செறிவூட்டப்பட்ட அரிசி; ஊட்டச்சத்தா? நஞ்சா?

the reporters’ collective

ஊட்டச்சத்து எனும் பெயரில் குழந்தைகளுக்கு நஞ்சை ஊட்டாதே

தமிழ்நாடு அரசுக்குப்  பூவுலகின் நண்பர்கள்  வேண்டுகோள்.

 இந்தியப் பிரதமர்  நரேந்திர மோடி 2021ஆம் ஆண்டு ஆகஸ்ட் 24ஆம் தேதி தனது விடுதலை நாள் உரையில் இந்திய மக்களுக்கு இனிமேல் சத்துமிகுந்த செறிவூட்டப்பட்ட அரிசியைப் பொது வழங்கல் திட்டம் போன்ற அரசுத்திட்டங்களின் வழியாகக் கொடுக்க உள்ளதாகப் பேசினார். அப்போதிலிருந்து இப்போது வரை அதற்கான காரணங்களைப் புள்ளி விவரங்களுடன் அரசுத் தரப்பில் இருந்து யாரும் வெளியிடவில்லை. நிதி ஆயோக், உணவு மற்றும் பொதுவழங்கல் துறை, இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர அதிகாரத்துறை (FSSAI) ஆகிய யாரும் ஏன் இந்த அரிசியை இந்திய மக்களுக்குக் கொடுக்க வேண்டும் என்ற தரவுகளை வெளியிடவில்லை. அதிலும் எந்த அளவு சத்து இரசாயனங்களை யாரிடமிருந்து இறக்குமதி செய்யப்போகிறோம் என்பதைக்கூட வெளியிடவில்லை.

இந்தியக் குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் அனீமியா எனப்படும் இரத்தசோகை உள்ளதாகவும் மேலும் சில நுண்ணூட்டச் சத்துக்குறைபாடு உள்ளதாகவும் அதனால் அவர்களது வளர்ச்சி பாதிக்கப்படுவதாகவும் கருதிச் செயற்கையாக அரிசியைத் தயார் செய்து, அதில் இரும்புச்சத்து, வைட்டமின் பி12, ஃபோலிக் அமிலம் போன்ற இரசாயனங்களைச் சேர்த்துச் சத்து உண்டாக்கி ரேசன் கடைகள் எனப்படும் பொது வழங்கல் முறை மற்றும் பல்வேறு அரசுத் திட்டங்களின் மூலம் மாநில அரசுகளின் நிதியையும் எடுத்துக்கொண்டு ஒன்றிய அரசு விநியோகித்து வருகிறது.

தற்போது வரை 137.71 லட்சம் டன் செறிவூட்டப்பட்ட அரிசியை ஒன்றிய அரசு விநியோகித்துள்ளது. இந்த செறிவூட்டப்பட்ட அரியால் உண்மையாகவே நன்மை விளைகிறதா? பாதிப்பு ஏதேனும் உள்ளதா? என்பது குறித்த எந்தத் தகவலையும் ஒன்றிய அரசு பொதுவெளியில் வைக்காததன் காரணம் தற்போது வெளியாகியுள்ளது.  காரணம் என்னவெனில் இந்த செறிவூட்டப்பட அரிசியால் போதுமான பலன் இல்லை, இதன் தாக்கம் குறித்த முன்னோட்ட ஆய்வுகள் வெற்றியடையவில்லை, செறிவூட்டப்பட்ட அரிசி பலனளிப்பதற்குப் பதிலாக உட்கொள்பவர்களின் உடல்நிலையில் குறிப்பிட்ட சில பாதிப்புகளை ஏற்படுத்துகிறது என ஒன்றிய அரசின் நிதித்துறை, நிதி ஆயோக் மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி மன்றம்(ICMR)உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளும் அரசை எச்சரித்துள்ளன. ஆனால், இந்த எச்சரிக்கைகள் எதையும் பொருட்படுத்தாமல் இந்தியாவின் விளிம்புநிலை மக்களை சோதனை எலிகளாக்கி செறிவூட்டப்பட்ட அரிசியை நாடு முழுவதும் விநியோகித்துள்ளது நரேந்திர மோடி அரசு.

இந்த தகவல்கள் அனைத்தையும் the reporters’ collective எனும் செய்தி ஊடகம் விரிவாக மேற்கொண்ட ஆய்வின் மூலம் உரிய ஆதாரங்களுடன் செய்திக் கட்டுரையாக வெளிக்கொணர்ந்துள்ளனர். அந்த செய்திக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய தகவல்கள் பின்வருமாறு;

செறிவூட்டப்பட்ட அரிசி உட்கொள்வதன் மூலம் அதன் நுண்ணூட்டச் சத்துகளால் ரச்சசோகை குணமாகிறதா என்பது குறித்த சோதனை முயற்சி(Pilot Project) நாடு முழுவதும் 2019 பிப்ரவரியில் தொடங்கியது. இந்த சோதனை முயற்சித் திட்டங்கள் அனைத்தும் 2022 மார்ச் வரை தொடர்ந்திருக்க வேண்டியவை. ஆனால், திட்டங்கள் முழுமையாகி ஆய்வு முடிவுகள் வெளிவரும் முன்னரே செறிவூட்டப்பட்ட அரிசியை நாடு முழுவதும் விநியோகிப்பதற்கான திட்டத்தை ஆகஸ்ட் 24, 2021 அன்றே பிரதமர் மோடி வெளியிட்டார்.

இத்திட்டத்தை பிரதமர் மோடி துவங்கியபோது ஏற்கெனவே திட்டமிடப்பட்ட 15 சோதனை முயற்சித் திட்டங்களில் 9 திட்டங்கள் தொடங்கப்படவே இல்லை. அதாவது செறிவூட்டப்பட்ட அரிசியால் பலன் இருக்கிறதா என்கிற ஆய்வுகள் முடிவதற்கு முன்பாகவே அதை விநியோகிப்பதற்கான அறிவிப்பை பிரதமர் மோடி வெளியிட்டுள்ளார்.

முன்னோட்ட ஆய்வுகள் அனைத்தும் வெற்றிகரமாக இல்லை என்பதை உணவு மற்றும் பொதுவழங்கல்துறை செயலாளர் சுதான்சு பாண்டே 25.10.2021 அன்று டெல்லியில் நடந்த ஒரு கருத்தரங்கத்தில் தெரிவித்துள்ளார். முன்னோட்ட ஆய்வுகள் எதுவும் வெற்றிகரமாக இல்லை என்பதை நிதி ஆயோக்கின் மூத்த ஆலோசகர் அனுராக் கோயல் அரசு சார்பில் நடத்தப்பட்ட ஆய்வுக் கூட்டமொன்றில் தெரிவித்துள்ளார்.

மேலும், 2019ஆம் ஆண்டு நிதித்துறை இத்திட்டம் குறித்து தயாரித்த அலுவல் குறிப்பு ஒன்றில்  ”முன்னோட்ட ஆய்வுகள் முடிவதற்குள் திட்டத்தை அறிமுகப்படுத்துவது மிகவும் அவசராமான முடிவு” எனக் குறிப்பிட்டுள்ளது. ரத்தசோகை ஒருவரது உடலில் எந்தளவிற்கு உள்ளது உள்ளிட்ட அடிப்படைக் கணக்கெடுப்பு மேற்கொள்ளாமலே வலுக்கட்டாயமாக செறிவூட்டப்பட்ட அரிசி திணிக்கப்பட்டுள்ளது என நிதி ஆயோக் அமைப்பே தனது ஆவணங்களில் குறிப்பிட்டுள்ளது.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக இந்தியாவின் பொது சுகாதாரம் குறித்த ஆய்வுகளை மேற்கொள்ளும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி மன்றமே (ICMR) செறிவூட்டப்பட்ட அரிசுக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளது என்கிற அதிர்ச்சியான தகவலும் the reporters’ collective-ன் கட்டுரையின் மூலம் தெரிய வந்துள்ளது.

நிதி ஆயோக்கின் அலுவல் குறிப்புகளின்படி  நிதி ஆயோக்கின் வேளாண்மைத்துறைக்கான உறுப்பினரான பேராசிரியர் ரமேஷ் சந்த் என்பவர் கூறிய கருத்துகள் பின்வருமாறு “ சில  மருத்துவ வல்லுநர்கள் இரும்புச் சத்து நிறைந்த அரிசியால் குழந்தைகளின் ஆரோக்கியத்தில் ஏற்படும் மோசமான விளைவுகள் குறித்து தீவிர கவலை தெரிவித்துள்ளனர். இதை இந்திய மருத்துவ ஆராய்ச்சி மன்றத்தின் தலைவரும் தெரிவித்துள்ளார். எனவே, அரிசியை வலுவூட்டுவதன் மூலம் மனித ஆரோக்கியத்தில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பலதரப்பட்ட நிபுணர்களுடன் கலந்தாலோசிக்க வேண்டிய அவசியம் உள்ளது” என அக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும், பொதுவாகவே தலசீமியா மற்றும் சிக்கிள் செல் அனிமியா உடையவர்களுக்கு இரும்புச் சத்து நிறைந்த பொருட்களை வழங்கக் கூடாது. இதற்காகவே செறிவூட்டப்பட அரிசிப் பையின் மேலே ”தலசீமியா உடையவர்களுக்கு இந்த அரிசி பரிந்துரைக்கப்படவில்லை” எனக் குறிப்பிட வேண்டும் என்பது உணவுத்துறை வழங்கியுள்ள வழிகாட்டுதலாகும். இது கடைபிடிக்கப்படுகிறதா என்பதை ஆய்வு செய்ய the reporters’ collective-ன் செய்தியாளர்கள் சிக்கிள் செல் அனிமியா அதிகம் பாதித்த பழங்குடிகள் வாழும் ஜார்கண்ட் மாநிலத்தின் சில கிராமங்களுக்குச் சென்றுள்ளனர். அதிர்ச்சியளிக்கும் வகையில்  பயனாளர்களை எச்சரிக்கும் எவ்வித வாசகங்களும் குறிப்பிடாத சாக்குப் பைகளைக் கொண்டே செறிவூட்டப்பட்ட அரிசி அங்கு விநியோகிக்கப்பட்டது தெரியவந்துள்ளது.

சுருக்கமாகச் சொல்லவேண்டும் என்றால் ரத்தசோகை பாதிப்படைந்தவர்களுக்குதான் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகிக்கப்பட்டது என்பதை உறுதி செய்வதற்கான எவ்வித ஆதாரங்களும் இன்றியே முன்னோட்ட அளவில் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகிக்கப்பட்டுள்ளது. முன்னோட்ட ஆய்வில் அரிசியை உட்கொண்டவர்களின் உடல்நிலையில் என்ன மாற்றம் நிகழ்ந்தது என்பதை அறிய முற்படாமலே நாடு முழுவதும் செறிவூட்டப்பட்ட அரிசி பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

அரசு இந்த விவகாரத்தில் இவ்வளவு அவசரம் காட்டுவது Royal DSM NV எனும் நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த செறிவூட்டப்பட்ட அரிசியில் சேர்க்கப்படும் ஊட்டச் சத்துகளைத் தயாரிக்கும் நிறுவனத்தில் வணிக நலனுக்காகத்தான் என்றும் the reporters’ collective-ன் செய்திக் கட்டுரை நிறுவுகிறது. இந்த நூற்றாண்டின் இறுதியில் 80 கோடி இந்திய மக்கள் வேறு வழியேயின்றி செறிவூட்டப்பட்ட அரிசியை உட்கொள்ளும் நிலை உண்டாகும் என அச்செய்திக் கட்டுரை குறிப்பிடுகிறது.

இந்த செறிவூட்டப்பட்ட அரிசி ஏதோ வடமாநிலத்தில் மட்டும் விநியோகிக்கப்படவில்லை. தமிழ்நாட்டிலும் பல்வேறு அரசுத் திட்டங்களின் வாயிலாக ஏற்கெனவே பொதுமக்களை அடைந்துவிட்டது. தமிழ்நாடு கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை கொள்கை விளக்கக் குறிப்பு 2023 – 2024ன் படி முதற்கட்டமாக திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள், ஒருங்கிணைந்த குழந்தைகள் நலத்திட்டம், மதிய உணவுத் திட்டம் மற்றும் பிற நலத்திட்டங்களுக்கு 01.10.2020 முதல் 31.03.2022 வரை செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகிக்கப்பட்டுள்ளது. இராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களில் உள்ள அனைத்து முன்னுரிமை குடும்ப அட்டைதாரர்களுக்கும் 01.12.2022 முதல் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்பட்டு வருகிறது.

இந்த செறிவூட்டப்பட்ட அரிசியை உட்கொண்டவர்கள் தலசீமியா, சிக்கிள் செல் அனிமியா உள்ளிட்ட பாதிப்பைக் கொண்டவர்களாக இருந்தால் அரசே அவர்களுக்குத் தெரியாமல் அவர்களை மெல்ல மெல்ல கொல்கிறது என்றே அர்த்தம்.

அரிசியைப் பழைய சோறாக்கிச் சாப்பிட்டால், அல்லது நீராகாரமாக்கிக் குடித்தால், ஏன் கேப்பைக் கூழ், கம்பங் கூழ் குடித்தால் வைட்டமின் பி-12 சாதாரணமாகக் கிடைக்கும் என அரசு உணவு ஆராய்ச்சி நிறுவனங்கள் கூறுகின்றன.  பொதுவாகத் தீட்டாத அரிசியில் இரும்புச்சத்து உண்டு, அதிலும் செந்நெல் யாவற்றிலும் இரும்புச்சத்து இன்னும் கூடுதல் உண்டு, கருப்பு நெல்லிலும் உண்டு. கருங்குறுவை என்ற அரிசியில் மற்ற அரிசியை விட ஆறு மடங்கு இரும்பச்சத்து கூடுதலாக உள்ளதை ஆய்வுகள் கூறுகின்றன. குறிப்பாகக் காடியாக (நொதிக்க வைத்து) மாற்றும்போது கருப்பு அரிசிகளில் மிகச் சிறப்பாக இரும்புச்சத்து கிடைக்கிறது. அதனால் தான் சித்த மருத்தவர்கள் கருங் குறுவைக் காடியை ஒரு துணைமருந்தாகப் பயன்படுத்துகிறார்கள்.

இப்படி உள்ளூரில் கிடைக்கும் உணவுகளைக் கொண்டே பல்வேறு வகையான சத்துகளை நாம் பெற்றுக்கொள்ள வழிகள் இருக்கும்போது எவ்வித அடிப்படை அறிவியல் ஆதாரங்களுமின்றி பிரதமர் மோடியின் விளம்பர மற்றும் வணிக வெறிக்காக தமிழ்நாட்டு மக்களை நமது அரசாங்கமே பலியிடக் கூடாது. உடனடியாக தமிழ்நாடு அரசு பல்வேறு துறை நிபுணர்கள் அடங்கிய குழு ஒன்றை உருவாக்கி ஏற்கெனவே செறிவூட்டப்பட்ட அரிசியை உட்கொண்ட மக்களிடம் மருத்துவ ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும். மாநில அரசுத் திட்டங்கள் அனைத்திலும்கீழ் செறிவூட்டப்பட்ட அரிசியை விநியோகம் செய்வதை உடனடியாக நிறுத்த வேண்டும் எனத் தமிழ்நாடு முதலமைச்சரை வலியுறுத்துகிறோம்.

குறிப்பு: the reporters’ collective-ன் செய்திக் கட்டுரை- https://www.reporters-collective.in/trc/despite-internal-red-flags-and-uncertain-science-modi-govt-serves-fortified-rice-to-indias-poor

 

  • பூவுலகின் நண்பர்கள்
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments