காலநிலை மாற்றமும் கக்காணியின் கடுங்காப்பியும்

காலநிலை பயணக் கதைகள் – 01

கடல்மட்டத்திலிருந்து 6,600 அடி உயரத்தில் அமைந்திருக்கும் கக்காணி (Kakani heights) என்றழைக்கபடும் ஒரு மலை கிராமத்தில்தான் நான் என் வாழ்நாளின் ஆகச்சிறந்த காபியைக் குடித்தேன். பால் சேர்க்காத கடுங்காப்பி அது. சர்க்கரைக்குப் பதிலாக வெல்லம் போட்டிருப்பார்கள். பார்க்க நம்மூர் திரிகடுகம் காப்பிபோல இருக்கும். ஆனால், காப்பிக்கொட்டைகளுடன் அப்பகுதியை சேர்ந்த வெவ்வேறு மூலிகைகள், மிளகு, கிராம்பு, லவங்கப்பட்டை போன்றவை சேர்த்திருக்கும் காரணத்தால் மிகவும் சுவையாக இருக்கும். நாங்கள் அந்த ஊருக்குச் செல்லும்போதெல்லாம் இந்தக் கடுங்காப்பிதான் எங்களை அன்புடன் வரவேற்கும்.

அங்கு உணவகங்களோ, தேநீர்க் கடைகளோ இருக்காது. நீங்கள் வருகிறீர்கள் என்பதைப் பார்த்தவுடன் ஏதாவது ஒரு வீட்டில் தேநீர்/கடுங்காப்பி அருந்த அழைப்பார்கள்.  சில சமயம் மக்களின் அன்பு மிகுதியால் 4-5 வீட்டில் காபி குடிக்க வேண்டியதிருக்கும். அவர்களின் அன்பும் காபியும் எவ்வளவு பருகினாலும் திகட்டியதே இல்லை.

கக்காணி கிராமம் காத்மண்டுவிலிருந்து 22 கி.மீ. தூரத்தில் நுவாகோட் மாவட்டத்தில் அமைந்துள்ளது. நுவாகோட் பகுதியில் ஒரு பிரம்மாண்ட கோட்டை இருந்ததாகவும் அதனைச் சுற்றி பெல்கோட், பைரப்கோட், மலகோட், காலிகோட், துவன்கோட், ப்யாஸ்கோட், சிமல்கோட், சல்யன்கோட் என எட்டு மலைகள் இருந்ததாகவும், அதனால் அதை நவகோட்டை என்று அழைக்கப்பட்டதாகவும்  பின்னாட்களில் அது நுவாகோட் என்று மருவியதாகவும் சொல்கிறார்கள்.

கக்காணியிலிருந்து பார்த்தால் அதைச் சுற்றியுள்ள பிரம்மாண்ட லாங்டாங் (7227m), கணேஷ் (7422m), மனசுலு (8163m), அன்னபூரணா (8091m), டோர்ஜி லக்பா (6966m) ஆகிய பனிபடர்ந்த மலைகளின் மத்தியில் இன்றளவும் யாரும் எளிதில் ஊடுருவி வந்துவிட முடியாத ஒரு கோட்டையாகவே கக்காணி தெரியும்.

கக்காணியில் ஸ்ட்ராபெர்ரி (Strawberry) விளைவிக்கப்படுகிறது.  அங்கு 1300 ஹெக்டர் பரப்பளவில் அன்கிமி (Ankime), ஐபெர்ரி (Eyeberry) என்ற இரண்டு வகையான ஸ்ட்ராபெரிக்கள் விளைவிக்கப்படுகின்றன. சுமார் 35 ஆண்டுகளுக்கு முன்னால் இந்த ஸ்ட்ராபெர்ரிகள் பணப்பயிர்களாக கக்காணிக்கு அறிமுகப்படுத்தப்பட்டன, கக்காணியின் தட்ப வெட்பமும், 6600அடி உயரமும் ஸ்ட்ராபெர்ரி விளைய கச்சிதமாக பொருந்துவதால். நேப்பாலின் சிறந்த ஸ்ட்ராபெர்ரிகள் இங்குதான் விளைகின்றன. இங்கு விளையும் ஸ்ட்ராபெரிகளில் இனிப்புச்சுவை அதிகமென்பதால் சந்தையில் இதற்கு வரவேற்பு அதிகம். அதேசமயம், இந்த கக்காணி கிராமத்தில் இருந்துதான் மலிவான விலையில் ஸ்ட்ராபெர்ரிகள் கொள்முதல் செய்யப்பட்டு் பின் இரண்டு, மூன்று இடைத்தரகர்கள் கைமாறி சந்தையில் நல்ல விலைக்கு விற்கப்படுகின்றன.

விவசாயிகளிடமிருந்து கிலோ ரூ. 220-230வரை கொள்முதல் செய்யப்படும் ஸ்ட்ராபெரிகள் சந்தையில் ரூ. 350-370வரை விற்கப்படுகின்றன. விவசாயிகளுக்கு உரிய பணம் கொடுக்கப்படவில்லை என்றாலும் ஒரு ஏக்கரில் கரும்பு பயிரிடுவதைக் காட்டிலும் 4 மடங்கும், கோதுமை பயிரிடுவதைக் காட்டிலும் 9 மடங்கும் லாபம் ஸ்ட்ராபெர்ரியில் கிடைப்பதால் அப்பகுதி விவசாயிகள் பெரும்பான்மையானோர் ஸ்ட்ராபெர்ரிக்கு மாறியிருந்தார்கள்.

ஜாம், ஜெல்லி, ஜூஸ் என மதிப்புக்கூட்டப்பட்டு கக்காணியின் ஸ்ட்ராபெர்ரிகள் உலகமெங்கும் ஏற்ற்றுமதி செய்யப்படுகின்றன. ஏன் நீங்களும் நானும்கூட கக்காணியின் ஸ்ட்ராபெரியில் செய்த ஜாம்மையோ ஜூஸ்சையோ குடித்திருக்கக்கூடும்.

சில ஆண்டுக்கு முன்புவரை ஆண்டொன்றுக்கு 400டன் எடைகொண்ட, சுமார் 6 கோடி ருபாய் மதிப்பிலான ஸ்டராபெர்ரிகள் கக்காணியில் விளைந்தன.

ஆனால், 2018ம் ஆண்டு வாக்கில் காலநிலை மாற்றத்தால், அப்பகுதி தட்பவெட்பம் மாறி இதற்குமுன் கிடைத்த அளவில் பாதி ஸ்ட்ராபெரிகள்கூட இப்பொழுது கிடைப்பதில்லை என்பது அப்பகுதி விவசாயிகளின் குமுறலாக உள்ளது. ஸ்ட்ராபெரிகள் குறிப்பாக ஏப்ரல் தொடங்கி ஆகஸ்ட்வரை விளையக் கூடியவை. ஸ்ட்ராபெரிகள் விளைய வெப்பநிலையானது 4°C முதல் 24°Cவரை இருத்தல் அவசியம். வெப்பநிலை கண்டிப்பாக 25°Cக்கு மேல் செல்லவே கூடாது. ஆனால், இப்போது 25°C, 26°C என்பது கக்காணியின் சராசரி வெப்பநிலையாகப் பதிவாகி வருகிறது. பொதுவாகவே காலநிலை மாற்றத்தின் விளைவாக உலகத்தின் வெப்பநிலை உயர்வை காட்டிலும் நேபாலின் வெப்பநிலை சற்று வேகமாகவே உயர்ந்து வருகிறது. அதாவது, ஒவ்வொரு பத்து ஆண்டிற்கும் 0.18°C அளவிற்கு உலக வெப்பநிலை உயர்கிறது என்றால் நேபாலில் 0.56°Cஆக உயர்கிறது (1)(2).

இனி பூமியில் நிகழப்போகும் ஒவ்வொரு 0.1°C வெப்பநிலை உயர்வும் நம்மைக் கடுமையாக பாதிக்கும் என்று IPCC கொடுத்த எச்சரிக்கையினை நான் கண்கூடாகப் பார்த்தது கக்காணியில்தான். 2013ம் ஆண்டுக்கு முன்பு கக்காணியில் விளைந்த ஸ்ட்ராபெரிக்கள் 2018ல் இல்லை. 2018இல் கிடைத்த கொள்முதல் அளவு 2023 இல் கிடைக்கப்போவதில்லை. இந்தநிலை கக்காணிக்கு மட்டுமல்ல, கக்காணிக்கு ஸ்ட்ராபெர்ரி என்றால் தமிழ்நாட்டிற்கு நெல் விவசாயம், கக்காணிக்கு 1.1°Cல் நடந்தது நம் காவிரி டெல்டாவிற்கு 1.5°Cல் நடக்கப்போகிறது.

ஆம் 1.5°C அளவிற்கு வெப்பநிலை உயர்ந்தால் அரிசி விளையாது, 2°C ல் தானியங்கள் விளையாது, 3°C ல் கடலில் மீன்கள் இருக்காது. இதை சொல்வது நானோ, பூவுலகின் நண்பர்களோ அல்ல. இதை சொல்வது 160 நாடுகளைச் சார்ந்த அறிவியலாளர்கள் வெளியிட்டிருக்கும் IPCC ஆய்வறிக்கை (3).

இத்தனை ஆண்டுகளாக உலக நாடுகளும் அறிவியலாளர்களும் பாடுபட்டது 2100ம் ஆண்டிற்குள் புவி வெப்பநிலை உயர்வை 1.5°C க்குள் கட்டுப்படுத்த வேண்டும் என்றுதான். 2015ல் கையெழுத்தான பாரிஸ் ஒப்பந்தம்கூட அதைத்தான் வலியுறுத்தியது. ஆனால், இப்போதே நாம் கார்பன் உமிழ்வை முற்றிலும் நிறுத்தினால்கூட புவியின் சராசரி வெப்பநிலை 1.5°C எட்டுவதை நம்மால் தடுக்க முடியாது என்கிறார்கள் அறிவியலாளர்கள்.

இன்னும் எட்டு ஆண்டுகளில் உலகின் சராசரி வெப்பநிலை 1.5°C-யை எட்டிவிடும் வாய்ப்பு 48% இருப்பதாக 2022ல் வெளியான லான்செட் ஆய்வறிக்கை (The 2022 Global Report of the Lancet Countdown) தெரிவிக்கிறது (4). இதை °காலநிலை அவசரம்° என்று சொல்லாமல் வேறு எப்படிச் சொல்வது.

1981-2010 காலத்தை ஒப்பிடும்போது, 2021ம் ஆண்டில் பயிர்களின் பருவக்காலம் குறைந்துள்ளது, குறிப்பாக சோளத்திற்கான பருவகாலம் 9.3 நாட்களும், நெற்பயிருக்கு 1.7 நாட்களும், கோதுமை குறைந்துள்ளது. 2020ம் ஆண்டு வெப்பநிலை உயர்வால் மட்டும் 9.8 கோடி மக்கள் உணவுப்பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்கிறது லான்செட் ஆய்வறிக்கை (4).

கக்காணியில் ஸ்ட்ராபெரி விவசாயத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகளில்  முக்கால்வாசிபேர் 1 ஏக்கருக்கு குறைவாக வைத்திருக்கும் சிறு குறு விவசாயிகள் என்பது குறிப்பிடத்தக்கது. இதில், பெரும்பான்மையானோர் 100 கிலோ சாகுபடி செய்யும் கால் ஏக்கர் விவசாயிகள். இப்பொழுது இரண்டு மூன்று முறை நஷ்டமடைந்த சில விவசாயிகள், விவசாயத்தை விட்டுவிட்டு திரவுட் (Trout) மீன் வளர்ப்பு போன்ற வேறு தொழிலுக்கு மாறி வருகிறார்கள். திரவுட் மீனை பற்றி நான் இங்கு சொல்லியாக வேண்டும், கபாலி படத்தில் வில்லன் சொல்லுவது போல் த்ரவுட் மீன் பொண்ண டேஸ்ட். உலகிலேயே சுவையான மீனாக கருதப்படும் திரவுட் மீன் இயற்கையாக இமயமலை நதிகளில் கிடைக்கக்கூடியவை. இமயமலை உருகி அதிலிருந்து பெருக்கெடுத்து ஓடும் ஆறு சீனா, திபெத் வழியாக நேபாலுக்குள் வருகிறது. கூடவே அதனுடன் குளிர்ந்த நீரில் வாழும் இந்த திரவுட் மீனும் வரும். இமயமலையின் குளிர்ந்த நீரில் வாழ்வதாலோ என்னமோ இந்த திரவுட் மீனுக்கு அவ்வளவு ருசி. இயற்கையாக கிடைக்கும் இந்த திரவுட் மீனை சிமெண்ட் தொட்டியில் வைத்து வளர்த்து, விற்கும் தொழிலிற்கு இப்பொழுது நிறைய வசதிபடைத்த விவசாயிகள் மாறியுள்ளனர்.

ஆனால், கக்காணியின் வசதி இல்லாத சிறு குறு விவசாயிகள் பலர் தங்களின் வாழ்க்கை ஓட்டத்திற்காக ஊரை விட்டு வெளியேறி நகரங்களில் கிடைக்கும் கட்டிட வேலையையும் ,ஏதோ ஒரு தினக்கூலி வேலையையும் செய்துகொண்டு காலநிலை அகதிகளாக வாழ்கிறார்கள். ஆம் ”காலநிலை அகதிகள்’’.

காலநிலை மாற்றத்தின் நேரடி மற்றும் மறைமுக பாதிப்புகளினால் 2050ம் ஆண்டிற்குள் வேலையில்லாமல், வாழ்வாதாரம் முடங்கி,  உண்ண உணவின்றி, இருக்க இடமில்லாமல் உலகெங்கும் 120 கோடி மக்கள் காலநிலை அகதிகளாக மாறப்போவதாக IEP (Institute for Economics and Peace)  ஆய்வறிக்கைத் தெரிவிக்கிறது (5).

அந்த 120 கோடி பேரில் சில நூறு பேரை நான் கக்காணியில் பார்த்தேன். கக்காணியில் வீட்டுக்கு ஒருவர் காலநிலை அகதிகளாக நகரத்துக்கும் ஏன் சிலர் இந்தியாவிற்கும் இடம்பெயர்ந்திருந்தார்கள். நேப்பாளின் அன்னபூர்ணா மலைப்பகுதியில் உள்ள இன்னும் சில கிராமங்களில் மொத்த கிராமமுமே இடம்பெயர்ந்த கதைகள் எல்லாம் நண்பர்கள் சொல்லி கேட்டிருக்கிறேன்.   இப்போதெல்லாம் காலநிலை அகதிகளைப் பற்றி ஏதாவது அறிக்கையில் படிக்கும் போதெல்லாம் கக்காணி மக்களின் அன்பு முகங்கள்தான் கண்முன் வந்துபோகிறது. இன்று வெப்பநிலை உயர்வால் கக்காணி மலைவாழ் மக்களுக்கு நடந்தது சில ஆண்டுகளில் வறட்சியால் தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு நடக்கும், வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி சொந்த ஊரில் இருந்து கூட்டம் கூட்டமாக இடம்பெயரும் நேப்பாளத்து மக்களை பார்க்கும் போது அடுத்த சில பத்தாண்டுகளில் கழித்து கடல் நீர் மட்ட உயர்வால் தங்களின் இடங்களை விட்டு கடலை விட்டு காலநிலை அகதிகளாக வெளியேற போகும் தமிழ்நாட்டு மீனவர்களின் எதிர்காலத்தை நினைத்துப்பார்கிறேன்.

அப்படியென்றால் இவர்கள் நிச்சியம் காலநிலை அகதிகளாகதான் போகிறார்களா? இதைத் தடுக்க முடியாதா? என்று நீங்கள் கேட்கலாம்,

ஆம், காலநிலை மாற்றத்தை தடுப்பது உலக தலைவர்களிடம்தான் உள்ளது. காலநிலை மாற்றத்திற்கு ஏற்றவாறு நம்மைத் தகவமைத்துக் கொள்வது வேண்டுமானால் உள்ளூர் அளவில் சாத்தியம். அப்படி ஒரு தகவைமைப்புத் திட்டத்தை நடைமுறைப்படுத்ததான் நான் கக்காணிக்கு அனுப்பப்பட்டேன்.

க்ரீன் ஹவுஸ் தொழில்நுட்பம் கொண்டு (Greenhouse / polyhouse) கூடாரங்கள் அமைத்து அப்பகுதி ஸ்ட்ராபெர்ரி விவசாயிகளை மாறிவரும் காலநிலையை தகவைமைத்துகொள்ளும் விவசாய (Climate smart agriculture) முறைக்குப் பழக்கப்படுத்துவது நான் பணிபுரிந்த நிறுவனத்தின் நோக்கமாகும்.

ஏற்கெனவே நடைமுறைப்படுத்தப்பட்ட கூடாரங்களின் தரத்தின் குறைபாடுகளைக் கண்டறிந்து மேம்படுத்தவும், அப்பகுதி தட்பவெட்பம், மண் மற்றும் தண்ணீரின் தரம் ஆகியவற்றை ஆய்வு செய்யவும், கூடுதலாக 100 விவசாயிகளைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்குப் பசுமைக் கூடாரங்கள் வழங்கவும்தான் நான் கக்காணிக்கு அனுப்பப்பட்டிருந்தேன்.

நேபாலத்து கிராமத்து மக்கள் மிகவும் பாசக்காரர்கள். நாங்கள் அவர்களுக்கு ஏதோ நல்லது செய்ய வந்திருக்கிறோம் என்பதற்காக அல்ல; பொதுவாகவே யார் வந்தாலும் அவர்கள் இப்படித்தான் உபசரிப்பார்கள்.

உலகில் முதலளித்துவத்தின் தாக்கத்தில் சிக்காத ஒவ்வொரு பகுதியும் அப்படிதான், போட்டி, பொறமை இல்லாத அன்பால் நிறைந்திருக்கும். ஒவ்வொருமுறை கக்காணிக்கு போகும் வழியில் எப்போதாவது சோர்வடைந்து டீ/காபி குடிக்கனும்போல இருந்தால் அருகில் உள்ள வீடுகளின் கதவைத்தான் நாங்கள் தட்ட  வேண்டும்.  எங்களை அதற்கு முன் அவர்கள் பார்த்திருக்ககூட மாட்டார்கள் , என் நிறம் வேறு அவர்களின் நிறம் வேறு, நான் பேசும் மொழி அவர்களுக்கு புரியாது, அவர்கள் பேசும் மொழி எனக்கு புரியாது ஆனால் புன்னகையுடன் அவ்வளவு அன்பாக உபசரிப்பார்கள். ஆம். அன்பை புரிந்துகொள்ள மொழிகள் எதற்கு?

காபி குடித்துவிட்டு நீங்கள் பணம் கொடுத்தாலும் ஒருவரும் உங்களிடம் இருந்து பணம் வாங்க மாட்டார்கள். படத்திலிருக்கும் இந்தப் பாட்டி தயாரிக்கும் கடுங்காப்பிதான் எனக்கு மிகவும் பிடித்தமானது.  பல் நடுங்கும் குளிரில் சுடச்சுட பாட்டி கொடுக்கும் மூலிகை கடுங்காப்பி அவ்வளவு இதமாக இருக்கும்.

இந்த இந்தப் பாட்டியும் ஒரு ஸ்ட்ராபெரி  விவசாயிதான், குடும்பத் தொழிலாக செய்துவந்த விவசாயத்தில் முன்பைப்போல விளைச்சல் இல்லை என்பதால் விவசாயத்தை கைவிட்டுவிட்டு பிள்ளைகளை காத்மண்டுக்கு வேலைக்கு அனுப்பிவிட்டு. வீட்டில் தனிமையில் வசித்து வருகிறார் இந்த 72 வயது கடுங்காப்பிப் பாட்டி. காலநிலை மாற்றம் எளிய மக்களின் வாழ்க்கையை எப்படிப் புரட்டிப்போடும் என்பதற்கு காலநிலை அகதிகளாக காத்மண்டுவுக்கு இடம்பெயர்ந்திருக்கும் இந்தக் குடும்பம் ஒரு உதாரணம்.

