பருவநிலை மாற்றம் (Climate Change) மூன்றாம் உலகப்போருக்கு முக்கியமான காரணமாக அமையுமா? பாகம்-2 

பருவநிலை மாற்றம் (Climate Change) மூன்றாம் உலகப்போருக்கு முக்கியமான காரணமாக அமையுமா? பாகம்-2 

-அருண்குமார் ஐயப்பன்

 

முதல் பாகத்தை படிக்க: http://poovulagu.org/?p=2171

 

இருபதாம் நூற்றாண்டின் மத்தியில் பருவநிலை மாற்ற காரணங்கள் எவை அதை எப்படி கட்டுப்படுத்துவது என்ற நிலையை உலக நாடுகள் மிகத்தீவிரமாகக் கையிலெடுத்து. இதற்கு முதற்கட்டமாக அமைந்தது அன்று 19ம் நூற்றாண்டில் பேசப்பட்ட பூமியின் சராசரி வெப்ப உயர்வும் அதனால் ஏற்படும் பருவநிலை மற்ற கேள்விகளும்தான்.  இந்தக் காலகட்டத்தில்தான் பசுமையக வாயுக்கள் எந்த அளவுக்கு உலக வெப்பமயமாதலுக்கு காரணமாக இருக்கின்றன என்பதைக் கண்டறிந்தனர். இறுதியில் ஒட்டுமொத்த பருவநிலை மாற்றத்திற்கும் காரணம் மனிதர்கள்தான் என்ற கோட்பாட்டை 20 ம் நூற்றாண்டில் முன்வைத்தனர். பூமியின் சராசரி  வெப்பநிலை அதிகரிக்க முதற்காரணம் வளிமண்டலத்தில் இருக்கக் கூடிய பசுமையக வாயுக்களான நீராவி (water vapor) , கார்பன்-டை-ஆக்ஸிட் (Carbon Dioxide) , மீத்தேன் (Methane), நைட்ரஸ் ஆக்ஸிட் (Nitrous Oxide) , குளோரோபிளோரோ கார்பன் ,ஹைடிரோபுலுரோ கார்பன் என அனைத்தும் இதில் பங்கு வகிக்கின்றன. பசுமையாக வாயுக்களைப் பற்றி நாம் பள்ளி பருவத்தில் விரிவாகப் படித்திருப்போம். சுருக்கமாகச் சொன்னால்  இந்த வாயுக்கள் பூமியை சுற்றி வளிமண்டலத்தில் இருப்பதால் பூமியில் இருந்து வரும் வெப்பத்தை வெளிவிடாமல் வெப்பத்தை அப்படியே பிடித்து வைத்துக் கொள்ளும் திறன் கொண்டவை.

