காடழிப்பை அழிப்பதை நிறுத்தினால் கொள்ளை நோய்களைத் தடுக்கலாம்

சார்ஸ் (SARS), எபோலா, இப்போது SARS-CoV-2: இந்த மூன்று தீவிரத் தொற்றுநோய் வைரஸ்களுமே 2002ஆம் ஆண்டிலிருந்து உலகெங்கும் பீதியைக் கிளப்பியுள்ளன – இந்த மூன்றுமே அடர்ந்த வெப்பமண்டலக் காடுகளில் வாழும் காட்டு விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்குத் தாவியவை.

 

மனிதர்களைத் தொற்றுகின்ற வளர்ந்துவரும் நோய்க்கிருமிகளில் நான்கிலொரு பங்கு, விலங்குகளிடமிருந்து தாவியவை. அந்த விலங்குகளில் பலவும் உயிர்எரிபொருள் (biofuel) செடிகள் உள்ளிட்ட பயிர்களுக்காகவும் சுரங்கம் தோண்டுதல், வீடுகள் கட்டுதல் ஆகியவற்றுக்காகவும் நிலத்தை ஒதுக்க வெட்டிக்கொண்டும் எரித்துக்கொண்டும் இருக்கும் காட்டு வாழ்விடங்களில் இருப்பவை. நாம் எந்த அளவுக்குக் காடுகளை நிலமாக ஆக்குகிறோமோ, அந்த அளவுக்கு நாம் நம்மைக் கொல்வதற்கு மிகப் பொருத்தமான நுண்ணுயிர்களைச் சுமக்கும் கானுயிர்களை எதிர்கொள்வோம் – அதே போல நாம் எந்த அளவுக்கு அந்த விலங்குகளைச் சிறிதாகிவிட்ட இடங்களுக்குள் தள்ளுகிறோமோ அந்த அளவுக்கு அவை தமக்குள் நுண்ணுயிர்களைப் பரிமாறிக்கொண்டு புதிய உயிர்க்குழுக்கள் (strains) உருவாகும் வாய்ப்பை அதிகரிக்கின்றன. காடுகளை அழிப்பது பல்லுயிரியத்தையும் (biodiversity) குறைக்கிறது; அப்போது உயிர்ப்பிழைக்கும் உயிரினங்கள் மனிதர்களுக்கு மாற்றத்தக்க நோய்களைத் தாங்கியிருக்க அதிக வாய்ப்புள்ளது. இந்தக் காரணிகள் எல்லாமே விலங்கு நோய்ப்பரப்பிகள் மனிதர்களுக்கு இன்னும் பரவத்தான் வழிவகுக்கும்.

 

காடழிப்பை நிறுத்தினால் அது நாம் புதிய பேரழிவுகளுக்கு இலக்காவதைக் குறைப்பது மட்டுமல்ல, மழைக் காடுகளில் உள்ள வாழ்விடங்களிலிருந்து வந்திருக்கும் ஏராளமான பிற கொடூரமான நோய்களின் பரவலையும் குறைக்கும். இந்தக் நோய்களில் ஜிகா (Zika), நிபா (Nipah), மலேரியா, காலரா, ஹெச்.ஐ.வி. ஆகியவையும் அடங்கும். காடழிப்பு 10 சதவீதம் அதிகரித்தாலே மலேரியா நேர்வுகள் (cases) 3.3 சதவீதம் அதிகரிக்கும் என்று 2019இல் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டது. அதாவது உலகெங்கும் 74 லட்சம் மலேரியா நோயாளிகள் இருப்பார்கள். ஆனால் பல ஆண்டுகளாக உலகம் முழுவதும் எதிர்ப்புக் கூச்சல் ஒலிப்பதை மீறிக் காடழிப்பு இப்போதும் தீவிரமாக நடந்துவருகிறது. 2016இல் தொடங்கி ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 2.8 கோடி ஹெக்டேர் அளவுக்குக் காடுகள் அழிக்கப்பட்டுள்ளன; இது குறைவதற்கான அறிகுறியும் இல்லை.

 

அழிவைத் தடுக்க சமூகங்கள் எத்தனையோ நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும். இறைச்சி சாப்பிடுவதைக் குறைப்பது பயிர்களுக்கும் மேய்ச்சல் நிலங்களுக்குமான தேவையைக் குறைக்கும். இறைச்சியைக் குறைப்பது நம் உடல்நலத்தை மேம்படுத்தும் என்று மருத்துவர்களும் சொல்கிறார்கள். பதப்படுத்தப்பட்ட உணவுகள் உண்பதைக் குறைப்பது பனை எண்ணெய்க்கான தேவையைக் குறைக்கும். பனை எண்ணெய் உயிர்எரிபொருட்களுக்கான முக்கியக் கச்சாப் பொருளும்கூட. இதில் பெருமளவு வெப்பமண்டல மழைக் காடுகளை அழித்து உருவாக்கப்பட்ட நிலங்களில் வளர்க்கப்பட்டது. நாடுகள் மக்கள் தொகை வளர்ச்சியைக் குறைத்தால் நிலத்திற்கான தேவையும் குறையும் – இது பெண்களுக்கு மேலும் நல்ல கல்வி, ஆண்களுக்குச் சமமான சமூக அந்தஸ்து, எளிதில் கிடைக்கும் மலிவுவிலைக் கருத்தடை மருந்துகள் ஆகியவை அளிக்கப்பட்டால்தான் நடக்கும்.

 

தலா ஒரு ஹெக்டேருக்கு மேலும் அதிக உணவை உற்பத்தி செய்வதன் மூலம், நிலத்திற்காக மேலும் காடுகளை அழிக்கத் தேவையில்லாமலே சப்ளையை அதிகரிக்க முடியும். வறட்சியை நன்றாக எதிர்த்து வளரும் பயிர்களை உருவாக்குவது உதவும் – குறிப்பாகக் காலநிலை மாற்றம் நீண்ட, தீவிரமான வறட்சிகளைக் கொண்டுவருவதால். ஆப்பிரிக்கா மற்றும் பிற இடங்களில் இருக்கும் வறண்ட பிரதேசங்களில், வயல்களிடையே மரங்களை நடுவது போன்ற வேளாண் வனவியல் (agroforestry) உத்திகளால் பயிர் விளைச்சலை அதிகரிக்க முடியும். உணவுக் கழிவைக் குறைப்பதும் உணவுப் பயிர்களை மேலும் அதிகமாக வளர்க்க வேண்டும் என்ற அழுத்தத்தைப் பெரிய அளவில் குறைக்கக்கூடும். தயாரிக்கப்படும் மொத்த உணவு அளவில் 30-40 சதவீதம் வீணாகிறது.

 

நாம் இந்தத் தீர்வுகளை நடைமுறைப்படுத்தும்போது புதிய நோய்க்கிருமித் தாக்குதல்களையும் முன்கூட்டிக் கண்டுபிடிக்க முடியும். கொள்ளைநோய் நிபுணர்கள் காட்டு வாழ்விடங்களுக்குள் கவனமாகப் புகுந்து, கொரோனாவைரஸ்களைச் சுமப்பதாக அறியப்படும் பாலூட்டிகளை – வவ்வால்கள், எலி வகை விலங்குகள், பேட்ஜர்கள், புனுகுப்பூனைகள் (civets), எறும்புத்தின்னிகள் (pangolins), குரங்குகள் ஆகியவற்றை – பரிசோதனை செய்து இந்தக் கிருமிகள் நடமாடும் விதத்தைப் பதிவுசெய்ய விரும்புகிறார்கள். அதற்குப் பிறகு பொது சுகாதார அதிகாரிகள் அருகிலுள்ள மனிதர்களைப் பரிசோதிக்கலாம். இருந்தாலும், இந்தக் கண்காணிப்பு பலன் அளிப்பதற்கு இது பரவலாக நடைபெற வேண்டும், இதற்கு நிறைய நிதி உதவி கிடைக்க வேண்டும். செப்டம்பர் 2019இல், கொரோனாவைரஸ் பெருந்தொற்று நோய் தொடங்குவதற்குச் சில மாதங்களுக்கு முன்பு, அமெரிக்க சர்வதேச மேம்பாட்டு முகமை (U.S. Agency for International Development (USAID)) PREDICT என்ற திட்டத்திற்கு நிதி அளிப்பதை நிறுத்துவதாக அறிவித்தது. ப்ரெடிக்ட் என்பது அச்சுறுத்தலான நுண்ணுயிர்களைத் தேடிக் கண்டுபிடிக்கும் ஒரு பத்தாண்டுக் கால முயற்சியாகும். இதில் 1,100க்கு மேற்பட்ட தனித்துவமான வைரஸ்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. புதிய கண்காணிப்புத் திட்டம் ஒன்றைத் தொடங்கப்போவதாக USAID அறிவித்துள்ளது. இந்த முறை தேடலை இன்னும் பரவலாகவும் தீவிரமாகவும் நடத்துவதற்கு போதுமான நிதியளிக்கும்படி நாங்கள் USAIDஐ வலியுறுத்துகிறோம்.

 

இதற்கிடையில் அரசுகள் ‘ஈரச் சந்தைக’ளில் கானுயிர் விற்பனையைத் தடைசெய்ய வேண்டும். இந்தச் சந்தைகளில்தான் நோய்க்கிருமிகள் தொடர்ந்து மனிதர்களிடம் தாவியிருக்கின்றன. இச்சந்தைகள் பண்பாட்டு ரீதியாக முக்கியமானவையாக இருக்கலாம், ஆனால் இவற்றால் ஏற்படும் அபாயம் மிகப்பெரிது. தொற்றுகளை மூலை முடுக்குகளில் பரவச் செய்யக்கூடிய சட்டவிரோதக் கானுயிர் வர்த்தகத்தின் மீது அரசுகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன், ஆயிரக்கணக்கான விலங்குகளை ஒன்றாக அடைத்துவைக்கும் தொழிற்ப் பண்ணைகளையும் ஆராய வேண்டும் – இவைதான் அமெரிக்காவில் 10,000 பேருக்கு மேற்பட்டோரையும் உலகெங்கும் பெரும் எண்ணிக்கையிலும் கொன்றுகுவித்த 2009ஆம் ஆண்டு பன்றிக் காய்ச்சல் தாக்குதல் தோன்றிய இடங்கள்.

 

காடழிப்புக்கு முற்றுப்புள்ளி வைத்துப் பெருந்தொற்று நோய்களை விரட்டுவது ஐக்கிய நாடுகளின் 17 நிலைபெறு வளர்ச்சி இலக்குகளில் இந்த ஆறு இலக்குகளை நிறைவேற்றும்: நலமான வாழ்வுக்கு உத்தரவாதம், பட்டினி ஒழிப்பு, பாலின சமத்துவம், பொறுப்பான நுகர்வு மற்றும் தயாரிப்பு, நிலம்  நீடித்த மேலாண்மை செய்யப்படுதல், காலநிலை நடவடிக்கை (பாதிப்பு ஏற்படுத்தப்படாத வெப்பமண்டலக் காடுகள் கரியமில வாயுவை உள்வாங்குகின்றன, ஆனால் அவற்றை எரிப்பது சூழலுக்குள் இன்னும் அதிக CO2ஐச் செலுத்துகிறது.).

 

கொரோனாவைரஸ் பெருந்தொற்று நோய் ஒரு பேரழிவுதான். ஆனால் இயற்கை உலகை அளவுக்கு மீறிப் பயன்படுத்தாமல் இருப்பதன் மூலம் மனிதகுலம் அடையக்கூடிய பெரும் ஆதாயங்களில் அது நம் கவனத்தைச் செலுத்த முடியும். பெருந்தொற்று நோய்க்கான தீர்வுகள் நிலைபெறுதன்மைக்கான தீர்வுகளாகும்.

 

 

இந்தக் கட்டுரை Scientific American ஜூன் 2020 இதழில் “To Stop Pandemics, Stop Deforestation” என்ற தலைப்பில் வெளிவந்தது.

மொழிபெயர்ப்பு: நீலன்

 

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments