2022 செப்டம்பரில் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு தலைமையில் கூடிய கூட்டத்தில் இயற்கை வேளாண்மைக்கெனத் தனிக்கொள்கை வரைவை வெளியிடுவது குறித்து முதன்முதலில் ஆலோசிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து தாங்கள் பல ஆண்டுகளாக முன்வைத்து வரும் இயற்கை வேளாண்மைக் கொள்கையை உடனடியாகக் கொண்டுவரக்கோரி பல்வேறு தீர்மானங்கள் மூலமாகவும் ஆர்ப்பாட்டங்கள் மூலமாகவும் விவசாய அமைப்புகளும் இயற்கை விவசாய முன்னோடிகளும் மீண்டும் வலியுறுத்தத் தொடங்கினர். அதற்கிடையில் கடந்த டிசம்பர் 1ஆம் தேதியன்று மீண்டும் தலைமைச் செயலாளர் தலைமையில் கூடிய கூட்டத்தில் தமிழ்நாடு இயற்கை வேளாண் கொள்கையை ஒரு வாரத்தில் இறுதிப்படுத்த வேண்டும் என்றும், அடுத்த பட்ஜெட் கூட்டத்தொடருக்கு முன்னர் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் ஆலோசனைகள் நடைபெற்றதாக செய்திகளில் எல்லாம் வந்தது. ஆனால், இன்னும் வரைவுக்கொள்கை வெளிவந்த பாடில்லை.
இயற்கை வேளாண் கொள்கை – ஏன் அவசியம்?
முதலில் ஒன்றைத் தெளிவுப்படுத்திக்கொள்ள விரும்புகிறேன். இங்கு இயற்கை வேளாண்மை என்பது அங்கக (organic), நீடித்த (sustainable), நிலையான (permaculture), உயிராற்றல் (biodynamic), சூழலியல் (agroecology) ஆகியன சார்ந்து எனப் பல்வேறு பெயர்களில் பல்வேறு வழிமுறைகளைக் கையாளும் அனைத்து வகை வேளாண்மையையும் சேர்த்தே சுட்டுகிறது. பொதுத்தளத்தில் அனைவரும் அறிந்த, புரிந்துகொள்ளத்தக்க ஒரு சொல்லாடலைப் பயன்படுத்த வேண்டும் என்பதற்காகவே இயற்கை வேளாண்மையைத் தேர்ந்தெடுத்துள்ளேன். எனவே, இயற்கை வேளாண்மை என்பது ரசாயன உரங்கள், உயிர்க்கொல்லிகளை பயன்படுத்தாத மக்களையும் சூழலையும் அடிப்படையாகக் கொண்ட மரபு மற்றும் நவீன வேளாண் முறைகள் அனைத்தையும் உள்ளடக்கியதாகும். இயற்கை வேளாண் கொள்கை என்பது தமிழ்நாட்டிற்கு என தனித்த, தமிழ்ச் சூழலையும் வாழ்வியலையும் நிலவியலையும் மையமாகக் கொண்டு, தமிழகத்தின் பொருளாதார நலன், சூழல் நலன், சுகாதார நலன், உழவர் நலன் போன்றவற்றைக் காக்க வேண்டி அரசு முன்னெடுக்க வேண்டிய அவசியமான, முதன்மையான செயல்களில் ஒன்று. பச்சைப் புரட்சியின் விளைவாக நம் நிலங்களில் வந்து விழுந்த வீரிய வித்துகள் ரசாயன உரங்களை அள்ளித் தின்றும் நிலத்தடிநீரை உறிஞ்சிக் குடித்தும் பசபசவென வேகமாக வளர்ந்தும் எதிர்ப்புத்திறன் சிறிதுமின்றி பூச்சிக்கொல்லி ‘மருந்து’களை நம்பியே வளர்ந்து வருகிறது. இப்படி ஒவ்வொரு முறையும் பயிர்கள் வளர்ந்து வருவதற்குள் உழவர்களின் வாழ்வு படிப்படியாகத் தேய்ந்து தாழ்ந்தே போய்விட்டது. அது போதாதென்று விளைந்த பயிருக்குச் சரியான விலை கிடைக்காமல் போய்விடும் பட்சத்தில் கடன்பட்ட உழவர்களும் கடைசியாகப் பூச்சிக்கொல்லி ‘மருந்து’களையே நம்பி இரு(ற)க்கின்றனர்.
வேளாண்மையை மையப்படுத்தித் தொடங்கப்பட்ட அனைத்து விதை நிறுவனங்களும், உர நிறுவனங்களும், டிராக்டர் நிறுவனங்களும் இன்னும் பல தொழிலதிபர்களும் கோடிகளைக் குவிக்கும் பொழுது இந்தியாவில் வேளாண்மையின் நிலை மட்டும் சரிந்தபடியே உள்ளது. இதற்குக் காரணம் நவீனத்தின் பெயரால் நாம் ஏற்றுக் கொண்ட ரசாயனங்கள் சார்ந்த சூழலைப் பாதிக்கும் வணிகமயப்பட்ட வேளாண் உற்பத்தி முறைகளே. இந்த வணிகமய வேளாண் உற்பத்தி முறைகள் உழவர்களின் வாழ்விலும் மக்களின் உடல் நலத்திலும் ஏற்படுத்திய பாதிப்புகள் எல்லாம் ஊர் அறிந்த ரகசியம். இந்த வணிகமய வேளாண்மையின் பாதிப்புகளிலிருந்து மக்களையும், சூழலையும், உணவையும் பாதுகாக்கவே உலக நாடுகள் பலவும் இயற்கை வழி வேளாண்மைக்கு வேகமாக மாறி வருகின்றன. இந்தியாவிலும்கூட பல்வேறு மாநிலங்களில் இயற்கை வேளாண்மைக்கான கொள்கைகளை வகுத்து அதை வெற்றிகரமாக செயல்படுத்தியும் வருகின்றனர். ஆனால், “உழந்தும் உழவே தலை” என்று கூறிய தமிழ்நாடு மண்ணையும் மக்களையும் காக்கும் இயற்கை வேளாண்மைக்கான முதற்கட்ட வரைவுக் கொள்கையினைக்கூட இன்னும் வெளியிடவில்லை என்பது ஏமாற்றமாகவே இருக்கிறது.
பிற மாநிலங்களில் இயற்கை வேளாண் கொள்கை:
இந்தியாவில் பல்வேறு மாநிலங்கள் இயற்கை வேளாண்மைக்கு மாறவும், வேளாண்துறையில் பெரிய திட்டங்களைத் தீட்டவும், சீரிய மாற்றங்களை கொண்டு வரவும் ஒன்றிய அரசையே எதிர்பார்த்துக் கொண்டுள்ள வேளையில், சில மாநிலங்கள் தங்களுக்கு என்று தனி வேளாண் கொள்கையை அறிவித்தும் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தியும் முன்னத்தி ஏராக வலம் வருகின்றன. அவற்றில் முதன்மையானது சிக்கிம். 2016 ஜனவரி முதல் 100% (organic) இயற்கை வேளாண்மையை மேற்கொள்ளும் ஒரே இந்திய மாநிலமாக விளங்கி வருகிறது.
ஒடிசா அரசு 2018ஆம் ஆண்டு தொடங்கி மாநிலத்திற்கான இயற்கை வேளாண் கொள்கையை அறிவித்துச் செயல்படுத்தி வருகிறது. அதன்படி 2017ல் தொடங்கப்பட்ட சிறுதானியங்களுக்கான சிறப்புத் திட்டத்தைப் பயன்படுத்தி பழங்குடியினர் பகுதிகளில் இயற்கை முறையில் சிறுதானியங்கள் ஏறத்தாழ சாகுபடி செய்ய ஊக்குவித்தனர். இன்று சுமார் 53,230 ஹெக்டேர் பரப்பளவில் சிறுதானியங்களின் சாகுபடி இயற்கை முறையில் நடைபெற்று வருகிறது. மேலும் இங்கு உற்பத்தியாகும் சிறுதானியங்களை அரசே நேரடியாக கொள்முதல் செய்து பொது விநியோக அமைப்பின் கீழ் அங்கன்வாடிகளிலும், மதிய உணவு போன்றவற்றிலும் வழங்கப்படுகிறது. இதன் மூலம் உழவர்களுக்கு நியாயமான விலை கிடைக்க வழி செய்யப்படுவதோடு, மாநிலத்தின் ஊட்டச்சத்துக் குறைபாடு சிக்கல்களையும் குறைக்க உதவுகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் இயற்கை வேளாண் நுட்பங்களால் சிறுதானியங்களின் விளைச்சலும் சுமார் 28% கூடியது குறிப்பிடத்தக்கது.
வடமாநிலமான உத்தரகண்ட் அனைத்து மாநிலங்களுக்கும் முன்னோடியாக 2000ஆம் ஆண்டிலேயே மாநிலத்தின் இயற்கை வேளாண் கொள்கையை அறிவித்தது. மேலும், இயற்கை விளைபொருட்களுக்கெனத் தனி வாரியத்தை 2003ல் அமைத்து அதன் வழியாக ஒவ்வொரு வேளாண் விளைபொருளுக்கும் ஏற்ற பிரத்யேகப் பகுதிகளைக் (crop specific clusters) கண்டறிந்து அந்தப் பயிர்களை இயற்கை முறையில் சாகுபடி செய்வதற்கென உழவர்களுக்குப் பயிற்சியும் தொழில்நுட்ப உதவிகளும் வழங்குகிறது. மேலும் 2019ல் உத்தரகண்ட் அரசு இயற்கை வேளாண் சட்டம் ஒன்றை நிறைவேற்றி 10 ஒன்றியங்களை முழுவதும் இயற்கை வேளாண் பகுதிகளாக அறிவித்தது. அதன்படி அந்த குறிப்பிட்ட ஒன்றியங்களில் ரசாயன உரங்கள் பூச்சிக்கொல்லிகள் போன்றவற்றை விற்பது, வாங்குவது தண்டனைக்குரிய குற்றமாகும். 2019 நிலவரப்படி சுமார் 18% வேளாண் நிலங்கள் முழுவதும் இயற்கை (organic) முறைக்கு மாறியிருப்பதும் உத்தரகண்ட் அரசு 100% இலக்கை நோக்கிப் பயணிப்பதும் குறிப்பிடதக்கது.
கர்நாடக மாநிலத்திலும் தமிழகத்தைப் போலவே குடிமைச் சமூக அமைப்புகளின் தொடர் முயற்சிகளால் உழவர்களிடையே இயற்கை வேளாண்மை குறித்து மிகப் பெரிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக கடந்த 2017ல் கர்நாடக அரசு இயற்கை வேளாண் கொள்கையை அறிவித்தது. இதன் மூலம் இயற்கை வேளாண் இடுபொருட்களின் உற்பத்தி, மதிப்புக்கூட்டல், உழவர்-நுகர்வோர் நேரடித் தொடர்புகள் போன்றவற்றை உருவாக்குவதில் கவனம் செலுத்தி வருகிறது.
கேரள மாநிலம் 2007ம் ஆண்டே மாநிலத்திற்கான இயற்கை வேளாண் கொள்கையை அறிவித்து செயல்படுத்திவருகிறது. இந்தக் கொள்கை அரசு மாநில உயிர்பன்மய ஆணையத்தின் (State Biodiversity Board) மூலம் வகுத்து செயல்படுத்திவருகிறது. ஒவ்வொரு ஆண்டும் இயற்கை வேளாண் சார்ந்த பயிற்சி, இயற்கை உரங்கள் தயாரிப்பு, மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் காய்கறிகள் பழங்கள் சாகுபடி, சாண எரிவாயு கலன் அமைத்தல், ஆர்கானிக் சூப்பர் மார்க்கெட் போன்றவற்றிற்காக சில கோடிகளை ஒதுக்கி இயற்கை வேளாண்மையை மாநிலம் முழுவதும் பரவலாக்கி வருகிறது. அதிலும் இத்திட்டங்கள் மூலம் பலனடைபவர்களில் 10% பெண்களாக இருப்பதையும் உறுதி செய்கிறது.
ஆந்திர மாநிலத்தில் கடந்த இருபது ஆண்டு செயல்பாடு இயற்கை வேளாண்மையில் இந்தியாவிற்கே வழிகாட்டுவதாக அமைந்துள்ளது. Andhra Pradesh Community managed Natural Farming (APCNF) என்று அறியப்படும் இந்தத் திட்டம் 2004ல் தொடங்கப்பட்டது. கிராமப்புற வாழ்வாதாரத்தை மேம்படுத்த ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டம், முதலில் மாநிலம் முழுவதும் மகளிர் சுய உதவிக் குழுக்களை உருவாக்கி ஒருங்கிணைத்தது. அவற்றின் வழியாக ரசாயன பூச்சிக்கொல்லிகளுக்கு மாற்றாக இயற்கை முறையில் மூலிகை பூச்சி விரட்டிகளைத் தயாரித்து உழவர்களுக்கு விநியோகம் செய்யத் தொடங்கியது. பின்னர் மண்வள மேம்பாடு, நீர் மேலாண்மை என்று பல இடங்களில் விரிவு பெற்றது. தனித்தனி உழவர்களுக்குப் பயிற்சி அளித்து இயற்கை வேளாண்மைக்கு மாற்றுவதைவிட ஒரு கிராமம், ஒன்றியம், தாலுகா முழுவதுமென ஒருங்கிணைந்த முறையில் இயற்கை வேளாண்மைக்கு மாறினால்தான் நீடித்த பலன்களைக் காண முடியும் என்று உணர்ந்தது அரசு. 5 முதல் 7 ஆண்டுகள் வரை பல்வேறு பயிற்சிகளுக்கான உதவிகளை தேர்ந்தெடுக்கப்பட்ட கிராமங்களுக்கு வழங்கியது.
தேர்ந்தெடுக்கப்பட்ட கிராமப் பஞ்சாயத்துகளில் குறைந்தது 85% உழவர்களை இயற்கை வேளாண்மைக்கு மாற்றியது. அவர்களுக்குப் பயிற்சி அளித்து உதவுவதற்காக அனுபவமிக்க பயிற்சியாளர்களை (உழவர்கள்) அந்தந்த கிராமங்களிலேயே தங்கி, பயிற்சி அளித்திடவும் வழிவகை செய்தது. இதன் பயனாக 2016ல் நாற்பதாயிரமாக இருந்த இயற்கை உழவர்கள் மற்றும் வேளாண் தொழிலாளர்களின் எண்ணிக்கை 2020-21ல் 7,50,000 ஆக உயர்ந்தது. அதாவது, 4 ஆண்டுகளில் 17 மடங்கு வளர்ச்சி. இயற்கை வேளாண்மையை வெறும் உணவு உற்பத்தித் தொழிலாக மட்டும் பார்க்காமல் உழவர்களுக்கான வாழ்வாதாரத்தோடும், வேளாண் தொழிலாளர்களின் உடல் நலத்தோடும், கிராமப்புறப் பெண்களின் முன்னேற்றத்தோடும், நுகர்வோருக்கு கிடைக்கும் ஊட்டச்சத்து பலன்களோடும், தற்சார்புப் பொருளாதாரத்தோடும் பொருத்திப் பார்த்து அனைவரையும் உள்ளடக்கிய ஓர் அணுகுமுறையைக் கையாண்டதால்தான் இத்தகைய மாற்றம் சாத்தியமாயிற்று.
என்ன செய்ய வேண்டும் தமிழ்நாடு?
தமிழ்நாட்டில் திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு வேளாண்மைக்கென தனி நிதிநிலை அறிக்கை, நம்மாழ்வார் பெயரில் இயற்கை வேளாண் ஆராய்ச்சி மையம், சிறுதானியங்களுக்கு முக்கியத்துவம் என்று வேளாண்மையின் மீது தனி அக்கறை செலுத்தப்பட்டாம் நீண்டகால நோக்கில் மாநிலத்தின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்திடவும், உழவர்கள் மற்றும் வேளாண்சார் தொழிலாளர்களின் வாழ்க்கை மேம்படவும், மக்களின் உடல் நலம் காத்திடவும், காலநிலை மாற்றத்தை எதிர்க்கொள்ளவும் “தமிழ்நாடு இயற்கை வேளாண் கொள்கையை” அறிவித்து முழுவீச்சில் செயல்படுத்த வேண்டியது மிக மிக அவசியம் மற்றும் அவசரம்.
- ‘நஞ்சில்லா தமிழகம்’ என்பதைக் கொள்கையாக ஏற்று 2030க்குள் தமிழ்நாட்டில் விளையும் எந்த ஒரு உணவிலும் உயிர்க்கொல்லி பயன்பாடு என்பது அறவே இல்லாமல் செய்திட வேண்டும். அதேசமயம் உழவர்கள் பூச்சித் தாக்குதலால் பாதிக்கப்பட்டுவிடாமல் தடுக்க, ஊராட்சி அளவிலான மகளிர் சுய உதவிக்குழுக்கள், வேளாண் உற்பத்திக் குழுக்கள் போன்றவற்றை ஒருங்கிணைத்து இயற்கை/மூலிகை பூச்சி விரட்டிகள் தயாரித்து விற்பனை செய்யத் தேவையான பயிற்சிகளும் உதவிகளும் வழங்கிட வேண்டும்.
- வேளாண்மையில் ரசாயன உரங்களின் பயன்பாட்டினை குறைத்திடும் வகையில் இயற்கை உரங்களின் பயன்பாட்டினை அதிகரிக்க வேண்டும். கிராமங்களில் புழக்கத்தில் இருக்கும் கால்நடை எருவை இன்னும் மேம்படுத்திடும் வகையில் மண்புழு உரம், பஞ்சகவ்யம் போன்ற இயற்கை உரங்களை ஊராட்சி ஒன்றிய அளவில் உற்பத்தி செய்திடும் சிறு குறு தொழில் முனைவோரை உருவாக்கிட வேண்டும். மேலும் பெருநகர, நகராட்சி நிர்வாகங்களால் சேகரிக்கப்படும் மக்கும் குப்பைகளை முறையாக மட்கச் செய்து குப்பை உரமாக (Compost) தயாரித்து சுற்று வட்டார உழவர்களுக்குக் குறைந்த விலையில் கிடைக்கும்படி செய்ய வேண்டும்.
- ரசாயன வேளாண்மையில் இருந்து இயற்கை வேளாண்மைக்கு மாறும் உழவர்களுக்கு 3 முதல் 5 ஆண்டுகள் வரை மண் வளத்தை மீட்டெடுக்கும் காலமாக கருதி சிறப்பு ஊக்கத்தொகை வழங்கிட வேண்டும். ரசாயன வேளாண்மையில் இருந்து இயற்கை வேளாண்மைக்கு உடனடியாக மாறுவதால் ஏற்படும் தற்காலிகப் பொருளாதார பாதிப்புகளை இதன் மூலம் உழவர்கள் சமாளித்துக் கொள்வார்கள்.
- இயற்கை வேளாண்மையை பரவலாக்குவதற்கு அங்கொன்றும் இங்கொன்றுமாகப் பயிற்சிகளை அளிப்பதைவிட, ஆந்திர மாநிலத்தை உதாரணமாக எடுத்துக் கொண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சி ஒன்றிய அளவுகளில் 100% உழவர்களையும் இயற்கை வேளாண்மைக்கு மாற்ற 5 முதல் 7 ஆண்டுகள்வரைத் தொடர்ச்சியான உதவிகளை வழங்கிடும் திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும்.
- இயற்கை வேளாண்மையின் பக்கம் உழவர்களை ஈர்த்துப் பயிற்சிகள் வழங்கிடவும், மாதிரி பண்ணைகள் அமைப்பதைக் காட்டிலும் தமிழகம் எங்கும் இயற்கை வேளாண் மாதிரி கிராமங்கள், மாதிரி ஒன்றியங்கள், மாதிரி வட்டங்கள், மாதிரி மாவட்டங்கள் என்று திட்டமிட்டு உருவாக்குவதன் மூலம் அடுத்த 20 ஆண்டுகளுக்குள் தமிழ்நாட்டை 100% இயற்கை வேளாண் மாநிலமாக மாற்ற வேண்டும்.
- ’பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்’ என்னும் பொது மறைக்கு ஏற்ப உழவர்கள் ஆடு, மாடு, கோழி, பன்றி, தேனீ போன்றவற்றை இயற்கை வேளாண்மையோடு இணைத்து ஒருங்கிணைந்தப் பண்ணையமாக்குவதற்கு உரிய பயிற்சிகளும் உதவிகளும் வழங்கிட வேண்டும். இதன் மூலம் தமிழகத்தின் பல்லுயிர் வளம் பெருகுவதோடு உழவர்களுக்கும் கூடுதல் வருமானம் கிடைக்கும்.
- இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட மரபு நெல்ரகங்கள், சிறுதானியங்கள், பருப்பு வகைகள் போன்றவற்றை அரசே நேரடியாக கொள்முதல் செய்து அரசின் பொது விநியோகத் திட்டத்தின் வழி நியாயவிலைக் கடைகளிலும், அங்கன்வாடிகளிலும், காலை மற்றும் மதிய உணவுத் திட்டங்களிலும், கருவுற்றிருக்கும் கிராமப்புற பெண்களுக்கும் விநியோகம் செய்திட வேண்டும். இதன் மூலம் உழவர்களுக்கு நியாயமான விலை கிடைப்பதை உறுதி செய்வதோடு, குழந்தைகள், பெண்கள், விளிம்பு நிலை மக்களின் ஊட்டச்சத்து குறைப்பாட்டினையும் போக்கிட முடியும்.
- கொரோனா காலக்கட்டத்தில் அரசே காய்கறிகள், கீரைகள் போன்றவற்றை மக்களுக்கு நேரடியாக கொண்டு சென்றது போல், இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட காய்கறிகள் கீரைகள் பழங்கள் போன்றவற்றை அரசின் தோட்டக்கலைத் துறையும் வேளாண் உற்பத்திக் குழுக்களும் இணைந்து உள்ளூரிலேயே கொள்முதல் செய்து விற்பனை செய்யும் வகையில் கூட்டுறவு அமைப்புகளை ஏற்படுத்த வேண்டும்.
- மழைப் பொழிவு குறைவான, பாசன வசதிகள் அற்ற நிலங்களில் உழவர்கள் நாட்டு மரங்கள், மூங்கில் போன்றவற்றை வளர்த்திட ஊக்கப்படுத்த வேண்டும். குறிப்பாக மூங்கில் குறுகிய காலத்தில் அறுவடை செய்யக்கூடியது என்பதால் அது உழவர்களுக்கு லாபமாகவும் அதே சமயம் மீண்டும் மீண்டும் வளரக் கூடியது என்பதால் சூழலுக்கு ஏற்றதாகவும் இருக்கும். அரசின் கட்டுமானங்களில் சிமெண்ட், இரும்பு போன்றவற்றின் பயன்பாட்டினைக் குறைப்பது காலநிலை மாற்றத்தைச் சமாளிக்க அவசியமான ஒன்றாகும். மூங்கில் அதற்கு ஒரு நல்ல மாற்றாகும்.
- உணவென்பது அனைவரின் அடிப்படை உரிமை என்பது போல் அனைவருக்குமான அடிப்படை கடமையும் ஆகும். பலர் வேளாண்மையை தொழிலாக செய்யாவிட்டாலும் தன் உணவு எப்படி, எங்கு, எதிலிருந்து வருகிறது என்பதை அறிந்து வைத்திருப்பது அவசியமாகும். எனவே, பள்ளிக் கல்வியில் இருந்தே மாணவர்களுக்கு இயற்கை வேளாண்மை குறித்தும் உணவு குறித்தும் அறிவியல் பூர்வமாகக் கற்றுக் கொடுப்பது அவசியம். அனைத்து பள்ளிகளிலும் வேளாண்மை கட்டாய பாடமாகவும் செய்முறை வகுப்புகளாகவும் கற்பிக்க பட வேண்டும்.
இதுபோல் மரபு விதை பாதுகாப்பு, இயற்கை வளங்கள் பாதுகாப்பு, மரபணு விதை மறுப்பு (குறிப்பாக மரபணு மாற்றப்பட்ட விதைகளுக்கு எந்த நாளும் தமிழகத்தில் அனுமதி இல்லை என்பது அரசின் கொள்கையாகவே வர வேண்டும்), ‘தமிழ்நாடு ஆர்கானிக்’ பிராண்ட் (ஆவின் போன்றது) என்று தமிழகத்திற்கு தேவையான பல நூறு திட்டங்களின் பட்டியல் நம்மிடம் உள்ளது. ஆனால், இவையெல்லாம் நாம் முன்வைத்தால் வெறும் கோரிக்கைகளாகவே இருக்கும் அரசு இயற்கை வேளாண்மையை கொள்கையாக ஏற்று அறிவித்தால் மட்டுமே பல கோடி தமிழர்களின் கனவான பசுமையான தமிழகம் உருப்பெறும். தமிழ்நாடு இயற்கை வேளாண் கொள்கை என்பது வெறும் வேளாண்மைக்கான கொள்கை மட்டும் அல்ல தமிழ்நாட்டின் இன்றைய முக்கியப் பிரச்சினையான இயற்கை பேரிடர்கள், காலநிலை மாற்றம், தொழில் வளர்ச்சி (சிறு/குறு), வேலையின்மை, நகரமயமாக்கல், ஊட்டச்சத்து குறைபாடு போன்றவற்றை சரி செய்யவும் மாநில சுயாட்சியை நிலைநிறுத்தவும் உதவிடும் அட்சய பாத்திரம் ஆகும். சமூக நீதி அரசு வேளாண் சமூகத்திற்கு உரிய நீதியை வழங்கிடுமா?
- அகிலன் பாலகுரு
- [email protected]
நல்ல சிந்தனை அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும்.