ஆம்! நம் புவியானது சூரியனிடமிருந்து பெரும் வெப்பத்தை அகச்சிவப்பு கதிர்களாக(Infra red radiation) மீண்டும் சூரியனை நோக்கி புவியின் மேலடுக்குக்கு அனுப்பும் ஆனால் அதை வளிமண்டலத்தில் உள்ள இந்தப் பசுமையக வாயுக்கள் தடுப்பதாலேயே வெப்பம் அதிகரிக்கிறது.  இதில் நீராவியின் (36 – 72 %) பங்கு மிக அதிகம் என்றாலும் அவை மழையாகவோ , பனிக்கட்டிகளாகவோ பூமியை வந்தடையும். நீராவிக்கு அடுத்தபடியாக வெப்பத்தை வெளிவிடாமல் தடுக்கும் அதி திறன் கொண்ட வாயு என்னவென்றால் அது கார்பன் டை ஆக்ஸிட் (9 -26) சதவிகிதம் பங்கு வகிக்கிறது. கார்பன் டை ஆக்ஸிட் வாயுவைப் பற்றி நாம் அதிகம் படித்து இருந்தாலும் அவைதான் தற்பொழுது உலக வெப்பமயமாதலுக்கு ஆக்கப்பூர்வ காரணமாகிறது. ஆக எந்த அளவிற்கு கார்பன் டை ஆக்ஸிட் வாயு அளவு அதிகரிக்கிறதோ அந்த அளவிற்குப் புவியின் வெப்பமும் அதிகரிக்கும். பூமியின் சராசரி  வெப்பமானது முன்பு இருந்ததை விட தற்பொழுது அதிகப்படியாக நம்மையும் அறியாமல் உயர்ந்துள்ளது என்பது எத்தனைபேருக்கு தெரியும். 1940 ம் ஆண்டுவரை வெறும் 0.11° C என்று  இருந்த நம் பூமியின் சராசரி வெப்ப உயர்வு  இன்று பசுமையக வாயுக்களின் காரணமாக தற்பொழுது 1° C என்ற அளவுக்கு உயர்ந்துள்ளது. தற்பொழுது வளிமண்டலத்தில் இருக்கும் கார்பன் டை ஆக்ஸிட் அளவு எந்த அளவிற்கு இருக்கிறது என்று பார்த்தால் அதன் உயர்வு உண்மையில் வியப்பளிக்கிறது. கடந்த 2005 ம் ஆண்டு வரை 378.21 ppm ஆக இருந்த கார்பன்-டை-ஆக்ஸிட் அளவு தற்பொழுது 409.33 ppm வரை உயர்ந்துள்ளது. இது ஒரு விரைவான உயர்வு என்றுதான் சொல்லவேண்டும். காடுகளையும், மரங்களையும் அளித்தல் மற்றும் தொடர்ச்சியான தொழிற்சாலை, வாகனங்கள் பயன்பாடு என அனைத்தும் இந்த கார்பன் டை ஆக்ஸிட் அளவின் உயர்வுக்குக் காரணமாக அமைந்திருக்கலாம்.

இத்தகைய உயர்வு என்னவோ நமக்கு சாதாரணமாகப்படலாம் ஆனால் உண்மையில் எதிர்காலத்திற்கு ஒரு பெரிய ஆபத்து என்றுதான் சொல்லவேண்டும். கார்பன் -டை-ஆக்ஸிட் அளவு வளிமண்டலத்தில் அதிகமாக அதிமாக பூமியின் வெப்பமும் அதிகமாகிக்கொண்டே இருக்கும். இதனால் பல்வேறு விளைவுகளும் அதனால் வரும் ஆபத்துக்களும் சமாளிக்க முடியாதவை. இந்த வெப்ப உலக உயர்வால் அதிகம் தாக்கப்படுவது கடலும் பனிப்பாறைகளும்தான். பூமியின் வளிமண்டலத்தில் வெப்பம் அதிகரித்தால் கடலின் வெப்பமும் கண்டிப்பாக அதிகரிக்கத்தான் செய்யும்.  புவியின் வெப்பம் அதிகப்படியாக அதிகரிக்கும் பொருட்டு எங்கெல்லாம் பனிப்பாறைகள் இருக்கிறதோ அவை அனைத்தும் கொஞ்சம் கொஞ்சமாக உருக ஆரம்பமாகும். குறிப்பாக உலகின் மிகப்பெரிய பனிப்பாறை பகுதிகளாகக் கருதப்படும் அன்டார்ட்டிக்கா மற்றும் ஆர்டிக் பனிப்பாறைகள் தினம் தினம் உருகி கடலில் கலந்துகொண்டிருக்கின்றன. 1979 ம் ஆண்டுவரை 7 மில்லியன் சதுர கிலோமீட்டராக இருந்த ஆர்டிக் பனிப்பாறை கொஞ்சம் கொஞ்சமாக உருகி 4 .60 மில்லியன் சதுர கிலோமீட்டராகக் குறைந்துள்ளது. 2002 ம் ஆண்டுமுதல் அளவிடப்பட்ட அன்டார்ட்டிக்கா பனிப்பாறைகளின் மொத்த நிறை படிப்படியாக தற்போழுது -1870 Gt அளவுக்குக் குறைந்துள்ளது. மேலும் கிரீன்லாந்து பனிப்பாறைகள் -3771 Gt அளவுக்குக் குறைந்துள்ளது. இது ஒரு சர்வதேச அறிக்கையாகப் பார்க்கப்பட்டாலும் இந்தப் பனிக்கட்டிகள் உருகுவதால் வரும் விளைவுகளைச் சற்று நாம் யோசிக்கவேண்டும்.

கடல் நீர் மட்டம் உயருதல்:

எந்த அளவுக்கு உலக சராசரி வெப்பம் அதிகரிக்கிறதோ அதே அளவு பனிப்பாறைகள் உருகி அவை கடல் நீர் மட்டத்தை அதிகரிக்கும். இப்படித் தொடர்ந்து பனிக்கட்டிகள் உருகுவதால் பனிப்பாறைகளை கொண்ட நாடுகள்தானே கடல் நீர் உயர்வைப்  மட்டத்தைப் பற்றி கவலைப்பட வேண்டும் நமெக்கென்ன என நாம் இருந்து விட முடியாது. உலகின் எந்த மூலையில் இருக்கும் பனிப்பாறைகள் உருகி அவை கடலில் கலந்தாலும் கடலோரத்தில் இருக்கும் எந்த ஒரு நிலப்பரப்பும் கொஞ்சம் கொஞ்சமாகக் கடல் நீரால் மூடப்படும் என்பதுதான் உண்மை. 1995 ம் ஆண்டுவரை 11 .7 மில்லிமீட்டர் என சராசரியாக இருந்த கடல் மட்டம் தற்போழுது கிடு கிடுவென 86 .3 மில்லிமீட்டர் உயர்ந்துள்ளது. இது எவ்வளவு பெரிய ஆபத்து என்பதை நாம் சிந்திக்க வேண்டும். எந்த அளவுக்குப் பனிப்பாறைகள் உருகுமோ அதே அளவு கடல் நீர் மட்டமும் உயரும் இதனால் இந்திய, பசிபிக், அட்லாண்டிக் பெருங்கடல்களைச் சுற்றியுள்ள அனைத்து தீவுகளும் கொஞ்சம் கொஞ்சமாக கடல் நீரால் மூழ்கடிக்கப்படும். ஏற்கனவே பசிபிக் பெருங்கடலில் உள்ள கிரியபாட்டி, இந்தியப்பெருங்கடலில் உள்ள மாலதீவுகள், பலாவு, மைக்குரேனேசிய, போன்ற பல தீவு பகுதிகள் கடலில் மூழ்க ஆரம்பித்துவிட்டன. சமீபத்தில் ஏற்பட்ட புயலின் காரணமாக ஜப்பானின் எசன்பே என்ற மனிதர்கள் வாழாத ஒரு தீவு முற்றிலும் காணாமல் போனது என்பது குறிப்பிடத்தக்கது. ஆக இங்கே எதிர்காலத்தில் வரவிருக்கும் ஒரு வாழ்வாதாரப் பிரச்சனையை நாம் அறிய வேண்டும். இந்தத் தீவுகளில் உள்ள மக்கள் என்ன செய்வார்கள் வாழ வழி தேடி வேறு சில நாட்டுக்கு இடம்பெயர்வதுதான் ஒரே தீர்வு. இப்படி கடல் நீர் மட்டத்தால் பாதிக்கப்பட்டவர்களை உலக நாடுகள் ஒரு வேளை தங்கள் நாட்டுக்குள் அனுமதிக்க மறுத்தால் அது இரு நாடுகளுக்கிடையே பெரும் சர்ச்சையைக் கிளப்பும். ஏற்கனவே பலர் சட்டத்திற்குப் புறம்பாக தங்கள் நாடுகளுக்குள் நுழைவதைப் பல நாடுகள் கண்டித்து வரும் நிலையில் இந்தக் கடல் நீர் மட்ட உயர்வு எவ்வளவு பெரிய பொருளாதார, சர்வதேச உறவு, வாழ்வாதார சிக்கலை தரும் என்பதை நாம் உணர வேண்டும்.

இந்தக் கடல் நீர் மட்ட உயர்வு தீவு நாடுகளுக்கு ஆபத்தானது மட்டுமில்லை கடலோரத்தில் இருக்கும் எந்த ஒரு நிலப்பரப்புக்கும் ஆபத்துதான். கடந்த 2013 ம் ஆண்டு உலகப்புகழ் பெற்ற “national geography” பத்திரிகை  “What the World Would Look Like if All the Ice Melted! என்ற தலைப்பில் பத்திரிக்கை ஒன்றை வெளியிட்டது. அதாவது உலகத்தில் உள்ள  அனைத்து பனிப்பாறைகளும் உருகினால் இந்த உலகம் எப்படிக் காட்சியளிக்கும் என்பதாகும். அதில் கொடுக்கப்பட்ட வரைபடத்தில் பல தீவு நாடுகள் கடலில் முற்றிலுமாக மூழ்குவதவாகவும் கடலோர அனைத்து நாடுகளின் பெரும்பாலான பகுதிகளைக் கடல் நீர் ஆக்கிரமிக்கும் எனவும் விளக்கியிருந்தனர். அந்த வரைபடத்தில் தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் கடலில் முற்றிலுமாக மூழ்கும் எனவும் விளக்கப்பட்டிருக்கிறது.

அமிலத்தன்மை:

உலக வெப்பமயமாதலுக்கு காரணமாக இருக்கும் கார்பன் டை ஆக்சைட் வாயு கடல் நீரின் அமிலத்தன்மைக்கும் ஒரு முக்கிய காரணம்.வளிமண்டலத்தில் இருக்கக்கூடிய கார்பன் டை ஆக்சைட் வாயுவைக் கடல் நீர் உறிஞ்சும் தன்மை கொண்டவை. கடல் மட்டத்திற்கு மேலே இருக்கும் கார்பன் டை ஆக்சைட் வாயுவானது கொஞ்சம் கொஞ்சமாகக் கடல் நீரால் உறிஞ்சப்பட்டு பின் அவை வேதியல் மாற்றம் அடைந்து கார்போனிக் அமிலமாக (Carbonic acid) மாறுகிறது. ஆக எந்த அளவுக்குக் கடல் நீர் மட்டம் அதிகரிக்குமோ அதேபோல் வளிமண்டலத்தில் இருக்கக்கூடிய கார்பன் டை ஆக்சைட் வாயுவும் அதிகம் உறிஞ்சப்படும் இதனால் பரவலாக கடல் நீர் அமிலமாக மாறலாம் என்பதில் சந்தேகமில்லை. கடல் நீர் அமிலமாக மாறினால் என்ன ஆகும் என்பதைப் பல கடல் நீர் ஆராய்ச்சியாளர்கள் தங்களின் ஆராய்ச்சி அறிக்கை மூலம் தெளிவுபடுத்தியுள்ளனர் . அதில் முக்கியமாகக் கடல் பாசிகள், பவளங்கள், மீன் மற்றும் பல கடல் வாழ் உயிரினங்கள் பாதிப்படையலாம் என்பதாகும். இது கடலை வாழ்வாதாரமாகக் கொண்ட மீனவ சமுதாய மக்கள் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தலாம். இந்த அமிலத்தன்மை ஒட்டுமொத்தமாக அனைத்துக் கடல் நீரையும் பாதிக்குமா என நம்மால் சொல்லி விட முடியாது. அமிலத்தன்மை குறைவாக அல்லது முற்றிலும் பாதிக்கப்படாத இடங்களுக்கு மீன்கள் இடம்பெயர்ந்தால் அவற்றைப் பிடிக்கும் நோக்கில் இரு நாடுகளுக்கு இடையில் அது பிரச்சனையை உண்டாக்கும். மேலும் இந்த அமிலத்தன்மையால் ஒட்டுமொத்த கடல்வாழ் உயிரினங்கள் மட்டுமில்லாது மனிதர்களுக்கும் பல சுகாதார பிரச்சனையை உருவாக்கும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

பனிப்பாறைகள் உருகுவது இன்னும் உலக வெப்பமயமாதல், அதிக புயலையும் எப்படி உருவாக்கும் என்பதை அடுத்துப் பார்ப்போம்!!! -நன்றி

 

மேற்கோள்கள்: 

https://climate.nasa.gov/

https://www.cencoos.org/learn/oa/impacts

https://www.nationalgeographic.com/magazine/2013/09/rising-seas-ice-melt-new-shoreline-maps/

https://en.wikipedia.org/wiki/Greenhouse_effect

https://www.ipcc.ch/publications_and_data/ar4/wg1/en/faq-1-3.html

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *