ப்பாகும். இந்தப் பாதையில் விரிவாக்கத்தை அனுமதித்தால் தொடர்ச்சியாக பெரிய அளவில் பிரிவாக்கம் நடைபெற்று இதன் இயற்கையான கட்டமைப்பே சிதைந்து விடும். சாலை விரிவாக்கம் செய்யப்பட்டால் அங்கு வாகனப் பெருக்கம் ஏற்பட வாய்ப்பாக இருப்பதால் இரவு நேரங்களில் பல்வேறு காரணங்களுக்காக மலையிலிருந்து கீழிறங்கும் விலங்குகள் வாகனத்தில் மோதி உயிரிழக்க வாய்ப்புகள் அதிகம். இப்படி எந்த கோணத்தில் பார்த்தாலும் இத்திட்டட்தை அனுமதிக்கவே முடியாது” எனக் கூறினார். திருவண்ணாமலை மாவட்டமானது அதன் குடிநீர்த்தேவை, நிலத்தடி நீர், வேளாண்மைக்குத் தேவையான நீர்வசதி உள்ளிட்ட அனைத்திற்கும் ஏரி, குளங்களை மட்டுமே நம்பியுள்ளது. அந்த மாவட்ட நிர்வாக ஆவணக் கணக்கின்படி 360 நீர்நிலைகள் அங்குள்ளன. அதில் பல நீர்நிலைகள் தற்போது ஆக்கிரமிப்பில் உள்ளன. அண்ணாமலையைச் சுற்றி மட்டும் 100 குளங்கள் உள்ளன. அக்குளங்களின் ஒரே நீர் ஆதாரம் அந்த மலையின் மேல் பொழியும் மழைநீர் பல வகையான நீர்வழிப்பாதைகளின் மூலமாக குளத்திற்கு வந்தடைவதுதான். தற்போது நடைபெறும் சாலை விரிவாக்கப்பணி முழுமை யடைந்தால் நீர்வழிப்பாதைகள் முழுவதும் அடைபட்டு குளங்கள் வற்றும் அபாயமும் உள்ளது. இந்த திட்டத்தை தீட்டியவர்களுக்கு அண்ணாமலை கற்குன்றாகவும், சோனகிரிக் காடு புதர்க் காடாகவும்தான் தோன்றியது போலும். திட்ட வரைவு அறிக்கையில் மிகவும் தந்திரமாக மரத்தை வெட்டப் போகிறோம் என குறிப்பிடாமல் புதர்களை அகற்றுகிறோம் என்றே குறிப்பிட்டுள்ளனர் அரசு அதிகாரிகள். இவர்கள் புதர் என்று குறிப்பிட்ட பகுதிதான் பல்வேறு மூலிகைத் தாவரங்களும், நூறு ஆண்டுகள் வாழ்ந்து வரும் மரங்களும், அரிய வகை பறவைகளும், விலங்குகளும் உ யி ர் த் தி ரு க் கு ம் ப கு தி என்கிறார் திருவண்ணாமலை பகுதியைக் சேர்ந்த இயற்கை வேளாண்மை செய்து வரும் உழவர் குமார் அம்பாயிரம் “திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் நாங்கள் நூறு மரங்களை மட்டுமே வெட்டு வோம் எனக் கூறிவிட்டு ஆயிரக்கணக்கான மரங்களை வெட்டவிருக்கிறது மாவட்ட நிர்வாகம். ஆனால் அவர்கள் வெட்டுவதாக கணக்கில் கூறியவை மரங்களல்ல அவை குட்டைப்புதர் மருத நிலக் காடுகள் ஆகும்.

இந்த காட்டில் மரங்களை எடுத்துக் கொண்டால் இலுப்பை, நாவல், கடம்பன், மருது, கருங்காலி, வெளுங்கன், சந்தனம், வேம்பு, வேங்கை, செம்மரம், ஆலமரம், கல்லாத்தி, இச்சி, அத்தி, புங்கை, புளியன், துறிஞ்சி, கருவேலம், வில்வம், காட்டு எலுமிச்சை, அழிஞ் சில், பொரசு, காட்டு முருங்கை, செந்தனக்கு, மந்தாரை, காட்டுக்கொளஞ்சி போன்றவையும் மோதிரக்கனி, கொகக்கி முள், பெர்னி விராளகி போன்ற புதர்களும், செங்காந்தள், ஆதாண்டை, செங்கத்தாலி போன்ற கொடிகளும், புள்ளிமான், மந்தி, முயல், காட்டுப்பன்றி, முள்ளம்பன்றி, மரநாய், புனுகுபூனை, எறும்புதின்னி, காட்டுப் பூனை, சிகப்புகீரி, சாம்பல்கீரி, அணில், நரி, குரங்கு போன்ற விலங்குகளும், சோலைப்பாடி, மைனா, ஈ பிடிப்பான், கிளி, ஆந்தை, மயில், குயில், செம்போத்து, பனங்காடை, தையல்சிட்டு, தூக்கணாங் குருவி, மாங்குயில், தோட்டக்கள்ளன், சிலம்பல், சருகுகோழி, கள்ளிபுறா, மணிப்புறா, கௌதாரி, காடை, வானம்பாடி, அண்டங்காக்கா, வல்லூறு, ராசாளி போன்ற பறவைகளும், பல்லாயிரக் கணக்கான நுண்ணுயிரிகளும் இந்த மலையோட நீரையும், தென்றலையும், மரத்தையும் அமைதியான சூழலையும் நம்பி ஒன்றை மற்றொன்று சார்ந்து பல நூறு வருசமா வாழ்ந்துட்டு வருது. அவங்க வெட்டப்போறது வெறும் மரத்த மட்டுமில்ல ஒரு வனத்த, ஒரு பல்லுயிரின இயற்கை மண்டலத்தை. இதை எப்படியாவது தடுக்கனும்” என்றார் குமார் அம்பாயிரம். காஷ்மீர், உத்தரகாண்ட், சென்னை, பெங்களூர் இப்படி தொடர்ச்சியாக இயற்கை கட்ட்மைப்பை சிதைத்ததால் வெள்ளம் எற்பட்ட சம்பவங்களை நாம் யாரும் மறந்திருக்க மாட்டோம். அந்தத் தவறுகளில் இருந்து நாம் பாடம் கற்றுள்ளோம் என்பதை நிரூபித்துக் காட்டுவதற்கு வாய்ப்பாக நம்முன் திருவண்ணாமலை கிரிவலப்பாதை விரிவாக்கப் பிரச்சினை இருக்கிறது. நமக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் இந்த விவகாரத்தில் ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளது அதில் தற்போதைக்கு கிரிவலப்பாதையில் உள்ள ஒரு மரத்தைக் கூட வெட்டக்கூடாது எனவும், சிமெண்ட், ஜல்லி போன்றவற்றை கொட்டி பாதை அமைக்கக் கூடாதெனவும் வேண்டுமானால் மண்பாதை மட்டுமே அமைக்கலாம் எனவும் ஓய்வுபெற்ற நீதிபதி மற்றும் மாவட்ட வனத்துறை அதிகாரி தலைமையில் இச்சூழலை கண்காணிக்க குழு அமைக்கப்பட்டு ஆராய்ந்து அடுத்தகட்ட முடிவுகள் மேற்கொள்ளப்படும் எனவும் ஆகஸ்ட் 18ஆம் தேதி கூறியுள்ளது. அண்ணாமலை வனத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நம்மாலான முயற்சியை நாம் அனைவரும் செய்ய வேண்டும். ஏனெனில் திருவண்ணாமலையில் வெட்டப்படுவது மரங்கள் மட்டுமல்ல இப்பூவுலகின் எதிர்காலமும் கூட.

நிலன்

ஆபத்தின் விளிம்பில் திருவண்ணாமலை கிரிவலப்பாதை மரங்கள்

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments