காடு காலையிலிருந்தே பரபரப்பாக இருந்தது. இரை தேடச் செல்லும் விலங்குகளும், பறவைகளும் அன்று இரை தேட செல்லவில்லை. கழுகுகளும், பருந்துகளும் உயரப் பறந்து அந்தப் பகுதியில் மனிதர்கள் யாரும் வருகிறார்களா என்று கண்காணித்துக் கொண்டிருந்தன. குட்டிக் குரங்கு கபிஷ் கையிலிருந்த முரசு போன்ற இசைக்கருவியை தட்டிக் கொண்டிருந்தது. அருகிலிருந்த இரு மரங்களுக்கு இடையே “காடுவாழ் விலங்குகளின் வாழ்வுரிமை மாநாடு” என்ற பதாகை கட்டப்பட்டிருந்தது.
காட்டின் விலங்குகள் அனைத்தும் மலையடிவாரத்தில் இருந்த அப்பகுதியில் மெல்ல குவியத் தொடங்கின. ஏற்கனவே அங்கே இருந்த அக்காட்டின் தற்காலிகத் தலைவரான புலி புலிவேந்தன், ஜார்ஜ் ஆர்வெல் எழுதிய “விலங்குப் பண்ணை” நாவலைப் படித்துக் கொண்டிருந்தது. அந்தப் புத்தகத்திலிருந்து தலையை நிமிர்த்திய புலி, குட்டிக் குரங்கு கபிஷிடம், “எல்லா விலங்குகளுக்கும் சொல்லியாச்சா? வந்துடுவாங்களா? பறவைகளும் வரவேண்டும் என்று சொல்லி இருந்தேனே?” என்றது. அதற்கு குட்டிக் குரங்கு கபிஷ், “எல்லோருக்கும் செய்தி போய்விட்டது தலைவரே! எந்த விலங்கும், பறவையும் இன்று இரை தேட போகவில்லை. கொஞ்ச நேரத்தில் இங்கே வந்துடுவாங்க” என்றது. மேலும் சில குரங்கு நண்பர்களையும் அழைத்து அவர்களிடம் ஆளுக்கொரு முரசைக் கொடுத்து கோரஸாக அடிக்கத் தொடங்கினார்கள்.
இந்த முரசுச் சத்தத்தை கேட்டு விலங்குகள் மெல்ல கூடத் தொடங்கின. முதலில் வந்தது கடமான்கள்தான். அந்த மான்கள் மாநாட்டின் தலைவரான புலிவேந்தனைப் பார்த்து சற்று பயத்துடன் வணக்கம் தெரிவித்தன. அடுத்து வந்தவை கரடிகள். அடுத்து காட்டெருமைகள். அடுத்து யானைகள். பறவைகள் தங்கள் குரல்களை எழுப்பியவாறு அணியணியாக வந்து சேரத் தொடங்கின. வரையாடுகள் ஆடிஅசைந்து வந்தன. அதைப்பார்த்து சற்று சினமடைந்த புலிவேந்தன், அந்த ஆடுகள் அருகில் உள்ள மலைச்சிகரங்களில் ஏறி, மனிதர்கள் யாரும் அந்தப் பக்கம் வருகிறார்களா என்று கண்காணிக்குமாறு உத்தரவிட்டது. கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள் வரையாடுகளுக்கு தெரிவிக்கப்படும் என்றும் புலி கூறவே, அந்த வரையாடுகள் அருகிலிருந்த மலைச் சிகரத்தை நோக்கி ஓடத் தொடங்கின.
கடைசியாக முயல்கள், முள்ளம்பன்றிகள், காட்டு நாய்கள் போன்ற விலங்குகள் வந்த சேர்ந்தன. சில பாம்புகளும் வந்து சேர்ந்தன.
தொண்டையைச் செருமியவாறு அந்தக் மாநாட்டின் தலைவரான புலிவேந்தன் பேசத்தொடங்கியது. “வணக்கம் நண்பர்களே! மிகவும் முக்கியமான காலக்கட்டத்தில் நாம் இந்த மாநாட்டை நடத்த வேண்டிய நிலையில் இருக்கிறோம். இந்த மனிதர்களின் அட்டகாசம் அதிகமாகி விட்டது. நமது வாழிடங்களை அவர்கள் கைப்பற்றி நமக்கு வாழ்வதற்கு இடமே இல்லாமல் செய்து விட்டார்கள். இந்த காட்டின் தலைவராக கருதப்பட்ட சிங்கங்களை ஏறத்தாழ அழித்தே விட்டார்கள். எனது சொந்தங்களான புலிகளின் எண்ணிக்கையும் மிகவும் குறைந்து விட்டது. காண்டா மிருகம் போன்ற மிருகங்களும்கூட அழிவின் விழிம்பில் உள்ளது. மனிதர்களின் இந்த அட்டகாசம் நாம் வாழும் காட்டை மட்டும் அழிக்கவில்லை. உலகம் முழுவதும் உள்ள காடுகளை இந்த மனிதர்கள் நாசமாக்கி விட்டார்கள். நம் சொந்தபந்தங்கள் வாழும் கடல் உள்ளிட்ட நீர்நிலைகளையும் இந்த மனிதர்கள் பாழாக்கி விட்டார்கள். குறிப்பாக இப்போது யானைகள் மிகவும் ஆபத்தான நிலையில் இருக்கிறார்கள். இந்த காலகட்டத்தில் நாம் என்ன செய்ய வேண்டும்? நம்மை எப்படி காப்பாற்றிக் கொள்வது? நம்மை அழிக்கத் துடிக்கும் இந்த மனிதர்களை எப்படி எதிர்கொள்வது? என்று ஆலோசிப்பதற்காக கூடியிருக்கிறோம். இது குறித்த கருத்துகளை அனைவரும் கூறலாம். முதலில் விலங்குகள் தங்கள் கருத்தைக் கூறலாம். பிறகு பறவைகள் கூறலாம். இறுதியில் புழு, பூச்சிகள் தங்கள் கருத்தை பதிவு செய்யலாம். அனைவர் கருத்தும் முக்கியமானவைதான். அதை பதிவு செய்ய வசதியாகவே இவ்வாறு வரிசைப்படுத்துகிறேன். முதலில் மனிதர்களின் மிக நெருங்கிய உறவான குரங்குகளின் பிரதிநிதியாக மூத்த குரங்கு மாயனை பேச அழைக்கிறேன்” என்று கூறி அமர்ந்தது, புலிவேந்தன்.
முதுமை காரணமாக தளர்ந்துபோன உடலை அசைத்து கூட்டத்தின் முன் வந்த குரங்கு மாயன், தன் இடுங்கிய கண்களை சுருக்கி கூட்டத்தில் இருந்த மற்ற விலங்குகளை பார்த்தவாறே பேசத் தொடங்கியது. “மாநாட்டுத் தலைவர் புலி அவர்களுக்கு வணக்கம். நீங்கள் கூறிய அனைத்தும் உண்மைதான். இந்த மனிதர்கள் தங்களை இந்த பூமியின் எஜமானர்களாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இந்த பூமியில் நம்மைப் போன்ற விலங்குகளுக்கு பிறகு கடைசியில் பிறந்தவர்கள் அவர்கள்தான். அவர்கள் பகுத்தறிவு என்று நினைத்துக் கொண்டிருக்கும் அறிவுதான் அனைத்து அழிவுகளுக்கும் காரணமாக இருக்கிறது. அவர்கள் காடுகளையும், மலைகளையும் அழித்து வளர்ச்சி காண கனவு காண்கிறார்கள். அவர்கள் அழிப்பது நம்மை மட்டுமல்ல: அவர்களது தாய் வீட்டையும்தான் என்பதை உணர மறுக்கிறார்கள். அவர்கள் அதை உணரும் நாளில் அவர்கள் வசிப்பதற்கு இந்த உலகில் எதுவுமே மீதி இருக்காது. இந்தோனேஷியாவின் போர்னியோ காடுகளை அழித்து எண்ணெய்ப் பனை மரங்களை நடுகிறார்கள். அங்கு வசித்த எங்கள் நெருங்கிய உறவுகளான உராங்குட்டான் குரங்குகள் ஏறத்தாழ அழிவின் விளிம்பின் உள்ளது. இப்போது யானைகள் வசிப்பிடங்களையும், வலசைப் பாதைகளையும் அழித்து யானைகளின் வாழ்வுரிமையை பறிக்கிறார்கள். ஆனால் இந்த யானைகள்தான் பல நூற்றாண்டுகளாக மனிதர்களிடம் அடிமையாகி கிடக்கின்றன. மனிதர்கள் பல குழுக்களாகவும், நாடுகளாகவும் பிரிந்து அர்த்தமற்ற காரணங்களுக்காக தங்களுக்குள் போர் புரியும்போது இந்த யானைகள் அவர்களின் படைப்பிரிவுகளாக மாறி தங்கள் இனத்தையும அழித்துக் கொண்டு, மனிதர்களையும் அழித்தன. மனிதர்களின் வெட்டிப் பெருமைக்கும், வீண் பந்தாவுக்கும் இந்த யானைகள் பயன்பட்டன. அவர்களின் கோவில்களில் தலையையும், வாலையும் ஆட்டிக் கொண்டு நின்றன. மனிதர்கள் நடத்தும் சர்க்கஸ்களிலும், சினிமாக்களிலும் வித்தைகள் செய்தன. இப்படியாக மனிதர்களுக்கு பணிந்து நின்று காடுகளுக்குள் அவர்களை அனுமதித்ததே இந்த யானைகள்தான். கடைசியில் சொந்த இனமான யானைகளை காட்டிக் கொடுத்து கட்டுப்படுத்தும் கருங்காலி வேலைகளையும் இந்த யானைகள்தான் “கும்கி” என்ற பெயரில் செய்கின்றன. எனவே இந்த பிரச்சினையில் இருந்து எப்படி வெளிவருவது என்பதை யானைகள்தான் சொல்ல வேண்டும்” என்று தன் உரையை முடித்தது மூத்த குரங்கு மாயன்.
அடுத்து பேச வந்தது கரடி காரிருள். “நண்பர்களே! நாம் யானைகளை குற்றவாளிக்கூண்டில் நிறுத்துவது முறையல்ல. அதுவும் பெரும் ஆபத்தை சந்திக்கும் நம் நண்பர்களை இந்த முக்கியமான நேரத்தில் குற்றம் சொல்லக்கூடாது. மூத்த குரங்கு மாயன் கூறிய அனைத்தும் உண்மைதான் என்றாலும், இதில் யானை நண்பர்களின் குற்றம் எதுவும் இருப்பதாக கூற முடியாது. யானை நண்பர்களின் உருவம் காரணமாக அவற்றால் மற்ற விலங்குகளைப் போல மரம் ஏற முடியாது. தாவி ஓட முடியாது. மேலும் இயல்பாகவே அவை நம்மைவிட சாந்தமானவை. அதே நேரம் இந்த யானைகளால் காட்டிலுள்ள எந்த விலங்குக்கோ, பறவைக்கோ ஆபத்து இல்லை. பல நன்மைகள்தான் இருக்கின்றன என்பதை நாம் மறந்துவிட முடியாது. எனக்கு அஜீரணம் வரும்போது இந்த யானைகள் கண்டுபிடிக்கும் மலை உப்புகளை சாப்பிட்டுதான் என் அஜீரணத்தை போக்கிக் கொள்கிறேன். மேலும் யானைகள் இல்லாவிட்டால் கோடைக் காலத்தில் தண்ணீர் இருக்கும் இடத்தை நம்மால் கண்டுபிடிக்க முடியாது என்பதையும் குறிப்பிட விரும்புகிறேன். நாம் உடல் தோற்றத்தாலும், உணவுப் பழக்கத்தாலும் வேறுபட்டிருந்தாலும் காட்டின் குடியுரிமை பெற்ற உயிர்களாக ஒற்றுமையுடன் இருக்க வேண்டும். நாம் பிரிந்து நின்றால் நமது பொது எதிரியான மனிதர்கள் நம்மை முழுவதுமாக அழித்து விடுவார்கள். இந்த மனிதர்களை எதிர்கொள்வதற்கு என்னிடம் ஒரு திட்டம் இருக்கிறது. ஆனால் அதை நம்மில் எத்தனைப் பேர் ஒப்புக் கொள்வீர்கள் என்று தெரியவில்லை. எனவே மற்ற நண்பர்களும் பேசியபின் நான் என் திட்டத்தைக் கூறுகிறேன்” என்று தன் பேச்சை முடித்தது, கரடி காரிருள்.
அடுத்து பேசுவதற்கு முன்வந்தது காட்டெருமை காடம்பன். இடைமறித்த புலிவேந்தன், “நண்பர்களே இந்தக்காட்டில் யாரும் அரசனோ, தலைவனோ இல்லை. புலிவேந்தன் என்பது எனக்கு மனிதர்கள் வைத்த பெயர்தான். அதற்காக நான் இந்தக்காட்டின் அரசன் இல்லை. காட்டின் அரசன் என்று அழைக்கப்பட்ட சிங்கங்கள் ஏறத்தாழ அழியும் நிலையில் உள்ளன. எனவே நான் இன்றைய மாநாட்டிற்கு மட்டுமே தலைவன். இந்தக் கூட்டத்தை நெறியாள்கை செய்து முடித்தபின் நீங்களும் நானும் சமம்தான். எனவே எனக்கு வணக்கம்கூறி புகழ்பாட வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்!” என்றது.
காட்டெருமை காடம்பன் தன் உரையை தொடங்கியது. “நண்பர்களே! இந்த காட்டின் குடியுரிமை பெற்ற உயிரினங்களான நாம் பல வேறுபட்ட இயல்புகளைக் கொண்டவர்கள். ஆனால் நாம் இந்தக் காட்டின் உயிர்நாடிகள். நமக்குள் ஆயிரம் பிரச்சினைகள் இருக்கலாம். ஆனால் நமது பொது எதிரியான மனிதர்களை நாம் கட்டுப்பாட்டுக்குள் வைக்க வேண்டும். உங்களில் பெரும்பகுதியினரை சர்க்கஸ் கூடாரங்களுக்குள் அடைத்த மனிதர்கள் எங்களை சர்க்கஸ் கூடாரங்களுக்குள் அடைக்க முடியவில்லை. அது குறித்து நாம் ஆராய்ந்தால் நமது அடிமைத்தளைகளை உடைத்தெறியலாம். காட்டெருமைகளான நாங்கள் சிங்கம், புலியைப் போல மாமிசம் சாப்பிடுபவர்கள் அல்லர். எனவே மனிதர்களையும் நாங்கள் சாப்பிட மாட்டோம். ஆனால் அவர்களை கண்டவுடனே தாக்கியோ, மிரட்டியோ விரட்டி விடுவோம். சிங்கம், புலி போன்ற மாமிசம் சாப்பிடும் விலங்குகளைப் பார்த்தால் சாதாரண மனிதர்கள் அவர்களாகவே பயந்து ஒதுங்கி சென்று விடுவார்கள். யானைகள், மான்கள் போன்ற சாதுவான விலங்குகள்தான் மனிதர்கள் காடுகளுக்குள் வருவதற்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் இருக்கும் விலங்குகள். அதேபோல பறவைகளும் குறிப்பாக கழுகு, பருந்து போன்ற பெரிய பறவைகள் மனிதர்களுக்கு எதிராக உறுதியான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும். மனிதர்களை காட்டுக்குள் பார்த்தவுடனே அவர்களை கொத்தித் துரத்த வேண்டும். மேலும் காட்டுப்பகுதிக்குள் மனிதர்கள் ஆக்கிரமித்து கட்டியுள்ள அனைத்து கட்டிடங்களையும், தொழிற்சாலைகளையும், ரயில்பாதைகளையும் நாம் தகர்க்க வேண்டும். இந்த வேலையில் எங்களால் அதிக அளவில் ஈடுபட முடியும். எங்களை இந்த மனிதர்களால் கட்டுப்படுத்த முடியாது. கோபம் அதிகமானால் விஷம் வைத்தோ, துப்பாக்கியால் சுட்டோ கொலை செய்வார்கள். மனிதர்கள் ஆக்கிரமித்துள்ள இந்த காட்டில் வாழ்வதைவிட மனிதர்களுக்கு எதிரான போராட்டத்தில் செத்துப்போவதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்” என்று உரையை முடித்தது காட்டெருமை காடம்பன்.
சற்றுத் தயக்கத்துடன் கூட்டத்தின் முன்புறம் வந்தது கடமான் புள்ளிராஜா. மிகவும் பவ்வியமாக தன் உரையை ஆரம்பித்தது. “நண்பர்களே! எங்கள் மீது நீங்கள் வைக்கும் குற்றச்சாட்டுகளை நான் ஏற்றுக் கொள்கிறேன். எங்கள் இனத்திற்கே யாரையும் தாக்கும் பழக்கம் கிடையாது. ஆபத்து வந்தால்கூட எங்களுக்கு தப்பியோட மட்டுமே தெரியும். எதிர்த்துத் தாக்குதல் என்பது எங்கள் மரபணுவிலேயே இல்லை. எங்களுடைய கொம்புகள் கூட பெண் மான்களை கவர்வதற்கும், அதற்கான போராட்டத்தில் மற்ற ஆண் மான்களை வெல்வதற்குமான கருவியாகவே செயல்படுகிறது. அந்த கொம்புகளே, மனிதர்கள் எங்களை வேட்டையாடுவதற்கான முக்கிய காரணமாகவும் அமைகிறது. ஆனால் எங்கள் இந்த இயல்புகளுக்கு நாங்கள் காரணம் அல்ல. இயற்கையில் நாங்கள் அவ்வாறுதான் படைக்கப் பட்டிருக்கிறோம். எனினும் இந்த பலவீனத்திற்காக நீங்கள் எங்களுக்குத் தண்டனை அளிக்க வேண்டும் என்று முடிவெடுத்தால் நாங்கள் அதற்கு கட்டுப்படுவதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை. அதே நேரம் எங்களால் இந்தக் காட்டில் வாழும் தாவரங்களைத் தவிர வேறு எந்த உயிரினத்திற்கும் எந்த ஆபத்தும் இல்லை என்பதை நினைவூட்ட விரும்புகிறேன்!” என்று தன் பேச்சை நிறைவு செய்தது கடமான் புள்ளிராஜா.
தொடர்ந்து காட்டுப்பன்றி கூர்மன் உரையாற்ற முன்வந்தது. “நண்பர்களே, யானை மற்றும் மான் நண்பர்களே, குற்ற உணர்வு உங்களுக்குத் தேவையில்லை. இந்த மனிதர்கள் மிகவும் மோசமானவர்கள். அனைத்து உயிர்களையும் அடிமைப்படுத்த துடிப்பவர்கள் இந்த மனிதர்கள். அடிமைப்படுத்த முடியாத விலங்குகளை முழுவதுமாக அழித்துவிட துடிப்பவர்கள். மாமிசம் உண்ணும் சிங்கம், புலி போன்ற விலங்குகளை பொறிவைத்து பிடித்து உணவு தராமல் பட்டினி போட்டு, அடித்து துன்புறுத்தி, நகங்களை வெட்டி சர்க்கஸில் வேடிக்கை காட்டுவார்கள். சற்று சாதுவான, மனிதர்களை அடித்துச் சாப்பிடாத யானைகளையும் அதைபோல அடிமைப்படுத்தி அன்று போர்களில் ஈடுபடுத்தினார்கள். இன்று நாம் வசிக்கும் காடுகளை அழிப்பதோடு, அவர்கள் வெட்டும் மரங்களை தூக்கிச் செல்லவும் நமது நண்பர்களான யானைகளை பயன்படுத்துகிறார்கள். நமது உணவும், நீரும் கிடைக்கும் அனைத்துப் பகுதிகளையும் ஆக்கிரமிக்கிறார்கள். உணவும், தண்ணீரும் தேடி நாம் நமது வசிப்பிடத்திற்குள் சென்றால் இந்த மனிதர்கள் இந்த பூமி முழுவதும் அவர்களது பாட்டன்வீட்டு சொத்து என்ற நினைப்புடன் நமக்கு விஷம் வைத்தும், மின்சாரம் பாய்ச்சியும், துப்பாக்கியால் சுட்டும் கொல்கிறார்கள். இந்த மனிதர்களுக்கு எதிராக நாம் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு என்னிடம் சில திட்டங்கள் உள்ளன. நமக்கு நோய் ஏற்பட்டால் நாம் இதுவரை எடுத்து வந்த சிகிச்சைகளை இனி எடுக்கக் கூடாது. அதற்கு பதிலாக நாம் மனிதர்கள் வசிக்கும் பகுதிகளில் ஊடுருவி நமக்கு ஏற்பட்ட நோய்களை மனிதர்களுக்கும் பரப்பிவிட வேண்டும். பெரும்பாலான மனிதர்களுக்கு சுகாதாரம் என்றால் என்னவென்றே தெரியாது. எனவே அவர்களிடம் நோய்களை பரப்புவது எளிது. இவ்வாறு மனிதர்களை ஒழித்துக் கட்டினால்தான் நாம் காடுகளையும், காட்டில் வசிக்கும் விலங்குகளையும் காப்பாற்ற முடியும். அதற்கான போராட்டத்தில் தற்கொலைப் படையாக செயல்பட காட்டுப்பன்றிகளான நாங்கள் தயார்!” என்று தன் உரையை முடித்தது காட்டுப்பன்றி கூர்மன். இந்த உரையை எதிர்பாராத விலங்குகள் அமைதி காத்தன. கழுதைப்புலி ஒன்று காட்டுப்பன்றி கூர்மனின் உரைக்கு ஆதரவு தெரிவிப்பதுபோல அருகில் இருந்த முரசு ஒன்றை எடுத்து அடித்தவாறே, கனைப்பு ஒலியையும் எழுப்பியது. இதை ஆமோதிப்பதுபோல மற்ற விலங்குகளும் பறவைகளும் ஒலி எழுப்பின. மிருகங்களும், பறவைகளும் எழுப்பிய இந்த கூட்டு ஒலியால் காட்டின் அந்தப்பகுதி முழுவதும் சற்று நேரம் அதிர்ந்து பின் அமைதியானது. மலைமுகட்டில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிறுந்த வரையாடுகளும், வானில் பறந்து பாதுகாப்பை உறுதி செய்து கொண்டிருந்த கழுகுகளும், பருந்துகளும் திடீரென எழுந்த இந்த கூச்சலுக்கான காரணம் தெரியாமல் திகைத்தன.
பறவைகள் சார்பாக முதலில் பேசவந்தது வனராணி மயில். “நண்பர்களே! இந்த மனிதர்கள் விந்தையானவர்கள். அதேநேரம் கொடுரமானவர்கள். எங்களை கடவுளாகவும், கடவுளின் வாகனங்களாகவும் வழிபடுவார்கள். இந்தியாவின் தேசியப் பறவை என்று கொண்டாடவும் செய்வார்கள். அதேநேரம் எங்கள் உணவுக்கான ஆதாரங்களை அழித்து விடுவார்கள். அவர்கள் உருவாக்கும் வயல்வெளிகளில் நாங்கள் உணவருந்தப் போகும்போது விஷம் வைத்தும், வலை விரித்தும், துப்பாக்கியால் சுட்டும் கொலை செய்வார்கள். இந்த மனிதர்கள் இருக்கும்வரை நாம் நிம்மதியாக வாழ முடியாது என்பது உண்மைதான். அதற்காக அந்த மனிதர்களை முழுவதுமாக அழித்து ஒழிப்பது நியாயம்தானா என்பது தெரியவில்லை. எனவே இறுதி முடிவை எடுக்கும் பொறுப்பை உங்களிடமே விட்டு விடுகிறேன். நீங்கள் எடுக்கும் முடிவு என்னவாக இருந்தாலும் எங்கள் முழு ஆதரவை அளிக்கிறோம்” என்று தம் உரையை முடித்துக் கொண்டது மயில் வனராணி.
அடுத்து பேசவந்தது கழுகு மருதன். “நண்பர்களே! இந்த மனிதர்கள் பறவைகளான எங்களுக்கு செய்யும் துரோகம்தான் மிக அதிகம். பறவைகளில் பெரும்பாலானவை தாவர உணவை சாப்பிடுபவை. இந்த மனிதர்கள் தாவர உணவு உற்பத்தியாகும் காடுகளை அழித்துக் கொண்டிருக்கிறார்கள். சரி அவர்கள் உருவாக்கும் உணவுப் பயிர்களை சாப்பிடலாம் என்று பார்த்தால் அவர்களது உணவுப்பயிர்களில் மரபணு மாற்றம், ரசாயன உரம், பூச்சி மருந்து என்று எங்கள் உயிருக்கு உலை வைக்கும் அம்சங்களை பயிர்களில் நுழைத்து விடுகிறார்கள். இந்த மருந்துகள் எங்களை உடனடியாகவும், அந்த மனிதர்களை மெல்லமெல்லவும் பாதிக்கின்றன. ஆனால் இது குறித்து அடிப்படை அறிவே இல்லாமல் இந்த மனிதர்கள் இதைத் தொடர்ந்து செய்து வருகிறார்கள். இந்த பயிர்களை உண்டு வாழும் சிறு பறவைகளையும், சிறு விலங்குகளையும், பூச்சி-புழு இனங்களையும் நம்பிதான் நாங்கள் வாழ்கிறோம். எங்களுக்கு இரையாகும் இந்த உயிரினங்கள் மனிதர்கள் பயன்படுத்தும் இந்த நச்சுத்தன்மை வாய்ந்த ரசாயன உரங்கள் மற்றும் பூச்சி மருந்துகள் காரணமாக விஷத்தன்மை கொண்டதாகி விடுகின்றன. அவற்றைச் சாப்பிடும் எங்களுக்கு பல்வேறு பிரச்சினைகள் உருவாகின்றன. மேலும் நாங்கள் சாப்பிடும் சிறுஉயிர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் குறைந்து வருகின்றன. இதை நிலை தொடர்ந்தால் சில காலத்தில் உண்ண உணவின்றி கழுகு, பருந்து போன்ற உயிரினங்களே அழிந்துவிடும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. இதை நாம் உறுதியாக நின்று எதிர்கொள்ள வேண்டும். அதற்கான வழிமுறைகளை கூறுங்கள். நானும் என் இனமான கழுகுகளும், பருந்துகளும் இந்த மனிதர்களை கட்டுப்பாட்டிற்குள் வைப்பதில் முழுமையாக ஈடுபடுவோம்!” என்று உறுதி கூறியது கழுகு மருதன்.
அடுத்து பேசவந்தது, மணிப்புறாவான வெண்ணிலா. “நண்பர்களே! நாம் பேசி காலம் கடத்துவது நல்லதல்ல. அமைதியின் சின்னமாக எங்களை உருவாக்கிய மனிதர்களே இப்போது நம் அமைதியை குலைத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த மனிதர்கள் செயற்கையாக உருவாக்கிய அடையாளங்களில் தமக்குள்ளேயே அடித்துக் கொண்டு அழிந்துபோவதில் வல்லவர்கள். இதை வைத்து உருவாக்கிய சினிமா ஒன்றில் எங்கள் இனமான புறா மூலம் கதிரியக்கப் பொருட்களை வைத்து எதிரி நாட்டின் மீது படையெடுப்பது போலெல்லாம் காட்சி அமைத்துள்ளதாக கேள்விப் பட்டேன். நமக்கு ஆபத்து ஏற்பட்டுள்ள இந்த காலத்தில் நாங்களும்கூட தற்கொலைப்படையாக மாறி மனிதர்களை வீழ்த்துவதற்கு தயாராக இருக்கிறோம். ஆனால் எங்களுக்கு கதிரியக்கப் பொருட்களை எப்படி சேகரித்து கடத்துவது என்பது குறித்தெல்லாம் தெரியாது. எனவே மனிதர்களிடம் நெருங்கிப் பழகும் குரங்கு நண்பர்கள் அதை கற்றுத் தந்தால் காட்டு உயிர் நண்பர்களுக்காக எங்கள் உயிர்களை தியாகம் செய்வதற்கு தயாராக இருக்கிறோம். அல்லது காட்டுப்பன்றி கூறியதுபோல நோய்களை தொற்றவைத்துக் கொண்டு மனிதர்கள் வாழும் பகுதிகளில் ஊடுருவி அவர்களிடம் நோய்கள் மூலமான தாக்குதல் நடத்தவும் நாங்கள் தயார்!” என்று உருக்கமாக முடித்தது மணிப்புறா வெண்ணிலா.
காலம் கடந்து கொண்டிருப்பதை நினைவூட்டி சுருக்கமாக பேசுமாறு கோரிக்கை வைத்தது, கூட்டத்தின் தலைவரான புலிவேந்தன்.
இதையடுத்து இறுதியாக பேச வந்தது பெண்யானையான வனத்திலகம். “நண்பர்களே! அனைவரும் ஆபத்தில் இருக்கும் இன்றைய நிலையில், யானைகளான எங்களுக்கு ஏற்படும் ஆபத்துகளை கருத்தில் கொண்டு இந்த சிறப்புக் கூட்டத்தில் கலந்துகொள்ள வந்துள்ள தங்கள் அனைவருக்கும் நன்றி. யானைகளான எங்கள் மீது மூத்த குரங்கான மாயன் வைத்த குற்றச்சாட்டுகள் அனைத்துக்கும் நாங்கள் பொறுப்பேற்றுக் கொள்கிறோம். எனினும் கடமான் புள்ளிராஜா கூறியது போல எங்களுக்கு இயல்பிலேயே உள்ள குணங்களின்படி நாங்கள் ஆக்கிரமிப்பு தாக்குதல் நடத்துவதில்லை. மிகவும் தேவை என்றால் தற்காப்புத் தாக்குதல் மட்டுமே நடத்துகிறோம். இனிமேல் நாங்கள் ஆக்கிரமிப்புத் தாக்குதலை கற்றுக்கொள்வது இயலாத காரியம் என்றே தோன்றுகிறது. எனினும் காட்டிற்குள் மனிதர்கள் ஆக்கிரமிப்பதற்கு நாங்கள் உதவி செய்கிறோம் என்பதை வருத்தத்துடன் ஒப்புக்கொள்கிறேன். நாம் வாழும் காட்டை அழிக்கும் மனிதர்களுக்கு சுமைதூக்கும் அடியாளாக உதவி செய்வதோடு, எங்கள் சொந்த இனத்தையே கட்டுப்படுத்தி காட்டிக் கொடுக்கும் கும்கியாகவும் நாங்கள் செயல்படுகிறோம் என்பதை மிகவும் வெட்கத்துடன் ஒப்புக் கொள்கிறோம். இதை தடுப்பதற்கு யானைகளான நாங்கள் சில நாட்களாக சில திட்டங்களை சிந்தித்து வருகிறோம். அதில் முதலாவதாக சில நச்சுத் தாவரங்களை எப்போதும் உடன் வைத்திருக்க திட்டமிட்டிருக்கிறோம். மனிதர்களிடம் அகப்பட்டுவிட்டால் அந்த நச்சுத் தாவரங்களை உட்கொண்டு தற்கொலை செய்து கொள்வது குறித்து ஆலோசித்துக் கொண்டிருக்கிறோம். அது நடக்காதபோது எங்களுக்கு மதம் பிடிப்பதற்கான வழியைக் கண்டறிந்து நமது பொது எதிரிகளான மனிதர்கள் மீது இயன்றவரை தாக்குதல் தொடுக்கவும், இறுதியில் மனிதர்களால் கொல்லப்படவும் நாங்கள் தயாராகி வருகிறோம். இந்த காட்டின் குடியுரிமை பெற்ற விலங்குகளின் வாழ்வுரிமையை பாதுகாப்பதற்கு வேறு வழிகளை நண்பர்கள் கூறினால் அதை எங்கள் உயிரைக் கொடுத்து நிறைவேற்றவும் தயாராக இருக்கிறோம்!” என்று குற்ற உணர்வுடன் தன் உரையை முடித்துக் கொண்டது பெண்யானை வனத்திலகம்.
அனைவரும் பேசுவதை அமைதியாக கேட்டுக் கொண்டிருந்த மாநாட்டுத் தலைவர் புலிவேந்தன், “கரடியார் காரிருள் அவர்களே! இந்த மனிதர்களை எதிர்கொள்ளவும் அதிகபட்ச ஆபத்தில் இருக்கும் நம் யானை நண்பர்களை காப்பாற்றவும் ஏதோ திட்டம் வைத்திருப்பதாகவும் அதை மாநாட்டின் இறுதியில் கூறுவதாகவும் கூறினீர்கள்” என்று நினைவூட்டியது.
“ஆமாம் மாநாட்டுத் தலைவர் புலிவேந்தன் அவர்களே! நம்முடைய பொது எதிரியான மனிதர்களுக்கு எதிராக அவர்களது பாணியிலேயே ஆக்கிரமிப்பு தாக்குதலை நடத்த வேண்டும் என்பதே என் கருத்து. அதை காட்டுப்பன்றி கூர்மனும், மணிப்புறா வெண்ணிலாவும் அவர்கள் பாணியில் கூறிவிட்டார்கள். எனவே நான் தனியாக பேசுவது தேவையில்லை. அவர்களது உணர்வையும், கருத்தையும் நான் முழுமையாக ஏற்கிறேன். எங்கள் கரடி இனத்தை வைத்து வித்தை காட்டி பிச்சை எடுக்கும் கேவலமான மனிதர்களுக்கு எதிராக எதையும் செய்வதற்கு கரடிகளான நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று உறுதி கூறுகிறோம்” என்றது கரடி காரிருள்.
நிறைவாக பேச வந்த மாநாட்டுத் தலைவர் புலிவேந்தன் மிகுந்த தயக்கத்துடன் பேச ஆரம்பித்தது. “நண்பர்களே! இதுபோன்ற இக்கட்டான நிலையில் மாநாடு கூட்டி பேசும் நிலை உண்மையில் துயரம் தரும் நிகழ்வாகும். ஆனால் நாம் இதற்கு காரணம் அல்ல. இந்த உலகின் எஜமானர்கள் என்று தங்களைக் கருதிக்கொள்ளும் மனிதர்களின் செயல்களால் இந்த மாநாட்டை கூட்டுவதற்கு நாம் நிர்பந்திக்கப் பட்டிருக்கிறோம்.
உண்மையில் இந்த மனிதர்கள் தங்களை அதிபுத்திசாலிகளாக நினைத்துக் கொண்டு முட்டாள்தனமான செயல்களை தொடர்ந்து செய்து வருகிறார்கள். இக்காட்டில் வசிக்கும் எந்த விலங்கும், பறவையும், தாவரமும் மற்ற உயிர்களை தேவையின்றி கொலை செய்வதில்லை. ஆபத்திலிருந்து தற்காப்பதற்கும், அத்தியாவசிய உணவுத் தேவைக்கும் மட்டுமே நாம் மற்ற உயிர்களை தொந்தரவு செய்கிறோம். நாம் வேட்டையாடுவதில்கூட அறம் சார்ந்து செயல்படுகிறோம். நமது காட்டில் கருவுற்ற விலங்குகளையும், மிகவும இளவயது விலங்கு மற்றும் பறவைகளையும், பறவைகளின் முட்டைகளையும் வேட்டையாடுவதை நாம் சுயக்கட்டுப்பாட்டுடன் செய்வதில்லை.
புராதன மனிதர்களும்கூட வேட்டையாடும்போது அறம் சார்ந்தே வேட்டையாடினார்கள். வயது முதிர்ந்த அல்லது ஊனமடைந்த விலங்குகள் மற்றும் பறவைகளையும் மட்டுமே வேட்டையாடினார்கள். விலங்குகள் மற்றும் பறவைகளின் இனப்பெருக்க காலங்களில் மனிதர்கள் வேட்டையாடியதில்லை. அந்தக் கால மனிதர்கள் வேட்டையாடியதில் ஒரு சமூகப் பொறுப்பு இருந்தது. அந்த வேட்டையால் எந்த ஒரு உயிரினமும் முழுமையாக அழிந்து போனதில்லை.
ஆனால் மனித சமூகத்தில் மாற்றங்கள் ஏற்பட்டு சக மனிதனை போர் என்ற வன்முறையில் வென்று அடிமைப்படுத்தி குறுநிலமன்னனாக, அரசனாக, பேரரசனாக, சக்கரவர்த்தியாக தங்களை உருவகப்படுத்திய பின்னர் வேட்டை என்பது உணவு தேடும் தொழிலிருந்து பொழுது போக்காக மாறியது. அந்த அறம் இல்லாத மனிதர்களின் ஆதிக்க – ஆணவ உணர்வுகளுக்கு காரணமின்றி காட்டு உயிர்களை பலியாக்கினார்கள். அவர்களைத் தொடர்ந்து வந்த மனிதர்களோ அறிவியல் என்ற பெயரில் துப்பாக்கிகளைகண்டுபிடித்து அதன் மூலம் வேட்டையாடத் தொடங்கினார்கள். அந்த வேட்டையில் அவர்களது திமிர் மட்டுமே வெளிப்பட்டது. அவர்கள் வேட்டையாடிய விலங்குகள் மற்றும் பறவைகளின் பெயர்களோ, அவற்றின் எந்த இயல்போ இந்த துப்பாக்கி மூலம் வேட்டையாடிய மூட மனிதர்களுக்கு தெரியாது. அவர்களின் மன வக்கிரங்களுக்காக நம்மைப் போன்ற விலங்குகளை அழித்தொழித்தார்கள்.
இத்தகைய மனிதர்களுக்கு பாடம் புகட்டுவதாக நினைத்துக் கொண்டு அவர்களது பாணியிலேயே செயல்பட்டு அவர்களை அழித்தொழிப்பது நமது தரத்தை குறைக்கும் செயலாகிவிடும் என்பதே என் கருத்து. அதை நேரம் அம்மனிதர்கள் செய்வது தவறு என்று உணர்த்துவதும் நம் கடமைதான். அதற்கான வழிகளை கண்டறிய வேண்டும். உதாரணமாக கூற வேண்டும் என்றால் இது வரை ஒரு யானை இறந்து விட்டால் மற்ற யானைகள் மட்டுமே அங்கே கூடி நின்று இறுதி மரியாதை செய்கின்றன. இனி அவ்வாறான நிகழ்வுகள் ஏற்பட்டால் நாம் அனைத்து விலங்குகளும், பறவைகளும் ஒன்றுகூடி இறுதி மரியாதை செலுத்த வேண்டும். இதன் மூலம் நாம் மனிதர்களை ஓரளவு அச்சுறுத்த முடியும். மேலும் நமது ஒற்றுமையை அவர்களுக்கு தெரிவிக்கவும் முடியும். மேலும் மனிதர்கள் இதுவரை நுழையாத காட்டுக்குள் நுழைவதை கண்காணிக்க நம் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும். இதற்கு பறவைகளும், குரங்குகளும் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும். காடுகளுக்குள் அத்துமீறி நுழையும் மனிதர்களை அச்சுறுத்த நாம் அனைவரும் ஒன்று திரள வேண்டும். அப்போது மனிதர்கள் நம்மைத் தாக்கினால் தற்காப்புத் தாக்குதலை மட்டும் நடத்தலாம். நாம் மனிதர்களைப் போல தரம் தாழ்ந்து ஆக்கிரமிப்பு தாக்குதலை நடத்த வேண்டாம். தற்போது நம் கட்டுப்பாட்டில் உள்ள காடுகளை பாதுகாக்க மட்டும் போராடுவோம். நாம் இழந்த காட்டுப்பகுதிகளை மீட்பதற்கான போராட்டம் குறித்து அடுத்தடுத்த மாநாடுகளில் ஆலோசித்து திட்டமிடுவோம். மனிதர்களிலேயே எஞ்சியுள்ள பழங்குடியினரும், சுற்றுச்சூழல்வாதிகளில் சிலரும் காட்டில் வாழும் நம் மீது சிறிது அக்கறையுடன் இருக்கின்றனர். அவர்களோடு நாம் உறவு ஏற்படுத்திக்கொண்டு அவர்கள் மூலமாக மனித சமூகத்துடன் பேச்சு வார்த்தை நடத்த முயற்சி செய்யலாம்.
இதை முதற்கட்டமாக செயல்படுத்தி பார்க்கலாம். அதில் கிடைக்கும் அனுபவங்களை வைத்து அடுத்த கட்ட நடவடிக்கைகளை திட்டமிடலாம். இது என் கருத்து. இதை ஆதரிக்கவோ, எதிர்க்கவோ இந்த காட்டில் வாழும் அனைத்து உயிரினங்களுக்கும் உரிமை உள்ளது. பெரும்பான்மையினர் எடுக்கும் முடிவுக்கு நானும், இங்குள்ள அனைவரும் கட்டுப்படுவதாக முன்பே உறுதி எடுத்திருக்கிறோம். இனி உங்கள் முடிவு” என்று மாநாட்டு நிறைவுரையை முடித்தது புலிவேந்தன்.
அடுத்து நடந்த வாக்கெடுப்பில் புலிவேந்தன் முன்வைத்த தீர்மானங்கள் முழுமனதாக ஏற்கப்பட்டது. மனிதர்களின் ஆக்கிரமிப்பு போரினை எதிர்கொள்வதற்கான தற்காப்புப் போரில் முக்கியமான முதல் அடி எடுத்து வைக்கப்பட்டதாக பேசிக் கொண்டே கலைந்து சென்றன அக்காட்டில் வாழும் விலங்குகளும், பறவைகளும்.
- டார்வின் சார்வாகன்