காட்டைப் பிளக்கும் சாலைகள் நிகழ்த்தும் கொடூரக் கொலைகள்
காட்டுக் கோழியைத் துரத்தி வந்த
பூனை திகைக்க
வழித்தடம் மறிபட்டு
யானை ஒதுங்க
வலசை கிளம்பிய
கதிர்க்குருவி தடுமாற
காட்டின் நெஞ்சைக் கீறிக்கீறி
எழுகிறது ஒரு தார்ச்சாலை…
– அவை நாயகன்
இரண்டு ஆண்டுகளுக்கு முன் பாலக்காடு ரயில் மார்க்கத்தில் யானைக் கூட்டம் ஒன்று அடிபட்டு தலை வேறு, முண்டம் வேறு, கால் வேறு எனக் கிடந்ததையும், கர்ப்பிணி யானையின் வயிற்றுக்குள் இருந்த குட்டியும் தூக்கி வீசப்பட்டு ரணமாய்க் கிடந்ததையும் நாளிதழ் செய்தியாகவும் டிவி செய்தியாகவும் பார்த்திருப்போம்.
இதுபோல சிறுத்தைப்புலி ஒன்று முதுமலை சாலையில் அடிபட்டு செத்துக் கிடந்ததும் நம் கவனத்துக்கு வந்திருக்கும். இவை எல்லாம் பெருங்கடலில் சிறு துளிதான்.
நெடுஞ்சாலையில் அடிபடும் மனிதர்களையே கண்டுகொள்ள முடியாத வகையில் சமூகச்சூழல் வாட்டிக் கொண்டிருக்கும்போது நகர நெடுஞ்சாலையில் நாயோ, பூனையோ அடிபட்டால் யார் கண்டுகொள்ளப் போகிறார்கள்? அதிலும் காட்டைப் பிளந்து செல்லும் சாலையில் அடிபடும் காட்டுயிர்களின் நிலையைப் பற்றி கேட்க வேண்டுமா என்ன? ஒவ்வொரு நாளும் கணக்கற்ற காட்டுயிர்கள் நம் கவனத்துக்கு வராமலேயே கணப்பொழுதும் செத்து மடிந்து கொண்டே இருக்கின்றன. கள்ள வேட்டைக்கு பலியாகும் காட்டுயிர்களைவிட வாகனங்களில் மோதி பலியாகும் காட்டுயிர்களின் எண்ணிக்கையே அதிகம். ஆனால் அந்தக் கணக்கு நம்மை எட்டுவதில்லை.
சாலைகள் நவீனமயமாகிவிட்டதால் மனிதர்கள் ஒட்டிச் செல்லும் வாகனங்கள் சாதாரணமாக 80 கி.மீ. வேகத்தில் கண்ணை கட்டிக்கொண்டு பறந்து செல்லுகின்றன. பெரும்பாலும் தரையோடு ஒட்டிச் செல்லும் காட்டுயிர்கள் ஓட்டுநர்களின் கண்களுக்கு சில நேரம் தெரிவதில்லை. ஆனால் அவற்றைப் பார்த்தபின்பும், இதுங்களுக்கெல்லாம் வண்டியை நிறுத்த வேண்டுமா என்ன? என்ற அலட்சியமும் அகங்காரமும்தான் வாகன ஓட்டிகளிடம் தலைதூக்குகின்றன. இதனால் அரிய வகை இரவாடி உயிர்களான மரநாய், முள்ளம்பன்றி, காட்டுப்பூனை, தேவாங்கு, மான், கரடி உள்ளிட்டவையும் சிறு ஊர்வன உயிர்களான அரணை, ஓணான், பாம்பு, தவளை போன்றவையும் சக்கரங்களில் நசுங்கி செத்துப் போகின்றன.
செத்து மடியும் காட்டுயிர்கள் மட்டுமின்றி, அடிபட்டு ஊனமாகும் உயிர்கள் பலப்பல. அவற்றின் நிலை இன்னும் மோசம். புண்ணில் சீழ் பிடித்தும் (காட்டில் மருத்துவர் கிடையாது), இரை தேடமுடியாமல் பசியால் வாடிவதங்கி குற்றுயிரும் குலைஉயிருமாய் கிடந்து சாகின்றன. சில வேளைகளில் குட்டியைக் காப்பாற்ற முயற்சித்து தாய் அடிபட்டு விடும். இதனால் பச்சிளம் குட்டிகள் ஊணுண்ணிகளுக்கு எளிதாக இரையாகி விடுகின்றன அல்லது தன் சூழலுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் மாண்டு போகின்றன. சில வேளைகளில் குட்டி அடிபட்டு, தாய் தப்பி விடக்கூடும். அந்தத் தாய் பரிதவிப்புடன் அந்த இடத்தையே முகர்ந்து பார்த்துக்கொண்டு சுற்றிச்சுற்றி வரும் அவலத்தை என்னவென்று சொல்வது. யானைகளிடம் இந்தச் செய்கையை பார்க்கலாம்.
இந்த ஜென்மங்களை எல்லாம் யார் சாலைக்கு வரச் சொன்னது? என்று நாம் கேட்கலாம். அது நமக்குத் தான் சாலை, நெடுஞ்சாலை, அதிவேக சாலை. அவற்றுக்கோ தங்கள் வாழிடத்தை இரண்டாகப் பிளந்து கூறுபோடும், துண்டு துண்டாக்கி வீசும் மிகப் பெரிய தலைவலிதான் சாலைகள்.
சமவெளியைப் போல நேராக இல்லாமல், மலைகளில் சுருள் சுருளாக சாலைகள் சுற்றிச்சுற்றி செல்வதைப் பார்த்திருப்போம். அதன் அழகைப் பற்றியும் வியந்திருப்போம். ஆனால் உண்மை நிலை என்ன? இந்தச் சாலைகள் காட்டின் பெரும்பகுதியை ஆக்ரமிப்பதோடு, காட்டுயிர்களின் வாழிடத்தையும் துண்டு துண்டாக்கி விடுகின்றன. சோலை மந்தி, கருமந்தி, அணில் போன்ற காட்டுயிர்கள் தரையில் இறங்காமல், மரத்துக்கு மரம் தாவியே வாழும் தன்மை கொண்டவை. காட்டின் குறுக்கே போடப்படும் இந்த அகலமான சாலைகளால், அவை மரத்துக்கு மரம் தாவ முடியாமல் கீழே இறங்க நேரிடுகிறது. அப்போது ஊனுண்ணிகளுக்கு எளிதாக இரையாகின்றன அல்லது வேட்டைக்காரரிடமோ, வாகனங்களில் அடிபட்டோ சாவைத் தழுவுகின்றன.
“வாழிடம் துண்டாடப்படுவதால் கருமந்தி போன்றவை ஒரு பகுதியிலேயே தங்கி விடுகின்றன. இதனால் ஒரே கூட்டத்துக்குள்ளேயே இனப்பெருக்கம் நடப்பதால், அவற்றின் மரபணு வளம் பாதிக்கப்படுகிறது” என்கிறார் காட்டுயிர் பாதுகாப்புக் கழகத்தைச் சேர்ந்த லட்சுமி நாராயணன். தெளிவான பார்வை வேண்டி சாலையின் இரு மருங்கிலும் அடிக்கடி காட்டுப்பகுதிகளைச் சிதைத்து விடுகிறோம். இதனால் இயற்கையான, மண்ணின் மரபு சார்ந்த இயல்தாவரங்கள் துளிர்க்க விடாமல் தடுக்கப்படுவதால், அந்த இடங்களில் அந்நிய களைச்செடிகள் நாளடைவில் ஆக்ரமிக்கின்றன. பின்பு பல்கிப் பெருகி பல்லுயிர் பன்மயத்துக்கு பாதகம் செய்கின்றன.
காட்டுயிர்கள் இரை தேடியும், இரையுண்ணிகளிடம் இருந்து தப்பவும், இணை தேடியும், தண்ணீர் தேடியும், குளிர், வெயில், மழையில் இருந்து தற்காத்துக் கொள்ளவும் இடம்பெயர்கின்றன. அப்படிச் செல்லும்போது சுருள்சுருளான சாலைகளை அடிக்கடி எதிர்கொண்டு காட்டுயிர் சாலையைக் கடக்க நேரிடுகிறது. பொதுவாக ஊர்வன வகைகள் குளிர் ரத்தப் பிராணிகள். எனவே அவை, வெப்பத்திற்காக சாலைகளில் வந்து சிறிது நேரம் படுத்திருக்கும். இதனால் அதிகம் அடிபட வேண்டியிருக்கிறது.
மனிதத் தொந்தரவு கருதியே பெரும்பாலான விலங்குகள் தங்கள் நடமாட்டத்தை இரவுப் பொழுதுக்கு தகவமைத்துக் கொண்டுவிட்டன. ஆனாலும் இரவு நேரங்களில்கூட நாம் அவற்றை நிம்மதியாக விடுவதில்லை. காட்டுக்குள்ளே அதிக ஒலியுடன் பாட்டு கேட்டுக் கொண்டும், கை தட்டிக்கொண்டும் செல்வதும், தாறுமாறாக ஓடும் வாகனங்களில் இருந்து வரும் இரைச்சலும் புகையும் காட்டுயிர்களை எரிச்சல் படுத்துகின்றன. அத்துடன் வாகனங்கள் உமிழும் வெளிச்சமும் அவற்றின் கண்களை கூசச்செய்து நிலைகுலையச் செய்கிறது (இரவு நேரங்களில் வாகன ஒளி பாய்ச்சப்பட்டதால் திக்கு தெரியாமல் திண்டாடும் விலங்குகளின் நிலையை நகர்ப்புறங்களிலேயே தெளிவாகப் பார்க்கலாம்). இப்படி திக்கு முக்காடி எங்கு போவது எனத் தெரியாமல் எங்காவது முட்டி மோதி சாவைத் தழுவுகின்றன. “இத்தருணத்தைப் பயன்படுத்தி வேட்டையில் ஈடுபடுவோரும் உண்டு” என்கிறார் இயற்கை ஆர்வலர் மக்மோகன்.
‘‘சிறுபாம்புகள் இனப்பெருக்கத்துக்காக ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு செல்வது வழக்கம். அப்படிச் செல்லும்போது வழுவழுப்பான தார்ச் சாலையில் ஊர்ந்து செல்லமுடியாமல் சிரமப்படுகின்றன. அப்படியே ஊர்ந்து எதிர்ப்புறம் சென்றாலும், அங்கு விபத்து தடுப்புக்காக எழுப்பப்பட்டுள்ள உயரமான சுவர்களில் ஏறமுடியாமல் திரும்பி வந்து மீண்டும் முயற்சித்தபடியே இருக்கும் தருணத்தில் அவை சாவைத் தழுவுகின்றன. இதனால் அதன் இனப்பெருக்க சுழற்சி பாதிக்கப்படுவதுடன், அந்த பாம்பு இனங்கள் அழியும் தருவாயில் உள்ளன” எனக் கவலையுடன் குறிப்பிடுகிறார் சாலையில் அடிபடும் உயிரினங்கள் குறித்து மேற்குத்தொடர்ச்சி மலையில் ஆய்வு செய்து வரும் கழுதைப்புலி ஆய்வாளர் ஆறுமுகம்.
சாலையில் பயணம் செய்வோர் தூக்கி எறியும் உணவுகளாலும் காட்டுயிர்கள் அடிபட நேரிடுகிறது. பயணிகள் உண்ணும் உணவு மீதியை சாலையில் விட்டெறிவதால், அவற்றைத் தின்பதற்கு குரங்குகள் சாலையை நாடுகின்றன. அவற்றுக்கு நாம் உணவு அளிக்கிறோம் என்ற வீண் பெருமிதம் கொள்ளும் அதேநேரம், நாம் செய்வது அவற்றுக்கு தீங்கே ஏற்படுத்துகிறது. “நாம் அளிக்கும் உணவுக்காக அவற்றை கையேந்தி பிச்சை எடுக்க வைப்பதோடு, அந்த உணவை சாப்பிட்டால் ஒவ்வாமை, வயிற்று உபாதைகளாலும் அவை அவதியுறுகின்றன. கூடவே விபத்தும் நேரிடுகிறது” என்கிறார் காட்டுயிர் ஆர்வலர் கோவை சதாசிவம். இதில் ஊட்டி, கொடைக்கானல, வால்பாறை, ஏற்காடு போன்ற மலைப்பகுதியில் கோடை விழா என்ற பெயரில் நாம் நடத்தும் கூத்துக்களால் அவற்றின் வாழிடங்கள் துண்டாடப்பட்டு விடுகின்றன. தொடர்ந்து சாரைசாரையாகச் செல்லும் வாகனங்களால், அவை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்குச் செல்ல முடியாமல் திண்டாடுகின்றன. யானைகள் வழக்கமாக ஒவ்வொரு அசைவின் மூலமும் தனது கூட்டத்தாருடன் தொடர்பை ஏற்படுத்தியபடியே செல்லும் பண்பு கொண்டவை. காட்டைப் பிளக்கும் தார்ச்சாலைகளால் அவற்றின் தொடர்புச் சங்கிலி அறுத்தெறியப்படுகிறது. இதனால் வழிதப்பி மனிதக் குடியிருப்புக்குள் புகுந்து, மனிதனுக்கும் விலங்குகளுக்குமான பிணக்கும் அதிகமாகிறது.
புதிதாக போடப்பட்ட தேசிய நான்கு வழிப் பாதையால் ஒரு யானைக்கூட்டம் திசை மாறி சித்தூர் பகுதியில் தங்கிவிட்டதையும், அவற்றின் பாரம்பரிய வழித்தடத்துக்கு திரும்ப முடியாமல் மனிதக் குடியிருப்புக்குள் புகுந்து விட்டதையும் நாம் இணைத்து புரிந்துகொள்ள வேண்டும். ஊருக்குள் புகுந்துவிடும் யானைகளை, ஊடகங்களும் மக்களும் வில்லன்களாகச் சித்தரிக்கின்றனர், பெரும் கூப்பாடு போடுகின்றனர். ஏன் அவை ஊருக்குள் புக நேரிடுகிறது என்ற காரணத்தை நாம் எந்தக் காலத்திலும் யோசிப்பதில்லை. அவை காலங்காலமாக பயன்படுத்தி வந்த வழித்தடங்களை அழித்து சாலைகளாகவும், தோட்டங்களாகவும், வயல்களாகவும், வீடுகளாகவும் மாற்றிவிட்டோம். இப்போது, அவை ஊருக்குள் புகுந்து ‘அட்டகாசம்’ செய்வதாக குற்றஞ்சாட்டுகிறோம். நல்ல கூத்து.
மைசூரைச் சேர்ந்த இயற்கையாளர் ராஜ்குமார், சாலையில் அடிபடும் உயிரினங்கள் பற்றி பந்திபூர் காட்டுப் பகுதியில் களஆய்வு மேற்கொண்டபோது அதிர்ச்சியான தகவல் கிடைத்தது. ‘‘வெறும் 14 கி.மீ. காட்டுப் பகுதியில் கரடி, பன்றி, மான், காட்டு எருது போன்ற மூன்று பெரிய உயிரினங்களில் மாதத்துக்கு ஒன்று அடிபடுகின்றன. அடிபடும் ஊர்வனவற்றின் எண்ணிக்கையோ கணக்கில் அடங்காதது. இதற்காக காட்டுயிர்கள் அதிகம் வாழும் இடங்களை குறிப்பெடுத்து எச்சரிக்கைப் பலகை, ஓட்டுநர்களுக்கு விழிப்புணர்வு, வேகத் தடுப்பரண்கள் போன்றவற்றை ஏற்படுத்தினோம். இது ஓரளவுக்கு மாற்றத்தை ஏற்படுத்தியது. இறுதியில் நீதிமன்றத்தை அணுகி பந்திபூர் முதுமலை சாலையில் இரவு வாகனப் பயணத்தை தடை செய்ததால் காட்டுயிர்கள் ஒரளவு மூச்சு விடவாவது வழி பிறந்துள்ளது” என்கிறார் அவர். இந்த சாலையை இரவுகளில் மூடுவதற்கு ஊட்டி பகுதியில் உள்ள தமிழக வியாபாரிகள்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அரசியல் கட்சி ஒன்றும் எதிர்ப்பு தெரிவித்தது. காடுகளுக்கு நடுவே ஓட்டுநர்கள், பயணிகள் இளைப்பாறுவதற்கென நிறுத்தப்படும் இடங்களில் முளைக்கும் திடீர் கடைகளாலும் காட்டுயிர்களுக்கு பெரும் தொந்தரவு ஏற்படுகிறது.சாலைகளுக்கு அருகிலிருந்துதான் பெரும்பாலும் காட்டுத் தீ பரவுகிறது என்பதை நினைவில் கொள்ளவேண்டும்..
தற்போது சாலைகள் ‘நவீனமாக’ இருப்பதால் காட்டுக்குள்ளே பெரும்பாலான வாகன ஓட்டிகள் அனுமதிக்கப்பட்ட அளவைவிட வேகமாகவே பறந்து செல்கிறார்கள். யாரும் வேகக் கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிப்பதில்லை. இதைத் தடுக்க உடனடி அபராதம் விதிப்பதுதான் ஒரே வழி. அது மட்டுமில்லாமல் காட்டுப் பகுதியில் புதிதாக எந்த சாலைத் திட்டத்தையும் மேற்கொள்ளக்கூடாது. இருக்கும் சாலைகளை செப்பனிடக்கூடாது. அப்போதுதான் சக்கரங்களின் பிடியிலிருந்து காட்டுயிர்கள் தப்பமுடியும். மேலும் ஊர்வன வகைகள், ஊனுண்ணிகள் சாலையின் ஒரு புறத்திலிருந்து மறுபுறம் செல்வதற்குத் தோதாக ஆங்காங்கே இடைவெளி விட்டு தடுப்பு சுவர் கட்ட வேண்டும். அதேபோல் நீர்நிலைகளை ஊடறுத்துபோகும் சாலைகளில் தண்ணீர் இருபுறமும் ஏதுவாக செல்லும் வகையில் குழாய் பதிப்பதை கட்டாயமாக்க வேண்டும். கர்நாடக இயற்கையாளர்களின் பெருமுயற்சியாலும் ராஜ்குமார் போன்ற தன்னார்வலர்களாலும் முதுமலை, பந்திபூர் காட்டுப் பகுதியில் இரவு நேர வாகனப் போக்குவரத்து முற்றாக நிறுத்தப்பட்டுள்ளது. இதே போன்ற முன்னெடுப்புகளை தமிழகத்திலும் மேற்கொள்ள வேண்டும். சரணாலயங்கள் மட்டுமின்றி அனைத்து காட்டுப் பகுதிகளிலும், இரவு நேர வாகன போக்குவரத்தை முற்றாக தடை செய்தால்தான எஞ்சி இருக்கும் காட்டுயிர்களாவது தப்பிப் பிழைக்கும்.
உலகில் தோன்றிய ஒவ்வொரு உயிருக்கும் வாழ்வதற்கான உரிமை இருக்கிறது. மற்ற உயிர்கள் வாழ்வதற்கான உரிமையைப் பறிக்க நமக்கு அதிகாரம் கிடையாது. அதையும் மீறி காட்டுயிர்களை இப்படி கொடூரமாகக் கொல்வது, நமக்கு கூடுதலாக இருப்பதாகக் கூறிக்கொள்ளும் ஆறாவது அறிவைப் பற்றி கேள்வியை எழுப்புகிறது.
- சு.பாரதிதாசன்
(பூவுலகு ஜூலை 2011 இதழில் வெளியானது)