தடைப்படாத ஃபுல் மீல்ஸ்!
மகா.தமிழ்ப்பிரபாகரன்
ஒரு கிண்ணச் சோற்றுக்கு 100 ரூபாய் என்ன 500 ரூபாய் கூட தருமளவிற்குத் தயாராக இருக்கிறோம். சென்னை மட்டுமல்ல; பெருமளவிலான சிறு நகரங்களில் கூட சராசரியாக நான்கு பேர் கொண்ட குடும்பம் ஒரு வேளை சாப்பிட்டிற்கு 2000 ரூபாய் கொடுப்பது சர்வசாதாரணமான செலவு. அப்படிக் கொடுப்பது லைப்-ஸ்டைலின் ஓர் அங்கமாகவும் உருவாகிவிட்டது. நகர பொருளாதாரத்தின் வளர்ச்சியாகப் பேசப்படும் இந்த அம்சம், காவிரி நீர் கடைசியாக வந்து சேருமிடமான நாகப்பட்டினத்திலும் கூட உள்ளது. அப்படியான வளர்ச்சியைக் கண்டுள்ள நாகப்பட்டின நகரத்திலிருந்து குறிப்பிடத்தக்க தூரத்திலேயே உள்ள கிராமப் பகுதிகளில் தான் விவ சாயிகளின் மரணங்கள் தொடர்ச்சியாக நிகழ்ந்து வருகின்றன. இந்த மாவட்டத்தின் தலைஞாயிறு பேரூராட்சி பிரிஞ்சுமூலை கிராமத்தில் பி.சி.வி. பாலசுப்ரமணியன் என்றவரிடமிருந்து மூன்று ஏக்கர் நிலத்தைக் குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்தவர் முருகையன். 15 ஆண்டுகளுக்கு மேலாக விவசாயம் செய்து வந்தவர் கடந்த நவம்பர் 14,2016 அன்று தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். மனவளர்ச்சி குன்றிய 11 வயது மகன் ஹரிஹரன், 12ம் வகுப்பு படிக்கும் மகள் நித்தியாவுடன் தனித்து நிற்கிறார் அவரது மனைவி ராணி. அவரை சந்தித்த பொழுது, ‘எண்பதாயிரம் ரூபாய் கடன் வாங்கி மூணு ஏக்கர் நிலத்துக்கு கொடுத்து சாகுபடி பண்ணிட்டு இருந்தாரு. தண்ணி சரியா எதும் இல்ல, சாகுபடி சரியாயில்லன்னு இறக்கறத்துக்கு இருபது நாளுக்கு முன்னாடியிலிருந்தே டென்சனாவே பேசிட்டு இருந்தாரு. சரியா சாப் பிடறது கிடையாது, நிதானம் இல்லாம பேசிட்டு இருந்தாரு. எண்பதாயிரம் கொடுத்ததுக்கு பொண்ணுக்காவது நாலு அஞ்சு பவுன் நகையாவது எடுத்து வெச்சிருக்கலாம்னார். பழைய விலையில நகை வந்துச்சு. அது விட்டுட்டுப் போய் சாகுபடி பண்றதுக்கு நிலத்துல பணத்த போட்டிட்டு நின்னுட்டு இருக்கன். இந்தப் பணம் பொண்ணு கல்யாணத்துக்கு ஆகியிருக்கும். அதுக்கும் வழி இல்லாம போய்ட்டு… என்ன பன்றதுன்னு தெரியிலன்னு அவரு சாகுபடி பன்ற நிலத்துக்கு பக்கத்துல இருக்கிறவர்கிட்ட காலையில வரைக்கும் பேசிட்டு இருந்துட்டு தான் வந்திருக்காரு. ஒண்ணும் சரியில்ல, என்ன பண்றதுன்னு தெரியிலன்னு புலம்பிட்டே வீட்லையும் சரியா சாப்பிடாம இருந்தாரு. காலையில வீட்டுக்கு வந்துட்டு மறுபடியும் நிலத்துக்குப் போய்ட்டு வந்தாரு. மதியம் 1 மணிபோல மறுபடியும் வீட்டுக்கு வந்தவரு, என்ன வெத்தலைப்பாக்கு வாங்கிட்டு வர கடைக்கு அனுப்பிவிட்டாரு. பையன் மட்டும் தான் வீட்ல இருந்தான். நான் வந்தப்ப தூக்கு
உணவு உற்பத்தி செய்யும் விவசாயம் நலிந்த தொழிலாக மாறியுள்ள இதே இந்தியாவில் உணவு விற்கும் ரெஸ்டாரண்ட்களில் பலமடங்கு லாபம் கொழிக்கிறது. 2016 ஆம் ஆண்டில் 22,400 கோடி ரூபாய் வரியாக நாட்டிற்கு பகிர்ந்துள்ள இந்திய ரெஸ்டாரண்ட் தொழில் 58 லட்சம் பேருக்கு நேரடித் தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறுகிறது இந்திய உணவுச் சேவைகளின் அறிக்கை.
மாட்டிக் கிடந்தாரு. உடனே ஜி.எச்.க்கு கொண்டு போணம். அங்க இறந்திட்டாருன்னு சர்டிபிக்கேட் கொடுத்துட்டாங்க. ரெண்டு பிள்ளைங்கள வெச்சுக்கிட்டு என்ன பண்றதுன்னே தெரியில. முன்ன இருந்த ஆடு மாடுகளையும் வித்துட்டம், அதுவும் இப்ப இல்ல. ரெண்டு பேரும் இருந்தே சமாளிக்க முடியில. இப்ப நான் தனியா என்ன பன்றதுன்னு தெரியில. பையன்ன தனியா விட்டா சுவத்துல போய் முட்டிக்கிவான், கைய குத்துக்கிவான் இல்லன்னா ஓட ஆரம்பிச்சிருவான். அவன தனியா விட்டுட்டு எங்கயும் நான் போக முடியாது. எல்லாமே அவரு தான் பாத்துட்டு இருந்தாரு. இப்ப நான் என்ன பண்றதுன்னே தெரியில்ல’ எனச் சொல்லியவாறே தன்னைச் சுற்றி நடப்பதை அறியாத 11 வயது மகனை சாந்தப்படுத்திக் கொண்டிருந்தார் விவசாயி முருகையனின் மனைவி ராணி. முருகையனின் இறுதி ஊர்வலத்தில் நடந்து சென்றுகொண்டிருந்த பொழுது நெஞ் சைப் பிடித்துக்கொண்டே விழுந்த பி.சி.வி. பாலசுப்ரமணியனும் (நிலத்தைக் குத்தகைக்கு விட்டவர்) உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தார் பிரிஞ்சுமூலையில் ஜெராக்ஸ் கடை வைத்துள்ள அவருடைய பால்ய கால நண்பர். கடைக்குப் பின்னிருந்த ஆற்றைக் காட்டிய அவர், ‘ஊர் ஆறுலலாம் கடல் தண்ணி ஏறிடுச்சு. இத புத்தாறுன்னு சொல்வாங்க. வெண்ணாற்று (காவிரியின் கிளை ஆறு) தண்ணி இது வழியா தான் கடலில் கலக்குது. இந்த ஆறுக்குத் தெக்க ஒரு வாய்க்கால் இருக்கு, அதும் அப்படி தான் கடல் தண்ணி அஞ்சு கிலோ மீட்டர் உள்ள வந்துடுச்சி. வறட்சி காலத்துல தான் இப்படினா, சாகுபடி எடுத்தாலும் சீக்கிரம் நெல்லப் போட முடியல’ என அங்குள்ள நிலையைப் பகிர்ந்தார். அரசு அலுவலகங்கள் அருகிலேயே அமைந்துள்ள அவரின் ஜெராக்ஸ் கடையில் ஒரு நாளைக்கு நூறு ரூபாய் கிடைத்தாலே பெரிய காரியம் என்கிறார். ‘வெறும் 5 அல்லது 50 நகரங்கள் மற்றும் நிறுவனங்களின் வளர்ச்சியால் மட்டும் நாட்டில் வளர்ச்சி நிகழ்ந்து விடாது. மாறாக நாட்டின் நிலையான வளர்ச்சிக்கு கிராமங்களின் அடித்தளம் வலுப்பெற வேண்டும். எனவே கிராமங்களின் வளர்ச்சியை உறுதி செய்ய வரும் 2022 க்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பு செய்வோம்’ என கடந்த அம்பேத்கர் பிறந்த தினத்தின் போது உறுதி பூண்டார் இந்திய பிரதமர் மோடி. அடுத்ததாக கீழையூர் கிராமம். ஐந்து ஏக்கர் நிலத்தில் நெல் சாகுபடி செய்திருந்த ராஜ்குமார் நவம்பர் 28 ஆம் தேதி மாரடைப்பால் இறந்துள்ளார். கடன் வாங்கி நெல் விதைந்திருந்த தங்களது நிலையை பகிர்ந்த அவரது மனைவி ஜெயலட்சுமி, ‘கடன் வாங்கி நெல் விதைச்சிருந்தம். வயிலுக்குப் போய் பாத்துட்டு வரும் போதெல்லாம் பயிருலாம் கருகிட்டு இருக்கு, மழையும் இல்ல, தண்ணியும் இல்ல நான் என்னா பண்ணப் போறன்னு தவிச்சிட்டு அழுதுட்டே இருந்தாங்க’ என விசும்பினார். ‘பத்து நாளா அதையே நினைச்சு நினைச்சு தூங்காம எழும்பி எழும்பி உட்காந்திட்டே இருந்தாங்க. விவசாயமும் ஒண்ணும் இல்லாம போய்ச்சே கடன் வாங்கிவெச்சிட்டு நான் என்ன பண்ணுவன்னு புலம்பிட்டே இருந்தாங்க. அன்னைக்கு வயலுக்கு போய்ட்டு வந்திருந்தாங்க. பயிறு காப்பீட்டுத் திட்டம்னு இன்சுரன்ஸ்ல இருந்து வந்தாங்கன்னு சொன்னேன். எப்ப கட்ட சொன்னாங்கன்னு ஒரு வார்த்த தாங்க கேட்டாங்க. அப்படியே நெஞ்சுல கைய வெச்சுடாங்க. உடனே காரப் புடுச்சி திருத்துறைப் பூண்டிக்கு கொண்டு போனோம். கொண்டு போய் ஆஸ்பத்திரி வாசல்ல இருக்கனம்.இறந்துட்டாங்க’ என்றபோது ஜெயலட்சுமியின் வார்த்தைகளும் ததும்பின. இப்போதைய இவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் கடனும் நகையும் அடகில் இருக்கிறது. கடைசியாக 6 பவுன் தங்கத்தை அடகு வைத்து மீட்க முடியாமல் போனது போல விவசாயத்தில் மட்டும் சுமார் 40 பவுன் தங்க நகையை இழந்துள்ளது. இத்தனை காலம் செய்த செலவை சமாளித்த இந்த விவசாயக் குடும்பம் இம்முறை பயிரோடு மட்டுமல்ல ஓர் உயிரையும் இழந்துள்ளது.
அடுத்த மரணம் நவம்பர் 29, நவம்பர் 28. இறந்த விவசாயி ராஜ்குமாரின் நண்பர் மாரிமுத்து. அவரது குடும்பத்தைச் சந்தித்த பொழுது, ‘ராஜ்குமார், எங்க மாமனார் ரெண்டு பேரும் கூட்டாளிங்க. எங்க வயலும் அவங்க வயலும் பக்கத்துப் பக்கத்துல தான் இருக்குது. ரெண்டு பேரும் சேந்து தான் எப்பவும் வயலுக்குப் போவாங்க. அன்னைக்கும் அப்படித்தான் பாத்துட்டு வந்தாங்க. அன்னைக்கு பொழுதோட அவரு (ராஜ்குமார்) இறந்துட்டாரு. அவரு இறந்துட்டாருன்ற விசயத்த எங்க மாமனார்ட்ட இரவு சொல்லல. மறுநாள் காலைல டீ குடிக்கப் போயிட்டு அவரு இறந்துட்டத தெரிஞ்சு அங்க போய் பார்த்திருக் காங்க. வீட்டுக்கு வராம நேரா வயலுக்கு போய் திரும்பி வந்து அவருக்கு ஏற்பட்ட நிலைம தான் எனக்குமான்னு சொல்லிட்டே ஒரு சொம்பு தண்ணி கேட்டாங்க. தண்ணியக் குடிச் சவங்க அப்படியே விழுந்துட்டாங்க’ என்றார் மாரி முத்துவின் மருமகள். அவரது மகன் வேல்முருகன் கருகியும் வளராமலும் இருக்கும் தங்களது நெல் வயலினைக் காட்டினார். உடனிருந்த மற்றொரு விவசாயி ராஜாராமன், ‘என் மனைவி டீச்சருன்றதுனால நான் விவசாயத்துல சமாளிச்சிட்டு இருக்கன். ஒரு ஏக்கர் நெல் போடறதுக்கு 25 ஆயிரம் ரூபாய் செலவாகுது. வேற தொழில் இருந்தா அத நம்பி விவசாயத்துல இருக்கலாம். காவிரித் தண்ணி வரதும் கடந்த மூணு வருசமா குறைஞ்சு போச்சு. மூணு போகம் எடுத்த மண்ணுல ஒரு போகம் எடுக்கக்கூட தண்ணி இல்ல’ என தாங்கள் இன்று எதிர்கொண்டு வரும் சூழலை விளக்கினார். நாகப்பட்டினத்திலிருந்து வெளியேறும் போது தஞ்சாவூரிலிருந்து ஓர் அழைப்பு. ஒரத்தநாட்டில் கணேசன் என்ற விவசாயி மாரடைப்பால் இறந்தார் என்ற மறுமுனை செய்தியோடு அழைப்புத் துண்டிக்கப்பட்டது. உணவு உற்பத்தி செய்யும் விவசாயம் நலிந்த தொழிலாக மாறியுள்ள இதே இந்தியாவில் உணவு விற்கும் ரெஸ்டாரண்ட்களில் பலமடங்கு லாபம் கொழிக்கிறது. 2016 ஆம் ஆண்டில் 22,400 கோடி ரூபாய் வரியாக நாட்டிற்கு பகிர்ந்துள்ள இந்திய ரெஸ்டாரண்ட் தொழில் 58 லட்சம் பேருக்கு நேரடி தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தியுள்ளதாக கூறுகிறது இந்திய உணவு சேவைகளின் அறிக்கை. மொத்தமுள்ள 120 கோடிக்கு மேலான மக்கள் தொகையில் சரிபாதி நேரடியாக விவசாயத் தொழிலை சார்ந்திருந்தும் அது தற்கொலை சார்ந்த தொழிலாகவே உருவாகி விட்டது. மோடியின் பேச்சுகள் மான் கி பாத் அலைவரிசையோடு முடிந்துவிடக்கூடியதாகவே உள்ளது. நமக்கும் புல் மீல்ஸ் கடையிலிருந்து லிமிடெட் மீல்ஸ் பரிமாறும் ஏசி ஹோட்டல் வரை சோற்றுக்குத் தட்டுப்பாடு ஏற்படாததால் விவசாயிகளின் மரணங்கள் அந்நியப்பட்ட சம்பவங்களாகவே நடந்தும் கடந்தும் கொண்டிருக்கிறது. ஒட்டு மொத்தமாகவே சிறு, குறு விவசாயத்தை அளிப்பதற்கான இந்த ஏற்பாடு கேள்விகளின்றி சோற்றை வாங்கிக்கொள்ளும் நம்மையும் விவசாயிகளின் நிலைக்குத் தள்ளும்.