தண்டவாளத்தில் முடியும் பேருயிர்களின் பயணம்

யானையைப் பிடிக்காதவர்கள் என யாருமே இருக்கமாட்டார்கள். யானைகள் காடுகளை உருவாக்குவதில் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. யானைகள் எண்ணிக்கை பெருகினால் தான் காடுகள் வளரும். காடுகள் தான் மழைக்கும் ஆக்ஸிஜனுக்கும் மிக முக்கிய ஆதாரங்கள்.

ஆனால், இந்தியாவில் பல்வேறு காரணங்களால் யானைகளின் இறப்பு அதிகமாக நடக்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா முழுவதும் ரயில் மோதி 186 யானைகள் உயிரிழந்துள்ளன. அதிகபட்சமாக அசாமில் 62 யானைகள் உயிரிழந்துள்ளன. இந்தியாவில் சரக்கு மற்றும் மக்கள் போக்குவரத்திற்கு மிக முக்கிய உயிர்நாடியாக விளங்குவது ரயில்வே துறை ஆகும். இந்த ரயில் வழித்தடங்கள் ஒரு சில மாநிலங்களில் அடர்வனப் பகுதிகள் வழியாகவும் செல்கிறது. அசாம், மேற்குவங்கம், ஒரிசா,  உத்தரகாண்ட் மாநிலங்களில் அதிக யானைகள் ரயில் விபத்தில் சிக்குகின்றன.

தென்னகரயில்வேயை பொருத்த வரையில் செங்கோட்டை – கொல்லம், கோவைபாலக்காடு, சேலத்தில் இருந்து ஓசூர் வழியாக பெங்களூரு செல்லும் வழித்தடம் என இந்த மூன்று ரயில் வழித்தடங்களும் அடர்ந்த வனப்பகுதிகள் வழியாக செல்கின்றன. இதில் கோவை பாலக்காடு வழித்தடத்தில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு யானைகள் உயிரிழப்பது தொடர்ந்து நடைபெறுகிறது. யானைக்கு படிக்க தெரிந்திருந்தால் “நில், கவனி, செல்” என்னும் போர்டு வைத்து யானைக்கு புரியும் படி செய்து ரயில் மோதி உயிரிழப்பதைத் தடுக்கலாம். ஆனால் அதற்கு வாய்ப்பில்லை. படித்த மனிதர்களோ யானை போன்ற காட்டுயிர் வாழ்விடத்தில் ரயில்தடம் அமைத்தால் அவை எப்படி கடக்கும் என்று சிந்தித்ததே இல்லை பெரும்பாலான ரயில் யானை மோதல்கள் இரவில் தான் நடக்கின்றன.

 

வளைவுகள்:

ரயில் வளைவுகளில் விபத்து ஏற்படும் வாய்ப்புகள் மிக அதிகம். அடர் வனப்பகுதி என்பதால் வளைவுகளில் தூரத்தில் பார்வை தெரியாது. மேலும் இரவு நேரங்களில் ரயிலின் விளக்குகளுக்கு யானையின் கருப்புநிறம் அருகில் வந்த பின் தான் கண்டுபிடிக்க முடிகிறது.

உயரமானதண்டவாளம்:

தண்டவாளங்கள் 10 முதல் 15 அடி மண் நிரப்பி உயரங்களில் அமைக்கப்படும் போது தண்டவாளத்தின் இரு புறமும் யானைகள் ஒதுங்குவதற்கும் இடம்இல்லை. மேலும் யானைகள் இறங்கி செல்லும் வகையில் சரிவுகள் இல்லாததும் முக்கிய காரணங்களாக கண்டறியப்படுகிறது.

வேகம் மற்றும் அதிகப்படியான ரயில்கள்:

அதிகப்படியான ரயில்கள் குறிப்பிட்ட வழி தடங்களில் இயங்குவதாலும் மேலும் அதிவேகத்துடன் இயங்குவதாலும் யானைகள் ரயில் தண்டவாளத்தில் குறுக்கிடும் போது யானைகள் மீது மோதி உயிரிழக்கநேரிடுகிறது.

வாழிடங்கள் மாற்றம்:

கல்குவாரிகள், சிமெண்ட்தொழிற்சாலைகள், கட்டுமானங்கள் ஆகியவை வனப்பகுதிக்குள் நடைபெறும் போது யானைகள் தங்களுடைய இருப்பிடங்களை அடிக்கடி மாற்றும் சூழல் ஏற்படுகிறது. இதனால் ரயில் தண்டவாளங்களை யானைகள் அடிக்கடி கடக்கும் பகுதிகளும் இல்லாமல் திடீரென புதிய பகுதிகள் வழியாகவும் கடந்து செல்கின்றன. இதனாலும் ரயில் விபத்தில் யானைகள் சிக்கும் நிலை ஏற்படுகிறது.

விபத்துகள்:

1987 முதல் 2007 வரை 20 ஆண்டு காலகட்டத்தில் ரயில் மோதி 150 யானைகள் உயிரிழந்துள்ளதாக ஒரு அறிக்கை கூறுகிறது. இதில் 36 சதவீத விபத்துகள் அசாமிலும் 26 சதவீத விபத்துகள் மேற்கு வங்கத்திலும் 6 சதவீத விபத்துகள் தமிழ்நாட்டிலும் நடந்துள்ளதாக அந்த அறிக்கை கூறுகிறது.

இது குறித்து நான் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், ஒன்றிய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்ச்கத்திடம் பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்தேன். அதற்கு யானைகள் பாதுகாப்பு திட்ட அதிகாரி அளித்த பதிலில்,கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் 186 யானைகள் ரயில் மோதி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

அசாம் 62,

மேற்குவங்கம் 57,

ஒடிசா 27,

உத்தரகாண்ட் 14,

கேரளா 9,

ஜார்கண்ட் 7,

தமிழ்நாடு 5,

கர்நாடகா 3,

திரிபுராமற்றும்உபிதலா 1

அதிகபட்சமாக 2012 – 13 ஆண்டில் 27 யானைகள் இந்தியா முழுவதும் ரயில் மோதி உயிரிழந்துள்ளது. தமிழ்நாட்டு வனப்பகுதிகளான கோவை வாளையார், மற்றும்க ர்நாடகா செல்லும் வழித்தடமான ஓசூர் பகுதிகளில் அடிக்கடி ரயில் மோதி யானைகள் உயிரிழப்பது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில்கடந்த 10 ஆண்டுகளில் ஐந்து யானைகள் மட்டும் தான் ரயில் மோதி உயிரிழந்து இருக்கிறது என்று ஒன்றிய அரசு தெரிவித்திருப்பதும் சந்தேகத்தை எழுப்புகிறது. மேலும் கடந்த முறை தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் பெறப்பட்ட பதிலில் கடந்த ஐந்து ஆண்டுகளில் கோவை பாலக்காடு ரயில் வழித்தடத்தில் மட்டும் எட்டு யானைகள் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

யானைகள் பாதுகாப்பு திட்டம் மூலம், மத்திய நிதி உதவி திட்டத்தின் கீழ் கடந்த 10 ஆண்டுகளில் 213 கோடிகள் மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

கேரளா 39.97,

கர்நாடகா 28.43,

ஒடிசா 24.4,

மேகாலயா 21.56,

தமிழ்நாடு 20.74,

உத்தரகாண்ட் 18.72,

அசாம் 15.23,

மேற்குவங்கம் 10.61,

ஜார்க்கண்ட் 9.58,

அருணாச்சல்பிரதேஷ் 8.99,

நாகலாந்து 6.14,

சத்தீஸ்கர் 4.98,

பீகார் 4.34,

ஆந்திரா 2.88,

மகாராஷ்டிரா 2.52,

திரிபுரா 1.96,

உத்தரபிரதேஷ் 1.84,

அரியானா 0.88,

ராஜஸ்தான் 0.77,

மணிப்பூர் 0.31,

மத்தியபிரதேசம் 0.11,

பஞ்சாப் 0.02

பாதுகாப்பு நடவடிக்கைகளாக,

  1. அடிக்கடி விபத்து ஏற்படும் பகுதிகளை கண்டறிதல்,
  2. வனத்துறை ஊழியர்கள் தொடர்ரோந்து,
  3. ரயில்வே துறை வனத்துறை இணைந்து கமிட்டி அமைத்து தொடர் சந்திப்புகள் மற்றும் கடிதம் வாயிலாக யானைகள் பாதுகாப்பை மேம்படுத்துதல்,
  4. தண்டவாளத்திற்கு இரு புறமும் உள்ள செடி கொடிகளை வெட்டுதல்,
  5. யானைகள் அதிகம் நடமாடும் பகுதிகளில் ரயில் ஓட்டுனர்களுக்கு எச்சரிக்கும் வகையில் எச்சரிக்கை பலகைகள் வைத்தல்,
  6. தண்டவாளங்களுக்கு அருகில் உணவுப் பொருட்களை கொட்டாதவாரும், சரக்கு ரயில்களில் செல்லும் உணவுகள் தண்டவாளங்களுக்கு இரு புறமும் சிந்தாமல் செல்லும் வகையிலும் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது
  7. தண்டவாளங்கள் உயரமாக அமைக்கப் பட்டுள்ள பகுதிகளில் இரு புறமும் யானைகள் இலகுவாக கடந்து செல்லும் வகையில் சாய்வு தளத்துடன் அமைக்கப்பட்டுள்ளது,
  8. இரவு நேரங்களில் விபத்துக்கள் அடிக்கடி நடக்கும் பகுதிகளில் வேகக்கட்டுப்பாடு அமலில் உள்ளது,
  9. மேலும் மண்டல ரயில்வே அதிகாரிகள் மாநில வனத்துறை அதிகாரிகள் மூலமாக கமிட்டி அமைக்கப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அந்த பதிலில் தெரிவிக்கப்பட்டது.

அறிவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி ரயில் மோதி யானைகள் உயிரிழப்பதை நாம் தடுக்க வேண்டும். கடந்த சில தினங்களுக்கு முன் தேசிய வனவிலங்கு வாரியம், ரயில் மோதி யானைகள் உயிரிழப்பை தடுக்க, அகச்சிவப்பு கதிர் கேமரா, ஆப்டிகல் கேமரா மற்றும் ரேடார் உதவியுடன் கூடிய படங்கள் என இந்தமூன்றும், மூன்று கண்களாக செயல்படும் ரயில் ஓட்டுனர்களுக்கு உதவி செய்யும் வகையில் இருக்கும். இந்த மூன்று கண்கள் திட்டம் சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்பட உள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. சமீபத்தில் நடைபெற்ற சந்திப்பு ஒன்றில் மத்திய வனத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் ரயில் மோதி யானைகள் உயிரிழப்பது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது என்றும், வரும் காலங்களில் ரயில் மோதியானைகள் உயிரிழப்பை தடுக்க போதுமான ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு செயல் படுத்தப்பட வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

எனவே மத்திய மாநில வனத்துறை மற்றும் ரயில்வே துறை இணைந்து போதுமான நடவடிக்கைகள் எடுத்து ரயில் மோதி யானைகள் உயிரிழப்பது இந்தியா முழுவதும் தடுக்க வேண்டியது மிகவும் அவசியமான செயல்பாடாகும்.

கோவை பாலக்காடு ரயில் வழித்தடத்தில் போத்தனூர் சந்திப்பு மற்றும் கஞ்சிக்கோடு ரயில் நிலையங்களுக்கு இடையே  2002முதல் 2010   வரை 8 வருடத்தில்  13 யானைகள் ரயில் மோதி இறந்துள்ளன என்று ஒரு அறிக்கை தெரிவிக்கிறது. இதில் 2008 பிப்ரவரி 2 இல் போத்தனூர் மற்றும் மதுக்கரைரயில் நிலையங்களுக்கு இடையே நடந்த ஒரு ரயில் விபத்தில் 3 யானைகள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. 2016 முதல் 2021 கடந்த மார்ச் வரை 8 யானைகள் ரயில் மோதி உயிரிழந்து உள்ளது என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட பதிலின் மூலம் தெரிய வந்தது.

காப்புக்காடுகள் மற்றும் அதிக விபத்துபகுதிகள்:

போத்தனூர் பாலக்காடு ரயில் வழித்தடத்தில், A லைனில் மதுக்கரை முதல் சுள்ளிமடை ரயில் நிலையம் வரை 17 கிமீ காப்புக்காடுகள் வழியாக செல்கிறது. B லைனில் மதுக்கரை முதல் கஞ்சிக்கோடு வரை 23 கிமீ காப்புக்காடுகள் வழியாக ரயில் வழித்தடம் செல்கிறது. Aலைனில் வாளையார் முதல் சுள்ளிமடை வரை 4.9 கிமீ தூரம் அதிகம் விபத்து வாய்ப்புள்ள பகுதியாகும். A மற்றும் B லைனில் கஞ்சிக்கோடு மற்றும் கோட்டைக்காடு ரயில் நிலையங்களுக்கு இடையே 2.5 கிமீ தூரம் அதிகம் விபத்து வாய்ப்புள்ள பகுதியாகும்.

ஜூன் – டிசம்பர்சீசன்:

கடந்த மார்ச்மாதம் நடந்த ஒரு விபத்தைத விர அனைத்து யானை உயிரிழப்பு களும் ஜூன் முதல் டிசம்பர்மாத சீசனில் மட்டுமேநடைபெற்றுள்ளது.

இரவில் விபத்துக்கள்:

3 விபத்துக்கள் இரவு 11 மணி அளவிலும், 2 விபத்துகள் இரவு 1 மணி அளவிலும், இரு விபத்துகள் முறையே 5 மற்றும் 6 மணி அளவிலும் நடைபெற்றுள்ளன. ஒரு விபத்து நடைபெற்ற நேரம் தெரியவில்லை.

மோதியரயில்களின்விவரம்:

மைசூர் கொச்சுவேலி எக்ஸ்பிர ஸ்மோதி Aலைனில் ஒரு யானையும், Aலைனில் கொல்லம் விசாகப்பட்டினம் வாராந்திரரயில் மோதி ஒரு யானையும், மங்களூரு சென்னை வெஸ்ட் கோஸ்ட்ரயில் மோதி ஒரு  யானையும், திருவனந்தபுரம் சிலிச்சார் அரோணை எக்ஸ்பிரஸ் மோதி ஒரு யானையும், திருவனந்தபுரம் சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் மோதி 3 வெவ்வேறு விபத்துகளில் 3 யானைகள் உயிரிழந்துள்ளன. ஒரு யானை எந்த ரயில் மோதி உயிரிழந்தது எனதெரியவில்லை.

ரயில்நிலையங்களில்இருந்துவிபத்துநடந்ததூரம்:

A லைனில் மதுக்கரை ரயில் நிலையத்திற்கு மேற்கே 1.6 தொலைவில் ஒரு யானையும், B லைனில் வாளையார் ரயில் நிலையத்திற்கு மேற்கே 1.8 கிமீ கிழக்கே 4 கிமீ மொத்தம் 5.8 கிமீ நீளத்திற்குள் 5 யானைகள் உயிரிழந்துள்ளன. கஞ்சிகோட்டில் இருந்து கிழக்கே 2.5 கிமீ தொலைவில் ஒரு யானையும், கோட்டக்காட்டிலிருந்து கிழக்கே 1.3 கிமீ தொலைவிலும் ஒரு யானை ரயில் மோதி உயிரிழந்துள்ளது.

போத்தனூர் பாலக்காடு இடையே ரயில் மோதி யானைகள் இறந்த விபத்துகள் அனைத்தும் இரவு நேரங்களில் தான் நடந்துள்ளன அரசு நமக்கு அளித்த பதில்கள் மூலம் தெரிய வருகிறது. கடந்த மார்ச் மாதம் நடந்த விபத்தை தவிர அனைத்து விபத்துகளும் ஜூன் முதல் டிசம்பர் வரை உள்ள பருவ மழைகால கட்டத்தில் மட்டுமே நடந்துள்ளன.

வாளையார் மற்றும் எட்டிமடை ரயில்நிலையங்களுக்கு இடையே 3 கிமீ தூரத்திற்குள் 4 விபத்துக்கள் ஏற்பட்டு 4 யானைகள் உயிரிழந்துள்ளன. 11 கிமீ நீளமுள்ள இந்த இரு ரயில் நிலையங்களுக்கு இடையே உள்ள பகுதி தான் அதிக விபத்துக்கள் நடந்து வருகிறது.  B லைனில் இரவு நேர போக்குவரத்தை நிறுத்துவது மட்டும் தான் இதற்கு தீர்வாக முடியும். A லைனில் இரு திசைகளிலும் ரயில்களை இயக்கும் தொழில் நுட்ப வசதிகள் உள்ளதால், அதிக விபத்து அபாயம் உள்ள ரயில் நிலையங்களுக்கு இடையே B லைனில் போக்குவரத்தை இரவு நேரத்தில்  நிறுத்தி, A லைன் வழியாக இயக்க வேண்டும். B லைனை அடர் வனப்பகுதி மற்றும் அதிக விபத்துகள் நடக்கும் பகுதியில் இருந்து எடுத்து வனப்பகுதி இல்லாத மற்றும் அதிக விபத்து அபாயம் இல்லாத பகுதியான B லைன் அருகே அமைப்பது தான் நிரந்தரதீர்வாக அமையும்.

யானைகள் விபத்து நடந்த பகுதியினை வரை படமாக வரைந்த சமூக ஆர்வலர் தயானந்த் கிருஷ்ணன் கூறுகையில், ரயில்வே துறை மற்றும் வனத்துறைகள் இணைந்து ரயில் மோதி யானைகள் இறந்த விபத்து பகுதிகளின் பழைய தரவுகளை எடுத்து ஒரு வரை படமாக வரைய வேண்டும். அதனடிப்படையில் ரயில் ஓட்டுனர்களுக்கு உதவும் வகையில் தொழில்நுட்பங்களை மேம்படுத்த வேண்டும். மேலும் யானைகள் அதிகம் கடக்கும் பகுதிகளை கண்டறிந்து ரயில் வழித்தடங்கள் அடியில் யானைகள் கடப்பதற்கு சுரங்கப்பாதைகள் மற்றும் வெளிநாடுகளில் அமைக்கப்பட்டு உள்ளதைப் போல ரயில் தண்டவாளங்களுக்கு மேலே மேல்மட்ட பாலங்கள் அமைத்து வன விலங்குகள் கடந்து செல்லும் வகையில் மேம்பாலங்கள் அமைக்க வேண்டும். மேலும் தண்டவாளங்களில் இரு புறமும் இயற்கையான முள்செடிகள் அமைத்து தண்டவாளத்தை யானைகள் நெருங்காதவாறு வேலி அமைக்க வேண்டும். அப்போது தான் ரயில் மோதி யானைகள் உயிர் இழப்பதை தடுக்கமுடியும். இவ்வாறுஅவர்கூறினார்.

 

– பாண்டியராஜா

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments