கையாள முடியாததா மருத்துவக் கழிவுகள்?

விதிகளுக்குப் புறம்பாக மருத்துவக் கழிவுகளை தமிழ்நாட்டின் எல்லையோர மாவட்டங்களில் கொட்டுபவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறைபடுத்துவது குறித்து தமிழ்நாடு அரசு பரிசீலித்து வருவதாக தமிழ்நாடு மருத்துவத்துறை செயலாளர் தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் தெரிவித்துள்ளார்.

2021ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் தென்காசி, ஆனைமலை, பொள்ளாச்சி, நாமக்கல் ஆகிய இடங்களில் சட்டத்திற்குப் புறம்பாக கேரளாவிலிருந்து லாரிகளில் எடுத்து வரப்பட்ட கழிவுகள் கொட்டப்பட்டன. இச்சம்பவங்கள் தொடர்பாக பல்வேறு நாளிதழ்களில் வெளியான செய்திகளின் அடிப்படையில் தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்காகப் பதிவு செய்து விசாரித்து வருகிறது. இந்த வழக்கில்தான் மருத்துவத்துறை செயலாளர் தனது பதில்மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.

திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2016, மருத்துவக் கழிவு மேலாண்மை விதிகள் 2016 ஆகியவற்றின்கீழ் மருத்துவ மற்றும் பிற திடக்கழிவுகளை அங்கீகரிக்கப்பட்ட கழிவு மேலாண்மை நிலையங்களைத் தவிர பிற இடங்களில் கொட்டுவது சட்டவிரோத நடவடிக்கையாகும். தமிழ்நாட்டில் நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களும் கேரளாவில் திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, இடுக்கி, பாலக்காடு, மலப்புரம், வயநாடு, ஆகிய மாவட்டங்களும் எல்லைகளைப் பகிர்ந்து கொண்டுள்ளன.

கடந்த சில ஆண்டுகளாகவே கேரளாவிலிருந்து காலாவதியான மருந்துகள், கெட்டுப்போன இறைச்சிகள், இறைச்சிக் கழிவுகள், பயன்படுத்தப்பட்ட மருத்துவ உபகரணங்கள், பழைய துணிகள், ரப்பர் டயர்கள், ப்ளாஸ்டிக் புட்டிகள் மின்சாதனக் கழிவுகள், திட, திரவ உயிரிக் கழிவுகள், விவசாயக் கழிவுகள் போன்றவை கனரக வாகனங்களில் எடுத்து வரப்பட்டு தமிழக மாவட்டங்களில் கொட்டப்படுகின்றன.

2018ஆம் ஆண்டு நவம்பர் 22, 23 ஆகிய தேதிகளில் அப்போதைய திருநெல்வேலி மாவட்டத்தின் தென்காசி அருகேயுள்ள புளியரை சோதனைச்சாவடியில் காவல்துறை நடத்திய வாகனத் தணிக்கையின்போது மருத்துவக் கழிவுகளை ஏற்றிவந்த 29 லாரிகள் நிறுத்தப்பட்டு கேரளாவுக்கே திருப்பி அனுப்பப்பட்டன. திருநெல்வேலியிலிருந்து தென்காசி மாவட்டம் தனியாகப் பிரிந்த பின்னர் மருத்துவக் கழிவுகள் ஏற்றிவந்தது தொடர்பாக மட்டும் 9 முதல் தகவல் அறிக்கைகள், 45 Petty வழக்குகள் பதியப்பட்டு இதுவரை ரூ. 2,28,000 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று ஆனைமலை, தேனி ஆகிய இடங்களிலும் மருத்துவக் கழிவுகள் கொட்டப்படும் சம்பவங்கள் தொடர்ந்த நிலையில் தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் ஏற்கெனவே விசாரித்து வந்த வழக்கில் தமிழ்நாடு, கேரள மாநிலங்களின் தலைமைச் செயலாளரையும், தமிழ்நாட்டில் நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்கள் கேரளாவில் திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, இடுக்கி, பாலக்காடு, மலப்புரம், வயநாடு, ஆகிய மாவட்டங்களின் ஆட்சியர்களையும் ஒரு தரப்பாகச் சேர்த்து அனைவரையும் பதில்மனு தாக்கல் செய்யுமாறு உத்தரவிடப்பட்டிருந்தது.

குண்டாஸ்

இந்த நிலையில் 14.02.2023 அன்று தமிழ்நாட்டின் மருத்துவத்துறை முதன்மை செயலாளர் பி.செந்தில்குமார் பசுமைத் தீர்ப்பாயத்தில் ஒரு விரிவான அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளார். அதில் “ தமிழ்நாட்டில் சட்டவிரோதமாக மருத்துவக் கழிவுகளைத் தொடர்ச்சியாகக் கொட்டுவதால் ஏற்படும் அச்சுறுத்தல் மிகவும் ஆபத்தானது மற்றும் கடுமையான சுகாதார அபாய சூழ்நிலையை ஏற்படுத்துகிறது என தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞர் கருத்து தெரிவித்துள்ளார். மேலும் அவர் தமிழ்நாடு வன்செயல்கள் தடுப்புச் சட்டம் 1982ஐ பொதுமக்கள் நலன்கருதி அறிவியல் பூர்வமாக மேலாண்மை செய்யப்படாத மருத்துவக் கழிவுகளை தமிழ்நாட்டின் எல்லையோர மாவட்டங்களில் சட்டவிரோதமாகக் கொட்டுபவர்களையும் குண்டர் சட்டத்தில் கைது செய்யும்படி விரிவுபடுத்தலாம் என்ற கருத்தைத் தெரிவித்துள்ளார். தலைமை வழக்கறிஞரின் இக்கருத்து தொடர்பாக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது” எனக் கூறப்பட்டுள்ளது.

மருத்துவக் கழிவுகளின் சட்டவிரோத மேலாண்மை மிகப்பெரும் சூழல் மற்றும் சுகாதார நெருக்கடியாக மாறியுள்ள நிலையில் மருத்துவக் கழிவுகளை விதிகளுக்குப் புறம்பாக நீர்நிலைகள், புறம்போக்கு இடங்களிலும் கொட்டும் தமிழ்நாட்டைச் சேர்ந்தோரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்யும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார் சுற்றுச்சூழல் ஆர்வலரான புகழ்வேந்தன். ” நடப்பாண்டின் ஜனவரி முதல் பிப்ரவரி 4ஆம் தேதி இடையிலான காலத்தில் மட்டும் போரூர், கோவூர், கொளப்பாக்கம், சுண்ணாம்பு கொளத்தூர் ஆகிய நான்கு இடங்களில் மருத்துவக் கழிவுகள் பொது இடங்களில் கொட்டப்பட்டுள்ள்ளன. ஒவ்வொரு முறை புகாரளிக்கும்போதும் அக்கழிவுகள் மட்டுமே அகற்றப்படுகின்றன. ஆனால், தொடர்புடைய மருத்துவமனை நிர்வாகங்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கடந்த 4 ஆண்டுகளாக இதே நிலைதான் தொடர்கிறது. இனியும் இதேநிலை தொடராமலிருக்க கழிவுகளைக் கொட்டும் மருத்துவமனை நிர்வாகிகளையும் குண்டர் சட்டத்தின்கீழ் கைது செய்ய வேண்டும்” என அவர் கூறினார்.

 தமிழ்நாடு அரசின் நடவடிக்கைகள்

மருத்துவக் கழிவுகள் கொட்டப்படுவதைத் தடுக்கும் நோக்கில் தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.  06.07.2016 தேதியிட்ட சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அரசாணை எண்.179 வாயிலாக மாவட்ட ஆட்சியரைத் தலைவராகக் கொண்ட 9 பேர் கொண்ட மாவட்ட அளவிலான மருத்துவக் கழிவுகள் மேலாண்மை கண்காணிப்புக் குழுவை அரசு உருவாக்கியிருந்தது.

இந்த அரசாணையில் 09.02.2023 அன்று திருத்தம் செய்து மாவட்ட கண்காணிப்பாளர், கால்நடை மற்றும் மீன்வளத்துறை அதிகாரி,  கூடுதல் இயக்குனர் பஞ்சாயத்து, மாநகராட்சி ஆணையர், வட்டாரப் போக்குவரத்து அலுவலர் ஆகியோரும் மருத்துவக் கழிவுகள் மேலாண்மை கண்காணிப்புக் குழுவில் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

 

நீலகிரி மாவட்டத்தைப் பொருத்தவரை கேரளா, கர்நாடகா மாநிலங்களுடன் எல்லையைப் பகிர்ந்து கொண்டுள்ளது. இங்கு நடுகாணி, சோலடி, பட்டவாயல், நம்பியார்குன்று ஆகிய இடங்களில் சோதனைச் சாவடி அமைத்துக் கண்காணிக்கப்பட்டு வருகிறது. தேனி மாவட்டட்டத்தில் போடி மெட்டு, கம்பம் மெட்டு, குமுளி ஆகிய இடங்களில் 24 மணி நேரமும் கேரளாவிலிருந்து வரும் வாகனங்கள் காவல்துறை, வனத்துறையினரால் கண்காணிக்கப்படுகிறது. தென்காசி மாவட்டத்தில் புளியரை, மேக்கரை ஆகிய இடங்களிலும் கன்னியாகுமரியில் களியக்காவிளை, கோழிவிளை, காக்காவிளை, படந்தாலுமூடு உள்ளிட்ட 15 இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு கேரள வாகனங்கள் தணிக்கை செய்யப்படுகின்றன.

தமிழ்நாட்டில் சட்டவிரோதமாக பொது இடங்களில் மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்ட சம்பவங்கள் அதிகரித்த நிலையில் 20.07.2022 அன்று மருத்துவக் கல்வி இயக்குனரகம், மருத்துவம் மற்றும் ஊரக சுகாதார சேவை இயக்குனரகம், பொது சுகாதாரத்துறை இயக்குனரகம், இந்திய மருத்துவ சங்கம் ஆகியோருடன் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் சேர்ந்து ஆலோசனை நடத்தியது. ஆலோசனையின் இறுதியில் மாசு கட்டுப்பாடு வாரியத்தின் தொடர் நிகழ்நேர கண்காணிப்பு அமைப்பின் வழியாக மருத்துவமனைகள், பரிசோதனை மையங்கள், உள்ளிட்ட Health Care Facilities-ல் எவ்வளவு சரக்குகள் கொள்முதல் செய்யப்படுகின்றன, எவ்வளவு கழிவுகள் வெளியாகின்றன என்பதைக் கண்காணிப்பது கடினமானதும் முடியவே முடியாத செயல்பாடாகும் எனக் கூறப்பட்டது.

ஜூலை 2022 நிலவரப்படி, மருத்துவக் கழிவுகள் மேலாண்மை விதிகள் 2016ன் கீழ் தமிழ்நாட்டில் மட்டும் 27,391 மருத்துவமனைகள், பரிசோதனை நிலையங்கள் உள்ளிட்ட Health Care Facilities பதிவு செய்யப்பட்டுள்ளன. தற்போது தமிழ்நாட்டில் மட்டும் 12 பொது மருத்துவக் கழிவு மேலாண்மை நிலையங்கள் உள்ளன அவற்றுள் உரிய விதிகளைப் பின்பற்றாத காரணத்தால் ஊட்டி, ராமநாதபுரத்தில் உள்ள நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. பயன்பாட்டில் உள்ள 10 நிலையங்களின் கழிவுகள் கையாளும் திறன் நாளொன்றுக்கு 90.35 டன்(Incinerator 56.5TPD & Autoclave 33.85 TPD) ஆகும். . ஜனவரி 2021 முதல் டிசம்பர் 2021 வரையிலான காலத்தில் மட்டும் சென்னையில் நாளொன்றிற்கு சராசரியாக 45 டன் மருத்துவக் கழிவுகள் உற்பத்தியாகின.கும்மிடிப்பூண்டி, ஓசூர், திருப்பூர் ஆகிய இடங்களில் புதிய கழிவு மேலாண்மை நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. திருவள்ளூரிலும் ஒரு நிலையம் அமைக்கப்படவுள்ளதாக மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுமட்டுமின்றி தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியமானது தமிழ்நாடு போக்குவரத்துத்துறை ஆணையர் மற்றும் காவல்துறைத் தலைவருக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தது. அக்கடிதத்தில் தமிழ்நாடு கேரள மாநிலங்களுக்கிடையே பயணிக்கும் வாகனங்களில் GPS கருவி பொறுத்தப்படுவதை உறுதி செய்யுமாறு கோரப்பட்டிருந்தது.

கேரளாவில் மருத்துவக் கழிவுகள் எப்படி கையாளப்படுகின்றன?

பசுமைத் தீர்ப்பாயம் தாமாக முன்வந்து தொடுத்த வழக்கில் கேரள மாசு கட்டுப்பாடு வாரியம் 17.09.2022 அன்று ஒரு பதில் மனுவைத் தாக்கல் செய்தது. அதில்,  ”தமிழ்நாட்டின் ஆனைமலையில் மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டதாகக் கூறப்படும் 2021ம் ஆண்டின் ஜனவரி முதல் டிசம்பர் வரையிலான காலத்தில் மட்டும் கேரளாவில் சராசரியாக நாளொன்றிற்கு 61 டன் மருத்துவக் கழிவுகள் உற்பத்தியாகின. அதில் 59 டன் பொது மருத்துவக் கழிவு மேலாண்மை நிலையங்களிலும், 2.4 டன் கழிவுகள் உற்பத்தியான இடங்களிலேயும் மேலாண்மை செய்யப்பட்டன. 2021ஆம் ஆண்டில் உற்பத்தி செய்யப்பட்ட மருத்துவக் கழிவுகள் முறையாகவும், முழுமையாகவும் கையாளப்பட்டன” என கேரள மாசு கட்டுப்பாடு வாரியம் குறிப்பிட்டிருந்தது.

கேரளாவில் ஒட்டுமொத்த மாநிலத்திற்கும் சேர்த்தே ஒரே ஒரு மருத்துவக் கழிவு மேலாண்மை நிலையம் மட்டுமே இருந்து வந்தது. IMAGE என்றழைக்கப்படும் அம்மருத்துவக் கழிவு மேலாண்மை நிலையம் கேரளாவில் வடக்குப் பகுதியில் பாலக்காடு மாவட்டத்தில் அமைந்துள்ளது. இம்மையத்தின் கழிவு மேலாண்மைத் திறன் நாளொன்றிற்கு 55.8 டன்னாகும். 2021ஆம் ஆண்டு மே மாதத்தில்தான் எர்ணாகுளத்தில் கேரளா மாநிலத்திற்கான இரண்டாவது மருத்துவக் கழிவு மேலாண்மை நிலையமான KEIL பயன்பாட்டிற்கு வந்தது. அதன் மொத்த கழிவு மேலாண்மைத் திறன் நாளொன்றிற்கு 16 டன்னாகும்.

2021க்கு முன்பாக கேரளாவின் தெற்குப் பகுதியிலுள்ள திருவனந்தபுரம் மாவட்டத்தின் ஒரு மருத்துவமனையில் உற்பத்தியான கழிவை அறிவியல்பூர்வமாக மேலாண்மை செய்ய வேண்டும் என்றால் அங்கிருந்து 300 கிலோமீட்டர் தூரமுள்ள பாலக்காட்டிற்குதான் அனுப்ப வேண்டும். இதற்கான போக்குவரத்துச் செலவே மிகவும் அதிகம். அதற்குச் செலவு செய்வதைவிட கேரளாவிற்குள்ளாகவும், அருகாமையில் உள்ள தமிழ்நாட்டிலுள்ள எல்லையோர மாவட்டங்களில் கழிவுகளைக் சட்டவிரோதமாகக் கொட்டுவது மருத்துவமனை நிர்வாகங்களுக்கு எளிதான காரியமாக அமைந்துள்ளது.

கேரள மாசு கட்டுப்பாடு வாரியம் கூறுவதுபோல அங்கு மருத்துவக் கழிவுகள் முறையாக கையாளப்படவில்லை என்பது ஒவ்வொரு ஆண்டும் அவர்கள் மத்திய மாசு கட்டுப்பாடு வாரியத்திடம் சமர்ப்பிக்கும் ஆண்டறிக்கையிலிருந்து தெரிய வருகிறது. குறிப்பாக 2018ஆம் ஆண்டில் 65, 2019ல் 189, 2020ல் 132 பேரும் மருத்துவக் கழிவுகள் மேலாண்மை விதிகள் 2016ன் வழிகாட்டுதல்களை மீறியுள்ளதாக ஆண்டறிக்கைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2017 முதல் 2020 வரையிலான காலத்தில் உற்பத்தியான மருத்துவக் கழிவுகளைவிட மேலாண்மை செய்யப்பட்ட கழிவுகளின் அளவு குறைவாகவே உள்ளது.

ஆண்டு உற்பத்தியான கழிவுகள்* மேலாண்மை செய்யப்பட்ட கழிவுகள்* விதிகளை மீறியோர் எண்ணிக்கை
2017 40,990 35,500  
2018 41,286 37,128 65
2019 42,932 36,853 189
2020 41,286 36,817 132

*அளவுகள்: கி.கி/ நாளொன்றுக்கு

இதுகுறித்து கேரள மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரிகளிடம் விசாரித்தபோது “ கேரளாவின் வடக்கு மற்றும் தெற்குப் பகுதிகளில் மொத்தமாக 2 மருத்துவக் கழிவு மேலாண்மை நிலையங்களைப் புதிதாக அமைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் மூலம் மருத்துவக் கழிவுகளை மேலாண்மை செய்ய நீண்ட தொலைவு எடுத்துச்செல்வதற்கான போக்குவரத்துச் செலவும், கார்பன் உமிழ்வையும் தவிர்க்க முடியும். பத்தனம்திட்டா மாவட்டத்திலுள்ள அடூர் தொழிற் மேம்பாட்டுப் பகுதியில் IMAGE  நிறுவனத்திற்கு இடம் ஒதுக்கி மாசு கட்டுப்பாடு வாரிய அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையம் செயல்படத் தொடங்கியதும் கேரளாவின் தென்மாவட்டங்களில் உற்பத்தியாகும் மருத்துவக் கழிவுகள் அனைத்தும் இங்கே மேலாண்மை செய்யப்படும். இது தவிர கண்ணூர் மாவட்டத்திலுள்ள மருத்துவக் கல்லூரியில் ப்ளாஸ்மா பைராலிசிஸ் மையம் அமைக்கவும் மாநில அளவிலான வழிகாட்டுதல் குழு ஒப்புதல் அளித்துள்ளது. மண்டல வாரியாக உற்பத்தியாகும் கழிவுகளை அங்கேயே மேலாண்மை செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் கேரள அரசு எடுத்து வருகிறது” எனத் தெரிவித்துள்ளனர்.

மருத்துவக் கழிவுகள் ஒன்றும் கையாள முடியாதவை அல்ல. ஏற்கெனவே இருக்கும் விதிகளை நடைமுறைப்படுத்தி கண்காணிப்பைத் தீவிரப்படுத்தினாலே இப்பிரச்சனைக்கு ஓரளவு தீர்வை எட்டிவிடலாம். தவறினால் சூழலில் மறுசீரமைக்கவே முடியாத பாதிப்பையும் சுகாதாரச் சீர்கேட்டையும் அவை ஏற்படுத்தும்.

பசுமைத் தீர்ப்பாயத்தில் பிப்ரவரி 14ஆம் தேதி நீதித்துறை உறுப்பினர் புஷ்பா சத்தியநாராயணா, நிபுணத்துவ உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு மருத்துவக் கழிவுகள் தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் ஏற்கெனவே கேரள அரசையும் 7 மாவட்ட ஆட்சியர்களையும் ஒரு தரப்பாக சேர்த்தபோதும் யாரிடமிருந்தும் பதில்மனு தாக்கல் செய்யப்படாதது குறித்து தீர்ப்பாய உறுப்பினர்கள் தங்கள் வருத்தத்தைப் பதிவு செய்தனர். இத்தரப்புகளை பதில்மனு தாக்கல் செய்யக்கோரி வழக்கை மார்ச் 31ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளனர்.

  • சதீஷ் லெட்சுமணன்
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments