சமையல் எண்ணெயில் கருகக் காத்திருக்கும் அந்தமான் நிகோபாரின் உயிர்ப்பன்மயம்; எச்சரிக்கும் CEC அறிக்கை.

Palm Oil Plantation

 “செம்பனைத் தோட்டங்களையோ அல்லது காடு சாரா பிற வேளாண் பயிர்களையோ அந்தமான் தீவுகளில் அனுமதிப்பது பேராபத்திற்கான வாயிலைத் திறக்க வழிவகுக்கும்”

அந்தமான் நிகோபார் தீவுக்கூட்டத்தில் செம்பனைத் தோட்டங்களை அமைத்து இந்தியாவின் சமையல் எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க ஒன்றிய அரசு மேற்கொண்டு வரும் திட்டம் குறித்து மேற்கூறியவாறு கருத்து தெரிவித்துள்ளது உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட Central Empowered Committee.

இந்திய உச்சநீதிமன்றம் 2002ஆம் ஆண்டு மே மாதம் WP(C) No202/1995 வழக்கின்கீழ் அந்தமான் மற்றும் நிக்கோபர் தீவுகளில் செம்பனை உள்ளிட்ட ஒரினப் பயிர்களுக்குத்  தடைவிதித்தது. இந்தத் தடையை நீக்கக்கோரி அந்தமான் தீவுகளின் அரசு நிர்வாகம் 2018ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தை அணுகியது.

2014ஆம் ஆண்டு பாரதீய ஜனதா கட்சி ஒன்றியத்தில் ஆட்சிக்கு வந்தவுடனே ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி அந்தமான்  நிகோபார் தீவுக்கூட்டத்தைப் பார்வையிட்டார். அப்போது அந்தமான் நிகோபார் தீவுகளில் மீண்டும் செம்பனைத் தோட்டங்களை உருவாக்குவது குறித்து நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளை வலியுறுத்தினார். இந்த விவகாரம் குறித்து 09.07.2018 அன்று பிரதமர் அலுவலகத்தில் நடந்த செம்பனை எண்ணெய் கொள்கை மேம்பாடு குறித்த கூட்டத்திலும் விவாதிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து சில வாரங்களிலேயே ஒன்றிய அரசின் அதிகாரிகள் அந்தமான்  நிகோபார் தீவுக்கூட்டத்தைப் பார்வையிடச் சென்றனர். இதன் விளைவாக அந்தமான்  நிகோபார் வேளாண்துறையானது இந்திய பனை எண்ணெய் ஆராய்ச்சிக்கான கல்வியியல் நிறுவனத்திற்குத்(IIOPR) தீவுகளில் செம்பனைப் பயிரிடுவதற்கான சாத்தியங்கள் குறித்து ஆராயக் கோரியது.

அந்தமான் நிகோபாரில் உள்ள 5 தீவுகளைப் பார்வையிட்டு விட்டு IIOPR குழுவினர் டிசம்பர் 2018ல் தங்களது அறிக்கையைச் சமர்பித்தனர். அதில், தீவுகளில் நிலவும் வானிலை மற்றும் அங்குள்ள மண் காரணிகள் செம்பனைப் பயிடுவதற்குச் சாதகமாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த அறிக்கை முழுக்கவும் செம்பனைப் பயிரிடுதலுக்கு ஆதரவான அம்சங்கள் மட்டுமே இடம்பெற்றிருப்பதாகவும் செம்பனைப் பயிரிடுவதால் அந்தமான்  நிகோபார் தீவுகளுக்கு சுற்றுச்சூழல் ரீதியில் ஏற்படப்போகும் தாக்கம் குறித்து அறிக்கையில் விளக்கப்படவில்லை என அப்போதே பல்வேறு அறிவியலாளர்கள் குற்றம் சாட்டினர்1.

இதனையடுத்து வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் அந்தமான் -நிகோபார் தீவுகள் உட்பட நாட்டில் செம்பனை எண்ணெய் உற்பத்திக்கான சாத்தியங்களை மதிப்பிடுவது குறித்த ஆராய்ச்சியை இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் – இந்திய பனை எண்ணெய் ஆராய்ச்சிக் கழகத்தின் மறுமதிப்பீட்டு குழு   கடந்த 2020ம் ஆண்டு மேற்கொண்டன. இந்தியாவில் மொத்தம் 22 மாநிலங்களில், 27.99 லட்சம் ஹெக்டேர் நிலங்களில் செம்பனைப் பயிரிடுவதற்குச் சாத்தியமிருப்பதாக  அடையாளம் காணப்பட்டன2.

18.08.2021 அன்று தேசிய சமையல் எண்ணெய்- பாமாயில் திட்டத்தை அமல்படுத்த ஒன்றிய அரசின் அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. சமையல் எண்ணெய்களின் இறக்குமதி மீதான சார்பு அதிகரித்திருப்பதால் அவற்றின் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பது அவசியம் என ஒன்றிய அரசு தெரிவித்தது. இப்புதிய திட்டத்திற்காக ரூ.11,040 கோடி ஒதுக்கப்பட்டது. இதில் ஒன்றிய அரசின் பங்காக ரூ.8,844 கோடியும் மாநில அரசின் பங்காக ரூ.2,196 கோடியும், அவற்றுடன் மானியத் தொகையும் அடங்கும்.

இந்தத் திட்டத்தின் கீழ் பாமாயில் உற்பத்திக்காக 2025-26 ஆம் ஆண்டு வரை கூடுதலாக 6.5 லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்புடன், 10 லட்சம் ஹெக்டர் அளவை அடைய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. கச்சா பாமாயில் உற்பத்தி 2025-26 ஆம் ஆண்டு வாக்கில் 11.20 லட்சம் டன்னாகவும்,2029-30ஆம் ஆண்டில் 28 லட்சம் டன்னாகவும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும், செம்பனை எண்ணெய் உற்பத்தியில் ஈடுபடும் விவசாயிகள் இத்திட்டத்தின் வாயிலாக பெரிதும் பயனடைவார்கள் என்றும் ஒன்றிய அரசு தெரிவித்தது. மேலும் இதன் மூலம் மூலதன முதலீடு அதிகரித்து, வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டு, இறக்குமதி மீதான சார்பு குறைவதுடன், விவசாயிகளின் வருமானமும் அதிகரிக்கும் என ஒன்றிய அரசு கூறியது.

1991-92 ஆம் ஆண்டு முதல் எண்ணெய் வித்துக்கள் மற்றும் செம்பனை எண்ணெய் உற்பத்தியை அதிகரிப்பதற்காக ஒன்றிய அரசு‌ பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 2014-15ஆம் ஆண்டில் 275 லட்சம் டன்னாக இருந்த எண்ணெய் வித்துக்களின் உற்பத்தி, 2020-21ஆம் ஆண்டில் 365.65 லட்சம் டன்னாக உயர்ந்தது. தற்போது 3.70 லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பளவில் மட்டுமே செம்பனை பயிரிடப்படுகிறது. பிற எண்ணெய் வித்துக்கள் உடன் ஒப்பிடுகையில் ஒரு ஹெக்டர் நிலப்பரப்பில் செம்பனை 10 முதல் 46 மடங்கு அதிகமான உற்பத்தியைத் தருவதால், இந்த வகை எண்ணெய் வகை, பயிரிடுவதற்கு மிகவும் ஏற்றதாக ஒன்றிய அரசு கருதுகிறது.

இந்த விஷயத்தைக் கருத்தில் கொண்டும் 98% கச்சா பாமாயில் இறக்குமதி செய்யப்படுவதை கருதியும் நாட்டில் செம்பனை எண்ணெய் பயிரிடுவதற்கான நிலப்பரப்பையும் உற்பத்தியையும் அதிகரிப்பதற்காக இத்திட்டம் தொடங்கப்பட உள்ளதாகக் ஒன்றிய அரசின் செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருந்தது.

ஆனால், அந்தமான்  நிகோபார் தீவுக்கூட்டத்திற்கு செம்பனைப் பயிர் அயல்வகை என்பதால் ஏற்கெனவே அங்கிருக்கும் காடுகளையும், இயல்வகை புல்வெளிகளையும் அழித்துவிட்டு பயிரிடக் கூடாது என்பதே சூழல் ஆர்வலர்களின் கருத்தாகும். இந்த நிலையில்தான் அந்தமான் நிகோபார் தீவுக்கூட்டத்தில் செம்பனை உள்ளிட்ட ஓரினச் சாகுபடிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக்கோரி அந்தமான் அரசு நிர்வாகம் தாக்கல் செய்த மனுவில் உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட Central empowered Committee தனது அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளது. (இக்குழுவானது பல்லுயிர் பேணுதல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பாக உச்சநீதிமன்றம் வழங்கிய உத்தரவுகள் மற்றும் தீர்ப்புகள் நடைமுறைப்படுத்தப்படுகிறதா என்பது குறித்து கண்காணிக்க 2002ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டது) CEC தாக்கல் செய்த அறிக்கையில் சமையல் எண்ணெயின் உற்பத்தியை அதிகரிப்பதுதான் அரசின் நோக்கமென்றால் தீவுப்பகுதிகளை விடுத்து ஏற்கெனவே செம்பனைப் பயிர்கள் வெற்றிகரமாக நடப்பட்டிருக்கும் உள் நாட்டுப்பகுதியிலேயே ஏன் நடக்கூடாது என கேள்வியெழுப்பியுள்ளது3.

CEC அறிக்கையின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு;-

  • வனச்சட்டம் 1980(Forest(Conservation) நடைமுறைக்கு வரும்முன்னரே அந்தமானில் வளர்க்கப்பட்ட செம்பனைப் பயிர்கள் அனைத்தும் வணிக ரீதியில் முழுத்தோல்வியைடைந்தது நிரூபிக்கப்பட்டுள்ள நிலையில், ஏன் மீண்டும் புதிதாக செம்பனைத் தோட்டங்களை உருவாக்க அரசு திட்டமிடுகிறது என்பது குறித்து போதுமான அளவில் புதிய மனுவில் தெரிவிக்கப்படவில்லை.
  • வனச்சட்டம் 1980, வனப்பாதுகாப்பு விதிகள் 2022 மற்றும் பல வழிகாட்டுதல்களும் காட்டு நிலத்தை வேளாண் தொடர்பான நடவடிக்கைகளுக்காக மாற்றம் செய்வதை முற்றிலுமாக தடை செய்துள்ளது. இந்த நிலையில் செம்பனைத் தோட்டங்களையோ அல்லது காடு சாரா பிற வேளாண் பயிர்களையோ அந்தமான் தீவுகளில் அனுமதிப்பது பேராபத்திற்கான வாயிலைத் திறக்க வழிவகுக்கும்.
  • 16 ஆயிரம் ஹெக்டேர் நிலப்பரப்பில் செம்பனைத் தோட்டங்கள் அமைப்பதற்கான நிலப்பகுதி இன்னும் கண்டறியப்படவோ, எல்லைகள் வரையறுக்கப்படவோ இல்லை. அந்தமான் நிகோபார் அரசு நிர்வாகம் தாக்கல் செய்துள்ள புதிய மனுவில் தீவுக்கூட்டத்தில் புல்வெளிகளின் இருப்பு, புல்வெளிகள் காணப்படும் இடம், புல்வெளிகள் மொத்தமாக உள்ளதா? தனித் தனியாக உள்ளதா? என்பன குறித்த தரவுகள் ஏதுமின்றி செம்பனைத் தோட்டங்களுக்காக புல்வெளிகள் பயன்படுத்தப்படும் எனக் கூறப்பட்டுள்ளது,
  • 16 ஆயிரம் ஹெக்டேரில் செம்பனைப் பயிர்களை வளர்ப்பதற்கும் பராமரிப்பதற்கும் குறைத்துக் கணக்கிட்டால்கூட 32 ஆயிரம் தொழிலாளர்கள் தேவை, அவர்களைத் தோட்டங்களைச் சுற்றியே குடியமர்த்த வேண்டியிருக்கும். இந்த அளவிற்கான தொழிலாளர்களை தீவுப்பகுதியில் கண்டறிவது சந்தேகம் மற்றும் இதற்காக சட்டவிரோதமாக அண்டை நாடுகளிலிருந்து புலம்பெயர்வோரின் எண்ணிக்கையும் அதிகரிக்கும்.
  • ஏற்கெனவே தீவுக்கூட்டத்தில் உள்ள காடுகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த கால அனுபவங்களிலிருந்து பார்த்தால் தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களால் மேலும் காடுகள் ஆக்கிரமிக்கப்படக்கூடும்.
  • அந்தமான் நிகோபார் நிர்வாகம் தாக்கல் செய்துள்ள மனுவில் செம்பனைத் தோட்டங்களால் பறிமுதல் செய்யப்படும்(சூழலில் உமிழப்பட்டுள்ள கார்பன் டை ஆக்சைடை உள்வாங்கிக்கொள்ளும் இயற்கை அமைவுகள்) கார்பன் அளவு குறித்து மட்டுமே தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இயற்கையாகவே 16 ஆயிரம் ஹெக்டேரில் அமைந்துள்ள காடுகளை அழிக்கும்போது நிலத்தடியிலும் மேற்பரப்பிலும் சேமித்து வைக்கப்பட்டுள்ள கார்பன் எவ்வளவு சூழலில் கலக்கும் என்பது குறித்து மனுவில் கூறப்படவில்லை.
  • செம்பனைத் தோட்டங்கள் ஓரினச் சாகுபடியாகும். ஓரினச் சாகுபடிக்கான வழிகாட்டுதல்கள் செம்பனை மரங்களை பிற மரங்களோடு ஊடுபயிராகப் பயிரிடுதலை ஊக்குவிப்பதில்லை.
  • புதிதாக செம்பனைத் தோட்டங்களை உருவாக்க எவ்வளவு காட்டு நிலம் தேவைப்படும் என்பதைக்கூட வரையறுக்காமல் 2002ஆம் ஆண்டு வழங்கப்பட்ட தீர்ப்பில் திருத்தம் கோருவது வனச்சட்டத்தின் கீழான நடைமுறைகளைத் தவிர்ப்பதற்கான முயற்சியாகும்.

செம்பனைத் தோட்டங்கள் உருவாக்க ஏற்ற வெப்பண்டலப் பகுதிகள் உயிர்ப்பன்மயம் நிறைந்தவையாக உள்ளன. செம்பனை எண்ணெயின் உற்பத்தி அதிகரிக்க அதிகரிக்க வெப்பமண்டலக் காடுகளின் பரப்பளவும் சுருங்கி வருகின்றன. உலகளவில்  இயற்கை பேணலுக்கான பன்னாட்டு ஒன்றியம், உலகளவில் செம்பனை எண்ணெய் உற்பத்தியால் 193 அழியும் நிலையில் உள்ள உயிரினங்கள் பாதிக்கப்பட்டு வருவதாகவும் மேற்கொண்டு செம்பனைத் தோட்டங்களை விரிவாக்கம் செய்வதால் உலகளவில் 54% அச்சுறுத்தலில் உள்ள பாலூட்டிகளும், 64% அச்சுறுத்தலில் உள்ள பறவைகளும் பாதிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.

 

அந்தமான் மற்றும் நிகோபாரில் 8,249 சதுர கிலோமீட்டரில் 572 தீவுகள் அமைந்துள்ளன. மொத்த நிலப்பரப்பில் 80 விழுக்காடு(6,742.78.ச.கி.மீ) பரப்பளவு காட்டுப்பகுதி என இந்திய வன மதிப்பீட்டாய்வகம்(FSI) தெரிவிக்கிறது5. இதில் 9 தேசிய பூங்காக்களும், 96 காட்டுயிர் சரணாலயங்களும், ஒரு உயிர்மண்டலக் காப்பகமும் அடங்கும். இப்படி சூழல் முக்கியத்துவம் வாய்ந்த அந்தமான் மற்றும் நிகோபார் தீவுக்கூட்டம் காலநிலை மாற்றத்தாலும் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களாலும் பெரும் அச்சுறுத்தக்கு உள்ளாகியுள்ளது. இப்பிரச்சனையின் தீவிரம் உணர்ந்து உச்சநீதிமன்றம் நல்ல உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும் என சூழல் ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர். இவ்வழக்கின் மீதான அடுத்தகட்ட விசாரணை உச்சநீதிமன்றத்தில் மார்ச் 15ஆம் தேதி நடைபெறவுள்ளது.

  1. https://www.downtoearth.org.in/news/agriculture/andaman-nicobar-wants-to-take-a-reverse-gear-on-oil-palm-63803
  2. https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1784019
  3. http://cecindia.nic.in/wp-content/uploads/2023/01/Report-No.-2-of-2023-in-W.P.-C-202-of-1995.pdf
  4. https://www.iucn.org/resources/issues-brief/palm-oil-and-biodiversity
  5. https://fsi.nic.in/isfr19/vol2/isfr-2019-vol-ii-andaman-nicobar-islands.pdf
  • சதீஷ் லெட்சுமணன்,.

இக்கட்டுரை விகடன் தளத்தில் முதலில் வெளியாகியிருந்தது.

https://www.vikatan.com/agriculture/policy/the-dangers-of-reviving-oil-palm-plantations-in-the-andaman-and-nicobar-islands

 

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments