சூழல் அமைவுகளையும், சூழல்சார் சமூகங்களின் வாழ்வியலையும் சிதைக்கும் இறால் பண்ணைகள்!
சூழல் அமைவுகள், அதனைச் சார்ந்து வாழும் மக்களுக்கு வெறுமனே வாழ்வாதாரமாக மட்டுமல்லாது, அவர்களின் கலாச்சார, பண்பாட்டு விழுமியங்களுக்கு அச்சாணியாகவும் உள்ளது. அவர்களின் வாழ்வுக்கு அடையாளமாக விளங்கும் அச்சூழலை, அவர்கள் தங்களின் அடையாளமாகவும் உணர்கின்றனர். மேலும், இயற்கையின் அங்கமான சூழல் அமைவைச் சார்ந்துள்ள அவர்களும், இயற்கையோடு இயைந்த வகையில் ஒத்திசைந்து தங்கள் வாழ்வையும், சூழல் நிர்வாக முறைகளையும் வகுத்து குழுவாக வாழ்ந்து வருகின்றனர்.
இந்த வாழ்வியலில் ஒட்டுமொத்த இனக்குழுவின் நலனை முன்வைக்கும் குழுஉரிமை என்பதற்கே முன்னுரிமை. தனிமனிதர்களுக்கான அதிகாரம் என்பது இவர்களின் வாழ்வியலுக்கு எதிரான ஒன்று. ஆனால், காலப்போக்கில் இயற்கைகையை வெறும் வளங்களாக முன்வைத்து காலனி ஆதிக்கக் காலத்தில் இருந்து, தற்போது வரை மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளின் காரணமாக சூழல் அமைவுக்கும், அதனைச் சார்ந்துவாழும் மனிதர்களுக்கும் இயற்கைக்குமான உறவுக்கும் இடையே பெரும் சிக்கல் நிலவுகிறது.
இதன் நீட்சியாகத்தான் காலம் காலமாக காட்டை நம்பி வாழ்ந்த தொல்குடிமக்கள், சூழல் பாதுகாப்பு, உயிரினப் பாதுகாப்பு என்கிற பெயரால் காடுகளை விட்டு அப்புறப்படுத்தப்பட்டு அந்நியப்படுத்தப்பட்டனர். இதேபோன்று, கடற்கரை ஓரங்களில் மீனவர்கள் வாழ்ந்த நிலவெளிகள் பெரும் பகாசுர நிறுவனங்களுக்கும், சுற்றுலாவை முன்னிறுத்தி அபகரிக்கப்பட்டும், தற்போது வரை கடலையும், கடற்கரையையும் அபகரிக்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன. அதன் சமகால உதாரணமாகக் கேரளாவின் திருவனந்தபுத்துக்கு அருகில் அதானி நிறுவனம் அமைத்துவரும் விழிஞ்சம் துறைமுகக் கட்டுமானம் உள்ளிட்ட எண்ணற்ற உதாரணங்களைக் கூறலாம். மேலும், இத்தகையத் திட்டங்கள் யாவும் ஒட்டுமொத்த நாட்டிற்கும் பயனளிக்கவே கொண்டுவரப்படுவதாக கூறப்பட்டாலும், உண்மையில் இதனால் முழுக்க முழுக்க பயனடைவது பகாசுர நிறுவங்களின் வல்லாதிக்க முதலாளிகள் (முதலாளித்துவம்) மட்டுமே.
இந்நிலையில்தான் இயற்கை வளங்களை நம்பி வாழும் சாமானியர்களின் குரலுக்கு நாம் அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டியதன் தேவை முதன்மை பெறுகிறது. மேலும், காலநிலை மாற்றத்தின் பாதிப்புகள் தீவிரமாகிவரும் நிலையில், அறிவியல் ரீதியாக மக்களின் பாரம்பரிய அறிவுக்கு முன்னுரிமை அளித்து ஆய்வுகள் மேற்கொள்வதும் இன்றியமையாததாகிறது. மேலும், இத்தகைய உரையாடலை பொதுச் சமூகத்தின் மையத்தில் கொண்டு சேர்ப்பதும் முதன்மை பெறுகிறது.
அந்த உரையாடலின் ஒரு பகுதியாக தமிழகத்தின் கடைகோடி மீனவக் கிராமத்தைச் சேர்ந்த(சூழலை நம்பி வாழும் சமுகத்தின்) மீனவப் பெண்ணுக்கு நடந்த கூட்டுப்பாலியல் வன்கொடுமையும், அதன் வழியாக வெளிவந்த இறால் பண்ணைகளின் கொடூர முகத்தையும், அதனைக் கண்டும் காணாததும் போல செயல்பட்ட அரசின் நிர்வாக அமைப்பையும், வலிமையற்ற சட்டங்களையும் பற்றி எடுத்துரைக்க விரும்புகிறேன்.
24.05.2022 அன்று ராமநாதபுரம் மாவட்டம், தங்கச்சிமடம் ஊராட்சிக்குட்பட்ட வடகாடு கிராமத்தைச் சார்ந்த மீனவப்பெண் ஒருவர், இயற்கையாக கடலில் வளரும் கடற்பாசி சேகரிக்கச் சென்றபோது, அங்கிருந்த இறால் பண்ணையில் பணிபுரிந்த வடமாநிலத் தொழிலாளர்கள் சிலரால் கூட்டுபாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்டார். இதோடு, அவரது முகத்தின் மீது ரசாயனம் ஊற்றியும் கொடூரமான முறையில் சிதைத்திருந்தனர். இந்த கொடூர சம்பவம் அப்பகுதி மீனவ மக்களிடத்தில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. மேலும், அப்பகுதி மீனவர்கள் ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள இறால் பண்ணைகளை இழுத்து மூட வேண்டும் எனக்கோரி சாலைமறியலிலும் ஈடுபட்டனர்.
இதுகுறித்தான செய்தி சமூகவலைதளங்களிலும், ஊடகங்களிலும் வெளியானது. பெரும்பாலும், தமிழகத்தில் நிலவும் வடமாநிலத் தொழிலாளர்களுக்கு எதிரான வெறுப்பை முன்னிறுத்தியே செய்திகள் வெளியாகின. மேலும், பாலியல் வன்கொடுமையை அது நிகழக்காரணமாக இருந்த சமூகப் பின்னணி குறித்தும், விளிம்புநிலை பெண்களான மீனவப்பெண்களுக்கும், அச்சமூகத்திற்கும் நிலவும் அடக்குமுறைகள் என்கிற கோணத்தில் துளியும் கவனம் செலுத்தாத வகையிலான செய்திகளே பெரும்பாலும் வெளியானது.
இந்த பிரச்சனையின் மையக்கருவாக எழுந்திருக்க வேண்டிய இறால் பண்ணை பிரச்சனைகளும், விளிம்பு நிலை மக்களின் மீதான அதிகார வர்க்கத்தின் வரம்பு மீறல்களும், பணம்படைத்த இறால் பண்ணை உரிமையாளர்களுக்கு அதிகார வர்க்கத்தினர் துணைநின்றது குறித்த கோணத்தில் ஊடக செய்திகள் பெரிதும் கவனம் செலுத்தவில்லை. இதன் காரணமாக இந்தச் சம்பவத்தின் பின்னணிக் குறித்த உரையாடல் பொதுச்சமூகத்தில் ஓர்மைக் கொண்டதாகவே எதிரொலித்தது. ஆனால், இவ்வாறு ஒரு சம்பவம் எதிர்காலத்தில் நடந்தேறாமல் இருப்பதை உறுதிபடுத்த வேண்டுமானால், பல்வேறுபட்ட கோணத்தில் அணுகியிருக்க வேண்டுமென்பதே என்பதே அறம் .
இந்நிலையில், இந்த சம்பவத்தின் பின்னணி குறித்து ஆய்ந்தறியவும் , இப்பகுதியில் பாரம்பரியாக கடற்பாசி சேகரித்து மீனவ பெண்களின் வாழ்க்கை, சமூகப்பாதுகாப்பு, பணிப்பாதுகாப்புச் சூழல் மற்றும் கடலோர இறால்பண்ணைகள் குறித்த உண்மை நிலையை வெளிக்கொணரவும் மன்னார் வளைகுடா, பாக் ஜலசந்தி உயிர்ச்சூழல் பாதுகாப்பு நிலை, பாரம்பரிய மீனவர் உரிமைகள் குறித்த உண்மை நிலையை கள ஆய்வுசெய்து கண்டறியும் நோக்கத்துடனும், மீனவ மக்களோடு செயலாற்றும் கடலோர செயல்பாட்டு கூட்டமைப்பு உண்மை கண்டறியும் குழுவொன்றை அமைத்து ஆய்வு மேற்கொண்டது.
இந்தக் குழுவின் கள ஆய்வானது மன்னார் வளைகுடா மற்றும் பாக் நீரிணைப் பகுதியில் இறால் பண்ணைகள் எற்படுத்தியிருக்கும் சூழல் சிதைவுகள் குறித்த பல உண்மைகளைக் கண்டறிந்தது. ராமநாதபுரம் மாவட்டம் 271 கி.மீ கடலோரப் பகுதியைக் கொண்டது. இதில் ராமேஸ்வரம் முதல் எஸ்.பி பட்டினம் வரை உள்ள வடகடல்பகுதி பாக் நீரிணை (130 கி.மீ )கடல் பரப்பிலும், தனுஷ்கோடி முதல் பேட்மான் நகர்வரை உள்ள தென்கடல்பகுதி(140 கி.மீ) மன்னார் வளைகுடா கடல் பரப்பிலும் அமைந்துள்ளது. இதனைச் சார்ந்துள்ள 119 கடலோர கிராமங்களைச் சேர்ந்த, சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள், மீன்பிடி மற்றும் மீன்சார்பு தொழிலிலிலும் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல, இங்குள்ள 21 மீனவக் கிராமங்களைச் சேர்ந்த மீனவப்பெண்கள், இயற்கையாக கடலுக்குள் வளரும் கடற்பாசி சேகரிப்பிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இப்பகுதியானது கடற்சார் தேசியப் பூங்காவாக அறிவிக்கப்பட்டதில் இருந்து, சூழல் பாதுகாப்பு என்கிற பெயரில் இவர்கள் எண்ணற்ற கட்டுப்பாடுகளையும், வனத்துறையின் அழுத்தங்களையும் சந்தித்து வருகின்றனர். குறிப்பாக, பாசி எடுக்கச் செல்லும் பெண்கள் எண்ணற்ற இன்னல்களைச் சந்திக்கின்றனர்.
இதோடு, பாசிகளை எடுப்பதால், பவளப்பாறைகள் அழிவதாக அறிவியல்பூர்வமற்ற வகையில் வனத்துறை குற்றச்சாட்டை முன்னிறுத்தி வருவதாகவும் இப்பகுதி மக்கள் குறிப்பிடுகின்றனர். மேலும், இறந்த பவளப்பாறைகளில் மட்டுமே கடற்பாசி வளரும் என்றும், அதனைப் பாரம்பரியமாக பறித்து வருவதாகவும் கூறுகின்றனர். மேலும், இவ்வாறான குற்றச்சாட்டை வனத்துறை நிருபித்துக் காட்ட வேண்டுமென சவாலாகவும் தங்கள் பாரம்பரிய அறிவை முன்வைக்கின்றனர். இந்நிலையில், பாரம்பரியமாக இறந்த சுண்ணாம்புப்பாறைகளில் பாசி எடுத்துவரும் பெண்களின் உரிமைகளை பறிக்கும் முயற்சியிலும், செயற்கை பாசி வளர்ப்பை விளம்பரப்படுத்தும் வகையில் வனத்துறை இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்து வருவதாகவும் தெரிவித்தனர். இதேவேளையில், பவளப்பாறைகள் குறித்து இவ்வளவு கவலைக் கொள்ளும் வனத்துறையினர், இந்த வடகாடு பகுதியில் செய்திருந்தது என்னவோ இதற்கு எதிர்மறையான நடவடிக்கைகள்தான்.
வடகாடு பகுதி ராமேஸ்வரம் தீவுப் பகுதியில் அமைந்துள்ளதால் கடற்கரையில் இருந்து வெகு சில மீட்டர் தூரம்வரை(தற்போது நிலமாக உள்ள பகுதிகளில்) முன்பிருந்து, மடிந்த பவளப்பாறைகள் இயல்பாகத் தென்படும். இவை, தரைப்பரப்பிலிருந்து ஒரு மீட்டருக்கும் குறைவான ஆழத்திலிருந்தே கிடைக்கிறது. எனவே, இப்பகுதியில் வசிக்கும் மீனவ மக்கள் தங்களின் தேவைக்காக சிறு பள்ளம் தோண்டினாலும் சுண்ணாம்புப்பாறைகள் இயல்பாகக் கிடைக்கின்றது. இதன் காரணமாக, வாழ்வியல் காரணங்களுக்காக பயன்படுத்தும் போது, சிறு துண்டு சுண்ணாம்புப் பாறைகள் கிடைத்தாலும் வனத்துறை கடுமையானக் கட்டுப்பாடுகளையும், அடக்குமுறைகளையும் அரங்கேற்றி வருவதாகவும் தெரிவித்தனர்.
மேலும், சுண்ணாம்புப் பாறைகள் வைத்திருப்பதாகக்(சூழலை சிதைப்பதாக) கூறி வனத்துறை இப்பகுதியில் அடிக்கடி சோதனையிலும் ஈடுபட்டு வருகிறது. ஆனால், இவ்வளவு கரிசனமாக பவளப்பாறையையும், இயற்கையையும் காப்பாற்றத் துடிக்கும் வனத்துறையோ, பிற அரசு அமைப்புகளோ இறால் பண்ணை உரிமையாளர்கள் பெரும் பாறைகளைப் பெயர்த்தெடுத்து இறால் குட்டைகளை அமைத்திருப்பதைக் கண்டுகொள்ளவே இல்லை. இதனைக் கள ஆய்வின் போது நேரடியாகவே காண முடிந்தது. மேலும், பாக் நீரிணையின் சூழலைச் சிதைக்கும் வகையில், இறால் பண்ணையிருந்து வெளியேறும் கழிவு நீர் கடலில் கலக்கும் வகையில் பெரும் வாய்க்கால்களும் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மீனவப்பெண்ணுக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை மற்றும் கொலைச் சம்பவத்திற்கு பிறகு, இந்த சம்பவத்திற்குக் காரணமாக அமைந்த இறால் பண்ணை, முறைப்படி சட்ட அனுமதி பெறவில்லை எனக் கூறி கடல்சார் நீர்வாழ் உயிரின வளர்ப்பு ஆணையம் சட்டவிதிகள் 2005, தொகுதி-4 பிரிவு 13 உட்பிரிவு 5 ன் கீழ் பதிவு செய்யாமல் இருந்தது கண்டறியப்பட்டு மூடப்பட்டது. ஆனால், இங்கு எழும்பும் மிகப்பெரும் கேள்வி என்னவென்றால், எளிய மக்கள் சூழலைச் சிதைப்பதாகக் குற்றம்சாட்டும் அதிகார அமைப்புகளின் கண்ணில் இறால் பண்ணை உரிமையாளர்களின் விதிமீறல்கள் ஏன் தென்படவில்லை? இச்சம்பவத்திற்கு முன்னும் பலமுறை இப்பகுதியைச் சார்ந்த பாரம்பரிய மீனவர்கள் இறால் பண்ணையால் நிகழும் சூழல்சீர்கேடு குறித்துச் சுட்டிக்காட்டியும் கவனம் கொள்ளாதது எதனால் என்ற கேள்வியும் எழுகிறது.
இந்தச் சூழலில், உண்மை அறியும் குழுவின் கள ஆய்வில், ராமேஸ்வரம் தாலுகாவில் உள்ள அறியாங்குண்டு முதல் பிள்ளைகுளம் வரையிலான வெறும் இரண்டு கிலோமீட்டர் பகுதிக்குள்ளேயே, கிட்டத்தட்ட 16 இறால் பண்ணைகள் இயங்கி வருவதும், இதில் எண்ணற்ற இறால் குட்டைகள் செயல்பட்டு வருவதும் கண்டறியப்பட்டது.
மேலும், இந்த இறால் பண்ணைகளினால் இப்பகுதியில் நிலத்தடி நீர் முற்றிலும் பயன்பாட்டு தன்மையை இழந்து, பிள்ளைகுளம் பகுதியில் வசித்த 15 வீடுகளை சார்ந்த குடும்பத்தினர் வேறு இடங்களுக்கு இடம் பெயரும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். அதோடுமட்டுமல்லாது, மக்கள் பயன்பாட்டிற்கும், கால்நடை பயன்பாட்டிற்கும், குடிநீர் தேவையை பூர்த்தி செய்யவும் பயன்பாட்டிலிருந்த பெரியாறு இறால் பண்ணைகளிலிருந்து வெளியேறும் கழிவுகளினால் முற்றிலும் பாதிப்புக்கு உள்ளாகி நச்சு ஆறாக உருப்பெற்றுள்ளது. ஆடு மாடுகளின் மேய்ச்சல் நிலங்களும் முற்றிலும் நஞ்சாகியுள்ளது. உச்சபட்சமாக, இறால் பண்ணையிலிருந்து வெளியேறும் கழிவு நீர் நேரடியாக கடலில் கலந்து மன்னார் வளைகுடா மற்றும் பாக் ஜலசந்தி கடற்பரப்பின் உயிர்ச்சூழலுக்கு ஊறுவிளைவித்து வருவதும் கடலோர செயல்பாட்டு குழுவின் உண்மை அறியும் குழுவின் ஆய்வில் தெரியவந்தது.
ராமநாதபுரம் என்று மட்டுமல்ல, முத்துபேட்டை, கொடியம்பாளையம் என தமிழகம் முழுதும் எங்கெல்லாம் இறால் பண்ணைகள் உள்ளதோ அங்கெல்லாம் ஏதோவொரு வகையில் சூழல் சீர்கேடு நடதேறிக் கொண்டேதான் இருக்கிறது. அதுகுறித்து மக்கள் போராட்டங்கள் வாயிலாகவும், மனுக்கள், கோரிக்கைகள் என அரசியலைமைப்பு வழங்கியுள்ள எல்லா ஜனநாயக வடிவங்களிலும் தங்கள் எதிர்ப்புக் குரலைத் தெரிவித்துக் கொண்டுதான் இருகின்றனர். ஆனால், இறால் பண்ணைகள் குறித்து அதிகாரிகள் மேற்கொண்ட நடவடிக்கைகளின் எண்ணிக்கை மிகச்சொற்பமே. இதற்கு(சில அதிகாரிகளின் துணிச்சல் மிகு செயல்பாடுகளுக்கு) இறால் பண்ணை உரிமையாளர்களின் பின்புலமும், அழுத்தமும் மிகமுக்கியக் காரணம் என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டியதுள்ளது. எவ்வாறு சட்டவிரோத கிரனைட் மற்றும் மணல்குவாரி கும்பல்கள் அதற்கெதிராக ஜனநாயக ரீதியாகப் போராடும் செயற்பட்டாளர்களை அச்சுறுத்துகிறதோ, அதே அளவுக்கான அழுத்தம் இங்கும் நிலவுகிறது.
வடகாடு பகுதியில் நடந்த பாலியல் சம்பவத்திலும் கூட, மீனவ மக்களின் வாழ்வியலை நசுக்கும் இறால் பண்ணை உரிமையாளர்களின் போக்கும், ஆணவமும், பணபலமும் பிழைப்புத் தேடி இங்கு வந்த வடமாநில தொழிலாளர்களிடம் எதிரொலித்துள்ளது என்பதையும் நாம் உணர்ந்துகொள்ளலாம். மேலும், தற்போதைய சூழலில் தமிழகம் முழுதும் உள்ள பெரும்பாலான இறால் பண்ணைகளில் வடமாநில தொழிலாளர்கள் அதிகமாக பணிபுரிகின்றனர். இறால் பண்ணைகள் கிராமங்களை ஒட்டிய ஒதுக்குப்புறங்களில் செயல்படுவதால், இப்பகுதியில் வசிக்கும் மக்களும், பெண்களும் இந்தப் பகுதிகளை ஒட்டியுள்ள இடங்களுக்கு தற்செயலாக செல்வதற்கு கூட அச்சுறுத்தலானச் சூழலே நிலவுகிறது.
பெரும்பாலும், இறால் பண்ணைகள் ஆறு மற்றும் முகத்துவாரப் பகுதிகளில் அமைக்கப்படடுள்ளதால் இவை வெளியிடும் கழிவுநீர், மீன் உற்பத்தியாகும் நீர்நிலைப் பகுதிகளையும் சிதைத்து, மண் மற்றும் நீரின் தன்மையை திரிபடையச் செய்து, நேரடியாக ஆறு, கடல் மற்றும் கடலோரச் சூழல் அமைவுகளைச் சிதைக்கிறது.
இறால் பண்ணைகளை முறைப்படுத்த கடல்சார் நீர் வாழ் உயிரின வளர்ப்பு ஆணையம் போன்ற நிர்வாக அலகுகளும், சட்டங்களும் இருப்பினும் கூட, இயற்கையின் தன்மைக்கும், அதன் அறிவியலுக்கும் முரணான வகையில் இறால் பண்ணைகளின் செயல்பாடுகள் விளங்குவதால் இறால் பண்ணைகளை இழுத்து மூட அரசுகள் முன்வர வேண்டும். மீனவ அமைப்புகளும், மக்கள் உரிமை அமைப்புகளும், இறால் பண்ணைகளால் பாதிக்கப்பட்டு வரும் மக்களும் பல ஆண்டுகளாக இக்கோரிக்கையை முன்வைத்து வருகின்றனர். இதுகுறித்து தமிழக அரசு கவனம் கொள்ள வேண்டும். ஏனென்றால், இது மக்களின் பிரச்சனை மட்டுமல்லாது, நம் சார்ந்துள்ள சூழல் அமைவின் மீதான அச்சுறுத்தலுக்குத் தீர்வு என்கிற அடிப்படையில் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.
மேலும், காலநிலை மாற்றப் பாதிப்புகளை மட்டுப்படுத்த பல்வேறு தீர்வுகளை உருவாக்கி வரும் நிலையில் சூழல் அமைவுகளைச் சீர்குலைக்கும் இறால் பண்ணைகள் விவகாரடத்தில் அரசு தனிக்கவனம் செலுத்த வேண்டும். இந்நிலையில், மீனவப்பெண்மணி கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலைசெய்யப்பட்டதைத் தொடர்ந்து கடலோர செயல்பாட்டுக் கூட்டமைப்பு அமைத்த உண்மைக் கண்டறியும் குழு வெளியிட்ட பரிந்துரைகளில் சிலவற்றைக் உற்றுநோக்குவதும், நடைமுறைப்படுத்துவதும் தற்போது நிலவும் பல பிரச்சனைகளுக்கு தீர்வாகவும் அமையும். அவை:
- கடல்சார் நீர் வாழ் உயிரின வளர்ப்பு ஆணையம் சட்டவிதிகள் 2005, தொகுதி-4 பிரிவு 13 உட்பிரிவு 5 ன் கீழ் பதிவு செய்யாமல் இறால் பண்ணை இயங்குவதைக் கண்காணிக்க தவறிய அதிகாரிகள் மீது துறைரீதியான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
- ராமநாதபுரம் மாவட்டத்தில் இயங்கி வரும் அனைத்து இறால் பண்ணைகள் குறித்தும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழு அமைத்து ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும்.
- பாசி எடுக்கும் பாரம்பரிய மீனவப் பெண்களின் தொழில் உரிமையை பாதுகாக்கும் வகையிலும், வாழ்வாதார வாழ்வியல் உரிமைகளைக் காக்கும் வகையிலும் தனித்துவமான அடையாள அட்டை வழங்கப்பட வேண்டும்.
இந்த மூன்று பரிந்துரைகளும், இந்தச் சம்பவத்திற்கு மட்டுமல்லாது இறால் பண்ணைகளினால் சீர்கேடு நிலவும் எல்லா இடங்களிலும் சட்டங்களை நடைமுறைப்படுத்தவும், பணமுதலைகளுக்குச் சாதகமாக செயல்படும் அதிகாரிகள் மீது நடவடிக்கை, முறையான ஆய்வுகள், பாரம்பரியமாக வாழும் மக்களின் கருத்துகளுக்கு முன்னுரிமை என்கிற வகையில் நடைமுறைப்படுத்தப்படுமாயின் சூழல் அமைவைச் சார்ந்து வாழும் மக்களின் நலனும், சமூகங்களின் நலனும் காக்கப்பட்டு சூழல் பாதுகாப்பும் உறுதி செய்யப்படும்.
இறுதியாக, இந்தக் குழுவில் இடம்பெற்றிருந்த கேரள மத்தியப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணிபுரிந்து ஓய்வுபெற்ற பேராசிரியர் முனைவர் அருணாச்சலம் கூறிய கருத்தை கொள்கை வகுப்பாளர்களும், நாமும் மிகுந்த கவனத்தோடு உற்றுநோக்க வேண்டியுள்ளது.
‘இறால் பண்ணைகள் சட்டத்தின் படி இயங்குகிறதா? விதிமீறலா? என்பதைத் தாண்டி இயற்கைக்கும், சூழல் அமைவுக்கும் சரியா’ என்பதே அவரின் கேள்வி; காலநிலை மாற்றப் பாதிப்புகள் அதிகரித்து, அதனால் விளிம்புநிலை மக்களும், பெண்களும், குழந்தைகளும் பாதிக்கப்பட்டுவரும் நிலையில் ஓங்கியொலிக்கும் கேள்வி அது. இயற்கையின் விதிகளையும், விளிம்புநிலை மக்களின் நலனையும் உற்றுநோக்க வேண்டியக் காலகட்டம் இது.
- பிரதீப் இளங்கோவன்
- [email protected]