யாருக்குத் தெரியும்? தன் மகனைப் பார்க்கமுடியவில்லையே என்ற ஏக்கத்தில்கூட பாட்டி எங்களுக்குக் கடுங்காப்பி போட்டுக் கொடுத்திருக்கலாம். இடம்பெயர்வு வெறும் பொருளாதாரம் தொடர்புடைய பிரச்சனை மட்டுமில்லை , பிரிவும் தனிமையும், மனரீதியாகப் பெரிய தாக்கத்தையும், அழுத்தத்தையும் தரக்கூடியது.

100 விவசாயிகளில் ஒருவராக பாட்டியையும் தேர்வு செய்தோம். ஒவ்வொரு விவசாயிக்கும் தலா 1லட்சம் மதிப்புள்ள பசுமைக்குடில்  இலவசமாக கொடுக்கப்பட்டது. அதில், சொட்டுநீர்ப்பாசன முறையில் ஸ்ட்ராபெரி விவசாயம் செய்வதற்கான பயிற்சிகளும் வழங்கப்பட்டது. 2020 ,2021ல் பசுமைக்குடில்களின் உதவியுடன் நல்ல விளைச்சல் என்று அப்பகுதி நண்பர்கள் மூலம் கேள்விப்பட்டு மகிழ்ச்சியடைந்தேன்..

ஆனால், இந்த மகிழ்ச்சி தற்காலிகமானதுதான் என்பது பாவம் அம்மக்களுக்குத் தெரியாது,  இந்த பசுமைக்குடில் 0.5°C , 1°C வெப்ப உயர்வை கட்டுப்படுத்தத்தான் உதவும். இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் புவியின் சராசரி வெப்பநிலை 4.4°C அளவுக்குக்கூட எட்டக்கூடும் என IPPC ஆய்வறிக்கை எச்சரிகின்றது (6).

காலநிலை மாற்றத்தைப் பற்றிய ஒவ்வோரு அறிக்கையினைப் படிக்கும் போதும்,  வெப்பநிலை உயர்வு , காலநிலை அகதிகள் தொடர்பாக ஒவ்வொரு தரவுகளைப் பார்க்கையிலும் பாட்டி கொடுத்த கடுங்காப்பி நெஞ்சைச் சுடுகின்றது.

எத்தனையோ ஊர்களுக்கு நான் பயணித்திருக்கிறேன். ஆனால், கக்காணி மட்டுமே சொந்த ஊர், சொந்த மக்கள் போன்ற ஒரு அனுபவத்தைத் தந்தது.  அந்தப் பாட்டியிடம் கடுங்காப்பி குடிப்பதற்காகவாவது இன்னொரு முறை கக்காணிக்குப் போகனும்.

  • பிரபாகரன் வீரஅரசு

References:

  1. https://reliefweb.int/report/nepal/nepal-average-annual-temp-rose-0056-degree-celsius-past-4-decades
  2. https://www.climate.gov/news-features/understanding-climate/climate-change-global-temperature#:~:text=Earth’s%20temperature%20has%20risen%20by,0.18%C2%B0%20C)%20per%20decade.
  3. https://www.ipcc.ch/srccl/chapter/chapter-5/
  4. ‘The 2022 Global Report of the Lancet Countdown’- https://www.lancetcountdown.org/2022-report/
  5. https://www.economicsandpeace.org/wp-content/uploads/2020/09/Ecological-Threat-Register-Press-Release-27.08-FINAL.pdf
  6. https://www.wri.org/insights/ipcc-climate-report#:~:text=Under%20a%20high%2Demissions%20scenario,more%20dangerous%20and%20costly%20consequences.
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments